விண்ணை நோக்கி - Into the Space
இன்று செப்டம்பர் 8 2016 மாலை 4:10 மணிக்கு விண்ணை நோக்கி சீறிப்பாய்ந்து செல்ல உள்ளது புவிமைய செயற்கைக்கோள் செலுத்து ஊர்தி (Geostationary Satellite Launching Vehicle) GSLV-F05. தன்னுடன் வானிலை ஆய்வுக்குப் பயன்படும் மேம்பட்ட வளிமண்டலவியல் செயற்கைக்கோளான இன்சாட் 3DR (INSAT 3DR) ஐ எடுத்து செல்கிறது.
இந்த விண்ணூர்தி முதன்முறையாக மீக்குளிர்நிலை மேலடுக்கு நிலை இயந்திரம் (Cryogenic Upper State Engine) கொண்டு இயங்குவதாக அமைய உள்ளது. ஏற்கனவே, நான்கு முறை மீக்குளிர்நிலை மேலடுக்கு நிலை இயந்திரம் விண்ணில் செலுத்தப்பட்டிருந்தாலும் அது இயக்கப்படுவது இம்முறையே. முழுதும் நம் நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்த இயந்திரம் வெற்றிகரமாக இயக்கப்படுவதில் நமக்குப் பெருமை இருக்கத்தானே செய்யும்.
திரவ ஹைட்ரஜன் மற்றும் திரவ ஆக்ஸிஜன் மீக்குளிர் நிலையில் (முறையே -253 மற்றும் -183 டிகிரீ செல்சியஸ்) வைக்கப்பட்டுள்ள இந்த இயந்திரத்தில் சுழலுந்து (Turbo pump) மூலம் நிமிடத்திற்கு 40000 சுழற்சி வேகத்தில் சுற்றி, வளியில்லா வெற்றிடத்தில் 73.55கிலோ நியூட்டன் வரை உந்தம் தரக்கூடியது. 720 நொடிகள் வரை இயங்கக்கூடியது.
GSLV-F05 மூன்று நிலை இயந்திரங்கள் கொண்டது. தாழடுக்கு UH25+ஹைட்ரசீன், HTPB கொண்டு இயங்கக்கூடியது. மைய அடுக்கு UH25+ஹைட்ரசீன் மூலம் இயங்குகிறது. மேலடுக்கில் மீக்குளிர் இயந்திரம் உள்ளது. இம்மூன்று இயந்திரத்தின் உதவியுடன் புவிமைய மாற்று சுற்றுவட்டம் (Geostationary Transfer Orbit) வரை செலுத்தப்படும் இன்சாட் 3DR செயற்கைக்கோள், அங்கிருந்து 74 டிகிரீ வடக்கு எனும் இலக்கு நோக்கி தான் கொண்ட எரிபொருள் மூலம் நகரும் வண்ணம் வடிவமைக்கப் பட்டுள்ளது.
இந்த ராக்கெட் மூலம் செலுத்தப்படும் 2211 கிலோ நிறையுள்ள இன்சாட் 3DR தட்பவெப்ப படிமாக்கிகள் (Imaging system) மற்றும் ஒலிப்பான் (Atmospheric sounder) போன்ற உபகரணங்கள் கொண்டது. இதில் உள்ள படிமமாக்கி (Imager) மத்திய அகச்சிவப்பு அலைகற்றை முறையில் இரவு நேரத்திலும் சிறு மேகம் மற்றும் பனிமூட்டங்களைப் படம் பிடிக்கவல்லது. தட்பவெப்பநிலை அறிவதிலும், வானிலை முன்னறிவிப்பு செய்வதற்க்கும், நமது கடல் பகுதிகளில் மீட்புப் பணிகளில் உதவி செய்யவும் பல்வேறு கருவிகள் கொண்டு விண்ணில் செலுத்தப் படவுள்ளது இன்சாட் 3DR.
இந்தப் பதிவு நமது இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் அனைத்து ஊழியர் மற்றும் விஞ்ஞானிகளை இத்தருணத்தில் வாழ்த்துவதற்கும், இந்த விண் பயணத்தின் சிறப்பை தமிழில் யாவர்க்கும் புரியும் வண்ணம் சொல்வதற்குமே...
படங்கள் மற்றும் விபரங்கள்: இஸ்ரோ
இந்தப் பதிவு நமது இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் அனைத்து ஊழியர் மற்றும் விஞ்ஞானிகளை இத்தருணத்தில் வாழ்த்துவதற்கும், இந்த விண் பயணத்தின் சிறப்பை தமிழில் யாவர்க்கும் புரியும் வண்ணம் சொல்வதற்குமே........
ReplyDeleteதமிழில் சொன்னதால்.....உனக்கு என் நன்றி உரித்ததாகுக ....