பறவையின் கீதம்
பறவையின் கீதம்
இந்தப் பதிவில் நான் குறிப்பிடப் போவது எனது கருத்தல்ல... நான் பத்து வருடங்களுக்கு முன்பு வாங்கிப் படித்த புத்தகத்தில் இருந்து சில பக்கங்களைப் பகிரவே இந்த பதிவு...
பறவையின் கீதம் - எழுதியது அந்தோணி டி மெல்லோ. இது ஒரு தமிழாக்க பதிப்பு... தமிழில் எழுதியது மு. சிவலிங்கம்.
பக்கம் 124
டயோஜீன்ஸ்
தத்துவ ஞானி டயோஜீன்ஸ் ரொட்டியையும், பருப்பையும் உணவாகக் கொண்டு வாழ்ந்து வந்தார். அவரின் இந்த நிலையைப் பார்த்த இன்னொரு தத்துவ அறிஞர் அரிஸ்ட்டிப்பஸ் ஒரு ஆலோசனை சொல்ல முன் வந்தார். இவரோ மன்னரைத் துதிபாடி ஓரளவுக்கு வசதியான வாழ்க்கையை அனுபவித்து வந்தவர்.
"மன்னரிடம் பணிவுடன் நடந்து அவரை அனுசரித்துப் போகக் கற்றுக் கொள்ளுங்கள். பருப்பை உண்டு வாழ வேண்டிய நிலை வராது" என்று அரிஸ்ட்டிப்பஸ் ஆலோசனை சொன்னார்.
"பருப்பை உண்டு வாழக் கற்றுக் கொள்ளுங்கள். மன்னரை அனுசரித்துப் போக வேண்டிய அவசியம் வராது" என்று பதிலளித்தார் டயோஜீன்ஸ்.
பக்கம் 142
உப்பு பொம்மை
உப்பு பொம்மை ஒன்று ஆயிரக்கணக்கான மைல்கள் நீண்ட நெடிய பயணம் செய்து ஒரு கடற்கரையை வந்தடைந்தது. கடற்கரை ஓரத்தில் நின்று அவ்வளவு பெரிய தண்ணீர்ப் பரப்பைப் பார்த்ததும், அது பரவசப்பட்டது. இப்படிப்பட்ட ஒன்றை அது இதுவரை பார்த்ததே இல்லை.
"யார் நீ?" என்று கடலிடம் கேட்டது உப்பு பொம்மை.
"உள்ளே வந்து என்னைப் பார்" என்று புன்னகையுடன் கூறியது கடல்.
கடலுக்குள் நுழைந்தது பொம்மை. அது உள்ளே போகப்போக அதிகமாகக் கரைந்தது. கடைசித் துளியும் கரைந்து போகப்போகும் அந்தக் கணத்திற்கு முன்னதாக ஆச்சரியத்துடன் அது சொன்னது, "நான் யார் என்பதை இப்போது தெரிந்து கொண்டு விட்டேன்"
இந்த புத்தகம் எங்கு கிடைக்கும்?
ReplyDeleteகண்ணதாசன் பதிப்பக வெளியீடு...
Delete