காட்சிப்பிழை

காட்சிப்பிழை

வானகமே, இளவெயிலே, மரச்செறிவே
நீங்களெல்லாம் கானலின் நீரோ?
வெறும் காட்சிப்பிழை தானோ? 

- பாரதி

காட்சிப்பிழைக் குறித்து பாரதியின் கவிதை படித்து சிலநேரம் யோசித்தது உண்டு. நாம் கண்ணில் காணும் காட்சி அனைத்தும் உண்மையா?

சில விஷயங்களை ஆராய்வோம். 

முதல் விஷயம்: இடி மின்னல். 



ஒரே விஷயத்திற்கு இரு பெயர்கள்.... இடி... மின்னல்.... மேகங்களின் மின்னூட்ட வேறுபாட்டின் காரணமாக மேகங்களினோடோ அல்லது புவியினுடனோ ஏற்படும் மின்னூட்டப் பகிர்மானமே மின்னலாய்த் தெரிகிறது.... இடியாய்க் கேட்கிறது.

மின்னல் தெரிவதை விட இடி சிறிது தாமதமாகவே கேட்கிறது. காரணம் அனைவருக்கும் தெரிந்ததே. ஒளி ஒலியின் வேக வேறுபாடு. ஒளி ஒரு நொடிக்கு 3 லட்சம் கிமீ. ஒலி நொடிக்கு 330மீ மட்டுமே... ஒரே நேரத்தில் ஒரே இடத்திலிருந்து புறப்பட்ட இரண்டும் நம்மிடை வந்தடைய நேர்ந்த நேரதாமதமே இப்பெயர் வேறுபாட்டிற்குக் காரணம். 

காலந்தவறினும் முன்னே வந்த மின்னலின் வீச்சை நமக்கு கர்ஜித்துச் சொல்ல தவறுவதில்லை இடி.

இரண்டாவது விஷயம்: விண்மீன்கள்.

இதைக் காண்பதற்கு முன்னர், ஒளி ஆண்டு பற்றிக் கூறியே ஆகவேண்டும். 

ஒளி ஆண்டு - பெயரைக் கண்டால் நேரத்தைக் குறிப்பது போலிருப்பினும் இது தூரத்தையே குறிக்கிறது. ஒளி ஒரு ஆண்டில் பயணிக்கும் தூரம் - ஒளி ஆண்டு... தோராயமாக 946,080,000,000 கிமீ....!!!!


நாம் வானில் காணும் விண்மீன்களில் பல நமது பூமியிலிருந்து வெகு தூரத்தில் உள்ளவை. உதாரணமாக, ஒரு நட்சத்திரம் 2 ஒளி ஆண்டு தூரத்தில் இருப்பதாய் நினைத்துக் கொள்வோம். நாம் இரவில் அந்த விண்மீனைக் காணும் அந்த நொடியில் இரண்டு வருடத்திற்கு முன்பு அந்த விண்மீன் இருந்த இடத்தையே பார்க்கிறோம். இப்போது அந்த விண்மீன் அங்கிருந்து நகர்ந்து சென்றிருக்கலாம்... ஏன் வெடித்துச் சிதறிக்கூட இருக்கலாம்.

இவ்வளவு ஏன்... நமக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரமான சூரியன்கூட நாம் காணும் நேரம் அங்கிருப்பதில்லை... நாம் காணும் நொடி, சூரியன் 8 1/2 நிமிடம் நகர்ந்திருக்கும்.

எனைக் கேட்டால்,

தோற்றப்பிழைகளும் நிஜமே...
அவற்றின் நிஜத்தன்மையை
உணரும் வரம் கிடைப்பின்...

அந்நொடி வரை பொய்சூழ் உலகு
மாயங்களால் மயங்கியிருக்கும்.

- கணபதிராமன்

Comments

  1. பார்வைக்கு வருபவை தோற்ற பிழை ஆனாலும், அவை இருந்தது என்பதுவும் உண்மைதானே! ஆகவே தோற்ற பிழை என்பதே தவறு என்று கூட எண்ண தோன்றுகின்றது. அவற்றை தாமத தோற்றம் எனலாமோ? நாம் கூட சிலவற்றை கண்ணால் பார்த்தோ அல்லது காதால் கேட்டோ அல்லது தவறாக சில விஷயங்களை படித்தோ நம்முள் சிலவற்றை பிழையாய் நினைப்பதுண்டு. இவற்றை வேண்டுமானால் தோற்றப்பிழை எனலாமோ?

    ReplyDelete
    Replies
    1. கூறியவை உதாரணங்களே.... காணும் நபர் பொறுத்து காட்சி மாறினும் உண்மை என்றும் ஒன்றே... உண்மை நிலையை உணரும் அறிவு கொண்டால் மாயம் மறைக்கும் திரை விலகும்...
      அந்நொடி வரை பொய்சூழ் உலகு
      மாயங்களால் மயங்கியிருக்கும்.

      Delete

Post a Comment

Popular posts from this blog

அகர முதல - சிறுகதை (திருக்குறள் கதை) குறள் 0001

புறநானூறு பேசும் நீர் மேலாண்மை

வான்கா - Vanka