சிவராம் ராஜ்குரு - Shivaram Rajguru
சிவராம் ராஜ்குரு
ஒடுக்கப்பட்ட ஒரு நாட்டில் பிறந்து - தனது பதின்ம வயதுகளில் நாட்டில் நடக்கும் ஏற்றத்தாழ்வுகளையும் ஒடுக்குமுறையையும் கண்டு வேதனையுற்று - தனது 22ஆம் வயதில் நாட்டுக்காக தன் இன்னுயிரையும் ஈந்த இளைஞன் சிவராம் ராஜ்குருவின் பிறந்தநாள் இன்று.
என்னுடைய பள்ளிக்காலத்தில் - நாடகத்தில் நானிட்ட வேடங்களில் ஒன்று ராஜ்குரு. அப்போது கூட ராஜ்குருவை பகத் சிங்கின் உடன் வரும் கதாபாத்திரமாகவேத் தெரியும். ஆனால், விடுதலைக்காகப் போராடிய ஒவ்வொருக்குள்ளும் ஒரு நெருப்பு இருந்த்தையும் - தாய்நாட்டின் விடுதலையை மட்டும் எண்ணிப் பல விதத்தில் போராட எத்தனித்த துணிச்சலையும் சரிவரப் பதிவு செய்ய மறந்த வரலாற்றையும், நினைத்துக் கொள்ள மறந்த நம்மையும் நொந்து கொள்வோம்.
சிவராம் ராஜ்குரு |
மஹாராஷ்டிரா மாநிலம் கேத் எனும் இடத்தில் 24 ஆகஸ்ட் 1908 அன்று பிறந்தவர் சிவராம் ராஜ்குரு. சிறுவயது முதல் ஆங்கிலேயரின் அடக்குமுறை கண்டு வளர்ந்த ராஜ்குரு, தன் கல்லூரிக் காலத்தில் தன்னைப் போல் நாட்டுக்குப் போராடத் துடிக்கும் சக இளைஞர்களான பகத் சிங், சுக்தேவ் தாபர் போன்றோருடன் இணைந்தார். லாகூரின் நேஷனல் கல்லூரியில் இவர்களுடன் சேர்ந்து ஹிந்துஸ்தான் சோஷலிஸ்ட் குடியரசு சஙகத்தில் (Hindustan socialist Republic Association - HSRA) உறுப்பினர் ஆனார்.
1928 அக்டோபர் 30ம் நாள் சைமன் குழுவுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தை அடக்க ஆங்கிலேய அரசு காவல் துறையை ஏவியது. அதிகாரி ஸ்காட்டின் தடி போராட்டத்தை நடத்திய லாலா லஜபத் ராயின் மீது இடியாய் இறஙியது. பலத்தக் காயமுற்ற லஜ்பத் ராய் 17 நவம்பர் 1928 அன்று இறந்தார். இவரின் இழப்புக்கு நாடெங்கும் பல அமைப்புகள் ஆங்கில அரசேப் பொறுப்பு எனக் கூற - அரசோ, தடியடிக்கும் உயிரிழப்புக்கும் துளியும் சம்பந்தமில்லை எனத் தெரிவித்தது. இந்நிலையில், பகத் சிங், ராஜ்குரு, சுக்தேவ் மற்றும் சந்திரசேகர் ஆசாத் ஆகியோர் லஜபத் ராயின் மரணத்திற்குக் காரணமான காவல் அதிகாரியான ஸ்காட்டைப் பழிதீர்க்க சபதமேற்றனர்.
17 டிசம்பர் 1928 - லாகூர் தலைமைக் காவல் நிலையத்திற்கு வெளியே... காவல் நிலையத்தில் இருந்து வெளி வந்த அதிகாரி சாண்டர்ஸை முற்றுகையிட்ட ராஜ்குரு, பகத் சிங் அவரைச் சுட்டுக் கொன்று தப்பியோடி தலை மறைவாயினர். சாண்டர்ஸும் லஜபத் ராய் தடியடியில் ஈடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரிட்டிஷ் அரசு இவர்களைக் கொலைகாரர்கள் எனச் சித்தரித்து செய்தி வெளியிட்டது. தமது முயற்சிகள் மக்களிடம் திரித்துச் சொல்லப் படுவதைத் தடுக்கவும் - தமது குரல் நாடு முழுதும் ஓங்கி ஒலிக்கச் செய்வதற்கும் ஒரு கடைசித் தாக்குதலை பகத் சிங் திட்டமிட்டார்.
8 ஏப்ரல் 1929 அன்று தில்லி சட்டசபை: பார்வையாளராய் நுழைந்த பகத் சிங், யதுகெஷ்வர் தத் இருவரும் "இன்குலாப் ஜிந்தாபாத்" என முழங்கிய படி இரு வெடிகுண்டுகளை எரிந்தனர். (யாரும் இல்லாத இடத்தில், யாரும் காயமுறா வண்ணம்). குண்டுவெடிப்பு தங்களை அடையாளம் கண்டு கொள்ளவே அன்றி உயிர்களைக் கொல்ல அல்ல என அறிந்தே செய்த காரியம் அது. குண்டு வெடிப்பின் புகை சட்டசபை முழுதும் நிறைந்திருந்த நேரம் கூடத் தப்பிக்காமல் சரணடந்த இருவரும், தான் கொணர்ந்தத் துண்டுச்சீட்டுகளை வீசி மேலும் முழங்கினர்...
இன்குலாப் ஜிந்தாபாத்...!!!!
நாடு முழுதும் இச்செய்தி பரவியது. இந்திய இளைஞர்களின் ரத்தத்தில் புரட்சி வித்திடப்பட்டது. பகத் சிங்கின் கைதிற்குப் பிறகு ராஜ்குரு, சுக்தேவ் ஆகியோரும் பல முயற்சிக்குப் பின் கைது செய்யப்பட்டனர். சுக்தேவைத் தப்பிக்க வைக்கும் முயற்சியில் நான்கு போலீஸாரைக் கொன்று பிடிபடும் முன்பு தானும் தற்கொலை செய்து கொண்டான் சந்திரசேகர் ஆசாத். தில்லி, லாகூர் ஆகிய சிறைகளில் அடைக்கப்பட்ட பகத்சிங், ராஜ்குரு, சுக்தேவ் முதலான 22 பேர் லாகூர் சிறையில் பிரிட்டிஷ் கைதிகளுக்குக் கிடைக்கும் உரிமைகள் பாரபட்சமின்றி தங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்றும் தங்களை அரசியல் கைதிகளாக நடத்த வேண்டும் என்றும் உண்ணாவிரதம் இருந்தனர். ஒரு நாள், இரு நாள் அல்ல... 116 நாட்கள்...!
ஆங்கிலேய அடக்குமுறைக்கு எதிராகப் போராடி - கைதாகி - சிறையிலும் அடங்காமல் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
ராஜ்குரு, பகத் சிங், சுக்தேவ் தாபர் மூவரும் 23 மார்ச் 1931 அன்று தூக்கிலிடப்பட்டனர். தடியடியில் காயமடைந்த லஜபத் ராய் இறக்கும் முன்னர் கூறியிருந்தார்.
"என் மேல் விழுந்த ஒவ்வொரு அடியும் ஆங்கில அரசின் சவப்பெட்டியின் ஆணிகளில் அறையப்படும் அடியாக மாறும்"
அதை உண்மையாக்கப் போராடிய உன்னத வீரர்களுள் ஒருவன் ராஜ்குருவுக்கு வீர வணக்கங்கள்.
- கணபதிராமன்
ஜெய்ஹிந்
ReplyDeleteவீர வணக்கங்கள்
ReplyDeleteவீர வணக்கங்கள்
ReplyDeleteThe great bagat singh...we knows....but to day i came to know shiv ram raj guru also great...thanks ram....
ReplyDeleteGanapa sir your next transformation .
ReplyDeleteநன்றி... மகிழ்ச்சி
Delete