மெட்ராஸ் நாள் - Madras Day
மெட்ராஸ் நாள்
பல முகங்கள் - பல நிறங்கள் - சில குறைகள் இருந்தாலும் எந்நாளும் இளமையோடும் புதுமையாகவும் என்னை வியப்பில் ஆழ்த்தும் என் சென்னை மாநகரம்.
நிற்கக் கூட நேரமில்லாமல்
ஓடும் மனிதர்கள் -
இருப்பினும் ஏழு மணிக்குக் கிளம்பி
ஒன்பது மணி அலுவலகம் சேர்வார்.
தினமும் இதுவே வாடிக்கை எனினும்
குறையாய் சொல்லமாட்டார்.
முதல் வாய்ப்புக்கு வாய்ப்புத் தேடி
வந்த யாரும் நொந்ததில்லை.
என் சென்னைக்கு இணை இங்கு இல்லை.
- கணபதிராமன்
இன்று இந்தப் பதிவிற்குக் காரணம் பலருக்கும் தெரிந்ததே. இன்று மெட்ராஸின் பிறந்த நாள். - 377வது பிறந்த நாள்.
தம்மார்ல வேங்கடபதி எனும் விஜயநகர அரசரிடம் இருந்து பிரான்சிஸ் டே மற்றும் ஆண்ட்ரூ கோகன் எனும் இரு பிரிட்டிஷ்காரர்கள் தற்போது ஜார்ஜ் டவுன் என அழைக்கப்படும் பகுதியை 1639 ஆம் ஆண்டு வாங்கிய நாள் இன்று. இந்தப் பகுதியைச் சுற்றி உள்ள பகுதிகளை உள்ளடக்கி இந்திய நாட்டின் முதல் மாநகராட்சியாய் 1688 ஆம் ஆண்டு உருவாகியது. உலக வரிசையில் லண்டனுக்கு அடுத்தப்படியாக இரண்டாவது மாநகராட்சி நமது சென்னையே.
மெட்ராஸ் - பெயர்க்காரணம்
இதற்குப் பல காரணங்கள் கூறப்பட்டாலும் இரு காரணங்கள் முக்கியமானது. ஒன்று - 1367 ஆம் ஆண்டு விஜயநகரப் பேரரசின் கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பட்டுள்ள மாடராசன்பட்டினம் மற்றும் அதை சுற்றியுள்ளப் பகுதிகள் அக்காலத்தில் துறைமுக நகரமாய் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இரண்டாவது காரணம், ஆங்கிலேயர்களுக்கு முன் இங்கு வந்த போர்த்துக்கீசியர்கள் இத்துறைமுக நகரத்தை மாத்ரே டே தியுஸ் (Madre De Deus) - கடவுளின் தாய் நகரம் என அழைத்ததாக ஒரு தகவலும் உண்டு. சென்னை என்றழைக்கப் படுவதற்கு ஒரே காரணம் ஆங்கிலேயருக்கு எழுதிக் கொடுத்த வேங்கடபதியின் தகப்பனார் தம்மார்ல சென்னப்ப நாயக்கர். இவர் காலத்தில் இவராண்டப் பகுதியை சென்னப்பட்டினம் என்றழைத்தனர் இவ்வாறே, ஆங்கிலேயருக்கு எழுதிக் கொடுத்த சாசனத்தில் எழுதப் பட்டிருந்ததால் அப்பெயர் கொண்டு இன்றும் அழைக்கப் படுகிறது.
ஒரு காலத்தில் விவசாயம், ஏரிக்கரைகள், குளங்கள், இரு நதிகள், அதைக் குறுக்கே வெட்டிச் செல்லும் கால்வாய், ஒரு நதியால் உருவானத் தீவு என பசுமை நிறைந்திருந்த சென்னையின் நிலைமை என்னவென எல்லோர்க்கும் தெரியும். இன்று சென்னையில் வள்ளுவர் கோட்டம் இருக்கும் இடம் ஒரு காலத்தில் ஒரு ஏரியின் மையப்பகுதியாய் இருந்தது. இதற்கு சாட்சியாய் அதனுருகே உள்ள ஒரு சாலையின் பெயர் ஏரிக்கரை சாலை (Tank Bund Road). மாம்பலம் ரயில் நிலையம் அருகே ஒரு சாலையின் பெயர் லேக் வியூ சாலை (Lake view road). அவ்வளவு ஏன்? நமக்கு விடுதலை கிடைக்கும் வரை கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய்களில் படகுப் போக்குவரத்து இருந்தது. வண்ணாரப்பேட்டை உண்மையாகவே துணி சலவை செய்யும் இடமாய் இருந்தது. விடுதலைக்குப் பின் நாம் சென்னைக்குச் செய்தது கூவத்தை நாறடித்தது மட்டுமல்லாமல் அந்த நதி நகரத்துக்குள் நுழையும் பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்தது மட்டுமே.
நதி நீர்நிலைகளை சரிவர பாதுகாக்காது போனால் என்ன ஆகும் என போன வருடம் நேரில் கண்டோம். நாம் எந்த அளவுக்கு விழிப்புணர்வு கொண்டுள்ளோம் என்பதற்குக் காலம் பதில் சொல்லும்.
அனைவருக்கும் சென்னை - மெட்ராஸ் நாள் வாழ்த்துக்கள்.
- கணபதிராமன்
மகிழ்ச்சி
ReplyDeleteChennai pattinam......pathivu....ok....so many things need to describe....we need long details like TV SERIALS.....
ReplyDeleteHa ha.... True...
Delete