வானியலின் சிறந்த நாள் - Great day for astronomy
வானியலின் சிறந்த நாள்
வானியல் வரலாற்றில் ஆகச்சிறந்த நாள் இன்று. ஆகஸ்ட் 25. இரு பெரும் நிகழ்வுகள்...
25.08.1609 - இத்தாலிய அறிவியல் மேதை தான் உருவாக்கியத் தொலைநோக்கியைக் கொண்டு அறிவியல் உலகிற்கு வானியல் செயல் விளக்கம் செய்த நாள்.
25.08.2012 - நாசாவின் வாயேஜர் 1 (voyager 1) விண்கலம் சூரியப் பரிதியைத் தாண்டி மீனிடைப் பரப்பில் பயணித்த நாள்.
இந்த இரு நிகழ்வுகளில் எதைப் பற்றி எழுதலாம் என யோசிக்கையில் இரண்டையும் எழுது என உள்ளம் கூற உவகை கொண்டு ஆரம்பிக்கிறேன்.
1. கலீலியோ:
கலீலியோ கலீலி |
இத்தாலி நாட்டில் பிசா நகரத்தில் 15.2.1564 அன்று பிறந்தவர் கலீலியோ. சிறுவயது முதல் கிறித்துவ மதக் கோட்பாடுகளில் ஈடுபாடு கொண்ட கலீலியோ பாதிரியாராகப் போவதாக தந்தையிடம் கூற - தந்தையோ இவரை மருத்துவப் படிப்பில் சேர்த்து விட்டார். பிசா பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்த இவர் தன் கவனத்தை கணிதப் பாடத்தில் திருப்பலானார். மருத்துவப் படிப்பைப் பாதியில் நிறுத்தி கணிதம், இயற்பியல் குறித்து கற்கலானார்.
வெப்பமானி, திரவவியல் தராசு (Hydraulic Balance), தொலைநோக்கி (Telescope) என அறிவியலுக்கு இவர் பங்கு அளப்பரியது. தான் உருவாக்கிய தொலைநோக்கி கொண்டு வானவியல் ஆய்வு மேற்கொண்ட இவர் 1609 ஆம் ஆண்டு இந்த நாளில் தொலைநோக்கியின் செயல்பாடுகளை வெனிஸ் நகரத்தில் விளக்கினார். வியாழன், வெள்ளி கிரகங்களைத் தொலைநோக்கி மூலம் ஆராய்ந்த கலீலியோ, சூரிய மேற்பரப்பில் உள்ள சூரியப் புள்ளிகள் குறித்தும் ஆராய்ந்துள்ளார்.
சூரிய மையக் கொள்கையில் நம்புவதாகக் கூறியதே அவர் செய்த மிகத் தவறாகப் போனது. கிறித்துவச்சபைகள் புவிமையக் கோட்பாடுகளை ஆதரித்துப் பேசிவந்த காலத்தில், இவரின் இந்தக் கூற்று கிறித்துவர்களிடையே பேரதிர்ச்சியை உண்டாக்கியது. விவிலியத்தில் கூறப்பட்ட புவிமையக் கோட்பாட்டுக்கு எதிராகக் கருத்து தெரிவித்தார் என கலீலியோவை வீட்டுச்சிறையில் வைத்தது திருச்சபை. ஆளைச் சிறை செய்யலாம். அறிவை சிறை செய்ய முடியுமா? தானிறக்கும் வரை வீட்டுச்சிறையில் இருந்த கலீலியோ தனது அறிவியல் ஆய்வுகளையும், கண்டறிந்தவற்றையும் வீட்டிலிருந்த படியே புத்தகமாய் எழுதினார். இறந்த பின்னும், அவரைப் பொதுக் கல்லறையில் புதைக்கத் திருச்சபையில் அனுமதி மறுக்கப்பட்டது. 1737ஆம் ஆண்டு இவர் உடல் எங்கே அனுமதி மறுக்கப்பட்டதோ அதே இடத்தில் புதைக்கப்பட்டு இவர் சிலையும் நிறுவப்பட்டது. இதற்காக, இவர் உடல் மாற்றப்பட்ட போது அவர் உடலில் இருந்து 3 விரல்கள், ஒரு பல் எடுக்கப்பட்டு, அதில் ஒரு விரல் (வலதுகை நடு விரல் !) இத்தாலி புளோரன்சு நகரில் உள்ள கலீலியோ அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
2. வாயேஜர் 1:
வாயேஜர் 1 விண்கலம் |
வாயேஜர் 1 செப்டம்பர் 5 1977 அன்று விண்ணில் செலுத்தப்பட்ட 825.5 கிலோ எடையுள்ள நாசாவின் விண்கலம்.
வாயேஜர் 1 நாசாவின் ஜெட் ப்ரொபல்ஷன் ஆய்வகத்தால் உருவாக்கப்பட்டது. சூரிய வெளியின் கிரகங்களை - அதன் நிலவுகளை ஆய்வு செய்ய - புகைப்படம் எடுக்க செலுத்தப்பட்ட இந்த விண்கலம் இப்போது நமது சூரியப்பரிதி (Heliopause) தாண்டிப் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது. 12 அடி உயர் பெருக்க அலைக்கம்பா (High gain dish antenna), 16 ஹைட்ரசீன் உந்திகள் (Hydrazene thrusters), மூன்றச்சு சுழல்காட்டிகள் (Three axis Gyroscope) உடன் 11 ஆய்வுக் கருவிகள், புகைப்படக் கருவிகளையும் விண்ணில் உலா வருகிறது.
வியாழன், சனி, யுரேனசு, நெப்டியூன் என பயணம் தொடர்ந்த வாயேஜர் 1 2012 ஆம் ஆண்டு இதே நாளில் சூரியக்குடும்பத்தின் எல்லையைத் தாண்டியது. அதாவது சூரியனின் இழுவிசை விரவியிருக்கும் சூரியப்பரிதியைத் (Heliopause) தாண்டி மீனிடைப் பரப்பில் (Interstellar space) பயணம் தொடர்கிறது. வாயேஜரில் தங்க முலாம் பூசிய ஒரு தகவல் தகடு (Data disc) ஒன்றும் உள்ளது. அதில் பல்வேறு இயற்கை ஓசைகள், மிருகங்கள், பறவைகளின் ஒலிகள், நம் பூமியின் பல்வேறு பகுதிகளின் புகைப்படங்கள், 55 மொழியில் வாழ்த்துரைகள் ஆகியவை இடம்பெற்றுள்ளது. என்றோ ஒரு நாள், ஏதோ ஒரு வேற்றுகிரக வாசியிடம் வாயேஜர் கிடைத்தால், பூமி என்றொரு இடமுண்டு, அங்கே மனிதன் என்றொரு இனமுண்டு எனப் பறைசாற்றவே இந்த ஏற்பாடு.
வாயேஜர் 1 ல் உள்ள கருவிகள் இயங்க தேவையான சக்தி தரும் புளூட்டோனியம் கொண்ட வெப்பமின்னாக்கி 1977ல் 480 வாட் திறன் கொண்டதாக இருந்தது. புளூட்டோனியம் செறிவு குறைய மின்னாக்கியின் திறன் குறைந்து கொண்டே வரும். 2025 வரை பூமிக்குத் தகவல் அனுப்பத் தேவையான் திறன் கொண்டதாய் இருக்கும் வாயேஜர் 1, அதற்குப் பிறகு, பூமிக்குத் தகவல் அனுப்பாவிடினும் தன் பயணத்தை மீனிடைப் பரப்பில் தொடர்ந்த வண்ணம் இருக்கும்.
- கணபதிராமன்
Comments
Post a Comment