புகைப்பட மேதை TNA பெருமாளுக்கு நினைவேந்தல் - Tribute to Photography Legend TNA Perumal
இன்று உயிர்நீத்த கானுயிர் புகைப்பட வல்லுநர் (Wildlife Photographer) திரு TNA பெருமாள் பற்றி சிலக் குறிப்புகளும், அவரது புகைப்படங்களுமே இன்றையப் பதிவு.
1932 ஆம் ஆண்டு பிறந்தார் தஞ்சாவூர் நடேசன் அய்யம் பெருமாள். சுருக்கமாக TNA பெருமாள். சிறுவயது முதல் புகைப்படக்கலையில் கொண்ட பற்றினால் அந்தத் துறையில் தனிக்கவனம் செலுத்தி முழு ஈடுபாட்டுடன் பணிபுரிந்தார். 1960 முதல் கானுயிர் புகைப்படம் எடுக்கத் துவங்கினார். வன விலங்குகள், பறவைகள், பூச்சிகள் என இவர் எடுத்த பலப் புகைப்படங்கள் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றவை.
கருப்பு வெள்ளையில் இவரெடுத்த புகைப்படங்கள் இன்றும் இவர் திறமையைப் பறைசாற்றும்.
விருதுகளும் கௌரவங்களும்:
- 1961 - மைசூர் புகைப்பட சங்க உறுப்பினர்
- 1963 - பிரான்ஸின் FIAP (Federation de I Art Photographique) ன் ஆர்டிஸ்ட் ஃபியாப் விருது
- 1975 - தேசிய பத்திரிக்கையாளர் குழுவின் புகைப்பட விருது
- 1977 - லண்டன் Royal Photographic Society ன் Associateship (ARPS)
- 1978 - லண்டன் Royal Photographic Society ன் Fellowship (FRPS)
- 1983 - FIAP ன் மாஸ்டர் ஃபோட்டோகிராஃபர்
- 1993 - இந்திய சர்வதேச புகைப்படக் குழுவின் கௌரவ அங்கீகாரம்.
- 2012 - இந்திய அரசின் புகைப்பட வாழ்நாள் சாதனையாளர் விருது.
இது மட்டுமல்லாமல் சுமார் 200 விருதுகள் மற்றும் அங்கீகாரம் இவருக்கு அளிக்கப்பட்டுள்ளன.
படச்சுருள் புகைப்படத்தில் (Film Photography) கருப்பு வெள்ளை மற்றும் நிறப்புகைப்படங்களில் தன் திறமையை வெகுவாய் வெளிப்படுத்திய பெருமாள், எண்ம புகைப்படத்திலும் (Digital Photography) தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
படச்சுருள் மற்றும் எண்ம புகைப்படங்கள் குறித்து கருத்து கூறுகையில்,
"நான் படச்சுருள் புகைப்படத் தொழில்நுட்பத்தின் இல்லாமையை உணருகிறேன். ஆனாலும், எண்ம புகைப்படத்தின் பயன்பாடுகளான உடனடி புகைப்பட முன்னோட்டம் (Instant preview), குறையொளி புகைப்படம் (Low light Photography), புகைப்படக் கருவியிலேயே திருத்தம் செய்ய வசதி ஆகியவை சிறந்ததாக விளங்குகிறது. படச்சுருள் புகைப்படத்திலிருந்து எண்ம புகைப்படத்திற்கு மாற சிரமம் இருந்தது உண்மை" என்கிறார்.
இவரது புகைப்படமும், இவருடைய புகைப்படங்களும் உங்கள் பார்வைக்கு.
திரு பெருமாள் (புகைப்படம்: மயில்வாகனன்) |
இரையுடன் பறவையும் காத்திருக்கும் குஞ்சுகளும் |
இரவுப்பறவை ஆந்தை |
கூடூ வகை காட்டுமான் - க்ரூகர் தேசியப் பூங்கா, தென் ஆப்பிரிக்கா |
சிறுத்தை - பண்டிப்பூர் சரணாலயம் |
நிக்கோர் 200mm ஒளிவில்லை நிகான் DX200 ல் பிடித்த புகைப்படம் (2013) |
தன் புகைப்படக்கருவிகளுடன் பெருமாள் |
வாழ்நாள் சாதனையாளர் விருது இந்திய அரசிடம் இருந்து பெற்றபோது |
கலைக்கென கடைசிவரை
உழைத்தவர்
விருது பல வென்றாலும் சுய
விளம்பரம் செய்யாதவர்
ஆழ்ந்த இரங்கலொடு
அஞ்சலியும்...
- கணபதிராமன்.
RIP
ReplyDeleteRIP
ReplyDelete