அன்னை தெரசா - Mother Teresa

அன்னை தெரசா
இவருக்கு அறிமுகம் சொல்ல அவசியமில்லை. அமைதியின் உருவாய் - கருணையின் வடிவாய் - பலர் வாழ்வின் விடிவாய் விளங்கிய எம் அன்னை தெரசாவின் பிறந்தநாள் இன்று. 

இன்றைய மெசிடோனியா, அன்றைய ஒட்டாமான் பேரரசில் ஸ்கோப்யே (Skopje) எனுமிடத்தில் 25.௦8.1910 அன்று பிறந்தார் தெரசா. பெற்றோர் இட்ட பெயர் ஏக்னெஸ் கோண்ட்சே போயாட்ஸ்யூ (Albanian: Anjeze.Gonxhe Bojaxhiu, கோண்ட்சே என்றால் அல்பேனிய மொழியில் சிறுமலர் எனப் பொருள்) தனது எட்டாவது வயதில் தந்தையை இழந்த ஏக்னெஸ், தனது சிறு வயதிலேயே மதநெறி வாழ்வையும், கிறித்துவத் துறவையும் பின் தொடர விழைந்தார். 
ஏக்னெஸ் கோண்ட்சே போயாட்ஸ்யூ - சிறுவயதில்
1928 ஆம் ஆண்டு தனது பதினெட்டாவது வயதில் வீட்டை விட்டு வெளியேறிய ஏக்னெஸ், அயர்லாந்து ராத்பர்ன்ஹாமில் உள்ள லோரெட்டோ சகோதரிகள் (Loretto Sisters) எனும் அமைப்பில் இணைந்தார். அங்கு ஆங்கிலம் கற்ற ஏக்னெஸ் 1929 ஆம்வருடம் இந்தியாவுக்கு வந்தார். டார்ஜிலிங்கில் கிறித்துவத் துறவறப் புகுநிலைப் பயிற்சியில் (novitiate) கலந்து கொண்ட  ஏக்னெஸ் 1931ம் வருடம் மாடக்கன்னியாகக் உறுதிமொழி ஏற்றார். ஏற்கனவே, ஏக்னெஸ் என்ற பெயரில் மற்றொரு கன்னியாஸ்திரி இருக்க, தன் பெயரை பிரெஞ்சு புனிதத் துறவியின் பெயரை மாற்றிக் கொள்ள சம்மதித்தார் ஏக்னெஸ்.இவ்வாறென, 24 மே 1931 முதல் ஏக்னெஸ் கோண்ட்சே சகோதரி தெரசாவாக மாறினார். 
சகோதரி ஏக்னெஸ்
டார்ஜிலிங் லோரெட்டோ கான்வென்ட் பள்ளியில் இந்தியக் குழந்தைகளுக்கு சுமார் 20 வருடம் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார். 1944ல் தலைமை ஆசிரியாராகவும் ஆனார். ஆசிரியப் பணியில் உள்ளம் நிறைந்திருந்த போதிலும், கல்விப்பணியைத் தாண்டி வறுமையால் - நோயால் - ஆசியால் வாடும் பலருக்கு நேரடியாய் சேவை செய்ய அவர்மனம் நாடியது. இவ்வாறு இவர் நினைக்க இரு பெறும் துயரங்கள் காரணமாயிருந்தன. ஒன்று 1943 ஆம் ஆண்டு வங்கத்தில் நிலவிய பெரும் பஞ்சம், மற்றொன்று 1946 ஆம்  ஆண்டு வெடித்த ஹிந்து முஸ்லிம் கலவரங்கள். இரண்டிலும் பெரிதும் பாதித்தவர்கள் சாதாரண ஏழைகளே. 10 செப்டம்பர் 1946 டார்ஜிலிங் ஆசிரிய வாழ்க்கைக்கு விட்டு வெளியேறிய தெரசா அந்த நிகழ்வைக் குறித்து பின்னைல் இவ்வாறு கூறுகிறார். 
"ஏழைகளுக்கு அவர்களுடன் வசித்து உதவுவதற்காக, நான் கான்வென்ட் வாழ்க்கையை விட்டு நீங்க வேண்டி இருந்தது. அது ஆண்டவன் கட்டளை. அதை மீறுவது தெய்வ நம்பிக்கைக்கு எதிரானதாக இருந்திருக்கும்"
1948 ல் இந்தியக் குடியுரிமை அடைந்து - நீல வண்ண ஓரம் கொண்ட - எளிய வெண்ணிற புடவை அணிந்து சகோதரி தெரசா தன எண்ணங்களாலும் சேவை செயலாலும் அன்னை தெரசாவாக மாறி இருந்தார். பாட்னாவில் புனித குடும்ப மருத்துவமனையில் (Holy Family Hospital) அடிப்படை மருத்துவப் பயிற்சி பெற்ற தெரசா, சேரிவாழ் மக்களுக்கும், ஏழைகளுக்கும் மருத்துவ உதவிகள் செய்யலானார். 1949 ல் தன்னைப் போல் ஆர்வமுள்ள மகளிருடன் இணைந்து "ஏழைகளுள் ஏழை" (Poorest Among the Poor) எனும் அமைப்பை நிறுவினார். 1950 ல் வாடிகன் உதவியுடன் அந்த அமைப்பு கருணைப் பணியாளர் சபையாக (Missionaries of charity) மாறியது. 
"பசித்தவருக்கு - உடையற்றவருக்கு - 
வீடற்றவருக்கு - ஊனமானவருக்கு - 
குருடர்களுக்கு - தொழுநோயாளிகளுக்கு - 
சமூகத்தால் விரும்பப்படாத - வேதனையுற்ற - 
வெறுத்து ஒதுக்கப்பட்ட - ஒடுக்கப்பட்டவர்களுக்கு 
தொண்டு செய்வதே தம் அமைப்பின் நோக்கம்"
- அன்னை தெரசா 
அன்னை தெரசா
தீராத நோயுடைய மக்கள் தம் கடைசிநாட்களை நிம்மதியாய் கழிக்க நிர்மல் இருதய் எனும் இல்லத்தையும், தொழுநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவிகள் செய்ய சாந்தி நகர் எனும் மருத்துவ இல்லத்தையும் நிறுவிய அன்னை தெரசா, அனாதைக் குழந்தைகளுக்கு நிர்மலா சிசு பவன் என்ற அநாதை இல்லத்தையும் துவங்கி பராமரித்து வந்தார். இந்தியாவில் துவங்கிய இவர் சேவை 1965 முதல் உலகெங்கும் பரவியது. வெனிசுவேலா, தான்சானியா, ஆஸ்திரியா என உலகின் அனைத்து கண்டங்களிலும், சேவை தேவைப்படும் இடங்களில் தானே முன்வந்து உதவியதோடு மட்டுமல்லாமல், மற்றவரையும் உதவ ஊக்கம் தந்தார் தெரசா. 

1962ல் ரமான் மகசேசே விருது. 1971ல் ஜான் போப் அமைதி விருது, 1979ல் அமைதிக்கான நோபல் பரிசு, மனிதம், அமைதி மற்றும் சகோதரத்துவம் போற்றும் பல்சான் பரிசு ஆல்பர்ட் சுவிட்சர் பரிசு என பல விருதுகள் பெற்ற அன்னை தெரசாவுக்கு, இந்தியாவும் பாரத ரத்னா விருது தந்து மகிழ்ந்தது. 
ஐக்கியப் பேரரசு, ஐக்கிய அமெரிக்க நாடுகள், அல்பானியா போன்ற நாடுகள் இவருக்கு கௌரவக் குடியுரிமை தந்து இவரைக் கொண்டாடி மகிழ்ந்தன. 
1983 முதல் மாரடைப்பால் உடல்நலம் குறையத் துவங்கிய தெரசாவுக்கு 1989 ஆம் வருடம் இரண்டாம் மாரடைப்பு ஏற்பட்டது. தீவிர சிகிச்சைக்குப் பின், செயற்கை துடிப்பான் (Artificial Pacemaker) உதவியுடன் உடல்நலம் தேறிய தெரசா மேலும் தன தொண்டினைத் தொடர்ந்தார். 13 மார்ச் 1997 அன்று உடல்நிலை மோசமான நிலையில் தன் அமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகிய அன்னை தெரசா 5 செப்டம்பர் 1997 அன்று இன்னுயிர் நீத்தார். 
இந்தியா மட்டுமல்லாமல் உலகின் அனைத்து தரப்பு மக்களின் அன்பைப் பெற்ற தெரசாவின் நல்லடக்கம் முழு மரியாதையுடன் இந்திய அரசால் செய்யப்பட்டது. 
சில அமைப்புகள் "மதமாற்றம் செய்யவே சேவை செய்தார்"  எனத் தூற்றிய போதும், தூற்றிய அமைப்புகள் செய்யாத - செய்யத் துணியாத சேவையை யாவர்க்கும் பாகுபாடின்றி செய்த எங்கள் அன்னையின் பொற்பாதங்களில் வீழ்ந்து வணங்கி மகிழும்,

கணபதிராமன்

Comments

Popular posts from this blog

அகர முதல - சிறுகதை (திருக்குறள் கதை) குறள் 0001

புறநானூறு பேசும் நீர் மேலாண்மை

வான்கா - Vanka