மரண ரயில்பாதை - Death Railway

இரண்டாம் உலகப்போர். இதைக் கேட்கும் போது அனைவருக்கும் நினைவுக்கு வருவது ஹிட்லரின் கொடூரங்களும், ஐரோப்பாவின் பல பகுதிகளில் ஜெர்மனி நிகழ்த்திய ஹோலோகாஸ்ட் படுகொலைகளும் தான். அங்கு மட்டும் தான் அவ்வாறு நடந்ததா? நம் இந்தியாவிற்கு மிக அருகில், போருக்கு சற்றும் தொடர்பில்லா சுமார் 1,00,000 பேரைப் பலி வாங்கியது இந்த இரண்டாம் உலகப்போர். இவர்களின் பிணங்களின் மேல் போடப்பட்டதே மரண ரயில்பாதை.
போர் என்பது எவ்வளவு பயங்கரமானது? அதில் இருபுறமும் போரிடுபவர்கள் தங்களுக்குத் தேவையானதை அடைய எத்தனைக் கொடுமைகளை சுலபமாய் நிகழ்த்தி விட்டு செல்கின்றனர்? கொள்கை வேறுபாடு, நாட்டுப் பகை காரணமாக மூளும் போர்களில் வெல்வது யாராய் இருந்தாலும் தோற்பது மனிதத்தன்மையே. உலக அரங்கில் அமைதி விரும்பும் நாடாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் ஜப்பானும் இதற்கு விதி விலக்கல்ல. இரண்டாம் உலகப் போரின் போது "ஆசியா ஆசியர்களுக்கே" என முழங்கிய ஜப்பான் தெற்காசிய நாடுகளில் ஆங்கிலேய ஆட்சியைக் கைப்பற்றி தனது ஆட்சியை நிறுவ ஆசை கொண்டது. மேம்போக்காக பார்க்கும் போது ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை வாங்குவது போல் தெரிந்தாலும் இந்த முயற்சியில் ஜப்பானின் உண்மை முகம் பலருக்கும் தெரிந்திருக்கவில்லை. 
மரண ரயில்பாதை - நன்றி: விக்கிப்பீடியா

1942ல் பர்மாவைக் கைப்பற்றிய ஜப்பானுக்கு மலேயாவிலிருந்து ராணுவ வீரர்கள் மற்றும் ஆயுதங்கள் அனுப்புவதில் சிக்கல்கள் இருந்தது. அந்தமான் கடல் மற்றும் வங்காள விரிகுடாவில் தன்னுடைய கடற்படை மற்றும் நீர்மூழ்கி கப்பல்களை நிறுத்தி ஆதிக்கம் செய்து வந்த பிரிட்டிஷார், கப்பல் வழியே ஜப்பானியர் பர்மா சென்றடைவதை கடினமாக்கி இருந்தனர். ஜப்பானியர் சயாம் (தற்போதைய தாய்லாந்து) வழியாக மலேசியாவிலிருந்து ராணுவ ஆயுதங்கள் மற்றும் படையை பர்மா அனுப்ப திட்டமிட்டது. மலேசியாவில் இருந்து ஏற்கனவே இருந்த ரயில்பாதை வழி சயாம் அடைந்த ஜப்பானியர், சயாமின் அடர்ந்த மலைக்காட்டுப் பகுதி வழியே ஒற்றை ரயில் பாதை அமைக்க திட்டமிட்டனர். ஏற்கனவே, தாங்கள் பிடித்து வைத்திருந்த பிரிட்டிஷ், ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்தைச் சேர்ந்த போர்க்கைதிகளை இந்த ரயில் பாதை அமைக்க உபயோகித்து கொள்ள வியூகம் அமைத்தது ஜப்பான். 

இரயில்பாதை பர்மாவில் தன்புஜியாத்தில் இருந்தும், தாய்லாந்தில் (சயாமில்) பான் போங் பகுதியில் இருந்தும் ஒரே நேரத்தில் ஆரம்பிக்கப் பட்டு, 16 மாதங்களில் முடிக்க நினைத்திருந்தனர். வெறும் போர்க்கைதிகள் மட்டும் நம்பினால் இந்த முயற்சி தாமதமாகும் என நினைத்த ஜப்பானியர், இந்த இரயில் பாதை அமைக்க கூடுதலாக வேலையாட்களைப் பணியமர்த்தினர். சிறந்த சம்பளம், இருக்க வீடு என ஆசைக் காட்டப்பட்டு மலேசியாவில் இருந்து சுமார் 1,80,000 பேர் பணியமர்த்தப் பட்டனர். சுமார் 100000 தமிழர்கள் உள்பட மலாய், பர்மியர், லாவானீஸ் மற்றும் சீனர்கள் பலரும் ஜப்பானியரின் வார்த்தையை நம்பி இந்த அபாயத்தில் விளக்கில் விழும் விட்டில் பூச்சி போல் விழுந்தனர். தங்க வீட்டு வசதியுடன் வேலை என்றவுடன் பல தமிழர்கள் மனைவி மக்களுடன் குடும்பத்துடன் சயாமிற்கு ரயில் ஏறினர். தான் மீண்டும் திரும்பப் போவதில்லை எனவோ, தம் குழந்தைகள் யாருமில்லாமல் அனாதையாய் கதறி அழும் எனவோ அவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
ரயில் பாதை வேளையில் மலேசியத் தமிழர்கள்

15 செப்டம்பர் 1942 (இன்றிலிருந்து 124 ஆண்டுகள் முன்) இந்த ரயில்பாதைப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. டிசம்பர் 1943க்குள் முடிக்க வேண்டும் என்ற நோக்குடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த ரயில்பாதை 415 கிமீ நீளமுடையதாய் இருந்தது. கிட்டத்தட்ட 600 பாலங்களுடன் கூடிய இந்த பாதை, கடும் காடுகள், மலைப்பாங்கான இடங்கள், பாறைகள், கரணம் தப்பினால் மரணம் என அச்சுறுத்தும் மலைச்சரிவுகள் வழி இட வேண்டியிருந்தது. 61,000 போர்க்கைதிகளுடன் 2,50,000 பேரால் கட்டப்பட்ட இந்த ரயில்பாதை பலரை உயிர்பலி வாங்கியது. இவ்வளவு மக்கள் தங்குவதற்கு சரியான சுகாதாரமான தங்குமிடங்கள் உருவாக்கித் தரப்படவில்லை. வனப்பகுதியில் வேலை என்பதால் விஷப்பூச்சிகள், பாம்புகள், மழைக்காலம் பரிசாய் தந்த காலரா, மலேரியா நோய்கள், ஜப்பானியரின் கனிவில்லா காட்டுமிராண்டித்தனம், கசையடிகள் எனப் பல சித்திரவதைக்கு உள்ளான தொழிலாளிகள் சொன்னதற்கு மாறாக கொத்தடிமை போல் நடத்தப்பட்டனர். 
ஒருபுறம் மலை மறுபுறம் காட்டாறு
ஜப்பானியருடன் கொரியர்களும் மேற்பார்வையிட - எவ்வித நவீனக் கட்டுமானக் கருவிகளும் இல்லாமல், முற்றிலும் மனித உழைப்பை சாராய் பிழிந்தெடுத்து திட்டமிட்ட காலத்திற்கு 3 மாதங்கள் முன்பாக 17 அக்டோபர் 1943 அன்று முடிக்கப்பட்டது இந்த ரயில்பாதை. ஆனால், இதன் கட்டுமான நேரத்தில், நோய்கள், கசையடி சித்திரவதை, போதிய மருத்துவ வசதி இல்லாமை, இவன் எல்லாவற்றுக்கும் மேலாக பசியினால் சுமார் 1,00,000 பேர் இறந்திருந்தனர். போர்க்கைதிகளின் இறப்பை சரியாய் கணக்கிட்டிருந்த ஜப்பானிய ராணுவம், தன்னை  நம்பி வந்த தெற்காசியர்கள், மலேசிய தமிழர்களின் இறப்பை சரிவர கணக்கிடவில்லை. இறந்தவர்கள் ரயில்பாதையின் இருமருங்கிலும், கூட்டம் கூட்டமாய் குழி தோண்டிப் புதைக்கப்பட்டனர். 12,681 போர்க்கைதிகளுடன் சேர்த்து ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் இறக்க காரணமான இந்த ரயில் பாதை மரண ரயில்பாதை என்றே இன்றும் அழைக்கப்படுகிறது. 
போர்க்கைதிகள் - ஆசியத் தொழிலாளர்களால் உளி -  சுத்தியால் குடையப்பட்ட ரயில் பாதையின் ஒரு பகுதி
ஆசியா முழுதும் தன கட்டுப்பாட்டுக்குள் கொண்டு ஒரு குடையின் கீழ் ஆட்சி புரிய திட்டமிட்டிருந்த ஜப்பானின் திட்டங்கள் வெகு நாட்கள் நிலைக்கவில்லை. சயாம்-பர்மா ரயில்பாதை கட்டிமுடிக்கப்பட்டு 2 கம்பனி ராணுவ வீரர்களுடன் 5,00,000 டன் ராணுவ ஆயுதங்களுடன் பர்மா அடைந்த ஜப்பான் பிரிட்டிஷ் இந்தியப் படையிடம் தோற்றுப் பின் வாங்கியது. ஆகஸ்ட் 6 1945 அன்று ஜப்பானின் தொழில் நகரமான ஹிரோஷிமா மீது போடப்பட்ட அணுகுண்டுடன் ஜப்பானின் ஆணவமும் அடங்கிப் போனது. 

காஞ்சனபுரி அருகே குவாய் நதியின் மீது கட்டப்பட்ட பாலம் ஆங்கிலேய - டச்சு போர்க்கைதிகள் மற்றும் தமிழ்த் தொழிலாளிகள் உதவியுடன் கட்டப்பட்டது. மிகக்குறுகிய காலத்தில் சீறி ஓடும் ஆற்றின் நடுவே கட்டப்பட்ட இந்தப்பாலம் 1945ஆம் ஆண்டின் போது வான்வெளி தாக்குதலினால் சேதமுற்றாலும், பின்னர் தாய்லாந்து அரசால் மீண்டும் கட்டப்பட்டு இன்றும் இயக்கத்தில் உள்ளது. 

போரின்போது மிகவும் பாதிக்கப்பட்ட இந்தப் பாதை, போருக்குப் பின் தாய்லாந்து அரசால் 183கிமீ நீளம் மட்டும் புதுப்பிக்கப்பட்டு இன்றும் புழக்கத்தில் உள்ளது. தோற்றுப்போனது ஜப்பான் மட்டுமல்ல, சொந்த பந்தம் இழந்து - ஒரு வேளை கீரைத் தண்ணீர் உண்டு - உயிரைப் பிழிந்து உழைப்பாயத் தந்து - பசிப்பிணியில் உயிர்நீத்த ஒரு லட்சம் பேரும் அவர்களைப் பிரிந்து அனாதைகளாய் விடப்பட்ட சின்னஞ்சிறு பிஞ்சுக் குழந்தைகளும் தான். தாய்லாந்தில் இரு இடங்களிலும், பர்மாவில் ஒரு இடத்திலும் போர்க்கைதிகளின் சமாதிகள் அவர் பெயர் பொறித்து இன்றும் உள்ளன. ஆனால், ஜப்பானின் அலட்சியத்தாலும், தன்னைத் தவிர பிற இனத்தவரை விலங்கு போல் துச்சமாக மதித்ததாலும், கூட்டம் கூட்டமாய் புதைக்கப்பட்ட ஒவ்வொரு மனிதனுக்கும் என் கண்ணீர்த்துளிகளை அர்ப்பணிக்கிறேன். 

- கணபதிராமன்

சயாம் - பர்மா மரண ரயில்பாதை குறித்து ஆஸ்திரேலியப் போர்க்கைதிகள் எழுதிய குறிப்புகளை ஆராய்ந்து, இந்தக் கொடுமைகளை அனுபவித்தவர்களை நேரில் கண்டு பேட்டி எடுத்து ஆவணப்படமாய் வெளியிட்டு இருக்கும் சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் ராஜசங்கர், குறிஞ்சிவேந்தன் அவர்களுக்கு இந்தத் தருணத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


Comments

  1. இந்த தொகுபினை பதிவு செய்ததர்கு நன்றி மேலும் தாங்கள் பல அழிந்த வரலாற்று நிகழ்வை பதிவு செய்ய விரும்புகிரென்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அகர முதல - சிறுகதை (திருக்குறள் கதை) குறள் 0001

புறநானூறு பேசும் நீர் மேலாண்மை

வான்கா - Vanka