ஆழி - குறள் கதை

ஆழி 
அன்று


எங்கும் தன் நீல நிறத்தைப் பரப்பி, பரந்து விரிந்து கிடந்த கடலை உற்றுப் பார்த்தபடி அமர்ந்திருந்தேன். கடல் மட்டும் அலைபாயவில்லை, என் மனமும் தான். எங்கிருந்தோ ஒரு அலை வந்து என் காலின் நுனியைத் தொட்டுச் சென்றது.

இன்று 

சமூக வலைதளங்களில் இன்று என் பெயர் தான் அடிக்கடி தென்பட்டுக் கொண்டிருக்கிறது. காரணம், இன்று எனக்கு நடக்க இருக்கும் பாராட்டு விழா. எந்த ஊரில் என் உழைப்புக்கு அடையாளம் மறுக்கப்பட்டதோ, அடையாளம் என்ன இல்லாத வேலை செய்கிறேன் என இழிவு சொல்லப்பட்டதோ, அதே ஊரில் இன்று எனக்குப் பாராட்டு விழா. மனதில் என்றோ அடித்துக் கொண்டிருந்த அலை இன்று அமைதியாகவே இருந்தது. 

"டாக்டர் சார்" என்ற குரல் கேட்டுத் திரும்பினேன். நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்களில் ஒருவரான செந்தில் நின்றிருந்தார். 

"சொல்லுங்க, செந்தில்"

"சார், இன்னும் கொஞ்ச நேரத்துல ப்ரோக்ராம் துவங்கிடும், உங்க கூட யாராவது வந்திருந்தா அவங்களை முன்வரிசைல உட்கார வைக்கத் தான் கூப்பிட்டேன். உங்க மனைவி, பையன் ரெண்டு பேருக்கும் முன் வரிசையில் இடம் கொடுத்தாச்சு. வேற சிலர் யாரும் இருக்காங்களா?"

"சிலர் என்ன, பலர் இருக்காங்க, முன் வரிசை பத்தாது, செந்தில். நீங்க போயி நிகழ்ச்சியைத் துவங்குங்க" என்றேன்.

"சார், நான் உங்களைப் பத்தி ஒரு அறிமுக உரை கொடுக்குறேன்." என்ற செந்தில், அருகில் இருந்த தனது உதவியாளரைப் பார்த்து, "நான் சொல்லும்போது சாரை மேடைக்குக் கூட்டி வரணும், சரியா?" என்றார். 

"செந்தில், என்ன பழைய படம் ஹீரோ என்ட்ரி மாதிரியா? அதெல்லாம் வேண்டாம். மேடைக்குப் போவோம்." என்று செந்திலின் தோளில் கைபோட்டுச் சென்றேன்.

மேடையில் நான், என்னைப் பாராட்டிப் பேச வந்திருக்கும் சிலர் என அமர்ந்திருக்க, சில ஊடகங்கள், சில youtube channelகளும் தங்களது படக்கருவியுடன் நிகழ்ச்சி துவங்கக் காத்திருந்தனர். செந்தில் மேடையின் வலதுபுறம் வைக்கப்பட்டிருந்த ஒலிவாங்கி முன் நின்று, "நன்மாலை, அனைவருக்கும் இனிய வணக்கங்கள்" என்று கூறிவிட்டு, என்னை நோக்கிக் கையைக் காட்டியபடி, "இன்று இந்த விழாவின் நாயகனுக்கு உலகின் பல நாடுகளில் அறிமுகம் தேவையில்லை. உழைப்பினால் முன்னுக்கு வந்தவர் என்று சொன்னால் அது மிகையாகாது. உலகின் பல நாடுகளில் தொல்லியல் துறையில் அகழ்வாய்வு நடத்தி, புகழ் பெற்ற முனைவர் கொளஞ்சி அவர்களுக்குப் பாராட்டுக் கூட்டம் நடத்துவதில் எங்கள் குழு பெரும் மகிழ்வடைகிறது." செந்தில் பேசிக் கொண்டிருக்கும்போதே, எழுந்து நின்று எதிரில் அமர்ந்திருப்போர்க்கு வணக்கம் தெரிவித்தபடி நின்றிருந்தேன். பூங்கொத்து, பொன்னாடை என்று துவங்கிய நிகழ்வு, மேடையில் நானே கூச்சம் கொள்ளும் அளவுக்குப் பாராட்டப் பட்டேன். ஆனால், அவர்கள் சொல்வதில் நான் வெற்றி அடைந்த பிறகு எனது செயல்களைப் பற்றி மட்டுமே சொல்லப்பட்டன. அதற்கு முன்னால் என்ன என்பதே என் மனதில் ஓடிக் கொண்டிருந்தது.

அன்று

"சார், நான் அனுப்புன ரிப்போர்ட் எல்லாம் பாத்தீங்களா, Specimen எல்லாம் பாத்தீங்களா? கார்பன் டேட்டிங் அனுப்பிட்டீங்களா?"
"பொறுங்க தம்பி", என்று ஒருவர் சொல்ல, அந்த அறையே சிரித்தது.

இன்று

திகட்டத் திகட்ட மேடையில் இருந்த அனைவரும் என்னைப் பாராட்டு மழையில் நனையவிட்ட பின், இறுதியாக என்னைப் பேசுமாறு அழைத்தார் செந்தில். அரங்கில் கைத்தட்டல் ஒலி ஓங்க, நான் ஒலிவாங்கி முன் சென்று நின்றேன். கைத்தட்டல் ஒலி நிற்கும்வரை நானும் நின்றிருந்தேன். எனது நெஞ்சில் கைவைத்தபடி, அவர்களின் பாராட்டை ஏற்கும் விதமாக என் தலையை சற்று சாய்த்தபடி. 

"அனைவருக்கும் நன்மாலை, இவ்வளவு பாராட்டுக்குரியவனா? எதனால் இந்த பாராட்டுக்கள்? சொல்லப்போனால் நான் இந்த நாட்டுக்கு எதுவும் செய்துள்ளேனா என்றே எனக்குத் தெரியல. செய்ய நினைத்திருந்தேன்." என்று சில நொடி இடைவெளிவிட்டு மீண்டும் தொடர்ந்தேன்.

"எல்லோரும் என் பெருமைகளைப் பற்றிப் புகழ்ந்து பேசினாங்க, நான் பல நாடுகளில் செய்த அகழ்வாய்வுகளைப் பற்றியெல்லாம் சொன்னாங்க, ஆனா, அங்க நான் போகிறதுக்கு முன்னாடி நான் என்ன செஞ்சேன்னு இங்க பலருக்குத் தெரிய வாய்ப்பில்ல. அதிலிருந்தே துவங்குறேன்.

என்னோட ஊரு தென்னார்க்காடு மாவட்டம் விருத்தாசலம் பக்கத்துல கோமங்களம். சின்ன ஊரு தான். எப்படியாச்சும் என்ன ஒரு படிச்சவனா ஆக்கணும் என்பது தான் எங்க அப்பாவோட கனவு எல்லாமே. மாசத்துக்கு ஒரு முறையாச்சும் என்கிட்ட சொல்லுவாரு, 'படிப்பு தான் கண்ணு மதிப்பு இங்க'ன்னு. என்னோட ஊர்லேந்து விருத்தாசலம் பாய்ஸ் ஸ்கூல் வரை நடந்து போய்ப் படிப்பேன். ஒவ்வொரு முறை விருத்தாச்சலம் கோயில் கோபுரத்தைப் பாக்குறப்பவும் இது எப்ப கட்டிருப்பாங்கன்னு தான் மனசு கேட்கும். பள்ளிப் படிப்பும் முடிஞ்சுது. சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறையில் சேர்ந்தேன். அப்பாவுக்கு செம்ம மகிழ்ச்சி, ஊருல பல பேர்கிட்ட 'என் மவன் காலேசுல படிக்கிறான், தெரியுமா?'னு கேட்க, சிலர் சண்டையே போட்டிருக்காங்க, அவருக்கு அவ்ளோ பெருமை. தமிழ்த் துறையில் கல்வெட்டுப் பற்றி ஒரு பாடம் வரும். அது படிச்சது தான் நான் தொல்லியல் துறைக்கு மாறுனதுக்குக் காரணம். தமிழில் பட்டப்படிப்பு முடித்து, மேற்படிப்பு தொல்லியல் துறையில் சேர்ந்தேன். அடுத்து எம்.பில் படிப்பும். நிறைய புத்தகங்கள், தொல்லியல் ஆய்வு செய்த இடங்கள், கல்வெட்டுக்கள், செப்பேடுகள் எனத் தமிழ்நாடு முழுதும் சுற்றித் திருந்த காலம் அது. படித்து முடித்து தமிழ்நாடு தொல்லியல் துறையில் சேர்ந்தேன். சேர்ந்த போது, எனக்கு இரு கொடுவாய்ப்பான நிகழ்வுகள் நிகழ்ந்தன. ஒன்று, என் அன்புக்குரிய அப்பாவை இழந்தேன். இரண்டு, நான் படிக்கும்போது கிடைத்த விடுதலை உணர்வு, வேலைக்குச் சேர்ந்ததும் பறிக்கப்பட்டதாக உணர்ந்தேன். அப்பாவின் இறப்பு என்னால் தாங்கிக் கொள்ள முடியாததாக இருந்தது. அப்பா இறக்கும்போது, 'உன்னால முடியாது, உன்னால முடியாதுன்னு ஆயிரம் பேரு சொல்லுவான், அப்படித்தான் என்கிட்டயும் சொன்னாங்க, ஆனா, உன்ன நான் படிக்க வச்சுட்டேன்டா. எனக்கு இப்ப எந்தக் குறையும்...'" சற்றே பனித்திருந்த கண்களைத் துடைத்துக் கொண்டு மீண்டும் தொடர்ந்தேன்.

"எந்தக் குறையும் இல்லன்னு தான் சொல்ல வந்தார்னு தான் இப்பவும் நெனச்சுக்குறேன். விடுப்பு முடிஞ்சு வேலையில சேந்து கொஞ்ச நாளு மனசுக்கு ரொம்ப கனமா இருந்துச்சு. மனதை வேலையில் செலுத்துவதைத் தவிர அப்பாவுக்கு வேற எதுவும் என்னால செஞ்சுட முடியாதுன்னு தோனுச்சு. உடனே, அரியலூர் அருகே ஒரு இடத்தை ஆய்வு செய்ய ஒப்புதல் கேட்டேன். உடனே கிடைத்தது. என்மேல் இருந்த நம்பிக்கையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது என நினைத்தேன். ஆனால், இதற்குப் பின் பலர் என் மேல் கொண்ட பொறாமை இருப்பது அப்போது தெரியாது.

ஆய்வு என் மனதை மிகவும் மாற்றியிருந்தது. என் ஆய்வில் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன் இங்கு வாழ்ந்த விலங்குகளின் எலும்புகள் கிடைத்தன. இடத்தை சீல் செஞ்சு, புகைப்படங்கள் எடுத்து, கிடைத்த ஒவ்வொரு எலும்புகளையும் அவற்றிற்குச் சேதம் இல்லாமல் அவற்றை Pack செஞ்சு, ஆய்வறிக்கையும் எழுதி முடித்து, என்னுடைய அலுவலகத்துக்கு அனுப்பினேன். அலுவலகத்துக்குத் திரும்பி வர எனக்கு அழைப்பு வந்தது. 

அலுவலகத்துக்கு வந்தபின் தான் தெரிந்தது, என்னுடைய உழைப்பு இன்னொருவர் பெயரில் அனுப்பப்பட்டுவிட்டது என்பது. அதுவும் கார்பன் டேட்டிங் எதுவும் செய்யப்படாமல், 800 ஆண்டுகள் முந்தைய காட்டெருமையின் எலும்புகள் என ஆய்வின் முடிவாக எழுதப்பட்டிருந்தது. ஆய்வறிக்கையின் எந்த இடத்திலும் என் பெயர் இல்லை. அது கூட எனக்குக் கவலை இல்லை, சரியான முறைகள் பின்பற்றப்படாமல் எதற்காக இந்த ஆய்வு முடிக்கப்பட்டது என்பதே என் மனதில் ஓடிக் கொண்டிருந்தது. மண்ணைத் தோண்டி பழங்காலத்து எலும்பு, பானை, கல், எல்லாம் எடுத்து ஆய்வு செஞ்சு நிறுவுறது கூட பெரிய வேலையாத் தெரியல. நம்ம கண்ணு முன்னாடியே சிரிச்சுகிட்டு, நம்ம காலை வாரிவிட காத்திருக்கும் மனிதர்களின் மனதை அகழ்வாய்வு செய்வது தான் ரொம்பக் கடினமான வேலையா இருக்கும் என்று பட்டது."

அன்று 

"ஏன் மிஸ்டர் கொளஞ்சி, உங்களுக்கு மட்டும் தான் வேலை செய்யத் தெரியுமா? Field work முடிஞ்சு என்கிட்ட கொடுத்ததும் உங்க வேலை முடிஞ்சுது. ஆர்க்கியாலஜி எம்.பில் முடிச்சிருந்தா உங்களுக்கு ரெண்டு கொம்பு இருக்குன்னு நெனக்கக் கூடாது, தம்பி. சீனியர்ங்ககிட்ட எப்படி நடந்துக்கணும்னு தெரிஞ்சுக்கோங்க"

இன்று

"மனசு உடைஞ்சு போயி, என்னோட இருக்கையில் போய் அமர்ந்தேன். நான் இல்லாத நேரத்தில் எனக்கு வந்திருந்த கடிதங்கள் இருந்துச்சு. அதில் ஒன்று பெல்ஜியம் நாட்டில் இருந்து வந்திருந்தது. நான் எம்.பில் படிக்கும் போது செய்திருந்த ஆய்வுக்கட்டுரை  International magazineல் வெளிவந்திருப்பதைக் கண்டு, எனக்கு அங்கு வந்து பணி செய்ய அழைத்து எழுதியிருந்தார் பெல்ஜியத்தைச் சேர்ந்த ஒரு ஆய்வாளர் ஒருவர். அன்று மாலை, எங்கும் தன் நீல நிறத்தைப் பரப்பி, பரந்து விரிந்து கிடந்த கடலை உற்றுப் பார்த்தபடி அமர்ந்திருந்தேன். கடல் மட்டும் அலைபாயவில்லை, என் மனமும் தான். எங்கிருந்தோ ஒரு அலை வந்து என் காலின் நுனியைத் தொட்டுச் சென்றது.

அது ஏதோ ஒன்றை எனக்கு சொல்றது போல இருந்துச்சு. கரையிலே அலைபாயும் கடல் உள்ளே அமைதியாகத் தான் இருக்கும். அமைதியான கடலின் ஆழம் அதிகமாக இருக்கும். கையில் இருந்த கடிதத்திற்குப் பதில் எழுதுவதாக முடிவெடுத்திருந்தேன். அதற்குப் பிறகு, பெல்ஜியம், கென்யா, தான்சானியா, பிரான்சு, எனப் பல நாடுகள் சுற்றி வந்தாச்சு. என்னை அழைத்த Dr. George Flanders நான் முனைவர் பட்டம் பெற எனக்கு உதவியும் செய்தார். ஆனால், அலைபாயுற கடல் போலத் தத்தளிச்சுக்கிட்டிருந்த என்னை ஆழமான கடலா உணர வச்சது என்னை இழிவு படுத்துனவங்க தான். என் அப்பாவால முடியாது முடியாதுன்னு சொல்லி கேலி செஞ்ச ஊர் முன்ன எப்படி என்னைப் படிக்க வச்சு நிறுத்தினாரோ, அதே போல என் உழைப்பைக் கேலி செஞ்சு, என் உழைப்பைச் சுரண்டி அதை ஒன்னும் இல்லன்னு சொன்னவங்க தான் என் இந்த நிலைக்குக் காரணமானவங்கன்னு நினைக்கிறேன். அப்புறம், உங்க எல்லாத்துக்கும் தெரிஞ்சுருக்கும்னு நினைக்கிறேன். நான் இருவது ஆண்டுக்கு முன்னாடி விட்டுப்போன இடத்துல 2012ல மீண்டும் ஆய்வு செஞ்சு, 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்த டைனசோர் முட்டையை அகழ்வாய்வு செஞ்சு எடுத்து நிறுவியிருக்காங்க. அந்தக் குழுவுக்கு என்னோட பாராட்டைத் தெரிவிச்சுக்கிறேன். என்னை இந்த மேடையில பாராட்டின அனைவருக்கும், இங்க வந்து கலந்துகிட்ட உங்களுக்கும் எப்போதும் என் நன்றிகள் இருந்துகிட்டே இருக்கும். நன்றி, வணக்கம்." என்று அனைவரையும் பார்த்து வணங்க, அரங்கம் முன்னைவிட பன்மடங்கு கைத்தட்டலொலியால் நிரம்பியது.

- முடிவிலி.

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வாரைப் பொறுத்தல் தலை.   (151)


Comments

Popular posts from this blog

அகர முதல - சிறுகதை (திருக்குறள் கதை) குறள் 0001

புறநானூறு பேசும் நீர் மேலாண்மை

வான்கா - Vanka