தமிழ் கட்டளை - திருக்குறள் கதை
தமிழ் கட்டளை
"ஐயா..."
சத்தம் எங்கிருந்து வந்தது எனத் தெரியவில்லை. பல காலமாக என்னைக் குறிப்பிட்ட விளிச்சொல்தான். இருப்பினும் என்னை அழைப்பதற்காகத் தான் என்பதை அறியாமல் இருந்ததால் என்னவோ, நான் அதைப் பொருட்படுத்தவில்லை. மீண்டும் இன்னும் தெளிவாக - இன்னும் அருகாமையில் - என்னை நோக்கி.
"ஐயா..."
இந்த முறை திரும்பியிருந்தேன். ஒரு 26 வயது இளைஞன் ஒருவன் ஒரு மிதிவண்டியில் ஒரு காலைக் கீழே வைத்த வண்ணம் நின்று கொண்டிருந்தான். எனது முகத்தில் படிந்த வியப்புக்குறிகளைக் கண்ட அவன், மேலும் தொடர்ந்தான். "ஐயா, தமிழ்ச்செல்வன் ஐயா தானே?"
நான் தலையைத் தன்னிச்சையாக அசைத்தேன். என்னுடைய பணி ஓய்வின் போது எனக்குக் கிடைக்கவேண்டிய பணத்திற்காக நான் பள்ளிக் கல்வி இயக்குனரகத்திற்கு அலைந்து நொந்து மீண்டும் ஊருக்கே திரும்பி விடலாம் என்று நினைத்து, கல்லூரி சாலைப் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருக்கிற என்னை, இந்த முகம் தெரியாத நகரத்தில் அடையாளம் கண்டு கொண்டு அழைக்கும் இந்த இளைஞன் யார் என்ற வியப்பு என் முகமெங்கும் விரவியிருந்தது.
"ஐயா, வணக்கம் ஐயா, நல்லா இருக்கீங்களா?" என்றவன் மிதிவண்டியை விட்டு சடுதியில் இறங்கி, அதனை நிறுத்திவிட்டு, என் முன்னே வந்து நின்று இருகரம் கூப்பி, மீண்டும் ஒரு முறை "வணக்கம் ஐயா" என்றான்.
"வணக்கம், தம்பி, நீங்க யாருன்னு எனக்குத் தெரியல." என்றேன் சற்று தயக்கமாய்.
"ஐயா, நான் இன்னிக்கு இந்த நிலைமையில இருக்கேன்னா அதுக்குக் காரணமே நீங்க தான்யா, நான் உங்க மாணவன் அருள், 6, 7 ஆம் வகுப்புகளில் நீங்க தான்யா எனக்குத் தமிழாசிரியர்."
இப்போது என் முகம் மலர்ந்து மகிழ்வைக் காட்டத் துவங்கியது. "அருள், 13 ஆண்டு ஆச்சு இல்லையா? மறந்துடுச்சுப்பா" என்று நான் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அருள் இடைமறித்து, "ஐயா, நான் அப்படியேவா இருக்கேன், அப்ப எடுத்த என்னோட படத்தைப் பாத்தா எனக்கே அடையாளம் தெரியாது. ஒரு ஆண்டுக்கு 200 மாணவர்களைப் பாக்குற உங்களுக்கு எப்படி என்னை நினைவிருக்கும்? பரவால்லங்கய்யா" என்றான் அருள்.
"நீ எப்படிப்பா இருக்க? எங்க வேலை பாக்குற?"
"நல்லா இருக்கேன்யா. இங்க பக்கத்துல தான் ஒரு மென்பொருள் நிறுவனத்துல வேலை பாக்குறேன்."
"மென்பொருள் நிறுவனம்" சிரித்துக் கொண்டே, "இப்ப நான் தமிழாசிரியர் இல்லையே, ஆங்கிலத்திலேயே சொல்லுப்பா, அடிக்க எல்லாம் மாட்டேன்" என்றேன்.
"நீங்க எப்பவுமே என்னோட தமிழாசிரியர் தான். நான் எப்பவும் உங்க மாணவன் தான். சரிங்க ஐயா, ஏன் பஸ் ஸ்டாப்ல நின்னுக்கிட்டு இருக்கீங்க? எங்க போகணும்னு சொல்லுங்க? பக்கத்துல தான் என்னோட அறை இருக்கு. வாங்க ஐயா"
"கண்டிப்பா இன்னொரு நாள் வர்றேன் தம்பி. இப்ப நான் ஊருக்குப் போறேன். கோயம்பேடு போகணும். அதான் பேருந்துக்குக் காத்திருக்கேன்."
"கொஞ்ச நேரம் இருங்க ஐயா, நான் உங்களைக் கொண்டு போயி விடுறேன்" என்றவன், தன்னுடைய அலைபேசியை எடுத்து, தன்னுடைய நண்பனுக்கு அழைத்தான்.
"அன்பு, நான் College Road Bus Stopல இருக்கேன்டா. பைக் எடுத்துட்டு வர்றியா? நான் உங்கிட்ட சொல்லுவேன்ல என்னோட தமிழாசிரியர் பத்தி. அவர்கூட இருக்கேன். அவரைக் கோயம்பேடு கொண்டு போயி விடணும். கொஞ்சம் உடனே வாடா"
"....."
"thanks டா" என்று சொல்லிவிட்டு அலைபேசியை வைத்துவிட்டு, "ஒரு அஞ்சு நிமிசம் பொறுங்க ஐயா, இப்ப வண்டி வந்துடும். நானே உங்களைக் கொண்டு போயி கோயம்பேடுல விட்டுடுறேன்."
"எதுக்குய்யா உனக்கு வீண் அலைச்சல்?"
"அதெல்லாம் இல்ல. உங்களுக்காக இதக்கூட செய்யலன்னா?"
"ஆமா, நானும் கேட்கணும்னு நெனச்சேன். இந்த நிலைமைல இருக்க நான் காரணம்னு சொல்ற? உன்னோட நண்பன்கிட்ட எல்லாம் என்னைப் பத்தி சொல்லிருக்க? அப்படி நான் உனக்கு என்ன செஞ்சுட்டேன். உனக்கு ஆசிரியராக இருந்திருக்கேன். அது என்னோட பணி தானே, கடமை தானே?"
"இல்லை ஐயா, 6ஆம் வகுப்பு படிக்கும் போதே என் அப்பா தவறிட்டாரு. 6வது முதல் 12 வரை நீங்க தான் எனக்குப் படிக்க பள்ளிக் கட்டணம் கட்டியது. எனக்கு மட்டும் இல்ல, நம்ம பள்ளியில நெறைய பசங்களுக்கு இத செஞ்சுகிட்டு தான் வந்திருக்கீங்க. இது உங்களுக்கு மிகச்சிறியதாகத் தெரியலாம். ஆனா, என்னைப்போல பசங்களுக்கு அது எவ்ளோ பெரிய உதவி தெரியுமா? என்னிக்கும் நான் மறக்க மாட்டேன்." என்று அருள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, அவனுடைய நண்பன் அன்பரசன் வந்து வண்டியை நிறுத்தினான்.
அருள், என்னைப் பார்த்து, "ஐயா, இவன் அன்பரசன், ரெண்டு பேரும் ஒரே அறையில தான் தங்கி இருக்கோம்." என்று சொன்னதும், அன்பரசன் "வணக்கம் ஐயா" என்றான். அன்பரசனிடம் இருந்து வண்டி சாவியை வாங்கிக் கொண்டு, "அப்படியே என்னோட சைக்கிளைக் கொண்டு போயிடுடா. நான் ஐயாவக் கூட்டிட்டு கோயம்பேடு விட்டுட்டு வர்றேன்" என்றான்.
அருள் வண்டியில் ஏறிக்கொண்டு, "வாங்க ஐயா, உட்காருங்க" என்றான்.
வண்டியின் பின்புறம் ஏறி அமர்ந்து, அன்பரசனிடம் "போய்ட்டு வர்றேன் தம்பி" என்றேன். அருள் வண்டியை முடுக்க, வண்டி சாலையின் ஓரத்தில் இருந்து நழுவி சென்னை சாலைகளின் ஓட்டத்தோடு கலந்தது. எந்த வழியாக வந்தோம் என்று தெரியவில்லை, சரியாக, கால் மணி நேரத்தில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நுழைந்து கொண்டிருந்தோம்.
வண்டியை நிறுத்தியதும், கீழே இறங்கி "அருள், நான் அப்ப செஞ்சத இன்னும் நினைவுல வச்சிருக்க, ரொம்ப பெருமையா, மகிழ்ச்சியா இருக்கு. ஆனா, வாழ்க்கையில நீ இந்த நிலைமைக்கு வந்ததுக்கு உன்னோட படிப்பும், அதற்கு நீ எடுத்துக்கிட்ட முயற்சியும் தான் காரணமா இருக்க முடியும்."
அருள், சிரித்துக் கொண்டே சொன்னான். "ஐயா, உங்களோட அந்த சின்ன பங்களிப்பு இல்லன்னா, என்னோட முயற்சி எல்லாம் அப்பவே முடிஞ்சிருக்கும் தானே?" கொஞ்சம் இடைவெளி விட்டு மீண்டும் தொடர்ந்தான்.
"அன்னிக்கு எங்களுக்குப் பள்ளிக் கட்டணம் கட்டுறதுக்கு ஒரு தமிழ்ச்செல்வன் ஐயா இருந்தாரு. அதனால இன்னிக்கு நான் நல்ல நிலைமையில இருக்கேன். என்னைப் போல தொடக்க நிலைல கல்விக்கட்டணம் கட்ட முடியாம இருக்குறவங்களுக்கு உதவி செய்ய நிறைய ஐயாக்கள் இருப்பாங்களான்னு தெரியல. ஆனா, என்னால முடிஞ்ச வரை, நான், என்னோட நண்பர்கள் சிலர் எல்லாம் சேர்ந்து, செங்கல்பட்டு பக்கத்துல ஒரு ஊராட்சி பள்ளியைத் தத்தெடுத்து, பள்ளியின் மாணவர்களுக்கு எழுதுபொருள், புத்தக உதவி, கழிப்பறை வசதி, கட்டணம் கட்ட முடியாத மாணவர்களுக்கு பள்ளிக்கட்டணம் இப்படி செஞ்சுட்டு வர்றோம். உங்க பேருல தான்யா. தமிழ் கட்டளை என்ற பெயரில்." என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, "நல்லா இருய்யா, நல்லா இரு" என்று அவன் தலையில் கை வைத்து சொல்ல, என் கண்களின் அணை நிரம்பி இருந்தது.
- முடிவிலி
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையின் மாணப் பெரிது. (124)
அதிகாரம் : அடக்கமுடைமை
தன்னுடைய நிலை உயர்ந்தும், அகந்தை கொள்ளாது அடக்கம் கொண்டவரின் தோற்றம் மலையின் உயரத்தை விட உயர்ந்தது.
இலையின் சிறுகதை யிஃதீ பொருளில்
ReplyDeleteமலையினும் மானப் பெரிது!