ராதா கோபிந்த கர் - RG Kar
ராதா கோபிந்த கர்
மருத்துவம் கொண்டு காசு பார்க்க நினைக்கும் இந்நாளில் - இந்நாட்டில், இவர் போன்ற சிலரும் இருந்திருக்கின்றனர் என்றெண்ணும் போது திரு. ராதா கோபிந்த கர் மீது மரியாதை பல மடங்கு கூடுகிறது. யார் இவர்? என்ன செய்தார் இவர்? தான் கற்ற மருத்துவக் கல்வி இந்த நாட்டில் பலரும் கற்று - நாடு நோயின்றி வாழ நினைத்த ஒரு திருமகனின் - திரு. ராதா கோபிந்த கரின் பிறந்த நாள் இன்று.
23 ஆகஸ்ட் 1852 - மேற்கு வங்காளம் சாண்ட்ராகாச்சி எனும் ஊரில் தேவதாஸ் கர் என்ற மருத்துவரின் மகனாகப் பிறந்தார் ராதா கோபிந்தா. மருத்துவரின் மகன் என்பதால், வசதிக்குக் குறைவில்லை. கல்வி கற்பதில் தடையுமில்லை. பள்ளிப் படிப்பில் நன்கு கற்றுத் தேர்ந்த கோபிந்தா தந்தையைப் போல் மருத்துவம் பயில விழைந்தார்.
நுழைவுத்தேர்வில் வென்று கல்கத்தா மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த ராதா கோபிந்தா, மருத்துவக்கல்லூரியில் ஆங்கிலேய மாணவர்களால் இந்தியமாணவர்களுக்கு இழைக்கப்படும் பாரபட்ச உணர்வு - அதைக் கண்டும் காணாத ஆங்கிலேய மேலாண்மை போன்றவை கண்டு வருந்தினார். நாட்டின் நிதர்சன நிலை அவரின் தேச உணர்வையும் - தமக்குப் பின் வருபவர்களுக்கு வாய்ப்புத் தர வேண்டும் என்ற எண்ணத்தையும் தூண்டுவதாக இருந்தது.
1883 ஆம் ஆண்டு மருத்துவப் பட்டம் முடித்து - இங்கிலாந்தில் எடின்பரோ பல்கலைகழகத்தில் மேற்படிப்பு முடித்த ஆர். ஜி. கர், இந்தியா வந்தடைந்ததும், தன்னைப் போல் எண்ணம் கொண்ட நண்பர்களுடன் இணைந்து 18 அக்டோபர் 1886 அன்று ஆசியாவின் முதல் தனியார் மருத்துவக் கல்லூரியான "கல்கத்தா மருத்துவப் பள்ளி"யை நிறுவினார். ஆங்கில அரசின் தலையீடு இல்லாமல் - தன்னிச்சையாய் செயல்படும் அமைப்பாய் - இந்திய மாணவர்களின் மருத்துவக் கல்வி கனவுக்கு வரமாய் அமைந்தது கல்கத்தா மருத்துவப் பள்ளி.
சிறு கட்டிடத்தில் 12 மாணவர்களுடன் துவங்கிய இப்பள்ளி இந்திய மருத்துவர்களால் நடத்தப்பட்டு வந்த மயோ மருத்துவமனையை பயிற்சித் தளமாய் கொண்டு செயல்பட்டு வந்தது. 1895 ஆம் ஆண்டு 14 படுக்கை வசதி கொண்ட உள் மருத்துவமனையையும் துவங்கியது.
தற்போது இந்தக் கல்லூரி இயங்கி வரும் பெல்காச்சியா பகுதி நிலம் ரூ.25000 க்கு 1898 ஆம் ஆண்டு வாங்கப்பட்டது. 1904 ஆம் ஆண்டு 30 படுக்கை வசதி கொண்ட கட்டிடம் கட்டப்பட்டது. மெல்ல, பல வசதிகளைக் கொண்டு தரமானக் கல்வியை மாணவர்களுக்கும் - சிறந்த மருத்துவத்தை மக்களுக்கும் அளிக்கும் சிறந்த நிறுவனமாய் உருவெடுத்தது ஆர். ஜி. கரின் கல்லூரி.
RG Kar Medical College & Hospital |
1916 - பெல்காச்சியா மருத்துவக் கல்லூரி எனப் பெயர் மாற்றம் கொண்ட இக்கல்லூரி, 1918 ஆம் ஆண்டு பலப் பாடப்பிரிவுகளுடன் விரிவுபடுத்தப்பட்டு வங்காள மருத்துவக் கல்வி சங்கம் (Medical Education Society of Bengal) என வளர்ச்சிக் கொண்டது.
1933 ஆம் ஆண்டு மனநோய் சிகிச்சைக்கு (Psychiatry) புற நோயாளிப் பிரிவு ஆசியாவிலேயே முதன் முதலாய் இங்குத் தோற்றுவிக்கப்பட்டது. 1948 ஆம் ஆண்டு திரு. ஆர். ஜி கர்ரின் மரணத்திற்குப் பிறகு அவர் நினைவாக இந்தக் கல்லூரி "ஆர் ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை" என அழைக்கப்படுகிறது. நூறாண்டுகளைக் கடந்தும் சேவையாற்றி வரும் இந்தக் கல்லூரி மற்றும் மருத்துவமனை என்றும் திரு ஆர். ஜி. கர்ரின் பெயரைப் பறைசாற்றிக் கொண்டே இருக்கும்.
- கணபதிராமன்
What a man.....really thankful to u .i hope our society will remember his kindness.
ReplyDeleteதானிருந்த வரை தன் பெயரை சேர்க்காமல், தன்னுடன் பலரையும் வாழ்வில் உயர வைத்தவர்... இறந்த பின்னரே, கல்லூரியின் பெயர் இவர் பெயர் கொண்டது.... இன்றிருக்கும் தலைவர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் இது.
Deleteநல்ல வரலாறு பெருமிதம் கொள்வோம்
ReplyDelete