பிப்ரவரி 18 - ஒரு நாள் இரு சிறப்பு February 18

நான் ஏற்கனவே எழுதியது போல ஒரு சில நாட்கள் பல வகைகளில் சிறப்பு வாய்ந்ததாக அமைந்து விடுகிறது. இன்றைய தினமும் அவ்வாறே. இன்று நாம் மறந்த ஒரு சிறந்த தலைவனின் பிறந்த தினம். முதன் முதலாய் வானஞ்சல் (Airmail) சேவை துவங்கிய தினம். இரண்டும் இன்றைய பதிவாய். 

ம. சிங்காரவேலர்

பொதுவுடைமைவாதி, சிந்தனைச் சிற்பி, வழக்கறிஞர், சுதந்திரப் போராட்ட வீரர், புரட்சியாளர், எழுத்தாளர் எனப் பன்முக ஆளுமைக் கொண்ட இவரை இன்று பலர் மறந்தே போய்விட்டோம் என்பது மறக்கமுடியாத உண்மை.
ம. சிங்காரவேலர்

18.02.1860 ஆம் ஆண்டு மீனவக் குடும்பத்தில் பிறந்த சிங்காரவேலு பள்ளிப் படிப்பு முதலே படிப்பில் சிறந்து விளங்கினார். மாநிலக் கல்லூரியில் பட்டபடிப்பை முடித்த இவர் சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று வழக்கறிஞர் ஆனார். 1907 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராய் பதிந்த இவர், தன் வாழ்நாளில் பேராசைக்காரர்களுக்கோ, பணம் கொண்டு அடக்குமுறை செய்பவர்க்கோ வாதாடியதில்லை. வழக்கறிஞராய் சம்பாதித்ததில் பல புத்தகங்கள் வாங்கி தன் வீட்டிலே சுமார் 20000 புத்தகம் கொண்ட நூலகம் அமைத்திருந்தார். வெள்ளையனை எதிர்ப்பதில் காந்தியின் கொள்கையிலும், மூடப்பழக்கத்தினைச் சாடுவதில் பெரியாரின் கொள்கையிலும், தொழிலாளர், ஏழைகளின் நலனில் கம்யூனிசக் கொள்கையிலும் பற்றுடையவராக இருந்தார் சிங்காரவேலர். 
  • 1918 ஆம் ஆண்டு சென்னையின் முதல் தொழிலாளர் சங்கத்தை பக்கிங்ஹாம் கர்னாடிக் ஆலையில் நிறுவியவர்.
  • 1921 ஆம் ஆண்டு ஒத்துழையாமை இயக்கத்தின் பொருட்டு, இனி ஆங்கிலேயனிடம் பணி புரியமாட்டேன் என தன் வழக்கறிஞர் தொழிலைத் துறந்தவர்.
  • 1923 ஆம் ஆண்டு மே 1 அன்று தொழிலாளர் விவசாயக் கட்சியைத் துவங்கி, இந்தியாவிலேயே முதன் முதலாக  தொழிலாளர் தினமான மே தினம் கொண்டாடியவர்.
  • 1928 ஆம் ஆண்டு தென்னிந்திய ரயில்வே வேலை நிறுத்தத்தை நடத்தியதில் மூளையாய் செயல்பட்டவர்.
  • அதற்காக 10 ஆண்டுகள் சிறை என தண்டனை அளிக்கப்பட்டு, பின்னர் 1930ல் தண்டனை குறைக்கப்பட்டு விடுதலை அடைந்தார்.
  • இவர் சிறை சென்ற நேரம், இவரது திருவல்லிக்கேணி இல்லம் வெல்லிங்டன் பிரபுவால் ஆக்கிரமிக்கப்பட்டு, அங்கு வெலிங்டனின் மனைவி பெயரில் பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. இன்றும் இந்தப் பள்ளி சீமாட்டி வெல்லிங்டன் பள்ளி எனவே அழைக்கப்படுவது நாம் வெட்கப்பட வேண்டிய விஷயமே. (சரிவர பராமரிக்காததால் இப்பள்ளி மிகவும் சிதிலமடைந்து இருப்பது இன்னுமொரு வெட்கக்கேடு...!)
    சிங்காரவேலரின் இல்லம் - இப்போது வெலிங்டன் சீமாட்டி பள்ளியாய் சிதிலமடைந்து
  • தான் சென்னை மாநகராட்சி உறுப்பினராய் இருந்த போது, மதிய உணவுத் திட்டத்தைத் திறம்பட செயல்படுத்திக் காட்டியவர் சிங்காரவேலர்.
  • சாதி ஒழிப்பு, சோதிடம் - மூடப்பழக்கங்களைச் சாடுதல், அடிமை மோகம், பேய் - பிசாசு பயம், பெண்கள் முன்னேற்றம் என பலத் தலைப்புகளில் சுமார் 186 நூல்களை எழுதியுள்ளார் சிங்காரவேலர்.
"வெட்டுக்கிளிகளும், பச்சோந்திகளும் புகழப்படும் ஒரு நேரத்தில் ஒரு புரட்சிப்புலியை மக்கள் மறந்தனர்."
 - அண்ணா (சிங்காரவேலரைப் பற்றி)
"போர்க்குணம் மிகுந்தநல் செயல்முன்னோடி
பொதுவுடைமைக் கேகுக அவன்பின்னாடி" 

- பாரதிதாசன் 


 முதல் வானஞ்சல்

இன்று நம்மால் உபயோகப்படுத்தப்படாவிட்டாலும், எனது சிறுவயது காலங்களில் கடிதம் என்பது நம் வாழ்வில் பிரிக்கவொண்ணா அங்கமாய் இருந்தது. தினமும் அல்லது மணிக்கொரு தடவை தொலைபேசியில் இன்று பேசினாலும் மாதம் ஒரு முறை வரும் கடிதங்களில் பாசமும் அக்கறையும் அதிகம் இருந்தது உண்மையான ஆச்சரியம்.

முந்தைய காலங்களில் பழக்கப்பட்ட புறாக்கள் மூலம் கடிதப் போக்குவரத்து இருந்தாலும், அவை அரசாங்க ஊழியங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தன. 17 ஆம் நூற்றாண்டின் இறுதியில் அஞ்சல் சேவை துவங்கப்பட்டாலும், தரைவழி கடிதப் போக்குவரத்தாகவே இருந்து வந்தது. 

1785 ஆம் ஆண்டு ஜனவரி 7 அன்று முதன் முதலாக சுடுவளி ஊதற்பை (Hotair Balloon) மூலம் கடிதப் போக்குவரத்து முதன் முறையாக நடந்தது. இங்கிலாந்து டோவர் நகரிலிருந்து பிரான்ஸிற்கு ஆங்கிலக் கால்வாயைக் கடந்து இந்தக் கடிதப் போக்குவரத்து நிகழ்ந்தது. பலூனை ஓட்டிச் சென்ற ஜான் டீ பிளான்கார்ட் (Jean de Blanchard) மற்றும் ஜான் ஜெஃப்ரி (John Geoffrey) ஆகியோர் வில்லியம் ஃபிராங்ளினின் கடிதத்தை அவரது மகன் டெம்பிள் ஃபிராங்ளினிடம் ஒப்படைத்தனர்.
ஆங்கிலக் கால்வாயைக் கடக்கும் ஊதற்பை (7.1.1785)

வான்வழிக் கடிதப் போக்குவரத்து நிகழ்ந்தது இதுவே முதல் முறை. எனினும், முறையான அஞ்சல் துறை மூலம் பொது மக்களிடம் கடிதம் சேகரிக்கப்பட்டு, தபால் தலை, முத்திரையுடன் அக்கடிதங்கள் விமானம் மூலம் அனுப்பப்பட்ட தினம் இன்றிலிருந்து 106 வருடங்கள் முன்பு. 

18.02.1911 அன்று நமது இந்தியாவின் ஐக்கிய மாகாணம் (தற்போதைய உத்திரப்பிரதேசம்) அலகாபாத் நகரில் இருந்து 13 கிமீ தொலைவில் உள்ள நைனி எனும் இடத்திற்கு சுமார் 6500 கடிதங்களுடன் துவங்கியது உலகின் முதல் வானஞ்சல் சேவை. கடிதங்களின் தபால் தலையில் "முதல் வானஞ்சல், ஐக்கிய மாகாணம், அலகாபாத், 1911" என முத்திரையிடப்பட்டது.
முதலாக அனுப்பபட்ட கடிதங்களில் ஒன்று (முதல் வானஞ்சல் முத்திரையுடன்)
ஹம்பர் - சோமர் வகை விமானம் (Humber - Simmer Aircraft)

பொதுமக்களிடம் கடிதங்கள் சேகரிக்கப்பட்டு, முத்திரையிட்டு விமான ஓட்டி ஹென்றி பெக்கட் (Henri Pequet) இடம் ஒப்படைக்கப்பட்டது. அலகாபாத் - நைனி பயணம் 13 நிமிடங்களில் ஹம்பர் - சோமர் விமானத்தில் நிறைவு செய்தார் ஹென்றி. நைனியில் இருந்து அக்கடிதங்கள் ரயில் மூலம் சேருமிடம் சேர்க்கப்பட்டன.

- கணபதிராமன்



Comments

Post a Comment

Popular posts from this blog

அகர முதல - சிறுகதை (திருக்குறள் கதை) குறள் 0001

புறநானூறு பேசும் நீர் மேலாண்மை

வான்கா - Vanka