அகர முதல - சிறுகதை (திருக்குறள் கதை) குறள் 0001
இன்று வாழ்வின் எல்லா நாளையும் போல கடத்தி விடலாம் என்றே நினைத்திருந்தேன். ஆனால், காலையில் எழுந்ததில் இருந்தே, என்னையே அறியாமல் ஒரு இனம்புரியா உணர்வு என்னை ஆட்கொண்டிருந்தது. நான் தமிழ்ச்செல்வன்... என்னோட அப்பா அம்மா எப்படி இந்த பெயர் வைத்தார்கள்... அவர்களுக்கு நான் என்னவாக வருவேன் என நான் பிறக்கும் போதே தெரிந்திருந்ததா...??
"தமிழ், காபி... ஒரு அஞ்சு நிமிசத்துல இட்லி ரெடி ஆயிடும்..." என்று என்னோட கையில காபி குவளையைக் கொடுத்துட்டுப் போகிறாளே...? இவள் தான் வளர்மதி. என் மனைவி. என்னை முழுதும் புரிந்தவள். கையில் கொடுத்திருந்த காபியின் சூடு, ஆவியாக காற்றில் கரைந்து கொண்டிருக்க, நான் ஆவிக்கும், காற்றுக்கும் இடையே ஆன ஏதோ ஒரு புள்ளியில் நோக்கியபடி, அப்படியே அமர்ந்திருந்தேன். சிறிது நேரத்தில் உள்ளே இருந்து "இட்லி ரெடி..." என்று வந்தவள், கையில் அப்படியே இருந்த காபியையும், சிலை போல் அமர்ந்திருந்த என்னையும் பார்த்து, அருகில் வந்து என் கையருகே நின்று, "தமிழ்..." என்று கைகளைப் பிடித்தாள்.
"சொல்லும்மா..." என்றேன், எங்கோ இருந்த நினைவின் கயிறு அறுந்தவனாக.
"ம்ம்ம்... என்ன நினைச்சுக்கிட்டு இருக்க... தமிழ்? இப்படி ஒரு நாள் எல்லாருக்கும் வரும் தானே... ஏன் மனசைப் போட்டு குழப்பிட்டு இருக்க...?" என்றாள் வளர்.
"ச்ச... ச்ச... அதெல்லாம் ஒன்னுமில்ல..." சற்றும் நம்பிக்கையில்லாமல் பேச்சுக்காக சொன்னேன்.
"உங்க முகத்திலேயே தெரியுது, தமிழாசிரியரே... அகத்தின் அழகு..."
ஆமாம். நான் தமிழாசிரியர் தான்... இந்த ஊர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 32 ஆண்டுகளாக. ஒன்றாம் வகுப்பிலிருந்து, பத்தாம் வகுப்பு வரை தமிழ்ப்பாடம் எடுத்துள்ளேன். இன்று நான் தமிழாசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெறும் நாள். நாம் இந்தப் பணியைச் சரியாக செய்துள்ளோமா என்ற கேள்வி காலையிலிருந்து... இல்லையில்லை... ஓய்வு நாள் நெருங்குகிறது என்று என் மனம் அலைபாயத் தொடங்கிய நாளிலிருந்து ஓடிக் கொண்டே இருக்கிறது.
"என்ன மிஸ்டர் தமிழ், என்ன பிரச்சனை உனக்கு...? வேலையிலிருந்து ஓய்வடைறதுக்குத் தான் இவ்ளோ நாடகமா...? நமக்கு என்ன குறை... இரு குழந்தைகள்... ரெண்டு பேரும் நல்ல வேலையில் இருக்காங்க... என்ன இங்க இல்ல... ஆனா, நல்லா இருக்காங்க... தேவையான அளவுக்குப் பணம் இருக்கு... வாழ்க்கைத் துணையாகவும், அடிக்கடி தொல்லை கொடுக்கவும் நான் இருக்கேன்... வேற என்ன வேணும், ஆசிரியரே...?" என்றாள் கவிதையாக.
"வாழ்க்கையையே சுருக்கிச் சொன்ன மாதிரி இருக்கு... நான் இதெல்லாம் பத்தி நினைக்கல... வளர், நான் ஒரு தமிழாசிரியனா என்னோட வேலையைச் சரியாக செய்திருக்கிறேனா? இது தான் கொஞ்ச நாளா என் மனச அரிச்சுக்கிட்டு இருக்க ஒரு கேள்வி..."
"யாரு சொல்ல முடியும் நீங்க உங்க வேலையைச் சரியாக செய்யலன்னு... மொத்த பள்ளியும் உங்க தமிழுக்கு மதிப்பு கொடுக்குது... மனசப் போட்டு குழப்பாதீங்க, தமிழ்... சும்மா பேச்சுக்குச் சொல்லல... உங்க பள்ளியின் வகுப்பறைகள் எப்பவும் இந்த தமிழ்ச்செல்வனோட தமிழ் கேட்டுக்கிட்டே இருக்கும்..."
என்னுடைய வளர்மதியின் பேச்சு நிறைவான புன்னகையைத் தந்தது. தெம்பைத் தந்தது. மிகவும் தெளிந்த மனத்தோடு, பள்ளிக்குக் கிளம்பினேன்.
போவதற்கு முன், "வளர்... இன்று மதியம் 4 மணிக்கு ஹெச்.எம் உன்னையும் பள்ளிக்கு வரச் சொன்னார்... ஏதாவது ஆசிரியர் கூட்டம் வைப்பாங்கன்னு நினைக்கிறேன்... வர்றியா...?" என்றேன்.
ஒரு நிறைவான புன்னகை... "சரிங்க... ஆசிரியரே..." என்றாள்.
அன்று பள்ளியில் பார்ப்போர் அனைவரும் மிகப் பணிவோடு என்னை நடத்தியது எனக்கே கொஞ்சம் கூச்சம் தந்தது. அன்று எனக்கு வகுப்பு எதுவும் ஒதுக்கப்படவில்லை. "நான் எனது மாணவர்களைக் கடைசியாக ஒரு தடவை பார்த்துப் பேசணுமே" என்றேன் தலைமை ஆசிரியரிடம்.
"தமிழ், ஒன்னும் அவசரமில்லை... இன்றோடு இந்தப் பள்ளிக்கும் உங்களுக்கும் உள்ள உறவு போயிடப் போகுதா...? இல்லை... நாளைக்கு நீங்க வந்தீங்கன்னா, உள்ளே விடமாட்டோம்னு நாங்க சொன்னோமா...? இன்று நீங்க எந்த வேலையும் செய்யக்கூடாது... போய், உங்க ஸ்டாஃப் ரூம்ல உட்காருங்க..." கொஞ்சம் அதட்டலாகவே சொல்லிட்டு, மெலிதாக சிரித்தார். "போங்க, தமிழ்... உங்களை மாதிரி ஒரு நல்ல தமிழாசிரியரை இழக்கிறதுக்கு இந்த பள்ளி தான் இன்னிக்கு சோகமாகணும்... ஆனா, உங்களை சோகமா எல்லாம் போக விடமாட்டோம்... நீங்க நிம்மதியா இருங்க..." அன்புக் கட்டளையிட்டார்...
அனைத்து ஆசிரியர்களும், பல மாணவர்களும் எனது அறைக்கே வந்து என்னிடம் பேசியபடி இருந்தனர். மனதிற்கும் நிறைவாகவே இருந்தது. நேரம் போனதே தெரியவில்லை. மதியம் 3.30க்கு வளர்மதியும் வந்துவிட, இருவருக்கும் மாலை, அனைத்து ஆசிரியர்களோடு புகைப்படம் என அந்த ஆசிரியர் அறையே மகிழ்ச்சியில் நிறைந்து வழிந்தது.
எங்கள் உதவியாளர் அங்கிருந்து வந்து, என்னருகே இருந்த தலைமை ஆசிரியரிடம், "எல்லாம் ரெடி, சார்..." என்றார்.
"தமிழ், எழுந்திருங்க... போலாம்..." என்றவர், வளர்மதியின் புறம் பார்த்து, "நீங்களும் வாங்க போகலாம்..." என்றார்.
எங்கு என சில நொடிகள் விழித்தேன்.
கையைப் பிடித்து, "வாங்க, தமிழாசிரியரே..." என்றார். அவருடன் நடந்தேன்... நாங்கள் இருந்த முதன்மை கட்டடத்திலிருந்து வெளியேறி, அதன் முன்னால் இருந்து பெரிய வாகை மரத்தின் முன்னே, இருந்த மேடையை நோக்கி நடந்தோம்.
என் கண்கள் விரியத் துவங்கின. வளர்மதியைப் பார்த்தேன். அவள் கண்கள் சற்றே கலங்கியிருந்தது... ஆனால், அவள் முகம் புன்னகையில் பூத்திருந்தது. மொத்த பள்ளியும் மேடையின் கீழ் இருந்தது. எல்லா மாணவர்களும் கைத்தட்டலுடன் என்னை வரவேற்றுக் கொண்டிருந்தனர். மேடையில் ஒரு சிறுவன், ஒலிவாங்கி முன் நின்றிருந்தான்... நான், வளர்மதி, தலைமை ஆசிரியர், மேலும் சில ஆசிரியர்கள் எல்லாம் மேடையில் நாற்காலியில் உட்கார, அந்த மாணவன் ஒவ்வொருவராய் அழைத்தான், என்னைப் பற்றி பேசுவதற்கு.
பல ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர் எல்லாம் என்னைப் பற்றி புகழ்ந்திட, மேடையிலேயே மகிழ்வு, மகிழ்வு தந்த கூச்சத்தோடு அமர்ந்திருந்தேன். வளர்மதி முகத்தில் பெருமிதம் தனை உணர்ந்தேன். கீழே இருக்கும் ஒவ்வொரு மாணவர்களின் வாழ்வை நான் தொட்டுச் சென்றிருக்கிறேன் என்பதே எனக்குப் பெருமையாக இருந்தது.
தலைமை ஆசிரியர் நினைவுப் பரிசாக ஒரு கேடயம் ஒன்றைப் பரிசளித்தார். மாணவர் கூட்டம் கைத்தட்டல்களைப் பரிசாக தந்தது. வேறு ஆசிரியர் பணி ஓய்வு பெற்றுச் செல்லும் போது, இந்த அளவுக்கு மதிப்பும், புகழாரமும் தரப்பட்டதா என யோசித்துக் கொண்டிருந்தேன். மீண்டும், என் பழைய வினா மனதில் தொற்றிக் கொண்டது.
'இந்த புகழுக்கு நான் உரியவனா? என் பணியைச் சரியாக செய்தவனா?'
மேடையில் நின்ற மாணவன், "நமக்கு அகர முதல எழுத்தெல்லாம் அறிவித்த ஆசான், தமிழாசிரியர், தமிழ்ச்செல்வன் அவர்களை நம்மோடு பேருரையாற்ற அழைக்கிறேன்." என்று கூறினான்.
மீண்டும் ஒருமுறை கைத்தட்டல் ஓசை எழுந்தது... நான் எழுந்து ஒலிப்பெருக்கி முன் சென்று நிற்கும் வரை, தொடர்ந்தது பேரொலி...
"இந்த அன்புக்கு நன்றி..." கைத்தட்டல் ஓசை குறைந்து எல்லோரும் கவனிக்கத் தொடங்கினர்.
"இவ்ளோ புகழுக்கு நான் பொருத்தமானவனா...? இந்த கேள்வியைத் தான் நானே இந்த ஒரு மாசமா என்னைக் கேட்டுக்கிட்டு இருக்கேன்... உங்க எல்லாருக்கும் நான் மதிப்பெண் இட்டிருக்கேன்... எனக்கு நீங்க மதிப்பெண் இடுங்க... நான் பாஸா, ஃபெயிலா... சொல்லுங்க...?" என என் மாணவர்களிடம் கேட்டேன்.
"பாஸ்ஸ்ஸ்.....!!!!" என்றனர் ஒரே குரலாக.
எனக்குப் பின்னே நின்றிருந்த அந்த சிறுவனை அழைத்தேன்...
"தம்பி... இங்க வாப்பா..."
"சொல்லுங்க ஐயா..." என்றான்.
நாங்கள் இருவரும் பேசுவது அனைவருக்கும் கேட்டிடும் வண்ணம், ஒலிவாங்கியைக் கையில் எடுத்துக் கொண்டு, "என்னைப் பேச அழைக்கும் நேரம் ஒரு குறளின் பாதி மட்டும் சொன்னாயே... அதை முழுதாக ஒரு முறை சொல்கிறாயா...? எல்லாருக்கும் கேட்கும்படி..."
"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு."
பகவன் முதற்றே உலகு."
"இன்னொரு முறை சொல்லேன்..."
மீண்டும் சொன்னான்.
"எதற்காக இந்த குறளைச் சொல்ல சொன்னேன் தெரியுமா...?"
அனைவரையும் பார்த்து... "என்ன தான் தமிழ் என்னும் பாடத்தை நன்கு கற்றறிந்து நடத்த நினைத்தாலும், பாடபுத்தகங்கள் தரப்பட்டுள்ளது போலவே, நானும் சொல்லித்தர வேண்டி இருக்கு... ஏன்னா, அப்படி எழுதினாத்தானே மதிப்பெண் கிடைக்கும்... ஆனா, இந்த மதிப்பெண் எல்லாத்தையும் தாண்டி உண்மைன்னு ஒன்று இருக்கு..." ஒரு சிறு இடைவெளி விட்டு மீண்டும் தொடர்ந்தேன்.
"இதோ இந்த குறளையே எடுத்துக் கொள்ளுங்கள்...
'அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு'
பகவன் முதற்றே உலகு'
இதோட பொருள் என்ன என்று கேட்டால், எல்லாரும் என்ன சொல்லுவீங்க...?"
கூட்டம் முணுமுணுத்தது... அருகில் இருந்த சிறுவனிடம் "நீ சொல்லுப்பா..." எனக் கூற, "எழுத்துக்கள் அ எனும் அகரத்தில் இருந்து துவங்குவது போல், இந்த உலகம் ஆதி பகவனில் இருந்து துவங்குகிறது." என்று சொன்னான்.
"இங்கு தான் நான் சரியாக பணி செய்யவில்லையோ, என நினைக்கிறேன்.
ஒரு ஆசிரியரின் பணி என்ன? பிழைகளைக் களைதல்... ஆசு இரியர், ஆசு என்றால் பிழைகள், இரியர் - திருத்துபவர். பிழைகள் எங்கிருந்தாலும், அதனைத் திருத்தி உங்களுக்கு எது சரி எது தவறு என்று சொல்லித்தர வேண்டியது தானே என் பணி... ஒரு தமிழாசிரியனாக இறுதியாக ஒரு பிழையைத் திருத்துகிறேன்... என் நினைவு இருக்கும் வரை இதை நீங்கள் மறவாமல் இருக்க வேண்டும்... செய்வீர்களா...?"
"கண்டிப்பாக ஐயா..." மாணவர் கூட்டமும், என்னருகில் இருந்த சிறுவனும்.
"எழுத்தெல்லாம் வரைக்கும் சரி... ஆதி என்பது பெயர்ச்சொல் அல்ல... ஆதல் எனும் வேர்ச்சொல்லில் இருந்து வந்தது... ஆதி - உருவாகி... அடுத்த சொல் - பகவன், pagavan, பகவானுக்கு வரும் பகவன் (bagavan) அல்ல... பகவன் - பகு + வன். தமிழ் மொழியில, ப சொல்லின் தொடக்கத்தில் வந்தால் ப (pa) என்று தான் ஒலிக்கும். தம்பி சொன்னது போல பகவன் (bagavan) என ஒலிக்காது. வடமொழி தான் அப்படி ஒலிக்கும்... பகவன் (pagavan)... எல்லாரும் ஒரு முறை சொல்லுங்க..."
"பகவன்....!!!"
"ஆங்... சரி... இதுக்கு என்ன பொருள்... 'ஆதி என்பது ஆவது, உருவாவது... பகவன் என்பது ஒன்றிலிருந்து பகுந்து ஒன்று பல ஆவது... உருவாகி, ஒன்று பலவாகி உருவான இந்த இயற்கையையே முதலாக கொண்டுள்ளது இந்த உலகு' என்று சொல்கிறார் திருவள்ளுவர். நீங்க தேர்வில் கேட்கும் போது, புத்தகத்தில் உள்ளதை எழுதுங்க... மதிப்பெண்ணுக்காக... ஆனா, உண்மை என்னன்னும் தெரிஞ்சுக்கோங்க... எந்த ஒன்றையும் சரியா தவறா என உள்ளுக்குள் ஆயிரம் முறை கேள்வி கேளுங்கள்... நிறைய தேடுங்கள்... எல்லாருக்கும் இந்த தமிழாசிரியனின் மனதார்ந்த வாழ்த்துக்கள்..." என்று நான் சொல்லி முடிக்க, அனைவரின் கைத்தட்டலில் என் மனம் மகிழ்ந்து கூத்தாடியது.
ஒலி வாங்கியை வாங்கிய அந்த சிறுவன், "ஐயா... பிழையை நீங்க திருத்திச் சொல்லிக் கொடுத்திட்டீங்க... நாங்க சரியா சொல்றோமா என்றும் கேட்டுடுங்க..." என்று சொல்லிவிட்டு, தான் முதலில் கூற, மொத்த மாணவர்களும் தீந்தமிழ்க்குறளை ஒப்புவித்த குரல், என் மனதில் தேன்குரலாய்த் தித்தித்தது.
"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
'பகவன்' முதற்றே உலகு."
- முடிவிலி
'பகவன்' முதற்றே உலகு."
- முடிவிலி
சிறந்த தெளிவுரை
ReplyDeleteA retirement story for the first kural of thirukkural. Good thinking guns.
ReplyDeleteஅறிமுக கதை அசத்தலாய் வந்துள்ளது.. இதுநாள் வரை தெரியாத ஒன்று கற்றுக்கொண்டேன். நன்றி 👌👌👌💐💐💐💐
ReplyDeleteஅருமையான பதவுரை
ReplyDeleteகதை அருமை.. எனக்கு ஒரு ஐயம்.. ப’ சொல்லின் முதலாக வரும்பொருட்டு (pa) என்றால்,
ReplyDeleteபலம் என்ற சொல்லை எவ்வாறு சொல்வது(palam) அல்லது (balam).. ??
வலிமை என்ற சொல்லே தமிழ். பலம் என்பது வடமொழிச் சொல்லே...
Deleteசிறப்பு
ReplyDeleteமகிழ்ச்சியும்,வாழ்த்துக்களும்...
அருமை தமோ 👌🏾, ஏற்ற தொடக்கம்! 👏🏽👏🏽
ReplyDeleteஅய்யா இந்த குறளில் எனக்கு நீண்ட நாட்கள் சந்தேகம் உண்டு. ஆதி பகலவன் என்று இருந்து இருக்கலாம் பின் திரிக்கப்பட்டிருக்கலாம் என்று. என் ஐயம் தீர்த்து வைத்ததற்கு நன்றி
ReplyDeleteநீண்டகால கேள்விக்கான விடை கிடைத்தது எனக்கு (ஆனாலும் இதுதான் சரியான விளக்கமா என்ற ஐயமும் இருக்கத்தான் செய்கிறது),
ReplyDeleteகடவுளை பற்றி கூறாமல் இயற்க்கையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார் எனில், கடவுள் பற்றிய திருவள்ளுவரின் பார்வையைப் பற்றி அறிந்துகொள்ள ஆர்வம் வருகிறது.
ஆதிபகவன் - வடமொழி, கடவுளைக் குறிக்கிறது. ஆதாரம் கீழே..
ReplyDeleteஇது கதை/கற்பனை என்றாலும், குறளுக்கு விளக்கம் சொல்ல விழைகையில், உங்கள் கடவுள் மறுப்பைப் புகுத்தாதீர்.
ஆதிபகவன் = கடவுள்
பரிமேலழகர், மு. வரதராசனார், மணக்குடவர், தேவநேயப் பாவாணர், G. U. Pope, எல்லோருமே ஆதிபகவன் என்றால் கடவுள் என்றே உரை எழுதுகின்றனர். அவர்கள் எல்லாம் தவறா?
ஆதிபகவன் வடமொழிச்சொல் என்றும் சொல்கின்றார்.
ஆதாரம்:
"ஆதிபகவன் என்னும் இரு பெயரொட்டுப் பண்புத்தொகை வடநூல் முடிபு. " - பரிமேலழகர்
"ஆதி என்பது வடசொல்; அதாவது வடநாட்டுச்சொல். இதன் விளக்கத்தை என் 'வடமொழி வரலாறு' என்னும் நூலுட் காண்க." - தேவநேயப்பாவாணர்
இப்படி பலரும் சொன்னதை உங்களுக்குத் தோன்றியது போல திரிப்பது தவறு. உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். வள்ளுவருக்கு உண்டு. அவரை ஏன் திரிக்கிறீர்கள்? நன்றி.
தொல்காப்பியம் தெரியுமா...?? அதில் எடுத்துப் பாருங்கள்... வல்லின எழுத்துக்கள் சொல்லின் முதலில் வரின், எப்படி ஒலிக்கும் என்று... திருக்குறளில் சில வடமொழிச் சொற்கள் உள்ளன...
Deleteஎல்லா இடத்திலும் உன் மொழி கொண்டு, உன் தவறைச் சுட்டிக்காட்டுகிறேன் என்பது போலவே வரும்...
குறள்: Sanskrit #1
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்புளார் கோமான்
"இந்திரனே" சாலுங் கரி
ஒழுக்கத்தின் ஆற்றல், உங்க இந்திரனையே வீழ்த்தி விடும்
குறள்: Sanskrit #2
வெருவந்த செய்தொழுகும் வெங்கோலன் ஆயின்
ஒரு "அந்தம்" ஒல்லைக் கெடும்
மக்கள் விரும்பாதவை, அரசன் மூலம் சாதித்தாலும், அழிவே!
குறள்: Sanskrit #3
காமம் வெகுளி மயக்கம் இவ்முன்றன்
"நாமம்" கெடக்கெடும் நோய்
ஸ்வாமி "நாமத்தால்" நோய் போகாது!
காமம் வெகுளி மயக்கம் நீங்குக!
குறள்: Sanskrit #4
"அவி"சொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத்து உண்ணாமை நன்று
யாக "ஹவிஸ்"
மாட்டை வெட்டிப் போட்டு, தேவதா பூஜை இழிவே!
குறள்: Sanskrit #5
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
"ஆகுல" நீர பிற
உங்க ஆரவாரச் சத்தம் (ஆகுலம்) ஓதல் ஒலி வேண்டாம்!
மன மாசு நீக்கலே அறம்!
குறள்: Sanskrit #6
"சலத்தால்" பொருள்செய்தே மார்த்தல் பசுமண்
கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று
சலம் (வஞ்சித்துப்) பொருள் = பச்சைமண் கலச நீரே!
குறள்: Sanskrit #7
அழுக்காறு எனஒரு "பாவி" திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்
பாபம்/ புண்யம் என்று இல்லை!
உங்கள் மனப் பொறாமையே= பாபி:)
குறள்: Sanskrit #8
அச்சமே கீழ்களது "ஆசாரம்" எச்சம்
அவாவுண்டேல் உண்டாம் சிறிது
ஆச்சாரம் என்கிறீர்களே
அது உங்கள் அச்சத்தின்/ஆசையின் விளைவே:)
திருக்குறளில், 8 Sanskrit சொல், வேண்டுமென்றே வைக்கும் ஐயன்!
பிறப்புஒக்கும் எல்லா உயிர்க்கும் - சிறப்புஒவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.
வடமொழிக் கலப்பினால், மனுவினால் மக்களை எல்லா காலமும் ஏமாற்றி விட முடியாது... உன் மொழி கொண்டு உன்னையே இழித்துரைக்கிறேன் பாரென்கிறார் எங்கள் பேராசான் வள்ளுவர்... கடவுள் மறுப்பு பற்றி இந்த கதையில் நான் எங்கு சொல்லியிருக்கிறேன் என நீங்கள் சொன்னால் நலம்... உங்கள் வடமொழிப் பற்றிற்கு - தற்பிடித்தத்திற்கு
வள்ளுவரை இழுக்க வேண்டாம்... நன்றி
ஆதிபகவன் - வடமொழிச் சொல். சொன்னது பரிமேலழகர், தேவநேயப் பாவாணர் இப்படிப் பலர். ஆதாரம்
Delete"ஆதிபகவன் என்னும் இரு பெயரொட்டுப் பண்புத்தொகை வடநூல் முடிபு. " - பரிமேலழகர்
"ஆதி என்பது வடசொல்; அதாவது வடநாட்டுச்சொல். இதன் விளக்கத்தை என் 'வடமொழி வரலாறு' என்னும் நூலுட் காண்க." - தேவநேயப்பாவாணர்
நீங்கள் வடமொழிப் பற்றாளன் என்று விமர்சிப்பது பல தமிழ் வல்லுநர்களை.
"இயற்கையையே முதலாக கொண்டுள்ளது இந்த உலகு" - இது கதையில் சொல்லும் விளக்கம்.
Delete"உலகு கடவுளை முதலாகக் கொண்டுள்ளது" - இது பரிமேலழகர், மு. வரதராசனார், மணக்குடவர், தேவநேயப் பாவாணர், G. U. Pope சொன்ன விளக்கம்.
இரண்டாவது தான் சரியான விளக்கம். அந்த ஆசிரியர் மாணவரிடம் விதைப்பது கடவுள் மறுப்பு என்கிற அரசியல்.
அருமை அருமை . அருமையான நடை அருமையான விளக்கத்தோடு ஒரு இனிமையான முடிவு. வாழ்த்துக்கள் . நிம பணி தொடரட்டும்
ReplyDeleteஇது மாதிரி எல்லா குறளுக்கும் தர முடியுமா?
ReplyDeleteஎழுதிக்கிட்டே இருக்கோம். இதுவரை 244 கதைகள் எழுதியிருக்கோம். 20 எழுத்தாளர்கள் எழுதுறோம்.
Delete