கோடுகள் வரைந்து பலரைக் காப்பாற்றியவன் - Samuel Plimsoll
பள்ளிப் பாடத்தில் அறிவியலில் படித்த நியாபகம்... எந்தவித எதிர்கேள்வியும் இல்லாமல் ஆசிரியர் சொன்னதை மனனம் செய்து மதிப்பெண்ணுக்கு மட்டும் படித்த காலத்தில் படித்திருக்கிறேன், ப்ளிம்சால் கோடுகளைப் பற்றி. கப்பலின் அதிகபட்ச பாரச்சுமை அளவைக் காட்டும் விதத்தில் கப்பலின் பக்கவாட்டில் போடப்படும் கோடுகளே ப்ளிம்சால் கோடுகள். (பார்க்க படம்)
பிளிம்சால் கோடுகள் |
ஒரு காலத்தில் மதிப்பிற்கு அதிகமாக காப்பீடு செய்யப்பட்ட கப்பல்களை - சரிவர பராமரிப்பு செய்யப்பட்டாத கப்பல்களை கப்பல் முதலாளிகளே அதிக பாரமேற்றி நடுக்கடலில் மூழ்கடிப்பது வழக்கமாய் இருந்தது. காப்பீடு மூலம் அவர்களுக்கு பணம் மீண்டும் கிடைத்து விடுவதால், அதிக பாரம் ஏற்றுவது பற்றியோ, பராமரிப்பு பற்றியோ கப்பல் முதலாளிகள் மிகவும் மெத்தனமாகவே இருந்து வந்தனர். இந்த நேரத்தில், இந்த கப்பல்களை 'கல்லறைக் கப்பல்கள்' எனக் கூறி அபாயமணிக் குரலால் இங்கிலாந்து பாராளுமன்றத்தை - இங்கிலாந்து மக்களை - உலகையே தன் பக்கத்தில் திரும்ப வைத்தவர் சாமுவேல் ப்ளிம்சால் (Samuel Plimsoll). இன்று இவரின் பிறந்த நாள்
சாமுவேல் ப்ளிம்சால் 10 பிப்ரவரி 1824 அன்று பிரிஸ்டால் (Bristol) நகரில் பிறந்தார். பள்ளிப்படிப்பை முழுதாய் முடிக்க முடியாமல் குடும்ப சூழலால் ராசன் மதுபான ஆலையில் (Rawson Brewery) கணக்கராய் (Clerk) பணியில் சேர்ந்தார். தன் திறமையாலும் விசுவாசத்தாலும் மிக விரைவில் பணியுயர்வுகள் அடைந்து மேலாளராக ஆனார் சாமுவேல்.
தனது 29வது வயதில், சுயமாக தொழில் செய்ய நினைத்து நிலக்கரி விற்பனையில் இறங்கிய சாமுவேல், தொழில் நட்டத்தால் மீண்டும் வறுமைக்குத் தள்ளப்பட்டார். சறுக்கல்கள் வாழ்வின் அனுபவம் என மேலும் தொடர்ந்து உழைக்கலானார். இந்தக் காலக்கட்டத்தில் தான் ஏழைகளின் வாழ்வுநிலை, அவர்களை ஏமாற்றும் முதலாளிகள் என பலரின் உண்மை நிலையை உணர்ந்தார். காப்பீடு மூலம் கப்பல் மூழ்கினாலும் பணத்தில் புரளும் முதலாளிகள், அதில் இறக்கும் ஏழை மக்களுக்கு எவ்வித இரக்கமும் காட்டாததைக் கண்டு அவர்களின் கப்பல்களை "கல்லறைக் கப்பல்கள் (Coffin ships)" எனக் கூறினார்.
அரசியலிலும் தன்னை இணைத்துக் கொண்ட சாமுவேல் ப்ளிம்சால், 1867 ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினர் ஆனார். கப்பல்கள் பற்றி பாராளுமன்றத்தில் கொண்டு வந்த தீர்மானங்கள், கப்பல் முதலாளிகளாய் இருந்த உறுப்பினர்களால் நிராகரிக்கப்பட்டன. தொடர்ந்து இதைப்பற்றி குரல் எழுப்புவதை சாமுவேல் நிறுத்தவில்லை. அவர் எழுதிய 'அவர் சீமென் - Our Seamen' எனும் புத்தகம் பலரிடம் எழுச்சியை ஏற்படுத்தியது. 1875 ஆம் ஆண்டு கப்பல்கள் அதிக பாரம் ஏற்றப்படுவதை எதிர்த்தும், மதிப்பிற்கு மேலாக காப்பீடு செய்யப்படுவதை எதிர்த்தும் கொண்டு வந்த மசோதாவின் விவாதத்தில் தன் தரப்பு வாதத்தை வைக்கும் போது, "கப்பல் மூழ்கி மக்கள் உயிரிழப்பது தெரிந்தும் முன்னேற்பாடுகள் செய்யாமல் இருக்கும் வில்லன்களின் முகத்திரை கிழிக்கப்பட வேண்டும். அவர்களில் சிலர் இந்த சபையிலேயே இருக்கக் கூடும்." என்று முழங்கினார்.
சபாநாயகர் குறுக்கிட்டு "இந்த சபை உறுப்பினரை வில்லன்கள் எனக் கூறுகிறீர்களா?" என்றார்.
சாமுவேல் "ஆம். நான் சொன்னதைத் திரும்ப பெறப் போவதில்லை. மக்கள் உயிர்கள் போகிறது. அதற்கு யார் காரணமாக இருந்தாலும் அவர்கள் வில்லன்களே" என்றார்.
பிரதமராக இருந்த பெஞ்சமின் டிஸ்ரேலி ஒரு வாரத்திற்கு இந்தப் பிரச்சனையில் விவாத்தத்தை ஒத்தி வைத்து, சாமுவேலுக்கு கண்டனமும் தெரிவித்தார். ஆனால், மக்களிடையே இந்த நிகழ்வு பெரும் விவாதத்தைக் கொண்டு வந்தது. அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் நிகழ்ந்த விவாதத்தில் மசோதா சில உறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ளப் படாவிட்டாலும் மக்களின் கருத்துக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. பின்வந்த நாட்களில் வணிக கப்பல் சட்டத் திருத்தமாக மாற்றப்பட்டது.
இதன் மூலம் கப்பலின் காப்பு சுமையை (Safe Load) அறிந்து கப்பலின் பக்கவாட்டுப் பகுதியில் கோடுகள் போடப்பட்டன. அந்தக் கோடுகள் இதற்காக பத்து ஆண்டுகளாக போராடிய சாமுவேல் ப்ளிம்சால் பெயரால் 'ப்ளிம்சால் கோடுகள்' என அழைக்கப்பட்டன.
இவன் படிப்பால் உயர்ந்தவன் அல்ல
அறிவியல் ஆய்வாளனா?
அதுவும் அல்ல...
இன்றும் இவன் பெயர்
இங்கிருக்க என்ன செய்துவிட்டான்?
ஏழைகளின் வலி உணர்ந்தான்
மக்களின் குறை அறிந்தான்
அவர்களுக்கே குரல் கொடுத்தான்
பலரின் உயிர் காப்பாற்றினான்
இவனே அரசியல்வாதி...!
(சாமுவேல் ப்ளிம்சால் (1824-1898) |
- கணபதிராமன்
குறிப்பு: 1875 ஜூலை 22 அன்று ஆங்கிலேய பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் அவைக் குறிப்பு.... http://hansard.millbanksystems.com/commons/1875/jul/22/parliament-breach-of-order-mr-plimsoll
Hats off.i have learned about him in physics .
ReplyDeleteநன்றி...
DeleteArumaiyana vilakkam
ReplyDeleteநன்றி
DeleteGreat Samuel Plimsoll!!!, the world is still there because of very few great people like you!!!, thanks ganapathy😆
ReplyDeleteஅரசியல்வாதிக்கு சான்றாய் இருந்திருக்கிறார்
ReplyDeleteஇப்படிப்பட்ட கவனிப்புள்ளாகாத வரலாறை முன்வைத்தமைக்கு நன்றி ண்ணா