சிறுகதை 1 அலார்ம் - Alarm - Short story
அலார்ம்
- கணபதிராமன்
டி ட்டி ட்டி ட்டின்.... டி ட்டி ட்டி ட்டின்....!!!
அலாரம் சத்தம் கேட்டு விழித்த யாழினி சுற்றுமுற்றும் பார்த்தாள். ஐந்து வயதே ஆன தனது மகன் ஜீவா அழகாய் யானை பொம்மையை அணைத்தபடி தூங்கிக் கொண்டிருந்தான். அலாரத்தை நிறுத்திவிட்டு, ஜீவாவின் நெற்றியில் சின்னதாய் முத்தமிட்டு மெல்லிதாய் சிரித்தாள் யாழினி. 'சுந்தர் எங்க' என எண்ணிய வண்ணம் அறையை விட்டு வெளியே வந்தவள், சமையலறையில் இருந்து சத்தம் கேட்க, அங்கே சென்றாள்.
முகத்தில் புன்னகை - கையில் சூடான காபியுடன் "குட் மார்னிங்" என்றான் சுந்தர்.
"என்ன இது காலையிலேயே... நான் எழுந்து காபி போட்டிருப்பேன்ல...?"
"தினமும் நீதான எல்லா வேலையும் செய்யுற... இன்னிக்கு ஒரு நாள் நான் செய்யுறேன்..."
"நீ முதல்ல நகரு..." என்றவாறே தன் சாம்ராஜ்யத்தைத் தக்கவைக்க முயன்ற யாழினியை தடுத்து "நீ போயி ஹால்ல உட்காரு. டிவி பாரு. சமையல் வேலைய நான் பாத்துக்கிறேன்." என்றான் சுந்தர்.
சமையலறையில் நின்ற சுந்தரைப் பின்னாலிருந்து அணைத்து - தன் பக்கம் திருப்பி - நிறைவாய் ஒரு பார்வை பார்த்தாள் யாழினி. புன்னகையுடன் அவனைத் தன்புறம் இழுக்க...
"அப்பா... அப்ப்ப்பா.... எழுந்திருப்பா... அம்மா எழுப்ப சொன்னாங்க.... " ஜீவா சுந்தரை எழுப்பினான்.
"நல்லா சொல்லுடா ஜீவா... எப்ப பாத்தாலும் தூங்கிகிட்டே..." என சமையலறையிலிருந்து தன் பங்குக்கு சொன்னாள் யாழினி.
'ச்ச... கனவா...? அதுவும் நல்லாத் தான் இருந்துச்சு' என மனதிற்குள் நினைத்த சுந்தர் படுக்கையில் எழுந்து அமர்ந்தான். ஜீவா அவன் மடியில் ஏறி அமர்ந்து "ஏன்ப்பா தூங்குறப்ப சிரிச்சுக்கிட்டே தூங்குற...?" எனக் காதோடு கேட்டான்.
"ஒண்ணுமில்லடா செல்லம்..." என்றவாறு ஜீவாவை அணைத்தான்... ஜீவா கலகலவென சிரித்து.....
டி ட்டி ட்டி ட்டின்... டி ட்டி ட்டி ட்டின்....!!!
படுக்கை அருகே யாழினியும் ஜீவாவும் புகைப்படத்தில் சிரித்தபடி இருக்க அதனருகே சத்தமிட்ட அலாரத்தை நிறுத்திய சுந்தர் "ஐயோ... நேரமாச்சு" என்றபடி வேலைக்கு செல்லக் கிளம்பத் துவங்கினான்.... துபாயில்.
துயில் எழுந்தவுடன் டுபாயில் இருந்த கொஞ்சம் எதுகை மோனையா இருந்து இருக்கும்..
ReplyDelete