சிறுகதை 3 : கோடுகள் - Short Story 3 Lines
14-12-2003 என்று காட்டிக்கொண்டு மின்விசிறி காற்றில் ஆடிக்கொண்டிருந்த காலண்டர் தாளுக்கு மேலே முருகனும் பிள்ளையாரும் தோள் மேல் கைப் போட்டுக் கொண்டு சிரித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் சிரிப்பைக் கண்டு மேலும் சோகமாய் அமர்ந்திருந்தான் சுந்தர். உற்சாகமாய் கூப்பிட்டுக் கொண்டே உள்ளே வந்தார் அப்பா. "சுந்தர், இண்டர்வியூக்கு லெட்டர் வந்திருக்குடா..."
உள்ளே மகிழ்ந்தாலும், வெளியே காட்டிக் கொள்ளாமல் "எந்த இண்டர்வியூப்பா...?" என்றான் சுந்தர்.
"கத்தார் எலெக்ட்ரிசிடிக்குடா... இன்னும் மூணு நாளுல இண்டர்வியூ... மும்பையில..."
சுந்தருக்கு நான்கு மாதம் முன்பு செய்தித்தாள் பார்த்து, கத்தார் எலக்ட்ரிசிடிக்கு அப்ளை பண்ணியதை மறந்தே போயிருந்தான்.
"மூணு நாள்லயா... எப்படி போறதுப்பா...?"
"கிளம்புடா... உடனே ஸ்டேஷன் போயி டிக்கெட் புக் பண்ணிட்டு வாடா... சீக்கிரம்...." அப்பாவிடம் பணம் வாங்கிக் கொண்டு, சென்ட்ரலுக்குக் கிளம்பினான் சுந்தர்.
உற்சாகமாய் சென்ற சுந்தர், துவண்டு போய்த் திரும்பி வந்தான். அப்பா "என்ன ஆச்சுடா? டிக்கெட் கிடைச்சுதா?" என்றார்.
"இல்லப்பா... நாளைக்கு காலையில் தத்கால்ல தான் ட்ரை பண்ணனும்... வெயிட்டிங் லிஸ்ட் 127ல இருக்கு... எனக்கு நம்பிக்கையே இல்லப்பா..."
"சரி... காலை சீக்கிரம் கிளம்பிப் போ. 5 மணி லோக்கல் புடிச்சா அஞ்சரை மணிக்கு ஸ்டேஷன் போயிடலாம். நேரா போயி லைன்ல நின்னுடு... மனசப் போட்டு கொழப்பிக்காத..."
அடுத்த நாள் காலை 5:35 மணிக்கு சென்ட்ரல் போன சுந்தர், யாரும் இல்லாதது கண்டு மகிழ்ந்தான். முன்பதிவு அறையின் கண்ணாடிக் கதவைத் தள்ளினான். திறக்கவில்லை. "7:30 மணிக்குத் தான் தம்பி துறப்பாங்க... வெயிட் பண்ணு...!" என்று அசரீரி போல் சத்தம் கேட்க, சத்தம் வந்த திசை திரும்பினான். தூக்கக் கலக்கத்தில் அமர்ந்தபடியே தகவல் அளித்த செக்யூரிட்டி மீண்டும் தன் கடமையைத் தொடர்ந்தார்.
ஏழரை மணிக்குக் கண்ணாடிக் கதவு முன் சுமார் இருநூறு பேர் குழுமியிருந்தனர். கதவு திறக்கப்பட்டதும், மடை திறந்த வெள்ளம் போல் சிதறிய கூட்டத்தில், ஓடிச் சென்று இடம் பிடித்த சுந்தருக்கு கிடைத்தது ஐந்தாவது கவுன்டரில் மூன்றாவது இடம். 2 மணி நேரம் கதவின் வெளியே காத்திருந்த சுந்தர் இந்த அரைமணி நேரத்தில் பொறுமை இழந்திருந்தான். 8 மணிக்கு கவுன்டர் திறக்கப்பட்டது. முன்பதிவு ஆரம்பித்தது. சரியாக இரண்டு நிமிடங்களில் தான் நிரப்பிய படிவத்தை உள்ளே நீட்டினான் சுந்தர்.
வழக்கம் போல் முகத்தில் எந்த உணர்வும் இல்லாத இயந்திரம் போல் இருந்த அலுவலர், "வெயிட்டிங் லிஸ்ட், ஓகேயா...?" என்றார்.
சுந்தர் அதிர்ச்சியாய், "வெயிட்டிங் லிஸ்டா...? தத்கால் இப்ப தான ஓப்பன் ஆயிருக்கும். நல்லாப் பாத்து சொல்லுங்க..." என்றான்.
"இந்த ஒரு ஸ்டேஷன்ல மட்டும் இல்லப்பா... இந்தியாவில இருக்குற எல்லா ஸ்டேஷன்லயும் 8 மணிக்கு தத்கால் ஓப்பன் ஆகுது... எங்கிருந்து வேணா புக் ஆகியிருக்கலாம். வெயிட்டிங் லிஸ்ட் தான் இருக்கு..." என்றார் அலுவலர், சிறிது சிரித்துக் கொண்டே. சிறிது யோசித்த சுந்தரிடம், "சீக்கிரம் சொல்லுப்பா... பின்னாடி ஆள் இருக்காங்கல்ல...?" என்று கூற, பின்னால் இருந்தவரும் தன் பங்கிற்கு "நகருப்பா..." எனக் கூறி தன் படிவத்தை உள்ளே கொடுத்தார்.
ஒரு ரூபாய் காயின் தொலைபேசியில் தந்தைக்கு அழைத்தான் சுந்தர், "அப்பா... தத்கலும் போச்சுப்பா... நாளைக்கு ட்ரெயின் பிடிச்சாத் தான் இண்டர்வியூக்கு சரியான நேரத்தில போக முடியும். என்ன செய்யுறதுன்னே தெரியல..."
"சரி சுந்தர்... நீ ரிட்டன் ட்ரெயின் புக் பண்ணு..." தீர்க்கமாக பதில் வந்தது அப்பாவிடம் இருந்து.
குழப்பமான சுந்தர் "அப்பா... போகுறதுக்கே டிக்கெட் கிடைக்கல... எதுக்குப்பா ரிட்டனுக்கு டிக்கெட்..."
"சொல்றத கேளுடா... மும்பை டு சென்னை டிக்கெட் புக் பண்ணிடு. வீட்டுக்கு வா. அம்மாகிட்ட பணம் கொடுத்துட்டுப் போறேன். நீ இண்டர்வியூக்கு மும்பை போற... ஃபிளைட்ல... இண்டர்வியூல எப்படி பதில் சொல்றது, வேலை வாங்குறது மட்டும் நீ யோசி. மத்ததை நான் பாத்துக்கிறேன்..." என அப்பா சொல்லி முடிக்கும் முன்பே சுந்தரின் கண்களிலிருந்து இரு துளிகள் கன்னத்தில் கோடுகள் போட்டிருந்தன.
- கணபதிராமன்
Nice gans....
ReplyDeleteBy
Brindha
நன்றி...
DeleteVery nice ��
ReplyDeleteநன்றி சாய்...
DeleteNalla try paani iruka ganapathi....really surprising u r writing short story also....போடு தகிட தகிட
ReplyDeleteஇது உண்மையான கதை கதாநாயகன் கணபதிராமன்
ReplyDelete