உயிரின்பனின் பிறந்தநாள் - Uyirinban's birthday

உயிரின்பனின் பிறந்தநாள்

நாம் மறந்த சில சிறந்த தலைவர்களுள் முக்கியமானவர் ஜீவானந்தம். 



திருவிதாங்கூர் மாகாணத்தில் (இன்றைய கன்னியாகுமரி மாவட்டம்) பூதப்பாண்டி எனும் ஊரில் பிறந்தவர் ஜீவா. சிறுவயது முதல் இலக்கியங்கள், இதிகாசங்கள் எனப் பல்கலை கற்று தேர்ந்தார். சாதிமுறைக் கட்டுப்பாடுகள் எவ்விடத்திலும் நீக்கமற நிறைந்திருந்த காலத்திலும், தீண்டாமை, கோயில் அனுமதி மறுப்பு போன்ற சமூகக் கொடுமைக் கண்டு வேதனையுற்றார். காந்தியின் தீண்டாமைக்கெதிரான கருத்துக்களில் ஈர்ப்புற்ற ஜீவா நாட்டு விடுதலைக்காகவும், சமூக மாற்றத்திற்காகவும் போராடத் துவங்கினார். 

தன்னுடைய நண்பர்களை அழைத்துக் கொண்டு, அவர் நுழையத் தடையுள்ளத் தெருக்களில் (!) செல்வார். ஊராரின் பழிச்சொல் கேட்டும், தான் செய்தது சரியே எனக் கூறுவார். ஊராரின் புகாரின் பேரில், அவர் தந்தையே தன்னை எதிர்க்க, சாதியால் மனிதனைப் பிரித்தறியும் பேதைமைப் போற்றுவதற்கு மாறாக வீட்டை விட்டே வெளியேறுவேன் எனக் கூறினார். செய்தும் காட்டினார்.

தனது 17ஆம் வயதில் வைக்கம் ஆலய நுழைவுப் போராட்டத்தில் பங்கேற்றார். அதே போல், சுசீந்திரத்தில் ஆலய நுழைவுப் போராட்டத்தை நடத்திக் காட்டினார் ஜீவா. இந்தப் போராட்டங்கள் ஜீவானந்தத்தை சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபட வைத்தது. நாட்டின் விடுதலைக்காக தேசிய இயக்கத்தில் இணைந்த போதும், மதராஸ் மாநில காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினராக ஆனபோதும் சுயமரியாதைக் கொள்கைகளை விடாதவராய் இருந்தார் ஜீவா.

ஜீவானந்தம் 1937 ஆம் துவங்கப்பட்ட மதராஸ் மாகாண காங்கிரஸ் சோஷலிசக் கட்சியின் செயலாளரானார். தொழிலாளர் நலன் - அவர்களின் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராகக் குரல் கொடுத்த ஜீவா, தன் பாதையைக் கம்யூனிசம், சோஷ்லிசம் வழி செலுத்தலானார். 1939 ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த ஜீவா, ஆங்கிலேயர்களால் பலமுறைக் கைது செய்யப் பட்டார்.



தடைகளை மீறி தமிழகம் முழுதும் உள்ள தொழிற்சாலைகள், மில்கள் மட்டுமல்லாமல் விவசாயிகளையும் தன் பேச்சு - எழுத்து மூலம் விழிப்புணர்வு கொள்ளச் செய்து - உரிமைக்காகப் போராட - எதிர்த்துக் கேள்வி கேட்கச் செய்தவர் ஜீவா.

சுதந்திரத்திற்குப் பிறகு வண்ணாரப்பேட்டை தொகுதியில் நின்று சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். ஜீவாவின் எழுச்சிக் குரல் தமிழ்நாட்டின் முன்னேற்ற - வளர்ச்சிப் பணிகளுக்கான முதல் குரலாய் ஒலித்தது. பின்னாளில் தேர்தலில் வெற்றிப் பெறாவிடினும் தானிறக்கும் வரை அயராமல் தமிழ்ப்பணி - கட்சிப்பணி - தொழிலாளர் முன்னேற்றம் குறித்து விழிப்புணர்வு - பத்திரிக்கை ஆசிரியர் என விடாமுயற்சிக் கொண்ட தேனீயாய் வலம் வந்தவர் ஜீவா.

தமிழின் பால் பேரார்வம் கொண்ட ஜீவானந்தம், தன் பெயரை 'உயிரின்பன்' என மாற்றிக் கொண்டார். இவர் நினைவாக வியாசர்பாடி ரயில் நிலையத்திற்கு இவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டு தபால்தலை வெளியிடப்பட்டுள்ளது. இருப்பினும், நம் தலைமுறைக்காக எவ்வளவோ செய்து, தம் கரத்தில் அழுக்கில்லாமல் என்றும் தூய்மையாய் இருந்த ஒரு தலைவனை என்றும் மறவாதிருப்பதே, அவருக்கு நாம் செய்யும் கைம்மாறாய் - மரியாதையாய் இருக்கும்.

இன்று உயிரின்பனின் 109வது பிறந்த நாள். 

21-08-2016.

Comments

  1. Replies
    1. நன்றி நண்பா... நல்ல மனிதனை நினைவு கொள்வோம்...

      Delete

Post a Comment

Popular posts from this blog

அகர முதல - சிறுகதை (திருக்குறள் கதை) குறள் 0001

புறநானூறு பேசும் நீர் மேலாண்மை

வான்கா - Vanka