மனிதம் போற்றிய கணியன் - Kaniyan who praised humanity

மனிதம் போற்றிய கணியன்

ஒரே பாடலில் - செய்யுளில் உலக ஒற்றுமை - சகோதரத்துவம் - வாழ்வின் நிதர்சனம் - இயற்கை நியதி - புகழ்ச்சி இகழ்ச்சி இல்லா நடுநிலைமை - மனிதம் இவ்வளவையும் கூற முடியுமா?

எங்கள் சங்கக் கவி கணியன் பூங்குன்றனாரால் முடிந்திருக்கிறது. புறநானூற்றில் 192ஆம் செய்யுளாய்த் தொகுக்கப்பட்ட - கணியன் பூங்குன்றனாரால் பாடப்பட்ட "யாரும் ஊரே யாவரும் கேளிர்" எனும் செய்யுள் நான் மேற்கூறிய அனைத்தையும் தன்னுள்ளேக் கொண்டுள்ளது. புறநானூற்றில் பல செய்யுள்கள் மன்னனின் படைபலம் பற்றியோ - போர்திறம் பற்றியோ - ஈகைத்திறன் பற்றியோ இருக்க, யாரையும் புகழாமல் அதே நேரம் யாரையும் இகழாமலும், வாழ்க்கை நியதியையும், நிதர்சனத்தையும் கூறிய எங்கள் கவிக்கோமான் கணியன், பரிசிலுக்குப் பாடல் பாடியதில்லை என்பது கூடுதல் செய்தி. முக்காலமும் - எக்காலமும் உலக ஒற்றுமைப் போற்றும் இச்செய்யுளின் முதல் வரி ஐ நா சபையில் பொறிக்கப்பட்டுள்ளது. 

இதோ அவர் பாடிய செய்யுளும், அதை எளிதாய் எழுத நானெடுத்த முயற்சியும்... 

புறநானூறு (செய்யுள் - 192)
பாடியவர் : கணியன் பூங்குன்றனார்
திணை : பொதுவியல் திணை
துறை : பொருண்மொழிக் காஞ்சி

யாதும் ஊரே யாவரும் கேளிர்

தீதும் நன்றும் பிறர்தர வாரா

நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன

சாதலும் புதுவது அன்றே; வாழ்தல்

இனிதென தென்றலும் இலமே - முனிவின்

இன்னா தென்றலும் இலமே - மின்னொடு

வானம் தண்துளி தலைஇ ஆனாது

கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று

நீர்வழிப் படூஉம் புணைபோல, ஆருயிர் 

முறைவழிப் படூஉம் என்பது திறவோர் 

காட்சியில் தெளிந்தனம் ஆகலின் மாட்சியிற்

பெரியோரை வியத்தலும் இலமே; சிறியோரை 

இகழ்தல் அதனினும் இலமே.


இதே செய்யுளை எளிய தமிழில் எழுத நான் எடுத்த சிறு முயற்சி... (கணியன் பூங்குன்றனார் என்னை மன்னிப்பாராக....!!!)

எந்த ஊரும் எமது ஊரே...!

மனிதர் யாவரும் எமது மாந்தரே...!

தீயவை நல்லவை எதுவும்

பிறர்தந்து வருபவை அல்ல - மனம்

நோவதும் மகிழ்வதும் நம்மாலே 

சாவதும் இங்கே புதிதல்ல - எனவே,

வாழ்வு இனிமையென கூத்தாட வேண்டாம்

அதுவே கொடுமையென குறைகூற வேண்டாம்

மின்னலுடன் மேகம் மழையாய் பொழிய

மலைவழி வழியும் நதிநீர் வழியோடும்

மரம்போல் வாழ்வும் விதி வழியோடும்

என்று அறிவுடை மாந்தர் உணர்ந்துரைத்தனர்

எனவே, புகழ் பெயர் பெற்ற 

பெரியோரை வியக்கவும் வேண்டா - நமைவிடச் 

சிறியோரை இகழவும் வேண்டா...!


Comments

  1. அருமையான பதிவு நன்றி நண்பரே

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அகர முதல - சிறுகதை (திருக்குறள் கதை) குறள் 0001

புறநானூறு பேசும் நீர் மேலாண்மை

வான்கா - Vanka