விடுதலை நாள் Independence Day
நினைவில் கொள்வோம்
தண்ணீர்விட் டோவளர்த்தோம்? சர்வேசா!இப்யிரைக்
கண்ணீராற் காத்தோம்
இந்த சுதந்திரப் பயிருக்கு தண்ணீராய்
தங்கள் கண்ணீரையும் செந்நீரையும்
தியாகமாய் தந்த அனைவரின்
பொற்பாதங்களையும் சிரம் தொட்டு வணங்குகிறேன்....
இந்த நாளில் நாம் நினைவுகொள்ள வேண்டியவர்கள் எவ்வித சுயநலமும் இல்லாமல் நாட்டிற்கென உயிர் - உடைமை - உறவு தொலைத்த தியாகச் செம்மல்களையே...! அவ்விதம் மகத்தான தியாகம் செய்தும் உரிய அங்கீகாரம் கிடைக்காத சிலரை நினைவு கொள்வோம் இந்நாளில்... அவருள் முக்கியமானவர் சுப்பிரமணிய சிவம்...
காந்தீயம், கம்யூனிசம், தீவிரவாதம் எனப் பிரிந்து கிடந்த தேசப்பற்று மிக்கவர்களுக்கு மத்தியில், யாரெல்லாம் நாட்டுக்குப் போராடுகிறார்களோ அவர்கள் அனைவரும் என் நண்பனே எனக் கூறி - தன் பேச்சால் பலரை விடுதலைப் போராட்டத்திற்கு ஈர்த்தவர் சிவம்.
பிரிட்டிஷ்காரர்களுக்கு சிம்ம சொப்பனமாய் விளங்கிய சுதந்திர மும்மூர்த்திகளுள் ஒருவர் சிவம்... (பாரதி, வ.உ.சி, சிவம்)
அவர் ஞானபாநு பத்திரிக்கையில் எழுதிய சுதந்திர வேட்கை சுடர்விடும் எழுத்துக்கள் - மேடைப்பேச்சுக்கள் - நாடகங்கள் என பல வகைகளில் அவர் தொடுத்த விடுதலைக் கணைகளால் நொந்த ஆங்கிலேயர் அவரைப் பலமுறை சிறைக் கதவுகளால் கட்டுப்படுத்த நினைத்து முயன்று தோற்றனர்.
சிறைச்சாலை சென்று - செக்கிழுத்து - சொத்திழந்து - தன் மனைவி உயிர்நீத்த நேரம் கூட நாட்டுக்கெனப் போராடி - தொடர்ந்து நாடு முழுதும் பயணம் கொண்டு- செல்லுமிடமெல்லாம் தன் பேச்சால், செயலால் விடுதலைப் பயிர் வளர்த்து - மீண்டும் சிறை சென்று - சிறையிலே தொழுநோயால் பீடிக்கப்பட்டு - நோய் தாக்கம் உடலுக்கு இருப்பினும் தன் மனவலிமை கொண்டு தானிறக்கும் வரை நாட்டுக்கெனப் போராடி தேசப்பற்றை வியர்வையாய் - குருதியாய் - கண்ணீராய் இந்த மண்ணில் விதைத்தவர்.
41 ம் வயதில் நோய்முற்றி இறந்தாலும் தன் பேச்சு - எழுத்து - கோட்பாடுகளால் என்றும் வாழ்வார் சுப்பிரமணிய சிவம்.
விடுதலை நாளைக் கொண்டாடும் வேளை இவர் போன்று தன் இன்னுயிரை ஈந்த - போராடிய - கனவுகண்ட அனைத்து உள்ளங்களுக்கும் என் சிரந்தாழ்த்தி நன்றி கூறுகிறேன்.
- கணபதிராமன்
''நான் ஒரு சந்யாசி. முக்தியடையும் வழியைப் பிரச்சாரம் செய்வதே என் வேலை. அதன் தத்துவங்களை எடுத்து விளக்கி அதை அடையும் மார்க்கத்தை போதிப்பதே என் வேலை. சகலவிதமான வெளி பந்தங்களினின்றும் விடுவித்துக் கொள்வதே ஆத்மாவிற்கு முக்தியாகும். இதே போன்று ஒரு தேசத்தில் முக்கியமாவது - அந்நிய நாடுகளின் பிடிப்பினின்றும் விடுவித்துக் கொள்வது; பரிபூர்ண சுதந்திரம் அடைவது. அதையே இந்நாட்டு மக்களுக்கு நான் போதிக்கிறேன். அதாவது, சுதந்திர லட்சியம் அதை அடையும் மார்க்கம். புறக்கணிப்பது - சுதந்திரப் பாதையில் குறுக்கே நிற்கும் எதையும் - சாத்வீக முறையில் எதிர்ப்பது, சுதேச கல்வி இவையேயாகும்.''
- சுப்பிரமணிய சிவம்
அருமை
ReplyDeleteமிகவும் சிலாகித்து படித்தேன் .....எழுத்து உணர்வு பூர்வகமாக இருந்தது.
ReplyDelete