புறநானூறு பேசும் நீர் மேலாண்மை
சுழன்றும் ஏர் பின்னது உலகம்
உழன்றும் உழவே தலை
உழன்றும் உழவே தலை
- திருக்குறள்
பாடப்பட்ட காலத்திற்கு மட்டுமல்லாமல் இன்றைக்கும் என்றைக்கும் ஒன்றிப் போகும் சில செய்யுள்கள் - பாடல்கள் பாடப்புத்தகத்தில் மட்டுமல்லாது வாழ்வின் பாடமாகவும் மாறிப் போவது நாம் அறிந்ததே. அவ்வகைப் பாடல்களில் ஒன்று தான் இன்றையப் பதிவாக.
புறநானூறு - பாடல் எண் - ௧௮ (18)
பாடியவர் : குடப்புலவியனார்
பாடப்பட்டோன்: பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்
திணை: பொதுவியல்
துறை: முதுமொழிக் காஞ்சி, பொருண்மொழிக் காஞ்சி
பாடல் பாடப்பட்ட காலத்தில் வான்மழைப் பொய்த்து வேளாண்மை நொடிந்து போனக் காலம். இந்தக் காலக்கட்டத்தில் மன்னனுக்கு அறிவுரை கூறுவதாக அமைந்துள்ள பாடல். (இந்தக் காலத்திற்கும் ஏற்ற பாடலாக அமைவதில் வியப்பொன்றும் இல்லை...!)
கடல் சூழ்ந்த நாட்டை ஆளும் மன்னா... எனப் புகழும் புலவர், மன்னனின் கோட்டை அகழி பெரிதாய் இருந்தாலும், நீரின்றி இருப்பதைச் சுட்டிக் காட்டுகிறார்...
இறந்த பின் சேர்க்க வேண்டிய செல்வமானப் புண்ணியம் மண்ணிலே கிடைக்க என்ன வழி என்ன அறிவுரை கூறுகிறார். தன்னாட்டு நீர்நிலை மேம்பாடு செய்யாமல் உலகம் முழுதும் போர் கொண்டு வென்றாலும் புண்ணியமில்லை எனச் சாடவும் செய்கிறார். வேளாண் மக்களின் உளக்குமுறலாக அதிகாரம் கொண்ட மன்னனின் காதுகளில் ஓங்கி ஒலிக்கிறார். (பரிசில் பெறவே பாடப்பட்ட பாடலாயினும் தான் கூறவந்ததை மன்னனுக்காக மாற்றி - போற்றிப் பாடாமல், மன்னன் செய்ய வேண்டிய கடமையை சொல்லியுள்ளார் புலவர்.)
யாரும் மன்னனை இகழ்ந்ததாகக் கூறி அவரை தேசத் துரோகி எனக் கூறவில்லை என்பது கொசுறுச் செய்தி...!
முழங்கு முந்நீர் முழுவதும் வளைஇப்
பரந்து பட்ட வியன் ஞாலம்
தாளின் தந்து தம்புகழ் நிறீஇ
ஒருதாம் ஆகிய உரவோர் உம்பல்
ஒன்றுபத்து அடுக்கிய கோடிகடை இரீஇய
பெருமைத்து ஆக நின் ஆயுள் தானே!
நீர்த்தாழ்ந்த குறுங்காஞ்சிப்
பூக்கதூஉம் இனவாளை
நுண்ஆரல் பருவரால்
குரூஉக்கெடிற்ற குண்டுஅகழி
வான்உட்கும் வடிநீண்மதில்
மல்லல்மூதூர் வயவேந்தே!
செல்லும் உலகத்துச் செல்வம் வேண்டினும்,
ஞாலம் காவலர் தோள்வலி முருக்கி
ஒருநீ ஆகல் வேண்டினும், சிறந்த
நல்இசை நிறுத்தல் வேண்டினும் மற்றதன்
தகுதி கேள்இனி மிகுதி யாள!
நீர்இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே;
உண்டி முதற்றே உணவின் பிண்டம்;
உணவெனப் படுவது நிலத்தோடு நீரே;
நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசி னோரே;
வித்திவான் நோக்கும் புன்புலம் கண்ணகன்
வைப்பிற்று ஆயினும் நண்ணி ஆளும்
இறைவன் தாட்கு உதவாதே; அதனால்
அடுபோர்ச் செழிய! இகழாது வல்லே
நிலன்நெளி மருங்கின் நீர்நிலை பெருகத்
தட்டோர் அம்ம இவண்தட்டோரே
தள்ளா தோர்இவண் தள்ளா தோரே.
- குடப்புலவியனார்
முந்நீர் - கடல் (நம்முடைய நாட்டில் முப்புறம் கடல் சூழ்ந்ததாய் இருப்பதால் முந்நீர்);
வளைஇ - சூழப்பட்டு.
3. தாள் தந்து - முயற்சி கொண்டு;
4. உரவோர் - வலியோர் ; உம்பல் - வழித்தோன்றல்.
5. இரீஇய - இருக்கச் செய்த.
8. கதூஊம் - பற்றும் (கதுவுதல் = பற்றுதல்).
9. பருவரால் - கனத்த வரால் மீன்.
10. குரூஉக்டிகெற்ற - ஒளிரும் கெடிறு மீன் கொண்ட.
(குரு = ஒளி; கெடிறு = கெளிற்று மீன்.)
11. உட்கும் = அஞ்சும்; வடிதல் = நீளுதல்.
12. மல்லல் = வளமை; வயம் = வலி.
14. முருக்கி = அழித்து.
17. மிகுதியாள = பெரியோன்.
20. பிண்டம் = உடல்.
24. வித்தி = விதைத்து.
25. வைப்பு = இடம்; நண்ணி = நெருங்கி (பொருந்தி); தாள் = முயற்சி.
27. வல்லே = விரைவாக.
28. நெளிதல் = குழிதல், வளைதல்.
29. தட்டல் = முட்டுப்பாடு; தட்டோர் = தடுத்தோர்; அம்ம - அசைச் சொல்.
30. தள்ளோதார் = தடுக்காதவர்.
ஒலிக்கும் கடல் சூழ்ந்த பரந்து கிடக்கும் அகன்ற உலகத்தைத் தமது முயற்சியால் வென்று, தம்முடைய புகழை உலகத்தில் நிலைநிறுத்தித் தாமே ஆட்சி செய்த வலியவர்களின் வழித்தோன்றலே!
ஒன்று, பத்து என்ற எண்களின் வரிசையில் கடைசி எண்ணாகக் கருதப்படும் கோடி என்ற பெருமையுடைய எண் அளவுக்கு நீ வாழ்க!
நீரளவுக்குத் தாழ்ந்து இருக்கும் சிறிய காஞ்சிப்பூவைக் கவ்வும் வாளை மீன்களின் கூட்டமும், சிறிய ஆரல் மீன்களும், பருத்த வரால் மீன்களும், ஒளிறும் கெளிறு மீன்களும் நிறைந்துள்ள ஆழமான அகழியும், வானே அஞ்சும் உயரிய நெடிய மதிலும் உடைய வளமான பழைய ஊரில் உள்ள வலிய வேந்தனே!
நீ மரணத்திற்குப் பிறகு செல்ல இருக்கும் உலகத்தில் அனுபவிப்பதற்கேற்ற செல்வத்தை விரும்பினாலும், உலகத்தை காக்கும் மற்ற அரசர்களின் வலிமையை அழித்து நீ ஒருவனே தலைவனாக விரும்பினாலும், சிறந்த புகழை நிலைநாட்ட விரும்பினாலும், அதற்குரிய தகுதியை நான் கூறுகிறேன்; நீ அதைக் கேட்பாயாக!
நீரில்லாமல் வாழ முடியாத இவ்வுடலுக்கு உணவு கொடுத்தவர்கள்தான் உயிர் கொடுத்தவர் ஆவர். உணவாலாகிய இவ்வுடலுக்கு உணவுதான் முதன்மையானது. ஆகவே, உணவு என்று சொல்லப்படுவது நிலத்தோடு கூடிய நீர். அந்நீரையும் நிலத்தையும் ஒன்று சேர்த்து உணவுப் பொருள்களை விளைவித்தவர்கள்தான் உயிரையும் உடலையும் வாழவைப்பவர் ஆவர்.
விதைகளை விதைத்துவிட்டு மழையை எதிர்பார்த்திருக்கும் புன்செய் நிலம் அகன்ற பரப்புடையதாக இருந்தாலும் அதனால் மன்னனுக்கு ஒருபயனுமில்லை.
ஆகவே, கொல்லும் போரையுடைய பாண்டியனே! நான் கூறுவதை இகழாது கேள்! வளைந்து செல்லும் ஆழமான இடங்களில் விரைந்து நீர்நிலைகளை உருவாக்கியவர்கள்தான் இவ்வுலகில் தாம் விரும்பியவற்றைத் தடுத்து நிறுத்தி வைத்துக்கொண்டவராவர்.
அவ்வாறு செய்யாதவர்கள், இவ்வுலகில் தாம் விரும்பியவற்றை நிலை நிறுத்திக் கொள்ளாதவராவர்.
தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனின் இடத்தில் யாரை வைத்துப் பார்த்தாலும், இந்தச் செய்யுள் சொல்ல வரும் செய்தி மாறுவதில்லை. மக்கள் பட்டினியால் மாண்டுக் கொண்டிருக்கும் ஒரு நாட்டில் - வேளாண்மைப் பொய்த்துக் கொண்டிருக்கும் ஒரு நாட்டில் - போருக்கும் வீண் வம்புக்கும் செலவு செய்யும் முட்டாள் மன்னன் யாருக்கும் பொருந்தும் என்று குடப்புலவியனார் சொல்லி இருப்பதாகவே நான் நினைக்கிறேன்.
- கணபதிராமன்
நன்றி : புறநானூறு Android App , முனைவர் பிரபாகரன் (சொற்பொருள் விளக்கம், உரை)
மிக்க நன்று
ReplyDelete