ஜேனட் பார்க்கர் - Pox and Parker
ஆங்கலத்தில் Small Pox என அழைக்கப்பட்டாலும், தமிழிலும் நிஜத்திலும் "பெரிய"அம்மை பற்றி இந்த பதிவு இன்று எழுதக் காரணம் இந்த நோய்க்குப் பலியான கடைசி உயிர் ஜேனட் பார்க்கர் இறந்த நாள் (செப்டம்பர் 11) இன்று.
ஜேனட் பார்க்கர் (1938 - 1978) |
முதலில் இந்த நோய் பற்றித் தெரிந்து கொள்வோம். பெரியம்மை - வலேரியா மேஜர் - வலேரியா மைனர் என்ற இரு கிருமிதொற்றினால் ஏற்படும் இந்த நோய், ஒரு காலத்தில் உயிர் கொல்லியாய் ஆயிரக்கணக்கானவர்களை பலி வாங்கியுள்ளது. தொற்று ஏற்பட்டு 12 நாடகளில் சளி, தலைவலி, உடல்வலி என சாதரணமாய் தெரியும் பெரியம்மை தீவிரமடையும் போது உடல் முழுதும் கொப்புளங்கள் - சுட்டெரிக்கும் காய்ச்சல் - உணவு சீரணப் பகுதி பாதிக்கப் படுவதால் வாந்தி - நோய் முற்றி மரணம் என உயிரை வாட்டும்.
1796 ஆம் ஆண்டே எட்வர்ட் ஜென்னர் என்பவரால் பெரியம்மை தடுப்புமுறை கண்டறியப்பட்டாலும், உலகம் முழுதும் இம்முறை சென்றடைய உலக அரசியல், இனவெறி, போதிய விழுப்புணர்வு ஏற்படுத்தாமை போன்ற பல காரணிகள் முட்டுக்கட்டையாய் இருந்தன. ஆங்காங்கே, நோய்தொற்று உள்ளவர்கள் - அவர்களின் உறவினர், சில நேரங்களில் ஒரு ஊரே இந்த நோய்க்கு பலி ஆகும் துயரங்களும் நிகழ்ந்து கொண்டு தானிருந்தன. பல நேரங்களில் நோய் தடுப்பு எனும் பெயரில் நூற்றுக்கணக்கான மக்கள் கொலை செய்யப்பட்டனர். 1975 ஆம் ஆண்டு, ஆப்பிரிக்காவின் சில பகுதிகள் தவிர உலகம் முழுதும் பெரியம்மை நோய் ஒழிக்கப்பட்டுவிட்டது என உலக சுகாதார நிறுவனத்தால் கூறப்பட்ட போதும், 1978 ஆம் ஆண்டு 11 செப்டம்பர் அன்று இங்கிலாந்து பிர்மிங்ஹாமைச் சேர்ந்த ஜேனட் பார்க்கர் பெரியம்மை நோயால் இறந்தார்.
1938 மார்ச் மாதம் பிறந்தார் ஃபிரெட்ரிக் - ஹில்டா தம்பதியின் மகளான ஜேனட் பார்க்கர். புகைப்படக் கலையில் ஆர்வம் கொண்டிருந்த ஜேனட், பிர்மிங்ஹாம் காவல்துறையில் புகைப்படக் கலைஞராகப் பணியாற்றி வந்தார். பின்னர், பிர்மிங்ஹாம் பல்கலைக்கழக மருத்துவப் பள்ளியில் மருத்துவப் புகைப்படக்கலைஞராக சேர்ந்தார். அங்கு உடற்கூறியல் (Anatomy) பிரிவில் தான் எடுக்கும் புகைப்படங்களை பிரதி எடுக்க ஆய்வுக்கூடத்தின் மேலே இருந்த இருட்டறையைப் (Dark Room) பயன்படுத்துவதை வழக்கமாய்க் கொண்டிருந்தார்.
11 ஆகஸ்ட் 1978 அன்று வழக்கம் போல் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த ஜேனட்டுக்குத் தெரியாது, அன்றிலிருந்து ஒரு மாதத்தில் தான் உயிர் விடப் போவது. அந்த ஆய்வகத்தில் சேர்த்து வைக்கப்பட்டிருந்த பெரியம்மை நோய்க்கிருமி மாதிரிகளில் ஏற்பட்ட கசிவு காரணமாக நோய்தொற்று கொண்ட ஜேனட்டுக்கு உடல்நலம் குறைய ஆரம்பித்தது. முதலில் சாதாரணக் காய்ச்சல் என நினைத்த ஜேனட், உடலில் கொப்புளங்கள் ஏற்பட்டது கண்டு 20 ஆகஸ்ட் 1978 அன்று கிழக்கு பிர்மிங்ஹாம் மருத்துவமனையில் பரிசோதனைக்கு சென்றார். பிற்பகல் 3 மணிக்கு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட ஜேனட், பெரியம்மை நோய்தொற்று உள்ளவராக அறியப்பட்டு இரவு 10 மணிக்கு, கேத்ரின் டி பார்ன்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். 11 மணிக்கு அவரது உறவினர், நண்பர்கள் மற்றும் அவருடன் தொடர்பிலிருந்த அனைவரும் (ஜேனட்டை மருத்துவமனைக் கூட்டிச் சென்ற அவசர ஊர்தி ஓட்டுனரும் உள்பட 260 பேர்) தனிமைப்படுத்தப் (quarantine) பட்டனர். பின்னர், ஜேனட்டின் தாய் தந்தையரும் கேத்ரின் டி பார்ன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்க (தனிமைப்படுத்தப்) பட்டனர். 26 ஆகஸ்ட் அன்று பார்க்கரின் வீடு மற்றும் கார் சுகாதாரத் துறையினரால் புகைப்பு (Fumigation) முறையில் சுத்தப்படுத்தப் பட்டது. அந்தத் தெருவில் வசித்த சுமார் 500 பேர் அவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனர். ஜேனட்டின் தாய்க்கும் நோய் தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, உடன் சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஜேனட்டின் தந்தை ஃபிரெட்ரிக் 5 செப்டம்பர் 1978 அன்று மாரடைப்பால் உயிரிழந்தார் எனக் கூறப்படுகிறது. நோய்தொற்று அபாயம் காரணமாக, பிரேத பரிசோதனை எதுவும் செய்யப்படவில்லை. செப்டம்பர் 6 அன்று பல்கலைக்கழக நுண்ணுயிரியல் துறை பேராசிரியர் ஹென்றி பெட்சன் தன் துறையில் உள்ள ஆய்வகத்தில் இவ்வித சம்பவம் நிகழ்ந்ததை எண்ணி, தற்கொலை செய்து கொண்டார்.
11 செப்டம்பர் 1978 அன்று ஜேனட் பார்க்கர் கேத்ரின் டி பார்ன்ஸ் மருத்துவமனையில் இறந்தார். இதைக் குறித்து ஆராய்ந்து அறிக்கை அளித்த நுண்ணுயிரியலாளர் ஷூட்டர், தனது அறிக்கையில் "பேராசிரியர் பெட்சன் தனது தலைமையில் இயங்கிய நுண்ணுயிரியல் பிரிவில் பாதுகாப்பைப் பாதிக்கும் ஆய்வுமுறை மாற்றங்களை சுகாதாரத் துறை அதிகாரிகளுக்குத் தெரிவிக்காமல் இருந்ததாலும், கவனக்குறைவாக இருந்ததாலும் இவ்வாறு நிகழ்ந்தது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிகழ்வின் எதிரொலியாக உலக சுகாதார நிறுவனம் உலகமெங்கிலும் உள்ள பெரியம்மை நோய்க்கிருமி மாதிரிகளை அழிக்க அல்லது மேம்பட்ட பாதுகாப்பு கொண்ட இடங்களுக்கு மாற்ற உத்தரவிட்டது. 11 செப்டம்பர் 1978க்குப் பிறகு, பெரியம்மை நோயினால் ஒரு உயிரும் போகவில்லை. ஆனால், அமெரிக்காவிலும், ரஷ்யாவிலும் உள்ள இரு ஆய்வுக்கூடங்களில் இன்றும் பெரியம்மை நோய்க்கிருமியான வலேரியா இருந்துக் கொண்டுதானிருக்கிறது....!!!
கூடுதல் தகவல்:
கூடுதல் தகவல்:
- வலேரியா மேஜர் கிருமியினால் கடைசியாக இயற்கையாகப் பாதிக்கப்பட்டவர் வங்கதேசத்தைச் சேர்ந்த ரஹீமா பானு. 1975 ஆம் ஆண்டு இரண்டு வயது இருக்கும்போது நோய்தொற்று ஏற்பட்ட ரஹீமாவுக்கு உடன் தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டு உடல் குணமடைந்து இன்றும் வாழ்ந்து வருகிறார்.
- வலேரியா மைனர் கிருமியினால் கடைசியாக இயற்கையாகப் பாதிக்கப்பட்டவர் அலி மாவ் மாலின். சோமாலியா நாட்டைச் சேர்ந்த இவருக்கு நோய்தொற்று இருப்பது 1975 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு குணப்படுத்தப்பட்டார். இளம் வயதில் போலியோவால் பாதிக்கப்பட்டிருந்த இவர், தன் வாழ்நாள் முழுதும் போலியோ பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும், போலியோ தடுப்பு முறை பரப்புவதிலும் தன் நாட்களை அர்ப்பணித்திருந்தார். 2014 ஆம் ஆண்டு மலேரியாவினால் அலி மாலின் இறந்தார்.
Like a serial killer ....this germs. After read this article iwas shocked now a days new weapon could be use against humanity. Thanks ram for posting this wl creating awareness.
ReplyDeleteபெரியம்மை வலேரியா மட்டுமில்லை... ஆந்திராக்ஸ், எபோலா போன்ற கிருமிகளும் முன்னேறிய நாடுகளால் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. வெடித்து சிதறும் அணுக்களால் மட்டுமல்ல... சுவடே தெரியாமல் அழிக்கும் இவ்வகை கிருமிகளாலும் என்றும் அழிவுதானே தவிர ஆக்கப்பூர்வமாய் ஒன்றும் நிகழப்போவதில்லை.
Delete