உன்னால தான் குரு - குறள் கதை

உன்னால தான் குரு
- முடிவிலி




இந்தக் கதையின் முந்தைய பகுதியைப் படிக்க (bit.ly/kural0131)

காவல்துறை ஆணையர் அலுவலகம் காலையிலேயே தனது பணிகளில் முடுக்கிவிடப்பட்டிருந்த அந்த காலை வேளையில், அருள் அந்தக் கட்டிடத்தின் உள்ளே நுழைந்து கொண்டிருந்தான். உடலில் ஒரு millimeter கூட ஊளைச்சதை இல்லாத உடல்கட்டு, Tuck-in செய்யபட்ட சட்டை, aviator RAY-BAN கண்ணாடி, அருளைக் காண்பவர்கள், சில நொடிகள் நாமும் இவனைப் போல் ஆக முடியாதா எனப் பெருமூச்சு விட வைப்பவன். அங்கே இருந்த காவலரிடம், "Commissionerஐப் பார்க்கணுமே, அவர்கிட்ட ஏற்கனவே appointment வாங்கிட்டேன்." என்றான் அருள்.



"நீங்க சார்?" என்ற காவலரிடம் சட்டைப்பையிலிருந்து தன்னுடைய visiting cardஐ எடுத்துக் கொடுத்து, "அருள், Private Investigator" என்றான்.



"அப்படி உட்காருங்க சார், தகவல் சொல்லிடுறேன். கூப்பிடுவாங்க" என்றார் காவலர்.


கால்மணி நேரத்தில், காவல்துறை ஆணையர் கந்தசாமி முன் அமர்ந்திருந்தான் அருள்.

"சொல்லுங்க, Mr. அருள், How is everything?"


"Going good, sir, ஒரு shadowing case பாத்துட்டு இருந்தேன். அதுல கிடைச்ச சில தகவல்கள் பாத்தா பெரிய network இருக்கும் போல. ஒரு private detectiveஆ நான் பல caseல போலீஸ்க்கு உதவிருக்கேன். ஆனா, இந்த case நான் நெனச்சத விட பெருசா இருக்கு. நிறைய details எடுத்து வச்சிருக்கேன்."

"Interesting, மேல சொல்லுங்க அருள்"

"பாக்குறதுக்கு வெளியே மரக்கடை மாதிரி வச்சு, உள்ளுக்குள்ள பெரிய பெரிய வேலையெல்லாம் நடக்குது. அந்த gangல இருக்க பெருமாள் தான் எல்லாத்துக்கும் பெரிய கை. அவனுக்குக் கீழ சம்பத், மணி, ரங்கராஜன், குரு அதுக்கப்புறம் அடியாள், பொருள் மாத்துறவன், மார்க் போடுறவன்னு இப்படி மொத்தம் 52 பேர். மொத்த dataவும் இருக்கு. நான் ஏன் நேரா உங்ககிட்ட வந்தன்னா"  

"நீ என்ன சொல்லப்போறன்னு தெரியும், அருள்" என்றார் ஆணையர்.

அருள், "Don't mistake me, sir, நான் எல்லாத்தையும் suspect செய்ய வேண்டி இருக்கு." என்றான்.

"அருள், நான் ஏன் உங்களைத் தப்பா நினைக்கப் போறேன். Local policeக்குத் தெரியாம 50  பேரு gang எல்லாம் இருக்க முடியாது. அவனுங்க மேல தான் எனக்கு..." என்று நிறுத்தியவர், சற்று அமைதியாகி "சரி, நான் நம்பிக்கையான ஒரு team தர்றேன். முதல்ல ஒரு Inside ஆளு அனுப்புவோம். இன்னும் details கிடைச்சா முடிச்சிருவோம். சரியா?" என்றார்.

"சார், ஏற்கனவே ஒரு ஆளு inside அனுப்பியாச்சு. எல்லாம் confirm பண்ணிட்டு தான் உங்களைப் பாக்க வந்திருக்கேன்." என்ற அருளை முறைத்தார் கந்தசாமி.

"அருள், நீங்க talent தான், கெத்து, எல்லாம் ஒகே, ஆனா, ஒரு inside job எவ்ளோ risk, என்கிட்ட கூட சொல்லாம இனிமே இப்படி செஞ்சீங்கன்னா என்கிட்டேந்து எந்த உதவியும் நீங்க எதிர்பாக்க முடியாது"

"சாரி, சார். அவங்களுக்குப் பொருள் மாத்துறதுக்கு ஒரு புதுப்பையனைத் தேடிட்டு இருந்தாங்க, ஒரு பையன் வந்தான், அவன் நெனச்சு வந்தது மரக்கடை வேலைன்னு, இவங்க பொருள் அது இதுன்னு சொன்னதும் பையன் வேலை வேணாம்னு போயிட்டான். அந்த நேரமாப் பாத்து என் டீம்ல புதுசா சேந்த ஒரு பையனை உள்ளே தள்ளி விட்டேன். உங்ககிட்ட கேட்க நேரம் கிடைக்கல. உங்களுக்கும் தெரிஞ்ச பையன் தான்."

"உன் teamல எனக்குத் தெரிஞ்ச புதுப்பையனா? யாரு அருள்" எனக் கேட்டார் கந்தசாமி, வியப்புடன்.

“குமரன் சார்”

“குமரனா? யாருப்பா குமரன்? எனக்கு நினைவுக்கு வரல”

“சொன்னானே சார், சின்ன வயசுலேந்து உங்களைத் தெரியும்னு சொன்னானே.”

“என்னய்யா, புதிர் போடுற? யாருன்னு சொல்லு.”

“சார், Brick kiln தெருன்னு சொன்னா உங்களுக்கு என்ன நினைவுக்கு வரும்?”

“Brick kiln தெரு...” என்று தாடையில் கைவைத்தபடி சிந்தித்தவர், “அட, நம்ம police boys club, அதுல யாருய்யா குமரன்?”

“ஆமா, உங்களுக்கு குமரன்னு தெரிஞ்சிருக்க வாய்ப்பு இல்ல? குமாரு சார், இப்ப தெரியுதா?”

“அட, குமாரா? நான் பாத்து அங்க சேத்த பய, sports எல்லாம் செம்மையா விளையாடுவான். அவன் எப்ப உங்க கூட சேர்ந்தான்? சொல்லவே இல்ல, என்னை மறந்துட்டான் போல”

“ச்ச, ச்ச, நீங்க தான் அவனோட inspiration சார், எத்தனை தடவை உங்களைப் பத்தி சொல்லிருக்கான் தெரியுமா? அதுவுமில்லாம எங்ககிட்ட வந்து சேந்ததும் அந்த gangல உள்ள ஏத்திட்டோம்”       

“அந்த gangல இவனைப் பத்தி கண்டுபுடிச்சிட மாட்டாங்கல்லயா? நல்ல பையன், எவ்ளோ risk, கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல உங்களுக்கு, அருள்” என்றார் கந்தசாமி.

“சார், செம்ம clean record, அப்ப தான் பச்சையப்பால ஆர்ட்ஸ் டிக்ரி படிச்சிருக்கான், அவன் areaல யாருக்கும் அவன் எங்ககிட்ட சேந்தது பத்தி சொல்லல. அவன் வீட்ல கூட. நாங்க தான் கொஞ்ச நாளுக்கு யார்ட்டயும் சொல்ல வேணாம்னு சொன்னோம். இப்படி ஒரு வேலை வந்ததும் அவன் தான் சொன்னான், நான் உள்ள போறேன் சார். கண்டிப்பா நம்பிடுவாங்க சார்.”

“யோவ், degree முடிச்ச பையன் ஏன்யா இந்த வேலைக்கு வந்தான்னு அவனுங்க check பண்ணலயா? அவ்ளோ மொக்க கேங்கா அது.”

“இல்ல சார், நம்ம குமரன் படிச்சிருக்கான்னு தான் சொன்னேன். முடிச்சிருக்கான்னு எங்க சொன்னேன். அவனுக்கு இன்னும் நாலு பேப்பர் arrear கெடக்கு. காசு இல்லாம படிப்பு முடிக்க முடியல, குடும்பத்தைச் சமாளிக்க பணம் வேணும். என்ன வேணும்னாலும் செய்யுறேன்னு சொல்லித் தான் சேந்தான், no doubt, sir”

“இப்ப நான் என்ன செய்யணும்?”

“ஒரே நேரத்துல நான் சொல்ற எடத்துல எல்லாம் போயி arrest செஞ்சா மொத்த gangம் சிக்கிடும். இந்தாங்க சார்” என்று சொல்லி ஒரு pen drive ஒன்றை நீட்டினான் அருள்.

கையில் வாங்கிய கந்தசாமி, கண்ணாலேயே ‘என்ன இது?’ என்று கேட்டார்.

“32GB pen drive, 27GBக்கு data இருக்கு, gangல இருக்குறவங்க phone records, recorded calls, photos, நம்ம குமரன் அனுப்புன சில videoன்னு மொத்த gangம் மாட்டுற அளவுக்கு எல்லா evidenceம் இருக்கு சார்.” என்றான் அருள்.

Pen driveஐத் தன் கணிப்பொறியில் நுழைத்து, திறந்து பார்த்த கந்தசாமி சிரித்தபடி, “என்ன அருள், ஒவ்வொருத்தனுக்கும் தனித்தனி Folder போட்டு வச்சிருக்க, Great job, அருள்” என்றார்.

“சார், இது copy தான், நீங்களே வச்சுக்கோங்க” என்றான் அருள்.

“அப்படின்னா என்னையும் நம்பல?” என்று கேட்டார் கந்தசாமி.

“நம்பிக்கை இல்லாமயா சார் நேரா வந்து உங்களைப் பாக்குறேன். ஒரு backupக்குத் தான், சார், உங்களுக்குத் தெரியாததா?”

“ஆமா, ஒரு shadowing caseனு சொன்னியே, எப்படிய்யா அதுலேந்து இப்படியொரு gang உன் கண்ணுல சிக்குச்சு” என்று கேட்ட கந்தசாமியிடம், அருள் தான் கண்டுபிடித்த கதையினைச்  சொல்ல, கந்தசாமியின் சிரிப்பொலி இருவர் மட்டும் இருந்த அந்த அறையினை நிறைத்தது.



இருவரும் சேர்ந்து நாள் குறித்த நாளில், ஒரே நேரத்தில் 12 இடங்களில் சுற்றி வளைத்து பிடித்ததில் பெருமாள் gang மொத்தமும் பிடிபட்டது. ஏற்கனவே குற்றவியல் நடுவரிடத்தில் தரவுகள் கொடுக்கப்பட்டு, பிடிக்கப்பட்டதால் நேரடியாக அனைவரும் புழலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சம்பத், பெருமாளிடம், “புதுப்பையன்லாம் வேணாம்னு அப்பவே சொன்னேன், கேட்டீங்களா? பாருங்க, மொத்தமா கொண்டாந்து உள்ள வச்சுட்டாங்க” என்றான்.

பெருமாள், “டே, செம்ம கோவத்துல இருக்கேன், கடுப்பக் கெளப்பாத, முதல்ல ஒருத்தனக் கூட்டியாந்தீங்க, அப்புறம் இவன், இவனையும் விசாரிக்காம கூட்டியாந்துட்டு என்னைச் சொல்றியா?” என்று கொதித்தவர், “எல்லாம் இந்த குருவால வந்தது” என்று சற்றுத் தள்ளி உட்கார்ந்திருந்த குருவை எட்டி உதைத்தார்.
  
கீழே விழுந்து எழுந்த குரு, “நான் என்னண்ணா செஞ்சேன்? முதல் பையனைத் தான் நான் கூட்டியாந்தேன். அவனால கண்டிப்பா நமக்குத் தொல்லை இல்ல, ரெண்டாவது ஆளைக் கூட்டியாந்தது சம்பத் தான். அவனை விட்டுட்டு என்னை அடிக்கிறீங்க?” எனக் கேட்க, பெருமாள் சொன்னார்.

“டேய், கொஞ்ச நாளுக்கு முன்னாடி உங்க ஏரியால ஒரு ஸ்கூல் டீச்சரு பின்னால சுத்திட்டு இருந்தியா?”

“ஆமா, அதுக்கு என்ன இப்ப?”

“என்ன செஞ்ச? சொல்லு”

“ஒன்னும் செய்யலண்ணா”

“நீ ஒன்னும் செய்யாம தான் நாம் இப்ப புழல்ல உக்காந்திருக்கோமா?”

“தெனமும் அவங்க காலைல scootyல போறப்ப பின்னாடியே போவேன், இல்லன்னா, போற வழில எங்கயாவது அவங்க கண்ல படுற மாதிரி நிப்பேன், அவ்ளோ தான்.”

“சம்பத்து, இவன என் கண் முன்னாடி நிக்க வேணாம்னு சொல்லுடா, என்கிட்ட கமிஷனரும், நம்ம கிட்ட வேலைக்குச் சேந்த குமரனும் எல்லாத்தையும் சொல்லிட்டாங்க, ஆனாலும், ஒன்னும் செய்யல, பின்னாடி போனேன், முன்னாடி நின்னேன்னு சொல்றான் பாரு,” என்றவர் குருவைப் பார்த்து, “டேய், கடைசியா கேக்குறேன் சொல்லுடா, என்னடா செஞ்ச அந்தப் பொண்ண?”என்றார்.

குரு, “பொண்ணு இல்லண்ணா, பொம்பள, அவளுக்குக் கல்யாணம்லாம் ஆயிடுச்சு,  நான் உண்மையாவே ஒன்னும் செய்யலண்ணா, ஒரு நாள் போயி அவளோட வண்டிக்கு முன்னாடி மறிச்சு நிறுத்துனேன், வண்டிய நிறுத்திட்டு திட்டுனா, எப்ப பாத்தாலும் என் பின்னாடியே சுத்திட்டு இருக்கியே, வெக்கமா இல்லன்னு கேட்டா, அவ கையப் புடிச்சு இழுத்து, ஏய், என்ன ஓவராப் பேசுற? என்னிக்கா இருந்தாலும் உன்ன ஒரு நாள் என்ன செய்யுறேன்னு பாருன்னு சொல்லிட்டுப் போயிட்டேன். அப்புறம் கூட அவ பின்னாடி போயிட்டு தான் இருந்தேன். ஆனா, அதுக்கு மேல நான் ஒன்னும் செய்யலண்ணா” என்று சொல்லி முடித்தான்.

“அடேய், நீ அந்தப் பொண்ணு பின்னாடி சுத்தப் போயி தான்டா நாம் மாட்டிக்கிட்டோம்.” என்றார் பெருமாள்.

“அண்ணா, இதுக்கும், நாம மாட்டுனதுக்கும் எப்படி connect ஆவுது?” என்றான் குரு.

“தொரைக்கு இங்கிலீசு வேற? நீ அவ பின்னாடி சுத்தத் தொடங்குன கொஞ்ச நாள்லயே அவ புருஷன் உன் பின்னாடி ஒரு private detectiveஅ சுத்த விட்டிருக்கான். நீ எங்கெங்க போன? யார் கூட phone பேசுன? உனக்கு யார் பேசுனா? எல்லாம் சேத்து உன்ன வச்சு, சம்பத், அப்படியே மரக்கடை, நான்னு எல்லாத்தையும் புடிச்சுட்டான். நம்ம போன்ல பேசுனது, குமரன் நமக்குத் தெரியாம எடுத்த videoன்னு நாம எப்பவும் வெளில வர முடியாத அளவுக்கு evidence இருக்கு அவங்க கிட்ட” என்ற பெருமாள், “எத்தன காலமா இந்த தொழில்ல இருந்தேன், எப்பவும் மாட்டுனதில்லடா, அடுத்தவன் பொண்டாட்டி பின்னாடி போயி மொத்த கூட்டத்தையும் உள்ளக் கொண்டாந்து போட்டுடியே, உன்னை என்ன செய்யுறேன், பாரு” என்று பெருமாள் மீண்டும் குருவை உதைக்க, சுற்றி நின்ற சம்பத், ரங்கராஜன், மணி எல்லாம் சிரிக்கத் தொடங்கினர், அந்த நிலையிலும்.

- முடிவிலி
                                      

அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையான்
பெண்மை நயவாமை நன்று.         (150)   

அதிகாரம்: பிறனில் விழையாமை
ஒருவன் அறநெறிக்கு ஒவ்வாத செயல்களைச் செய்தாலும், பிறருடைய மனைவியை விரும்பாமல் இருப்பது நன்று.

 

Comments

  1. கதைகளில் நகைச்சுவையைக் கலப்பது அவற்றுக்கு மேலும் சுவையைச் சேர்க்கிறது. அருமை தமோ ��

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அகர முதல - சிறுகதை (திருக்குறள் கதை) குறள் 0001

புறநானூறு பேசும் நீர் மேலாண்மை

வான்கா - Vanka