அன்னி ஃபிரான்க் - Anne Frank
ஒரு 15 வயது சிறுமியால் உலகைத் திரும்பிப் பார்க்க வைக்க முடியுமா? வாழ்வதற்குக் கூட உரிமையில்லை என தன் இனமே அழிப்புக்கு உள்ளான நேரம் கூட உலகின் அழகியலைக் காண - உள்ளத்து அழகை எழுத இச்சிறுமியின் மனத்தால் மட்டுமே முடியும். இவரின் எழுத்துகள் இவர் இறந்த பின்னரே உலகிற்குத் தெரிந்தது. என்றாலும், நேர்மறைத் தன்மையைப் (Positivity) பரப்பும் இவர் வார்த்தைகள் நம்மால் கொண்டாடப்பட வேண்டியதே. இவரின் வாழ்க்கையும், இவரின் நாளேட்டுக் குறிப்பில் இருந்து சில கூற்றுக்களும் இன்றையப் பதிவாய்.
அன்னி ஃப்ரான்க் (Anne Frank 1929 - 1945) |
ஃபிரான்க் குடும்பம்:
அன்னி ஃபிரான்க் (முழுப்பெயர்: அன்னிலி மேரி ஃபிரான்க்) ஓட்டோ மற்றும் எடித் ஃபிரான்க் தம்பதியின் இரண்டாவது மகளாக 12.06.1929 அன்று பிறந்தார். மார்கட் ஃபிரான்க் இவரது மூத்த சகோதரி. இந்த அழகிய குடும்பம் ஜெர்மனியின் ஃபிரான்க்ஃபர்ட் நகரில் வசித்து வந்தது. 1933ல் அடோல்ப் ஹிட்லரின் நாஜி கட்சி ஆட்சிக்கு வந்ததும் ஜெர்மனியில் இவர்களின் வாழ்வில் பெரும் மாற்றம் வந்தது. நாஜி கட்சியினரால் ஜெர்மனியில் இருந்த யூத மதத்தைச் சேர்ந்தவர்கள் மீது அடக்குமுறை அவிழ்த்து விடப்பட்டது. பிறந்தது முதல் ஜெர்மனியில் வாழ்ந்து வந்தவர்கள் சொந்த நாட்டில் அகதியாக்கப் பட்டனர். அடிமைகளாக நடத்தப்பட்டனர். யூதர்களின் ஆடைகளில் மஞ்சள் நட்சத்திரம் கொண்ட அடையாளம் போடப்பட்டது. அடையாளம் அணியாத யூதர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்நிலையில் ஓட்டோ ஃபிரான்க் தனது குடும்பத்தை எடித் ஃபிரான்க்கின் தாயார் ஊரான ஆச்செயின் (Aachein, ஜெர்மனி நெதர்லாந்து எல்லையில் உள்ள ஊர்) நகருக்கு மாற்றினார். 1933 முதல் 1939 வரை சுமார் 3 லட்சம் யூதர்கள் ஜெர்மனியை விட்டு வெளியேறினர்.
ஆம்ஸ்டர்டாம் வருகை:
1934 ஆம் ஆண்டு, ஆம்ஸ்டர்டாம் நகரில் வியாபாரம் செய்ய வாய்ப்பு கிடைக்க, ஆம்ஸ்டர்டாம் நகருக்கு பின்னர் வந்து சேர்ந்த ஓட்டோ ஃபிரான்க் குடும்பத்தினர் வாழ்வில் வந்த துயரம் முடிந்தது என நினைத்தனர். ஆம்ஸ்டர்டாமில் சிறந்த நண்பர்களை அடைய பெற்றார் ஓட்டோ. அவர் ஆம்ஸ்டர்டாமில் ஒபெக்டா வொர்க்ஸ் (opekta works) எனும் நிறுவனத்தை துவங்கி நடத்தி வந்தார். அன்னி மீது மிகுந்த பாசம் வைத்திருந்த ஓட்டோ, அவளின் தைரியத்தையும், சுயமாய் சுதந்திரமாய் சிந்திக்கும் திறனையும் ஊக்கப்படுத்தினார்.
ஓட்டோ, அன்னி, எடித் மற்றும் மார்கட் ஃபிரான்க் (Frank Family) |
ஆனால் அவர்களின் மகிழ்வு வெகு நாட்களுக்கு நீடிக்க வில்லை. இரண்டாம் உலகப் போரின் போது, நெதர்லாந்து உள்ளிட்ட பல நாடுகள் ஜெர்மனியின் வசம் வந்தன. 1940 மே மாதம் நெதர்லாந்தை ஜெர்மனி கைப்பற்றியது. மேலும், தப்பி வந்த யூத இனத்தை சேர்ந்தவர்களையும், அவர்களுக்கு உதவி செய்ய நினைப்பவர்களையும் துரோகிகளாக - குற்றவாளிகளாக கருதி சித்திரவதை முகாம்களில் வதைத்து கொல்ல நினைத்த ஜெர்மனியின் கோரப்பிடியிலிருந்து தப்பிக்க - உயிரோடு இருக்க இரண்டே வழிகள் தான் இருந்தது. ஒன்று கால்நடையாக ஸ்விட்சர்லாந்து செல்ல வேண்டும். இரண்டு அமெரிக்காவிற்கு செல்ல வேண்டும். ஆனால், ஓட்டோ போர் முடியும் வரை - அமைதி திரும்பும் வரை மறைந்து ஒளிந்து இருக்க முடிவு செய்தார்.
ஒளிவு வாழ்க்கை:
தான் நடத்தி வந்த நிறுவனத்தை தன் நண்பர்களான ஜோஹன்னஸ் க்ளிய்மர் (Johannes Kleimer), ஜேன் கீஸ் (Jan Gies) ஆகியோர் பெயருக்கு மாற்றி வைத்தார். 6 ஜூலை 1942 அன்று தன்னுடைய நிறுவனம் இருந்த வீட்டின் மூன்றாம் தளத்தில் படியில் ஒரு புத்தக அலமாரியை வைத்து அடைத்து அதற்கு மேலிருந்த இடத்தில் ஒளிந்து வாழ முடிவெடுத்தனர். இவர்கள் இப்படி ஒளிந்து வாழ விக்டர் குக்லர் (viktor kugler) மற்றும் மீப் கீஸ் (Miep Gies) ஆகியோர் வெளியில் இருந்து உதவி செய்தனர். 13 ஜூலை 1942 அன்று ஹெர்மன் - அகஸ்டி தம்பதியர் தனது மகன் 16 வயது மகன் பீட்டருடன் இவர்களுடன் புகலிடம் புகுந்தனர். நவம்பர் மாதம் பல் மருத்துவரான ஃப்ரிட்ஸ் (Fritz) இவர்களுடன் இணைந்து கொண்டார். மொத்தம் எட்டு பேர், இரண்டு ஆண்டு காலம் வரை இந்த அறையை விட்டு வெளியே வராமல் ஒளிந்து வாழ்ந்தனர்.
ஃபிரான்க் குடும்பம் ஒளிந்திருந்த வீடு |
காலை எட்டு மணி முதல் மாலை 6 மணி வரை சிறு சத்தம் கூட இருக்கக் கூடாது. கீழே உள்ள நிறுவனத்தில் வேலை பார்க்கும் பலரில் ஒருவருக்கு சந்தேகம் வந்தால் கூட உள்ளே இருக்கும் அனைவரும் அவருக்கு உதவி செய்த அனைவரும் மாட்டிக் கொள்ளும் அபாயம் உண்டு. எனவே, அனைவரும் பின்வரும் வழிமுறைகளைப பின்பற்றினர்.
ஃப்ரான்க் குடும்பம் இருந்த பகுதியை மறைத்து இருந்த புத்தக அலமாரி |
- மர வீடு என்பதால் காலணி அணிந்து நடக்கும்போது சத்தம் வராமல் இருக்க பகல் நேரத்தில் காலணி அணியக் கூடாது.
- பகல் நேரத்தில் கழிவறை உபயோகிக்கக் கூடாது. கழிவுநீர்க் குழாய் கீழ்த்தளங்களின் வழி சென்றதால் நீர் செல்லும் சத்தம் சந்தேகம் ஏற்படுத்தக் கூடும்.
- எந்தக் காரணம் கொண்டும் சாளர திரைச்சீலையை அகற்றக் கூடாது.
- பகல் நேரம் மட்டுமல்லாமல் எந்த நேரம் ஆனாலும் கீழே எந்த சத்தம் வந்தாலும் (விக்டர் அல்லது மீப் தவிர) புத்தக அலமாரியில் உள்புறமாக இடப்பட்டிருக்கும் தாழினைத் திறக்க கூடாது.
- மீப் மற்றும் விக்டர் கொண்டு வந்து தரும் உணவு பொருட்களை சமமாக பகிர்ந்து உண்ண வேண்டும்.
13 வயது சிறுமியான அன்னிக்கு முதலில் தம்மைச் சுற்றி நடக்கும் விஷயங்களில் ஏதோ அபாயம் இருப்பதை உணர முடிந்தாலும், மனதில் நேர்மறை எண்ணங்களில் திளைத்திருந்தாள். தனது தந்தை ஓட்டோ வாங்கித் தந்திருந்த நாட்குறிப்பு புத்தகத்தில் தன் எண்ண ஓட்டங்களை எழுதலானாள். ஒரே இடத்தில் இருந்தாலும், அங்கு இருந்த எட்டு பேரின் குணாதிசயங்கலில் உள்ள முரண்கள், சிலரின் சுயநலம், பெண்களின் சுதந்திரத்தை ஒடுக்க நினைக்கும் பெரியவர்கள், வயதில் வளர்ந்த பெரியவர்களின் சண்டைகள், அடைந்து கிடக்கும் இடத்தில் மனதில் ஏற்படும் மாற்றங்கள், அடைந்து கிடந்தும் பறவையாய் திரியும் மனதின் விடுதலை என தான் அனைத்தையும் எழுதினாள் அன்னி.
சோக முடிவு:
சுமார் 2 வருடங்கள் அந்த வீட்டில் அடைந்து வாழ்ந்த இந்த எட்டு பேரும் ஆகஸ்ட் 4 1944 அன்று ஜெர்மானிய படை வீரர்களால் சிறை பிடிக்கப் பட்டனர். அங்கிருந்து ஜெர்மனியில் உள்ள சித்திரவதை முகாம்களில் (Concentration Camps) அடைக்கப்பட்டனர். பின்னர். ஆண்கள் வேறு இடத்திற்கும், பெண்கள் வேறு இடத்திற்கும் மாற்றப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டனர்,. அமெரிக்க மற்றும் இங்கிலாந்து படைகள் வந்து ஜெர்மனிப் படையைத் துரத்தி சித்திரவதை முகாம்களில் கைதிகளுள் ஒருவராக இருந்த ஓட்டோ ஃப்ரான்க்கை மீட்பதற்குள் காலம் தவறி இருந்தது, அன்னி ஃப்ரான்க், மார்கட் ஃப்ரான்க் ஆகியோரின் தாய் எடித் ஃப்ரான்க் ஜெர்மனியில் இருந்த முகாமில் உடல்நிலை பாதிக்கப்பட அங்கேயே தனியே அடைக்கப்பட்டு பட்டினியால் உயிரிழந்தார். அன்னி மற்றும் மார்கட் ஜெர்மனியின் வடக்கு பகுதியில் உள்ள முகாமான பெர்கன்- பெல்சன் (Bergen-Belsen) முகாமில் அடைக்கப்பட்டனர். அங்கு தன்னுடன் இருந்த ஆயிரக்கணக்கான பெண்களுடன் கொடுமைப்படுத்தப்பட்டு இறுதியில் கொலையும் செய்யப்பட்டனர். அந்த வீட்டில் ஒளிந்து இருந்த எட்டு பேரில் உயிருடன் மீட்கப் பட்டவர் ஓட்டோ ஃப்ரான்க் மட்டுமே.
அன்னி ஃப்ரான்க் மற்றும் மார்கட் ஃப்ரான்க் நினைவிடம் (பெர்கன்- பெல்சன்) |
ஓட்டோ மீண்டும் ஆம்ஸ்டர்டாம் வந்து, தன் மகள் எழுதிய நாட்குறிப்புகளைத் தேடுகிறார். அதை பத்திரமாக வைத்திருந்த மீப் கீஸ், ஓட்டோவிடம் கொடுக்க முதன்முறையாக அன்னியின் வார்த்தைகளைப் படித்து பார்க்கிறார். நடந்த நிகழ்வுகளை அன்னியின் பார்வையில் மீண்டும் நினைவு படுத்திய ஓட்டோ, இவ்வாறு கூறினார்.
"எனக்கு இது அவளின் மன வெளிப்பாடாகவே தெரிகிறது. அவளின் மன ஆழத்தையும் உணர்ச்சிகளையும் நான் உணர்ந்ததே இல்லை. இவ்வளவு உணர்ச்சிகளையும் தன் உள்ளே வைத்து இருந்திருந்தாள்"
அன்னி ஃபிரான்க்கின் நாட்குறிப்பு 1947 ஆம் ஆண்டு டச்சு மொழியில் வெளியிடப்பட்டு பின்னர் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. அதன்பின், உலகப் புகழ்பெற்ற "தி டைரி ஆஃப் அன்னி ஃப்ரான்க்" என்ற புத்தகம் இது வரை 65 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஃப்ரான்க் குடும்பம் ஒளிவு வாழ்க்கையில் இருந்த ஆம்ஸ்டர்டாம் இல்லம், இப்போது அருங்காட்சியகமாக உள்ளது.
எழுத்தாளராக வர வேண்டும் என்ற ஆசையை தனது டைரிக் குறிப்பில் பல இடங்களில் எழுதி உள்ள அன்னி ஃப்ரான்க்கின் ஆசையை அவரது டைரிக் குறிப்பைப் புத்தகமாக வெளியிட்டது மூலம் நிறைவேற்றினார் ஓட்டோ. தனது டைரிக் குறிப்பில் கூறியுள்ள சில சிறந்த கூற்றுக்களை இங்கே பகிர்கிறேன்.
- நான் எழுதும் போது அனைத்தையும் உதறிவிட முடிகிறது. என் துக்கங்கள் மறைகின்றன. என் துணிவு மறுபிறவி எடுக்கிறது
"I can shake off everything as I write; my sorrows disappear, my courage is reborn."
- இருளை வரையறுக்கும் - அதையே மீறும் இந்த மெழுகுவர்த்தியைப் பாருங்கள்.
"Look at how a single candle can both defy and define the darkness."
- இந்த உலகத்தை மென்மேலும் மேம்படுத்த ஒருவரும் ஒரு நொடி கூட காத்திருக்க வேண்டியதில்லை என்பது எவ்வளவு விந்தையானது.
"How wonderful it is that nobody need wait a single moment before starting to improve the world."
- நீண்ட காலவெளியில், கனிவான - மென்மையான மனமே கூர்மையான ஆயுதம் ஆகும்.
"In the long run, the sharpest weapon of all is a kind and gentle spirit."
- நான் பெரும்பாலான மக்கள் போல் வீணாய் வாழ விரும்பவில்லை. நான் (இதுவரை சந்திக்காத) அனைத்து மக்களுக்கும் பயனாயிருந்து இன்ம்பம் தர விரும்புகிறேன்..நான் சாவையும் தாண்டி நீண்டு வாழ விரும்புகிறேன்.
"I don't want to have lived in vain like most people. I want to be
useful or bring enjoyment to all people, even those I've never met. I
want to go on living even after death."
- நான் துன்பங்களைப் பற்றி நினைப்பதில்லை. நான் நினைப்பதெல்லாம் நம்மை நிறைந்திருக்கும் அழகான விஷயங்களைத் தான்.
"I don't think of all the misery, but of all the beauty that remains."
- எங்கு நம்பிக்கை இருக்கிறதோ, அங்கு வாழ்வு துளிர் விடும். அது நம்மில் புதிய தைரியத்தை விதைத்து, நம்மை மீண்டும் பலமானதாக மாற்றும்.
"Where there's hope, there's life. It fills us with fresh courage and makes us strong again."
- [நான் வெகு நேரம் என் டைரியுடன் நேரம் செலவழிக்கிறேன்] ஏனெனில் காகிதம் மனிதர்களை விட அதிக பொறுமை கொண்டதாக இருக்கிறது.
"Because paper has more patience than people."
- நான் நிறைய யோசிக்கிறேன். ஆனால் அதிகம் வெளியில் சொல்லுவதில்லை.
"I think a lot. But I don't say much"
- இத்தனைக்கும் நடுவே, மனிதர்கள் மனதளவில் நல்லவர்களாக இருக்கிறார்கள் என உண்மையாக நம்புகிறேன்.
"Inspite of everything, I still believe that people are really good at
heart."
அன்னி ஃப்ரான்க்கின் கூற்றுப்படி அவள் இன்றும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறாள் அவளின் வார்த்தைகளால்... எழுத்தால்... எண்ணங்களால்...
- கணபதிராமன்
No words to explain my feelings .....tragedy ....
ReplyDeletesad, missed one young bright...
ReplyDeleteI have read about her.how often she would have thought to live in this world.she is a hope to those who wants to die
ReplyDeleteExactly... Though the world around her torn apart, she had the hope in humanity and love.
DeleteSir semma padhivu idhu.
ReplyDeleteமிக்க நன்றி... விக்கி...
Delete