பூங்காவுல ஒரு சிலை - குறள் கதை

பூங்காவுல ஒரு சிலை

வாழ்க்கையில நாம கேட்ட/பார்த்த/செஞ்சதை ஏன்டா கேட்டோம்/பாத்தோம்/செஞ்சோம்னு undo செய்ய நினைப்போம்ல. அந்த மாதிரி ஒன்னு தான் இந்தக் கதை.

எல்லா நாளும் போல நடைபயிற்சிக்காக இன்னிக்கும் வ.உ.சி பூங்காவுக்குப் போயிருந்தேன். என்னைப் போல நடக்குறதுக்காக சில பேர், உடற்பயிற்சிக்காக சில பேர், சும்மா பொழுதுபோக்குறதுக்காக பல பேர்னு நெறைய பேர் வந்திருந்தாங்க. சில பழக்கமான மனுசங்க புன்னகையோட கடந்து போனாங்க. சில நேரம் நெனப்பேன், 'நான் யாருன்னு அவங்களும் கேட்டது கெடையாது, அவங்க யாருன்னு நானும் கேட்டது கெடையாது, ஆனா, தெனமும் பாத்து சிரிச்சுக்கிறோம்'னு. அப்படி நெனச்சுக்கிட்டே நடைபோட்டுக்கிட்டு இருந்தப்ப தான் அவனைப் பாத்தேன். பூங்காவுக்கு நடுவுல சிலை மாதிரியே உட்காந்திருந்தான். நான் பூங்காவை ஒரு சுத்து நடை முடிச்சு, ரெண்டாவது சுத்து தொடங்கியிருந்தேன். அப்பவும், அதே மாதிரி சிலை மாதிரியே உட்காந்திருந்தான் அவன்.

'சரிடா, தெனமும் பாக்குறவங்க கிட்டதான் பேசுறதில்ல, இவன்கிட்டயாவது பேச்சு கொடுப்போம்'னு அவன்கிட்ட போனேன். மெக்டொனல்டுக்கு முன்னாடி பென்சுல உட்கார வச்சிருக்குற சிலை மாதிரி ஆனா மூஞ்சில எந்தவொரு உணர்வும் இல்லாம உட்காந்திருந்தான், பக்கத்துல வந்து நிக்குற என்னைப் பாக்காமலே.

"தம்பி" அவன் முகத்தில இப்பவும் ஒரு மாற்றமும் இல்ல.

"தம்பி, யாருப்பா நீ?" இப்ப அவன் நான் பேசுறதக் கேட்டுட்டான்னு எனக்கே தெரிஞ்சுடுச்சு. ஆனா என்ன நிமிந்து பாக்காமலே இருந்தான். அந்த பென்சுல பக்கத்துல உட்காந்தேன்.

"ஏன்பா ஒரு மாதிரியா இருக்க? என்ன ஆச்சு?"

"... யா... புரி... என்... போ..."னு பாதிச்சொல்ல முழுங்கி மீதியக் கொட்டுனான். ஒன்னும் விளங்கல.

"ரைட்டு வுடு, முதல் தடவையா யாருன்னே தெரியாத ஒருத்தருகிட்ட பேசலாம்னு நெனச்சது தப்பு தான், நான் போயி வாக்கிங்காவது தொடருறேன்"னு எழுந்தேன். இப்ப தான் திரும்பி என்னைப் பாத்தான். அவன் முகத்துல இருக்குறது கோவமா, அழுவையான்னு என்னால சரியா சொல்ல முடியல.

"சார், லவ் பண்றது தப்பா சார்?"னு கேட்டான். இந்தக் கேள்விய நான் எதிர்பாக்கவே இல்ல. இருந்தாலும், "எவன் சொன்னான்? காதல் இல்லாம உலகமே இல்லய்யா"னு பதில் சொன்னேன் சிரிச்சுக்கிட்டே.

"எவன் இல்ல சார், எவ?"னு சொன்னான்.

"என்னப்பா லவ் ப்ராப்ளமா?"

"ப்ராப்ளம் இல்ல சார், பெய்லியர்"னு சொல்லிட்டு கையால மூஞ்ச மூடிட்டு அழப் பாத்தான். ஆனா, கண்ணீரே வரல. 

அவன் தோளுல கையவச்சு, "அழாதப்பா, என்ன ஆச்சுன்னு சொல்லு, துன்பம் பகிர்ந்துகிட்டா பாதியாக் குறையுமாம், எங்க அம்மா சொல்லுவாங்க"னு சொன்னேன்.
ஒரு நிமிடம் கைய எடுத்துட்டு, என்னப் பாத்தான்.

"இல்ல, சார், நீங்க யாரும் என்னைய புரிஞ்சுக்க மாட்டீங்க"

"சொல்லு, தம்பி, புரியுதான்னு பாப்போம்"

"ம், சொல்றேன் சார்"னு சொன்னவன் கொஞ்சம் இடைவெளி விட்டு, "ரெண்டு மாசம் முன்னாடி, என்னோட ஸ்கூலு ரியூனியன் நடந்துச்சு, பத்து வருசத்துக்கு அப்புறம் நெறைய பேர அன்னிக்குத் தான் பாத்தேன்"னு சொன்னான்.

"தம்பி, உன் பேரு என்ன? எந்த ஊரு? இதெல்லாம் சொல்லாம டைரக்டா கதைக்குப் போனா எனக்குப் புரியுமா? சரி, பேர் ஊர்லாம் சொல்லக் கூடாதுன்னா வேணாம்"னு சொன்னேன்.

"என் பேரு தினேஷ், ஊரு சேலத்துக்குப் பக்கத்துல ஓமலூர், அங்க விஸ்டம் கேட்ஸ் ஸ்கூல்ல தான் படிச்சேன்."

"சரி, அப்புறம்"

"ரெண்டு மாசத்துக்கு முன்னாடி, ஸ்கூல் ரியூனியன், ஸ்கூல் காலத்துல பாத்த பல பேரை அன்னிக்குத் தான் பாத்தேன். ஆனா, நான் பாக்கக் கூடாதுன்னு நெனச்சது அவளத்தான். ஆனா, என் கண்ணு அவ வந்திருக்காளான்னு தேடிட்டே தான் இருந்துச்சு."

"தம்பி, பாக்கணும்னு நெனச்சியா? வேணாம்னு நெனச்சியா? குழப்புறியே?"

"சார், முழுசா கேளுங்க சார்"னு அவன் சொல்ல, 'நானா வந்து உட்காந்து கேட்டேன்ல எனக்கு வேணும்டா'ன்னு நெனச்சுக்கிட்டேன்.

"அவ வந்துட்டா சார், அவ்ளோ அழகு சார் அவ, அவ கண்ணு மட்டுமே தனியா சிரிக்கும். என்கிட்ட பேசமாட்டான்னு நெனச்சேன். ஆனா, நேரா என்கிட்ட தான் முதல்ல வந்து பேசுனா, எப்டி இருந்துச்சு தெரியுமா சார்?"

அவன் சொல்ல சொல்ல சிரிச்சுக்கிட்டு இருந்தேன், முகத்துல காட்டிக்காம.

"ஆனா, பொண்ணுங்க ஏன் சார் உண்மையான லவ்வையே புரிஞ்சுக்க மாட்றாங்க?"னு கேட்ட அவனிடம், "தெரியலையே, தம்பி, நீயும் முழுசாவும் சொல்லமாட்ற?"னு கேட்டேன்.

"அன்னிக்கு நிறைய பேர் அவங்கவங்க மொபைல் நம்பர் எல்லாம் எல்லாத்துக்கும் கொடுத்தாங்க. நான் அவகிட்ட மட்டும் தான் வாங்குனேன். அதுலேந்து ரெண்டு நாள் கழிச்சு, வாட்சப்ல Hiனு ஒரு மெசேஜ் தட்டிவுட்டேன். உடனே, Hi, Surpriseனு பதில் வந்துச்சு. அப்படியே மனசு காத்துல பறக்குற மாதிரி இருந்துச்சு சார். இப்படியே ஒரு ஏழு வாரம் போச்சு சார், ரெண்டு நாளுக்கு முன்னாடி தான் அவகிட்ட கேட்டேன். நேர்ல மீட் பண்லாமான்னு கேட்டேன், அவளும் சரின்னு சொன்னா, அவ வீட்டுக்கிட்ட இருக்க இந்த வ.உ.சி பார்க்ல வெயிட் பண்றேன்னு சொன்னேன்."

"ஓ, அவளுக்குத் தான் வெயிட் செய்யுறியா?"னு கேட்ட நேரம், ஒரு போன் அடிக்குற சத்தம் கேட்டுச்சு. நாங்க உட்காந்திருக்க பெஞ்சுக்குப் பின்னாடி புதர் மாதிரி வளந்திருந்த புல்லில் ஒரு மொபைல் இருந்துச்சு. நான் அந்த மொபைலை எடுக்குறதுக்குள்ள திரும்பி, வெடுக்னு எடுத்த தினேஷ், அந்த மொபைலைப் பாத்துச் சிரிச்சான்.

"சார், அவளோட மொபைல் சார்"னு தினேஷ் சொல்லிட்டு இருக்கும்போதே, "ஆமா, என் மொபைல் தான், உன்ன அடிக்குறப்ப ஹேண்ட் பேக்லேந்து கீழே விழுந்திருக்கு, குடுறா" என்றது ஒரு குரல்.

உண்மையிலே அழகு தான், அந்தப் பொண்ணு. "ஓ, உன்னப் பத்தி தாம்மா இவ்ளோ நேரம் சொல்லிட்டு இருந்தான்"னு சொன்னேன்.

"இந்த அறிவு கெட்டவன் என்னப் பத்தி என்ன சொன்னான்?"னு என்னப் பாத்து கேட்டுட்டு, அவன் கையில் இருந்த போனை வெடுக்குன்னு வாங்குனாள். 

"என்னம்மா, ஏதோ லவ்வுல ப்ராப்ளம்னா இப்படியா கோச்சுப்பீங்க?"னு மெதுவாத் தான் கேட்டேன். இங்கிலீசுல வேகமா நிறைய சொன்னா, திட்டுறான்னு மட்டும் புரிஞ்சுது.

"யம்மா, யம்மா, இரு, கூட்டம் கூடிடப் போவுது, இவன் தான் லவ் ப்ராப்ளம்னு சொன்னான், ஸ்கூல்ல ஒன்னா படிச்சீங்கன்னு சொன்னான், ரியூனியன்னு சொன்னான், இன்னிக்கு மீட் பண்ணப் போறீங்கன்னு சொன்னான், இதெல்லாம் வச்சுக்கிட்டு தான் நீ இவனோட லவ்வர்னு நெனச்சுட்டேன், தப்பா இருந்தா மன்னிச்சுக்க, யப்பா, என்னா திட்டு?"

"ஓ, இவனுக்கு நான் லவ்வரா?" என்று என்னைப் பாத்துக் கேட்டவள், அவன் பக்கம் திரும்பி, "பிஞ்சுடும்!"னு சொல்லிட்டு, "ஸ்கூல் லவ்வா? லவ் பண்றவன் அப்பவே வந்து சொல்லணும்ல, மூஞ்சிய பாத்து பேசுனது கூட கிடையாது, லவ்வாம். ரியூனியன்ல வாசல்ல நின்னுட்டு இருந்தா, யாரா இருந்தாலும் முதல்ல இவன் மூஞ்சில தான் முழிக்கணும், அதனால லவ்வா? இவ்ளோ சொல்லிருக்கானே, எனக்குக் கல்யாணம் ஆயிடுச்சுன்னு சொன்னானா? சொல்லிருக்க மாட்டான், பிச்சக்காரப்பய, இவனுக்காக, பேச வந்துட்டீங்க, பெரிய மனுசனாட்டம்"னு சொல்லிட்டு ரெண்டு பேருக்கும் நடுவுல துப்பிட்டு போயிட்டா. அவன் மறுபடியும் மெக்டோனால்ட்ஸ் சிலை மாதிரி அசையாம உக்காந்திருக்கான்.

வாழ்க்கையில நாம கேட்டதை/பாத்ததை/செஞ்சதைத் திருத்திக்குற வாய்ப்பு கிடைக்கும்னா, இதோ உக்காந்திருக்கானே இவனைப் பாத்தாலும், பாக்காம நாலு சுத்து நடந்துட்டு வூட்டுக்குப் போயிருப்பேன்.

- முடிவிலி.

அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரின் பேதையார் இல்.   (142)

பிறர்மனையை அடைய நினைக்கிறவன், அறவழியிலயே போகாத அறிவிலிகளை விட கீழ்த்தரமானவர்கள்.

Comments

Post a Comment

Popular posts from this blog

அகர முதல - சிறுகதை (திருக்குறள் கதை) குறள் 0001

புறநானூறு பேசும் நீர் மேலாண்மை

வான்கா - Vanka