கற்பனைப் பறவை - Kalpana Chawla
விண்ணிலே பறக்க
வான்வெளியில் நடக்க
கற்பனை செய்து
கனவு கண்ட இப்பறவை
கனவொடு நில்லாமல்
முடிவாய் முயன்று
பறந்தும் காட்டியது...!
விண்ணிலே சாதனை முடித்து
வீடு திரும்பிய பறவை
தரை தொடும் நேரம்
சிறகொடிந்திறந்தது...!
இறந்தது விபத்தெனினும்,
இன்று வானில் ஒரு விண்மீன்
அவள் பெயரில்....
என்றும் நிலைத்திருப்பாள்
எம் கற்பனைப்பறவை
கல்பனா சாவ்லா...!
- கணபதிராமன்
(இன்று கொலம்பியா விண் ஓட விபத்தில் கல்பனா சாவ்லா மறைந்த நாள்)
ஜூலை 1, 1961 அன்று ஹரியானா மாநிலம் கர்னால் நகரில் பிறந்தார் கல்பனா சாவ்லா. கர்னால் தாகூர் அரசுப் பள்ளியில் படித்த கல்பனா, வகுப்பில் முதல் மாணவியாக இல்லையென்றாலும், அறிவுத்திறன் படைத்த மாணவியாய் திகழ்ந்தாள். சிறு வயது முதல் விமான ஓட்டியாக எண்ணம் - கனவு கண்ட கல்பனா, 1982 ஆம் ஆண்டு சண்டிகர் பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் வானூர்தியியல் துறையில் பொறியியல் பட்டம் பெற்றார்.
மேல் படிப்பிற்காக, அமெரிக்கா சென்ற கல்பனா, டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தில் இணைந்து 1984 ஆம் வருடம் வான்வெளியியல் துறையில் முதுநிலைப் பட்டம் பெற்றார். மீண்டும் கொலரேடோ பல்கலைக்கழகத்தில் சேர்ந்து 1986ல் தனது இரண்டாவது முதுநிலைப் பட்டத்தையும் 1988ல் வான்வெளித் துறையில் முனைவர் பட்டத்தையும் பெற்றார்.
கல்பனா சாவ்லா (01.07.1961 - 01.02.2003) |
1988 ஆம் ஆண்டு நாசா விண்வெளி ஆய்வுக் கழகத்தின் அமெஸ் ஆய்வு மையத்தில் சேர்ந்தார். அங்கே, செங்குத்தான / குறுந்தொலைவு விமானப் புறப்பாடு (Vertical / short distance take off) குறித்த பாய்ம இயக்கவியல் கணக்கீட்டு (Computational Fluid Dynamics) ஆய்வில் பங்கு கொண்டார். 1991 ல் அமெரிக்கக் குடியுரிமை பெற்ற கல்பனா, நாசா விண்வெளி வீரர் படையில் சேர விண்ணப்பித்தார். 1993 ல் ஓவர்செட் மெதட்ஸ் (Overset Methods Inc) பிரிவின் துணைத்தலைவராகப் பொறுப்பேற்றார் கல்பனா. ஒரு மற்றும் பல பொறி விமானங்கள் (Single / Multiple engine Flights) ஓட்ட விமானி உரிமம் வைத்திருந்தது மட்டுமல்லாமல் சிறந்த விமானி பயிற்றுனராகவும் விளங்கினார்.
1995 ஆம் ஆண்டு நாசாவின் விண்வெளி வீரர் படையில் (NASA astronaut corps) கல்பனா சாவ்லா இணைய அனுமதியளிக்கப்பட்டது. 1996 ஆம் ஆண்டு கொலம்பியா விண்வெளி ஓடம் STS-87ன் ஆறு பேர் பயணக்குழுவில் கல்பனாவும் தேர்வு செய்யப்பட்டார். STS-87ன் விண்பயணம் நவம்பர் 19, 1999 அன்று துவங்கியது. விண்வெளியில் நீந்தப்போகும் முதல் இந்திய வம்சாவழிப் பெண்ணாக பெருமிதத்துடன் விண்பயணத்தைத் துவங்கினார் கல்பனா. தன் முதல் விண்வெளிப் பயணமான கொலம்பியா STS-87ன் போது 372 மணிநேரத்தில் 10.4மில்லியன் மைல்கள் பறந்திருந்தார். இது பூமியை 252 முறை சுற்ற ஆகும் தொலைவு ஆகும்.
தொழில்நுட்பக் கோளாறடைந்த ஸ்பார்டன் செயற்கைக் கோள் சரி செய்ய விண் நடை புரிந்த வீரர்கள் செயற்கைக்கோள் அடைய உதவி செய்தது, செயற்கைக் கோளின் மென்பொருள் குறைபாடுகளைக் கண்டறிந்து களைந்தது, பயணக்குழு செயல்பாட்டு ஒழுங்கமைப்பு, தரைக் கட்டுப்பாட்டு மேலாண்மை போன்றவற்றில் கல்பனாவின் திறமை கண்டு நாசாவின் தொழில்நுட்ப வல்லுனர்கள் விருது தந்து பாராட்டினர்.
2000 ஆம் ஆண்டு தனது இரண்டாவது விண்பயணமான கொலம்பியா STS-107ன் பயணக்குழுவிலும் கல்பனா இடம்பெற்றார். தொழில்நுட்பக் காரணங்களினால் பலமுறை நிரல்மாற்றம் (Schedule change) அடைந்த STS-107 ஜனவரி 16, 2003 அன்று விண்பயணத்தைத் துவங்கியது. நுண் ஈர்ப்புவிசை (Micro gravity) குறித்து 80 ஆய்வுகளை மேற்கொள்வது கல்பனாவின் குறிக்கோலாகத் தரப்பட்டிருந்தது. STS-107 விண்ணில் செலுத்தப்பட்ட போது, அதன் விண் ஓட வெளித் தொட்டிப் பகுதியில் (Space Shuttle External Tank) இருந்த நுரைக் காப்பு பொருளில் (Foam Insulation) உடைப்பு ஏற்பட்டது. இந்த உடைப்பினால் ஆய்வுகள் பாதியில் நிறுத்தப்பட்டு 15 நாட்களில் பூமிக்குத் திரும்ப முடிவு செய்யப்பட்டது.
பிப்ரவரி 1, 2003 அன்று புவியின் வளிமண்டலத்தில் நுழைந்த விண் ஓடத்தின் பழுதடைந்த பகுதி வழியாக வளிமண்டல வாயுக்கள் உள் நுழைந்ததால் ஏற்பட்ட வெப்பம் காரணமாக தீப்பிடித்து டெக்ஸாஸ் மாகாணத்திற்கு மேலே கொலம்பியா விண் ஓடம் வெடித்துச் சிதறியது. பயணக்குழுவில் இருந்த 7 பேரும் உயிர் துறந்தனர்.
கொலம்பியா STS-107 பயணக்குழு (பிரௌன், ஹஸ்பண்ட், கிளார்க், சாவ்லா, ஆண்டர்சன், மெக்கூல், ரமோன்) |
- சிறுகோள் 51826க்கு (Asteroid) கல்பனா சாவ்லாவின் பெயர் வழங்கப்பட்டுள்ளது.
- இஸ்ரோவின் மெட்ஸாட் செயற்கைக்கோள் கல்பனா 1 எனப் பெயரிடப்பட்டது.
- நியூ யார்க் நகரின் ஜேக்ஸன் ஹைட்ஸ் பகுதி 74வது தெரு சாவ்லா பாதை என அழைக்கப்படுகிறது.
- நாசாவின் செவ்வாய் ஆய்வுக்குழு தாங்கள் ஆய்ந்து கண்டறிந்த செவ்வாய் கிரக மலைகளில் ஒரு மலைக்கு 'சாவ்லா மலை' எனப் பெயரிட்டுள்ளனர்.
தனது முதல் விண் பயணத்தின் போது கல்பனா கூறியதைப் பகிர விழைகிறேன்.
"[விண்வெளிப் பயணத்தில் உடல் எடை இழந்து விடுவதால்], நீங்கள் உங்கள் அறிவுத்திறனாக மாறிவிடுகிறீர்கள். You are just your intelligence."
Ninaivu paduthiyathiruku nandri....
ReplyDeleteNandri ramar
ReplyDeleteNandri ramar
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஆம் இன்றும் கனவினை அடைய முற்படும் சாதாரண மகளிர்க்கு உந்துசக்தியாய் இருப்பார் இவ்வானளந்த தேவதை
ReplyDelete