திறமை மதியா சமூகம் - Subash Mukhopadhyay
சுபாஷ் முகோபாத்யாய்... இந்தப் பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறோமா...? இவர் யாரென அறிந்திருக்கிறோமா...? உலகம் இன்றும் பல திறமை கொண்ட இரத்தினங்களைக் குப்பையில் கொட்டி வீணடித்துக் கொண்டிருக்கிறது. தன் திறமை மீது கொண்ட நம்பிக்கைக்கு திமிர் எனப் பெயர் சூட்டி - வதைத்துக் கொல்லத் திட்டமிட்டுக் காத்திருக்கும் இந்த உலகால் கொலை செய்யப்பட்ட ஒரு மருத்துவனின் கதை இது.
சுபாஷ் முகோபாத்யாய் (1931 - 1981) |
சுபாஷ் முகோபாத்யாய் (Subash Mukhopadhyay) 16-01-1931 அன்று பீஹார் மாநிலம் ஹலாரிபாக் எனுமிடத்தில் பிறந்தார். படிப்பில் நன்கு விளங்கிய சுபாஷ், கல்கத்தா தேசிய மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படிக்க சேர்ந்தார். 1955 ல் மருத்துவப் பட்டம் பெற்ற சுபாஷ், பட்டமேற்படிப்பைக் கல்கத்தா பல்கலைக்கழகத்திலும், எடின்பர்க் பல்கலைக்கழகத்திலும் முடித்தார். அவர் எடுத்தத் துறைகள்: இனப்பெருக்க உடலியல் (Reproductive Physiology) மற்றும் இனப்பெருக்க உட்சுரப்பியல் (Reproductive Endocrinology).
சுபாஷ் மருத்துவத்துறையில் அதுவும் தான் பயின்ற இனப்பெருக்க உடலியல் - உட்சுரப்பியல் துறையில் ஆராய்ச்சி செய்து - மருத்துவத்துறையில் தன் பெயர் நீங்காதிருக்க பல சாதனை புரிய சித்தமாயிருந்தார். இவரின் முயற்சியில் சுனித் முகர்ஜி (குறைவெப்ப உயிரியலாளர், Cryobiologist), சரோஜ் பட்டாச்சார்யா (மகப்பேறு மருத்துவர், Gynaecologist) ஆகியோர் உதவியாயிருந்தனர். இவர்கள் துணையுடன் செயற்கைக் கருத்தரிப்பு குறித்து ஆராய்ச்சி செய்து வெற்றியும் கண்டார் சுபாஷ். 3.10.1978 அன்று இந்தியாவின் முதல் (உலகின் இரண்டாம்) சோதனைக் குழாய் குழந்தை "துர்கா" பிறந்தாள்.
உலகின் முதல் சோதனைக் குழாய் குழந்தை இங்கிலாந்தைச் சார்ந்த எட்வர்ட் மற்றும் ஸ்டெப்டோ எனும் மருத்துவர்களால் உருவாக்கப்பட்டது. இதற்காக, எட்வர்டுக்கு நோபல் பரிசு கிடைத்தது. லேப்ராஸ்கோப்பி போன்ற உயர்தொழில் நுட்ப உதவியுடன் இவர்கள் ஆய்வு மேற்கொண்டிருந்த அதே நேரத்தில் இந்தியாவில் சுபாஷும் அதே ஆராய்ச்சியை ஒரு குளிர்சாதனப் பெட்டி, சில ஆய்வு உபகரணங்கள் கொண்டு, தனது வீட்டின் அவர் நிறுவிய ஆய்வறையில் செய்து கொண்டிருந்தார். உலகின் முதல் சோதனைக் குழாய் குழந்தை பிறந்து 67 நாட்களில் துர்காவும் பிறந்திருந்தாள்.
துர்காவின் பிறப்பை - இந்தியாவின் முதல் சோதனைக் குழாய் குழந்தையை - தன் ஆராய்ச்சியின் வெற்றியை உலகிற்கு ஊடகங்கள் மூலம் கூறி மகிழ்ந்தார் சுபாஷ். தனது உழைப்பிற்கு அங்கீகாரம் - புகழ் கிடைக்கும் என எதிர்பார்த்த சுபாஷுக்கு கிடைத்தது பழி - குற்றச்சாட்டு - மோசடிப் பட்டம்...!
குற்றச்சாட்டு 1: இந்திய அரசு, மேற்கு வங்க மாநில அரசு, இந்திய மருத்துவ கழகம் ஆகியவற்றைப் புறக்கணித்து நேரே ஊடகத்தில் பேசியது.
குற்றச்சாட்டு 2: முதல் சோதனைக் குழாய் குழந்தை உருவாக்கியவர் தானே என அவர் கூறியிருந்தது.
குற்றச்சாட்டு 3: சில ஆய்வு உபகரணங்கள், ஒரு குளிர்சாதனப் பெட்டி கொண்டு யாரும் செய்யமுடியாததை செய்து காட்டியது நம்பும் படியாய் இல்லை.
குற்றச்சாட்டு 4: (முக்கியமான குற்றம்...!?) இந்திய மருத்துவ கழகத்தின் அதிகாரிகளையும், அரசாங்கத்தையும் மதிக்காதது....!
இனப்பெருக்க உடலியலின் நவீன மருத்துவ முறைகள் குறித்து ஒன்றும் அறியாத ஐந்து நபர் குழு இவரை விசாரித்து "இவர் கூறுவது முழுக்கப் பொய் மற்றும் மோசடி" எனத் தீர்ப்பளித்தது. இது குறித்து இவர் மேலும் ஆராய்ச்சி செய்வதையும், பன்னாட்டு கருத்தரங்குகளில் பங்கு பெறுவதையும் தடை செய்த இந்திய மருத்துவ கழகம், இவரைக் கண் மருத்துவத் துறைக்கு மாற்றியது.
மனமுடைந்த - மன உளைச்சல் அடைந்த சுபாஷ் 19 ஜூன் 1981 அன்று தற்கொலை செய்து கொண்டார்.
பின்னாளில், இந்தியாவின் முதல் சோதனைக் குழாய் குழந்தையை உருவாக்கியவர் என இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர் டி.சி.ஆனந்த் குமார், இவர் பற்றி அறிந்து - சுபாஷின் பெயருக்கு ஏற்பட்ட களங்கம் துடைக்க முயற்சி மேற்கொண்டார். சுபாஷின் ஆராய்ச்சிக் குறிப்புகளை பார்வையிட்ட குமார், சுபாஷ் தான் இந்தியாவின் முதல் செயற்கைக் கருத்தரிப்பை நிகழ்த்திக் காட்டியவர் என அங்கீகாரம் கொடுத்தார்.
உலக அறக்கட்டளை (World Foundation) எனும் அமைப்பு வெளியிடும் மருத்துவ சரிதைக் களஞ்சியம் (Dictionary of Medical Biography) என்றப் புத்தகத்தில் 100 நாடுகளின் 1100 மருத்துவ மேதைகள் என்றப் பகுதியில் சுபாஷின் பெயரும் இடம் பெற்றுள்ளது. என்னதான் இருந்தாலும், உயிருடன் இருந்தபோது தூற்றிவிட்டு - மன உளைச்சல் தந்து - திறமை கொண்ட ஒரு சிறந்தவனை சாகடித்த சமூகத்தில் தான் நாம் வாழ்கிறோம் என நினைக்கும்போது சிறுபயம் மனதில் தொற்றிக் கொள்கிறது.
- கணபதிராமன்
வாழும் காலத்தில் அங்கீகாரம் பெறும் உண்மையான திறமைசாலிகள் நம் நாட்டில் மிகவும் குறைவு. ஆடம்பரங்களையும், தகுதியற்ற தலைவர்களை, சுயநலத்தாலோ, அறிவின்மையாலோ கொண்டாடும் அரைவேக்காடுகள் பெரும்பான்மையாக இருக்கும் வரை இந்தநிலை மாறுவது கடினம். அருமையான கட்டுரை.
ReplyDelete