மகேஷ் புன்னகையால் அழவைத்தவன் - Mahesh
எனது வலைப்பக்கத்தில் திரைப்படம் குறித்து முற்றிலும் தவிர்த்து விடலாம் என்று எண்ணியதுண்டு. ஆனால், சினிமாவிலும், வாழ்விலும் தன் முத்திரை பதித்த சிலரின் திறமைகளை சரிவர அங்கீகரிக்காமல் மறக்கப்பட்டவர்களில் ஒருவரை நினைத்துக் கொள்ளவே இந்தப் பதிவு.
'சொட்டு நீலம் டோய்...
ரீகல் சொட்டு நீலம் டோய்...'
இந்த விளம்பரம் எத்தனை பேருக்கு தங்கள் சிறுவயதை நினைவூட்டக் கூடியது? ஒளியும் ஒலியும் ஓடிக்கொண்டிருக்கும் போது, பாடல் முடிந்து விளம்பர இடைவெளியில் இந்த விளம்பரம் வரும்போது கூடவே நானும் பாடி இருக்கிறேன். அன்று எனக்குத் தெரியாது, இந்த விளம்பரம் மட்டுமல்லாது பல விளம்பரங்களுக்கு இசையமைத்தது மகேஷ் என்பது...
மகேஷ் - இசையமைப்பாளர் |
1955 ஆம் ஆண்டு பிறந்த மகேஷ் சிறுவயதில் இருந்தே இசையில் ஆர்வம் கொனவராக இருந்தார். பின்னர், XLRI கல்லூரியில் மேலாண்மை பயின்ற மகேஷ், ஹிந்துஸ்தான் பாலிமர்ஸ், இந்தியா பிஸ்டன்ஸ் போன்ற நிறுவனங்களின் மேலாளராகப் பணி புரிந்துள்ளார். 80களின் இறுதியில், ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மகேஷ், தனது சிறுவயது நண்பன் ஜெயேந்திராவின் தூண்டுதலால் தனது பாதையை இசையின் பக்கம் திருப்பினார். ஒருபுறம் புற்றுநோயுடன் போராட்டம் எனினும், தன் இசையால் தனக்கு வாழ்வின் புது அர்த்தம் கிடைத்ததாய் பெருமிதம் கொண்டார் மகேஷ். நன்பன் ஜெயேந்திராவுடன் இணைந்து ரியல் மீடியா இமேஜஸ் என்ற நிறுவனத்தை கையாண்டதோடு, 250 விளம்பரங்களுக்கு (ரீகல் சொட்டு நீலம், டிவிஎஸ் டயர்ஸ், அப்போலோ டயர்ஸ் உட்பட) இசை அமைத்துள்ளார் மகேஷ்.
தமிழ் திரையுலகில் சேதுமாதவன் இயக்கத்தில், கமல்ஹாசன் நடித்த 'நம்மவர்' என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான மகேஷ், மேலும் குருதிப்புனல், ஆளவந்தான் (பின்னணி இசை), வானம் வசப்படும் ஆகிய தமிழ்ப்படங்களுக்கும் இசை அமைத்துள்ளார். இது மட்டுமல்லாமல், 3 தெலுங்கு படங்கள், 1 மலையாள மொழிப் படத்திற்கும் இசை அமைத்த மகேஷுக்கு மற்ற இசை அமைப்பாளர்களுக்கு கிடைத்த அங்கீகாரம் சரிவர கிடைக்கவில்லை என்பதே கசப்பான உண்மை.
இந்தியாவின் முதல் டால்பி திரைப்படமான குருதிப்புனலுக்கு பின்னணி இசையால் படத்திற்கு பலம் சேர்த்திருப்பார் மகேஷ். இரத்தப் புற்றுநோயால் அவதியுற்றபோதும், இனிமையான இசை கொண்டு இறகால் வருடுவது போன்ற இனிமையான பாடல்கள் கொண்டு 'வானம் வசப்படும்' தந்த மகேஷ், அத்திரைப்படம் வெளியானபோது புற்றுநோய்க்கு முழுதாய் இரையாயிருந்தார். தன் கடைசி நாட்களில், பிற புற்றுநோயாளிக்ளுக்கு நேர்மறை எண்ணங்களை எடுத்துக் கூறி அவர்களை ஊக்குவிப்பதில் தன்னை முழுதும் அர்ப்பணித்திருந்தார் மகேஷ். இவரைப் பற்றி நண்பர் ஜெயேந்திரா கூறுகையில், 'தன் மரணம் பற்றி நன்கு அறிந்திருந்தும், தன்னம்பிக்கை, நல்லெண்ணம், மாறாப் புன்னகையுடன் வலம் வந்தான் மகேஷ். மனபலம் என்பதற்கு மறுபெயர் மகேஷ்' எனக் கூறுகிறார். அக்டோபர் 29 2002 அன்று பூவுலகை விட்டு மறைந்தார் மகேஷ். மகேஷின் நண்பர்கள் பலர் இணைந்து மகேஷ் நினைவு அறக்கட்டளை என்ற அமைப்பை நிறுவி, அதன் வழி பல புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சை உதவி, கவுன்சிலிங் உதவி, மாதம் 35000 ரூபாய் அடையார் புற்றுநோய் மருத்துவமனைக்கு நன்கொடை, இது மட்டுமல்லாமல் அடையார் புற்றுநோய் மருத்துவமனையில் சிறார் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு கட்டிடத்தையும் கட்டிக் கொடுத்துள்ளனர்.
மகேஷ் நினைவு அறக்கட்டளை கட்டித்தந்த சிறார் புற்றுநோய் சிகிச்சைப்பிரிவு |
மனதை வருடும் பாடல்கள், மெல்லிசை, புன்னகை தவழும் முகம், தன்னம்பிக்கை, நட்புக்கு இலக்கணம் வகுத்த இவரின் நண்பர்கள், தானிறந்தும் மற்றவருக்கு நன்மை செய்யும் இவர் போன்ற சிலரின் மூலம் மனிதத்தன்மையின் நிலைப்பாட்டை நான் காண்கிறேன்.
இதோ, என் நெஞ்சில் நீங்கா இடம்பிடித்த மகேஷின் வானம் வசப்படும் பாடல்களை நீங்களும் கேட்டு மகிழுங்கள்.
மகேஷ்...
இசையால் இமை வருடிய இவன்
தன் சிரித்த முகத்தின் பின்னே
வலி மறைத்தவன்...
இறந்தும் இறவாதவன் - தன்
புன்னகையால் அழவைத்தவன்...
- கணபதிராமன்
The story of behind the magesh...gives us never never give it up.
ReplyDeleteIt is great to know great person mahesh, but I felt the god should have extended his stay.I agree @Thirumali comment. Good one ganapathy🤗
ReplyDelete