விண்ணை நோக்கி 2 - Into the sky 2
துருவ செயற்கைக்கோள் செலுத்து ஊர்தியின் (Polar Satellite Launching Vehicle) 37வது பயணம் நாளை காலை 9:07 மணிக்குத் துவங்க உள்ளது. PSLV-C35 எனும் விண்ணூர்தி இம்முறை SCATSAT-1 என்ற செயற்கைக்கோளை முதன்மைச் சுமையாக சுமந்து செல்ல உள்ளது. இதனுடன் 7 சிறிய செயற்கைக்கோள்களையும் உடன் செல்ல உள்ளது PSLV-C35.
ஸ்ரீஹரிக்கோட்டா செலுத்து தளம் ஒன்றில் தயார் நிலையில் PSLV-C35 |
PSLV - Polar Satellite Launching Vehicle துருவ செயற்கைக்கோள் செலுத்து ஊர்தி. இது தன்னுடன் எடுத்து செல்லும் செயற்கைக்கோளை சூரிய ஒத்திசைவு வட்டப்பாதையில் (Sun Synchronous Orbit) செலுத்த வல்லது. இம்முறை இன்னும் சிறப்பாக, முதன் முறையாக PSLV-C35 இரு வெவ்வேறு உயரங்களில் (Altitude) செயற்கைக்கோள்களை நிறுவ உள்ளது. நான்கு நிலை இயந்திரங்கள் கொண்ட இந்த விண்ணூர்தி, 44.4மீ உயரமும், 320டன் எடையும் கொண்டது. முதல் நிலை மற்றும் மூன்றாம் நிலை இயந்திரங்கள் திட எரிபொருள் கொண்டும், இரண்டாம் நிலை மற்றும் நான்காம் நிலை இயந்திரங்கள் திரவ எரிபொருள் கொண்டும் இயங்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது PSLV-C35.
371கிலோ எடை கொண்ட SCATSAT-1 செயற்கைக்கோள் 2009 முதல் 2014 வரை பயன்பாட்டில் இருந்து வந்த OCEANSAT-2 ன் வழித்தொடரி. ஓஷன்சாட் 2 ஐப் போலவே, ஸ்காட்சாட்-1 வானிலை மாற்றங்கள், புயல் / மழை எச்சரிக்கை போன்ற பயன்பாடுகளுக்கு உதவும். ஓஷன்சாட்-2 சுமந்து சென்ற Ku அலைக்கற்றை ஒளிச்சிதறல் கருவியை (Ku Band Scatterometer) தானும் எடுத்து செல்கிறது ஸ்காட்சாட்-1.
சூரிய உணர்வி (Sun sensor), விண்மீன் உணர்வி (Star Sensor), 750 வாட் மின்சாரம் தரும் இரு சூரியப்பலகைகள் (Solar panels), காந்தப்புலக்கருவி (Magnetometer), நிலைம ஒப்பீடு அலகு (Inertial Reference Unit), உயரம் மற்றும் வட்டப்பாதை கட்டுப்பாட்டு அலகு (Altitude and Orbit Control Unit) ஆகியவற்றை தன்னுள் கொண்டது ஸ்காட்சாட்-1.
மீள்வினைச் சக்கரங்கள் (Reaction Wheels), காந்தவிசை சுழற்றிகள் (Magnetic Torquers) மற்றும் ஹைட்ரசீன் உந்திகள் (Hydrazene Thrusters) உதவியுடன் செயல்படும் உயரம் மற்றும் வட்டப்பாதை கட்டுப்பாட்டு அலகு ஸ்காட்சாட்-1 சரியான் உயரம் மற்றும் சுற்றுவட்டப்பாதையில் இருப்பதை உறுதி செய்யவும் கட்டுப்படுத்தவும் பயன்படுகிறது.
ஸ்காட்சாட்-1 செயற்கைக்கோள் 730கிமீ உயரத்தில் செலுத்தும் PSLV-C35, தான் கொண்டு செல்லும் பிற 7 செயற்கைக்கோள்களை 689கிமீ உயரத்தில் நிறுத்தும்.
மற்ற செயற்கைக்கோள்கள் பற்றிய விபரங்கள்:
- ALSAT - 1B : அல்ஜீரியா நாட்டின் இந்த செயற்கைக்கோள் 103கிலோ எடை கொண்டது. விவசாய மேம்பாடு மற்றும் பேரிடர் மேலாண்மை பயன்பாடுகளுக்காக விண்ணில் ஏவப்பட உள்ளது.
- ALSAT - 2B : அல்ஜீரியா நாட்டின் இந்த செயற்கைக்கோள் 117கிலோ எடை கொண்டது. தொலை உணர்வி செயற்கைக்கோள் (Remote Sensing Satellite)
- ALSAT - 1N : அல்ஜீரியா நாட்டு மாணவர்களால் தயாரிக்கப்பட்ட இந்த 7கிலோ செயற்கைக்கோள் ஒரு தொழில்நுட்ப விளக்க மீநுண் செயற்கைக்கோள் (Technology Demonstration Nano Satellite)
- Pathfinder - 1 : ஐக்கிய அமெரிக்க நாடுகளின் இந்த வணிக செயற்கைக்கோள் 44கிலோ எடை கொண்டது. உயர் தெளிவு படக்கருவி (High Resolution Imaging) கொண்டுள்ள நுண்செயற்கைக்கோள் (Micro Satellite).
- NLS -19 : கனடா நாட்டின் இந்த மீநுண் செயற்கைக்கோள் (Nano Satellite) 8கிலோ எடை கொண்டது. வணிக விமானங்கள் கண்காணிப்பிற்கு பயன்படும்.
- PRATHAM : இந்தியாவின் இந்த செயற்கைக்கோள், இந்திய தொழில்நுட்பக் கழகம், மும்பையால் (IIT, Bombay) வடிவமைக்கப்பட்டுள்ளது. 10கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள், 1கிமீ x 1கிமீ பரப்பளவில் உள்ள மொத்த எலக்ட்ரான் எண்ணிக்கை (Total Electron Count) கணக்கிடுவதற்குப் பயன்படும்.
- PISAT : இந்தியாவின் இந்த செயற்கைக்கோள், PES பல்கலைக்கழகத்தால் வடிவமைக்கப்பட்ட மீநுண் செயற்கைக்கோள். 5.25கிலோ எடை கொண்ட இது தொலை உணர்வு பயன்பாடு கொண்டது.
தொடர்ந்து பல சாதனைகள் புரியும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் என் நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்.
தகவல் : இஸ்ரோ வலைத்தளம்.
Super sir JAIHIND
ReplyDelete