வீரத்தின் பயணம் - From Anakkara to Kanpur

நினைவில் கொள்வோம் - 2


சுதந்திர தினம் மட்டுமல்ல தியாகிகளை நினைவில் கொள்ள... எந்நாளும் நாம் கொண்டாட வேண்டிய பலர் இம்மண்ணில் சேவை புரிந்து சென்றுள்ளனர். அவர்களுள் ஒருவர் திருமதி லட்சுமி சேகல் சுவாமிநாதன்.

சுதந்திரம் மூன்று வகைகளில் உள்ளது. 
முதலானது கைப்பற்றி அடக்கியாளும் அந்நிய சக்திகளிடம் இருந்து விடுபடும்  
அரசியல் விடுதலை (political freedom).
இரண்டாவது பொருளாதார விடுதலை (economical freedom)
மூன்றாவது சமூக விடுதலை (Social freedom) 
இந்தியா முதலாவதை மட்டும் பெற்றிருக்கிறது.
- கேப்டன் லட்சுமி சேகல் 
கேப்டன் லட்சுமி சேகல் (1914 - 2012)


 பயணம் : ஆனக்கரா முதல் கான்பூர் வரை 
அக்டோபர் 24 1914 ஆம் நாள் அன்றைய மதராஸ் மாகாணத்தின் - இன்றைய பாலக்காட்டின் ஆனக்கரா என்ற கிராமத்தில் அம்மு - சுவாமிநாதன் தம்பதியருக்கு மகளாய் பிறந்தவர் லட்சுமி. தந்தை மதராஸ் உயர்நீதி மன்ற வழக்கறிஞர். தாய் சமூக சேவகி. சிறு வயது முதல் கல்வியிலும் பிறருக்கு உதவி புரியும் நன்னோக்கிலும் முதலிடம் பெற்று விளங்கினார். 
மதராஸ் மருத்துவ கல்லூரியில் மருத்துவம் பயின்ற லட்சுமி மதராஸ் கஸ்தூரிபாய் மருத்துவமனையில் தன் மருத்துவப் பணியை துவங்கினார். பெண்ணை வீட்டில் பூட்டி வைக்க முயன்ற தன் திருமண வாழ்வை முறித்து - தன் மருத்துவ சேவையைத் தொடர்ந்தார் லட்சுமி. 
1940 ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூரில் புலம்பெயர் இந்தியர்களுக்குப் பல மருத்துவ முகாம்கள் மூலம் சேவை செய்து வந்த லட்சுமி, சுபாஷ் சந்திர போஸின் சந்திப்பில் தானும் இந்திய தேசிய ராணுவத்தில் சேர விழைந்தார், மருத்துவராக. ஆனால், பெண்களின் சக்தியை உணர்ந்த சுபாஷோ, தம் ராணுவத்தில் பெண்களைக் கொண்டு புதுப்படை ஒன்றை அமைக்க இருப்பதாக அறிவிக்க - முதல் பெண்ணாய் சேர்ந்தார் லட்சுமி. உருவானது ஜான்சி ராணி ரெஜிமென்ட். மருத்துவர் லட்சுமி அன்று முதல் கேப்டன் லட்சுமி ஆனார். 
சுபாஷுடன் லட்சுமி சேகல்
டிசம்பர் 1944 ல் சுபாஷின் ராணுவம் பர்மாவை நோக்கி முன்னேறியது. இந்தப் போர்க்காலத்தில் - களத்தில் லட்சுமியின் பங்காற்றல் அளப்பரியது. மருத்துவராகவும் - சோர்ந்த சோதரர்களுக்கு ஊக்கம் தந்த நண்பராகவும் - ஆண்களுக்கு எவ்விதத்திலும் குறைவில்லை என முன்னேறிய பெண் படையின் தலைமை வீராங்கனையாகவும் லட்சுமி விளங்கினார். 
மே 1945 ல் பிரிட்டிஷ் படை லட்சுமியை சிறைபிடித்தது. மார்ச் 1946 வரை அவரை பர்மாக் காடுகளில் வீட்டுச்சிறையில் வதைத்தது. மார்ச் 1946 ல் விடுதலை செய்யப்பட்ட லட்சுமி, தன் தாய்நாட்டிற்கான சேவைப் பயணத்தை மீண்டும் துவங்கினார். கொள்கை - கருத்து போன்றவற்றில் ஒன்றிய இதயங்களில் தோன்றிய காதலினால் சகவீரனான கர்னல் பிரேம் குமார் சேகலை மார்ச் 1947 ஆம் ஆண்டு லாகூரில் மணந்தார். பின்னர், லாகூரில் இருந்து கான்பூர் வந்தவர் இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது நடந்த கலவரங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல மருத்துவ உதவிகளைச் செய்து வந்தார். பொது அரசியலில் ஈடுபாடு இல்லையெனினும் தன்னால் ஆன பல உதவிகளை இந்த நாட்டிற்கு தன் வாழ்நாள் முழுதும் செய்து வந்தவர் லட்சுமி. 
1970களில் வங்கதேசத்தில் இருந்து இந்தியாவிற்கு வந்த அகதிகளுக்கு, முகாம்கள் மூலம் மருத்துவ மற்றும் பொருள் உதவிகளைத் தானாக முன்வந்து செய்தவர். போபால் விஷவாயு சம்பவம், சீக்கிய எதிர்ப்புக் கலவரம் போன்ற பல நேரங்களில் தான் பயின்ற மருத்துவத்தின் மூலம் சேவை செய்தார் லட்சுமி சேகல். 
கம்யூனிசக் கொள்கைகளில் பெரும் ஈடுபாடு கொண்ட லட்சுமி சேகல், இந்திய ஜனாதிபதி தேர்தலில் அப்துல் கலாமிற்குப் போட்டியாய் நின்றவர். தனக்குக் கிடைத்த அந்த வாய்ப்பை - தான் வெற்றிப்பெற வாய்ப்பில்லை என்ற போதும் வறுமையையும் அநீதியையும் நாட்டில் தாண்டவமாட விட்ட அரசியலைச் சாடுவதற்கு - தன் கருத்துக்களைப் பதிவதற்கு ஒரு மேடையாக மாற்றிக் கொண்டார். 
தம் இறுதி நாட்கள் வரை மருத்துவம் மூலம் மக்கள் சேவை செய்த லட்சுமி சேகல் ஜூலை 23 2012 அன்று நம்மைப் பிரிந்தார் - உயிர் துறந்தார். 

ஒரு போராளியாக - மருத்துவராக - விடுதலை வீராங்கனையாக - சேவகியாக - எந்நாளும் ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் பக்கம் நின்ற எம் அன்னை லட்சுமி சேகலை என்றும் நினைவில் கொள்வோம்.
 

Comments

  1. ஜனாதிபதி தேர்தலின் போது இவரை அறிந்தேன் .இந்த ஒரு பக்க வரலாறு இன்னும் சுவாரசியமாக உள்ளது.....

    ReplyDelete
  2. நல்ல செய்தி

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அகர முதல - சிறுகதை (திருக்குறள் கதை) குறள் 0001

புறநானூறு பேசும் நீர் மேலாண்மை

வான்கா - Vanka