தக்கன பிழைத்து வாழும் - The fittest will survive

தக்கன பிழைத்து வாழும் 
சூழலுக்குத் தகுந்தாற்போல் - இயற்கைக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொண்டு போராடும் உயிரினமே வாழ்வுப் போரில் பிழைத்து வாழும் எனக் கூறி உலகையேத் தன் பக்கம் திரும்ப வைத்த சார்லஸ் டார்வின் பற்றி இந்தப் பதிவு. இன்று இதை எழுதக் காரணமும் உண்டு. 
சார்லஸ் டார்வின் (1809 - 1882)
சார்லஸ் டார்வின் இங்கிலாந்தில் உள்ள ஷ்ரூஸ்பரி எனும் இடத்தில் 1809 ஆம் ஆண்டில் பிறந்தவர். சிறு வயது முதல் வண்ணத்துப் பூச்சி பிடித்து வளர்ந்தவர். தந்தை மருத்துவர். பாட்டனும் மருத்துவர். இவரையும் மருத்துவராக்க இவர் தந்தை முயற்சி செய்தார். சிறுவன் டார்வினின் மனதில் வேறு தீர்மானங்கள் இருந்தன. எடின்பரோ பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயில சேர்த்து விடப்பட்ட டார்வின், தனக்கு மருத்துவத்தில் நாட்டமில்லை என படிப்பில் இருந்து விலகினார். பின்பு தந்தையின் கட்டளைக்கு இணங்க கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இறையியல் (Theology) படிப்பில் சேர்ந்தார். தனது விருப்பம் இல்லாவிடினும் சிறப்பாய் தனது படிப்பை முடித்தார். கேம்பிரிட்ஜ் கல்லூரி வாழ்க்கை அவருக்கு சில சிறந்த நண்பர்களைத் தந்தது. அந்த நண்பர்களின் உதவியோடு அவருக்கு வாழ்வின் திருப்புமுனையான ஒரு பயணம் கிடைத்தது.

HMS பீகிள் கடற்பயணம்:
டார்வினின் பீகிள் கடற்பயணம் (1831 - 1836)
1831 ஆம் ஆண்டு இரண்டு ஆண்டுகளில் உலகின் பல நாடுகள் சென்று வர ஒரு பயணம் டார்வினுக்கு வரமாய் கிடைத்தது. இங்கிலாந்து பிளைமவுத் துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட பீகிள் கப்பல் தென் அமெரிக்கா - ஆஸ்திரேலியா - ஆப்பிரிக்க கடலோரப் பகுதிகளில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளத் தயாராய் இருந்தது. சென்ற இடமெல்லாம் கற்கள் - பூச்சிகள் - புழுக்கள் - எலும்புகள் என சேகரிக்கத் துவங்கினார் டார்வின். இரண்டு ஆண்டுகள் ஐந்து ஆண்டுகள் ஆயின. காலம் முழுதும் தன் பெயர் நிலைத்து நிற்க இந்த ஐந்து ஆண்டுகளே காரணமாயிருக்கும் என முழுதாய் உணர்ந்திருந்தார் டார்வின். 1836 ஆம் ஆண்டு வெற்றிகரமாக தன் நாடு திரும்பிய டார்வின் தன் பயண அனுபவத்தை 1839 ஆம் ஆண்டு புத்தகமாய் வெளியிட்டார்.

பரிணாம வளர்ச்சி கொள்கை:
டார்வின் மேற்கொண்ட ஐந்து வருடப் பயணம் - தான் உடன் கொணர்ந்த பல்வேறு விலங்கினங்களின் மாதிரிகள் அவரை மேலும் உயிரினங்களின் தோற்றம் குறித்து ஆராயத் தூண்டியது. தான் கூறப் போகும் கருத்துக்கள் உலகின் பல நம்பிக்கைகளைத் தகர்க்கும் எனத் தெரிந்த டார்வின் பல ஆதாரங்களுடன் சொல்ல வேண்டிய நிலையில் தன் ஆய்வைத் தொடர்ந்தார். பல விலங்குகளின் இடையே காணும் வேற்றுமைகள் - ஒற்றுமைகள் எனப் பலகாரணிகளை ஆய்ந்த டார்வின் தன்னுடைய ஆய்வு இயற்கைத் தேர்வு - பரிணாம வளர்ச்சிக் கொள்கை போன்றவற்றை 1858 ஆம் வருடம் இந்த தேதியில் (20 ஆகஸ்ட்) லண்டன் லின்னேயன் கழகத்தில் வெளியிட்டார். இருத்தலுக்கானப் போட்டி (Struggle for Existence), இயற்கையின் தேர்வு (Natural Selection) பற்றி இவ்வாறு எடுத்துரைக்கிறார் டார்வின்.
"இருத்தலுக்கான போட்டியில் இயற்கைக்கு - சூழலுக்கு சாதகமான மாற்றங்கள்  பாதுகாக்கப்படும். பாதகமான மாற்றங்கள் அழிக்கப்படும். இந்த மாற்றங்களாலே புதிய உயிரினங்கள் உருவாயின"

அடுத்த ஆண்டு தனது ஆராய்ச்சி பற்றி உலகம் தெரிந்து கொள்ள உயிரினங்களின் தோற்றம் (The Origin of the Species) என்றப் புத்தகத்தை எழுதினார். கடவுளால் படைக்கப்பட்டோம் என்ற கோட்பாடு மேலோங்கிய காலத்தில் இவர் எழுதிய இந்தப் புத்தகம் பெரும் சர்ச்சையையும் விமர்சனத்தையும் சந்தித்தது. 
மனிதக் குரங்கு போல் சித்தரிக்கப்பட்ட டார்வின் - கேலிச்சித்திரம் (1871)
அன்று எள்ளி நகையாடப் பட்டாலும் இன்று பரிணாமத்தின் தந்தையாய் உலகத்தால் போற்றப்படும் டார்வினுக்கு புகழாரம் சூட்டி மகிழும்,

- கணபதிராமன்

Comments

  1. அருமை நண்பரே

    ReplyDelete
  2. இந்த பதிவிற்கு பின்னால் இருக்கும் உன்னோட உழைப்பு பார்க்கும் போது பிரமிப்பு உண்டாகுது ....வாழ்த்துகள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அகர முதல - சிறுகதை (திருக்குறள் கதை) குறள் 0001

புறநானூறு பேசும் நீர் மேலாண்மை

வான்கா - Vanka