தங்கத் தகடு - குறள் கதை
தங்கத் தகடு
கைத்தட்டலின் ஓசை காற்றினைக் கிழிக்க, அந்த மேடையில் ஏறிக்கொண்டிருந்தான் அமுதன். எழில் கோள் அளவிலான அறிவியல் ஆய்வுகள் மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான போட்டியில் இச்சிறு வயதில் பள்ளியில் பயின்று கொண்டிருக்கும் சிறுவன் ஒருவன் முதலாய் வருவது இதுவே முதல் முறை. மேடையில் ஏறி, பரிசினை வாங்குவதற்கு நடந்து சென்று கொண்டிருக்கும் அமுதனைப் பெருமிதத்தோடு கைத்தட்டல்களோடு பார்த்துக் கொண்டிருந்தான் இனியன்.
20 ஆண்டுகளுக்குப் பிறகு:
வானத்தில் ஆங்காங்கே பறந்து கொண்டிருந்த விண்கலங்களை இனியன் கவனிக்கவில்லை. நாள்தோறும் பார்த்துக் கொண்டிருக்கும் எதுவும் எந்தவொரு வியப்பையும் தருவதில்லை இல்லையா? அவன் இருக்கும் அந்த எழிற்கோள், தேன் வெளித் திரளின் தொழில்நுட்ப அறிவாண்மை மிக்கவர் நிறைந்த உலகு. ஆயினும், இனியனின் முகத்தில் வியப்பின் கோடுகள் நிறைந்திருந்தன.
20 ஆண்டுகளுக்குப் பிறகு:
வானத்தில் ஆங்காங்கே பறந்து கொண்டிருந்த விண்கலங்களை இனியன் கவனிக்கவில்லை. நாள்தோறும் பார்த்துக் கொண்டிருக்கும் எதுவும் எந்தவொரு வியப்பையும் தருவதில்லை இல்லையா? அவன் இருக்கும் அந்த எழிற்கோள், தேன் வெளித் திரளின் தொழில்நுட்ப அறிவாண்மை மிக்கவர் நிறைந்த உலகு. ஆயினும், இனியனின் முகத்தில் வியப்பின் கோடுகள் நிறைந்திருந்தன.
"நான் சொல்வது எதையும் நம்பவில்லை என்று உன் முகமே காட்டுகிறது" என்றாள் எழிலி.
"அப்படி எல்லாம் இல்லை, எழிலி. அமுதனை எனக்குச் சிறு வயதிலிருந்தே தெரியும். அவன் இப்படியா என்று நினைத்துப் பார்க்கவே முடியவில்லை." இன்னும் முகத்தின் வியப்பு விலகாதவனாய்.
"அது தானே? உங்களை எல்லாம் நம்பிச் சொல்கிறோம் இல்லையா? எங்களை எப்படி நம்புவீர்கள்? ஆண் தானே நீயும்." என்று வெடித்த எழிலி, "அடுத்தது என்ன நான் சொன்னதற்கு என்ன தரவு என்பது தானே? நீ அரசின் தொழில்நுட்ப முதலாளன் தானே? நினைவணுகியில் எனது நினைவுகளைப் பார்க்க உனக்கு அரசின் அனுமதி கூட தேவையில்லை தானே? வா, போகலாம்." என்றாள்.
"இல்லை, நான் உன்னை நம்புகிறேன், எழிலி. என் வியப்பு எல்லாம் அமுதன் எப்படி இப்படி மாறினான் என்று தான்." என்று இனியன் கூறியும் எழிலியின் சினம் குறையவில்லை.
"ஆண் என்ற தலைக்கனம், அதிகம் படித்து சாதித்ததால் அவன் நினைத்ததை எல்லாம் அடைந்திடத் தடை ஒன்றும் இருக்காது எனும் மதிமயக்கம், எல்லாவற்றுக்கும் அவன் மனதில் ஊறிய வன்மம்" அடுக்கிக் கொண்டே போனாள் எழிலி.
"நான் அவனிடம் பேசிப் பார்க்கிறேன்." என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, எழிலி இடது கையில் அணிந்திருந்த கணினிப்பட்டையில் இருந்து அறிவிப்புச் சத்தம் எழுந்தது. இனியனை ஐயத்துடன் ஒரு நொடி பார்த்த எழிலி, "இரண்டு நாட்கள் முன் என்னிடம் தவறாக நடக்க முயன்ற போதே அவனுடைய அறையில் ஒரு உணர்வியை வைத்து விட்டு வந்தேன். அமுதன் பேசத் துவங்கினாலோ, அவனது அறையில் எந்த ஒரு நடவடிக்கை நிகழ்ந்தாலோ எனக்கு அறிவிப்பு வந்து விடும்" என்று கூறிக்கொண்டே, தனது வலது விரல்களை கணினிப்பட்டையில் நடனமாட விட்டாள். அடுத்த நொடி, தனது இடது கையை நீட்ட, கணினிப்பட்டையின் மையத்தில் இருந்து ஒரு ஒளிக்கீற்று காற்றில் மும்மடி உருவாய்த் தெரியத் தொடங்கியது.
அந்த அறையில் அமுதன் அமர்ந்திருக்க, அவனது உதவியாளனான நீரன் அருகே நின்றிருந்தான். "அறைக்கு வெளியே யாரும் இல்லை இல்லையா?" என்று கேட்டான் அமுதன். நீரன், "யாரும் இல்லை, உள்ளே வரும்போதே பார்த்து விட்டேன், கதவும் அடைத்துள்ளது." எனச் சொன்னான்.
ஒரு சில நொடிகள் சிந்தித்தவனாய், தனது அங்கியின் உள்புறத்திலிருந்து ஒரு தங்கத் தகட்டினை எடுத்தான் அமுதன். அதைப் பார்த்த நீரன் வியப்புற்றவனாய், "என்ன இது?" என்று கேட்டவாறு அதைத் தொட்டுப் பார்க்க முன்வந்தான். அமுதன், அதை அவனிடம் கொடுக்காமல், "இது தான் நான் தப்பிக்கும் வழி." என்றான்.
நீரனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. விளங்கினாலும், அதை அப்படியே காட்டிக் கொள்ளும் அளவுக்கு விடுதலை உணர்வற்றவனாய் இருக்கும் அவன் முகத்தில் சற்று வியப்பு மட்டுமே இருந்தது. ஆனால், இதைப் பார்த்துக் கொண்டிருந்த இனியனுக்கும், எழிலிக்கும் அடுத்து அமுதன் என்ன சொல்லப்போகிறான் என்ற ஆர்வம் தொற்றிக் கொண்டது. எழிலி தன் கணினிப்பட்டையின் ஒரு புறத்தில் இரு விரலால் தீண்ட, அமுதன் கையில் வைத்திருந்த தங்கத் தகட்டினை இன்னும் அருகில் பார்க்க முடிந்தது. அதன் மையத்தில் ஒரு துளையும், அதைச் சுற்றி ஒரு புறமாய் "THE SOUNDS OF EARTH" என்று ஒன்றன் பின் ஒன்றாக மேலிருந்து கீழாக எழுதப்பட்டிருந்தது. இதைக் கண்ட இனியன், எழிலியிடம் இவை அனைத்தையும் சேமிக்குமாறு கூற, எழிலி பட்டையில் அதற்கான பகுதியை அழுத்திய நேரம் அமுதன் பேசத் துவங்கி இருந்தான். எழிலியும் அனைத்தும் தெரியும்படி ஒளிக்கீற்றை மாற்றியிருந்தாள்.
"என்ன நீரா, அப்படியே வியந்து போயிருக்கிறாய்? இது நேற்று நமது வான் எல்லைக்குள் வந்த ஒரு விண்கலத்தில் இருந்து எடுக்கப்பட்டது." என்று கூறியவாறு தனது கையை நீட்ட, அதிலிருந்து ஒரு ஒளிக்கீற்று வெளிப்பட்டது. அதில் எழில் கோளின் விண் எல்லை வீரர்கள் விண்நடை புரிந்து ஒரு விண்கலத்தை அடைவதும், அதிலிருந்து சில பொருட்களை எடுத்து வருவதும் தெரிய, இனியன், "அந்த விண்கலத்தை இன்னும் அருகில் பார்க்கமுடியுமா?" என்றான். எழிலி அருகில் தெரியுமாறு காட்ட, அந்த விண்கலத்தில் ஒரு குடை ஒன்றும், பொன்னிறத்தில் சுற்றப்பட்ட நடுப்பகுதியும் இருந்தது. அதைப் பார்த்த இனியன், "இது ஏதோ மிகப்பழைய தொழில்நுட்பம் போல." என்றான்.
அதே நேரம், நீரன் அமுதனைப் பார்த்து, "இதை வைத்து என்ன செய்யப் போகிறீர்கள்? இது என்ன செய்யும்?" என்று மீண்டும் அந்த தங்கத் தகட்டைக் காட்டினான்.
அமுதன், "நான் இங்கு யாருக்கும் தெரியாமல் செய்து கொண்டிருந்த சில வேலைகள் எனக்கு எதிராய்த் திரும்புவதற்குள் நான் வேறு ஏதாவது சொல்லி மக்களைக் குழப்பி, அதைக் கொண்டு என்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்" என்றான்.
"எப்பொழுதும் போல இதுவும் எனக்குப் புரியவில்லை. நீங்கள் முழுமையாகச் சொல்லிவிடுங்கள், அப்போழுதாவது எனக்குப் புரிகிறதா என்று பார்க்கிறேன்." என்றான் நீரன்.
"அதனால் தானே உன்னை என்னுடன் வைத்திருக்கிறேன். நான் பல பெண்களிடம் வற்புறுத்தியது போல இரு நாட்களுக்கு முன் எழிலியிடம் நடந்து கொள்ள, அவள் என்னைத் தாக்கி விட்டுத் தப்பிவிட்டாள். எப்படியும் என்னைப் பற்றி வெளியே சொல்வாள். ஆனால், தரவு இல்லாமல் என் மீது குற்றம் சாட்டுவதற்கு அவள் அவ்வளவு முட்டாள் அல்ல. ஆனால், அவள் முந்துவதற்கு முன், நான் வேறு ஏதாவது செய்ய வேண்டும். மக்களை ஏமாற்ற, எப்போதும் போல நான் நல்லவனாக, கல்வியிலும், அறிவிலும் உயர்ந்தவனாகக் காட்டிக் கொள்ள" என்று சொல்லியவன் மீண்டும் நீரனின் முகத்தைக் கவனித்தான். இப்போதும் அதில் எந்த உணர்வும் இல்லாமல் இருந்தது. தனக்குள் சிரித்துக் கொண்டே மேலும் தொடர்ந்தான் அமுதன்.
"இதோ இந்த தகடு, வாயேசர் 1 என்ற விண்கலத்தில் இருந்து எடுக்கப்பட்டிருக்கிறது. எங்கோ இருக்கும் ஒரு எர்த் எனும் கோளில் இருந்து வந்திருக்கிறது, அதில் ஐம்பத்தைந்து மொழிகளில் வாழ்த்தும், சில காட்டு விலங்குகள், பறவைகளின் சத்தங்களும் உள்ளன. ஆனால், இவற்றை எல்லாம் நான் மறைத்து இதே போல ஒரு தகடு செய்து, எர்த் நம்மீது தாக்குதல் நடத்த உள்ளதாகக் கூறி நமது விண் எல்லைப் படையைக் கொண்டு, அவர்கள் மீது படையெடுக்க வைக்கப் போகிறேன். நமது கோளின் பாதுகாப்பு என்று வரும்போது எனது தவறுகள் பற்றி யாருக்கும் கவலை இருக்காது. படை வென்றால் வெற்றியும், நற்பெயரும் கிடைத்திடும். இல்லையெனினும், இங்கிருந்து தப்பிக்க இந்தப் போரையே ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்வேன். இப்போது சொல், இந்தத் தகடு நான் தப்பிக்கும் வழி தானே?" என்று மீண்டும் நீரனின் முகத்தைப் பார்க்க, சில நொடிகள் விழித்து, "ஆமாம், ஆமாம்" என்று தலையசைத்தபடி கூறினான். இனியனும், எழிலியும் ஒருவரையொருவர் வியப்பில் பார்த்துக் கொண்டனர்.
*****
அடுத்த நாள் இனியன், அமுதனைச் சந்திக்க அவனுடைய ஆய்வகத்துக்குச் சென்றான். வெளியே அமர்ந்திருந்த நீரன், இனியனைக் கண்டதும் சிரித்தான். இனியன், நீரனைப் பார்த்து, "நீரா, எப்படி இருக்கிறாய்? அமுதன் இருக்கிறானா?" என்றான். முகத்தை மேலும் கீழும் ஆட்டியவாறே உள்ளே செல்லுமாறு கையால் சொன்னான் நீரன். அறையின் உள்ளே செல்லும்போதே "அமுதா! நலமா?" என்று கேட்டுக்கொண்டே சென்றான் இனியன். நண்பனைப் பார்த்த அமுதன், "அட, இனியா, தொழில்நுட்ப முதலாளனே, ஒரே இடத்தில் இருந்தாலும் பார்த்துக் கொள்ள முடியவில்லை, சொல்லப்போனால், நானே உன்னைப் பார்க்க வரவேண்டும் என்றிருந்தேன். நலம் தானே?" என்றான் அமுதன்.
"என்னுடைய நலத்திற்கு என்ன? சரி, நான் கேள்விப்பட்டதெல்லாம் உண்மையா? என்னால் நம்பவே முடியவில்லை. அதனாலே நேரிலே கேட்டுவிடலாம் என்று வந்தேன்" என்று சுற்றி வளைத்தான் இனியன். அமுதனின் முகம் மாறியது.
"யார் என்ன சொன்னார்கள்? நீரன் எதுவும் சொன்னானா?" என்று கேட்டான் சற்று பதட்டத்தோடு.
"பதறுகிறாயே, அப்போது உண்மை தான் போல." என்றான் இனியன்.
"பதறுவதா? நானா? இல்லையே, நீ என்ன கேட்கவந்தாய் என்று ஒன்றும் புரியவில்லை" என்ற அமுதன், சற்று குரலை உயர்த்தி, "நீரா" என இருமுறை அழைத்தான். நீரன் உள்ளே வரவில்லை. தனது கைப்பட்டையினைத் தடவி, தனது வாயின் அருகே வைத்து, "நீரா, எங்கே இருக்கிறாய், உடனே உள்ளே வா" என்றான்.
"நண்பா, ஏன் இவ்வளவு பதட்டம்? என்ன ஆயிற்று?" என இனியன் கேட்க, "விண்ணெல்லைக் காவல் தேவையில்லை என நீங்கள் சொல்வதெல்லாம் பொய் என்பது போல் ஒன்று நிகழ்ந்துள்ளது, இனியா" என்று சொல்லவந்தவனை இடைமறித்து, "எழிலி என்னிடம் எல்லாவற்றையும் சொல்லி விட்டாள், அமுதன்" என்றான் இனியன்.
"என்ன சொன்னாள், எழிலி? நான் நமது எழிற்கோளின் எதிர்காலத்தைப் பற்றிப் பேசுகிறேன், நீ எழிலியைப் பற்றிப் பேசுகிறாயே?" என்று மேலும் பதறியவன், மீண்டும் தனது கைப்பட்டையின் மூலம் நீரனை அழைத்தான். நீரன், "இதோ உள்ளே வந்து கொண்டே இருக்கிறேன்" என்று பதில் கொடுக்க, அமுதன், தான் செய்து வைத்திருந்த தங்கத்தகட்டை வெளியே எடுத்தான்.
"இனியன், நான் சொல்வதைக் கேள், இந்தத் தகடு..." எனச் சொல்லத் துவங்கிய நொடி, நீரன் கதவைத் திறந்து உள்ளே வர, அவனுடன் படைக்கலம் ஏந்திய வீரர்கள் எழுவர் உள்ளே வந்தனர். "நீரன், எங்கே போய்த் தொலைந்தாய்? யார் இவர்கள்? ஏன் இவர்களை உள்ளே அனுமதித்தாய்?" என்று கேள்விகளை அடுக்கிய அமுதனைப் பார்த்து, இனியன் கூறினான் "இன்னும் சில நொடிகளில் நமது உலகின் எல்லா திரைகளிலும் உன் ஒளிக்கீற்று தான் இருக்கும். துவங்கப் போகும் நேரம் தான். உன்னுடைய திரையிலேயே பார்க்கலாமா?" என்று கூறிக்கொண்டே நீரனைப் பார்க்க, நீரன் திரையைத் துவக்கினான். திரையில் நீரனிடம் அமுதன் தனது குற்றங்களையும், அதிலிருந்து தப்பிக்கப் போட்ட திட்டங்களையும் சொல்லிக் கொண்டிருக்க, வீரர்கள் அமுதன் கையில் இருந்த தங்கத் தகட்டையும், அவனது கைப்பட்டையையும் பறித்துக் கொண்டனர். உண்மையான தங்கத் தகட்டையும் எடுத்துக் கொடுத்த நீரன், "அமுதன், நானும் எவ்வளவு நாட்களுக்குத் தான் முட்டாளாகவே இருப்பது?" எனக் கூற, சினத்தில் கத்தினான் அமுதன். வீரர்கள் அவனைப் பிடிக்க, அவனது கைகளும், வாயும் கட்டப்பட்டன.
அவன் அருகே வந்த இனியன், "நீயும் நானும் ஒன்றாகத் தான் படித்தோம். என்னை விட எல்லா கல்விகளிலும், அறிவிலும் நீ உயர்ந்தவன் தான். நான் எழிலுலகின் தொழில்நுட்பம் தெரிந்தவன் என்றால், வானியல், விண்கலம் வரை தெரிந்தவன் நீ. ஆனால், மறந்தால் தெரிந்து கொள்ளும் அறிவினை ஆழ்ந்து கற்ற நீ, ஒருமுறை தவறினால் வீழ்த்திடும் ஒழுக்கத்தைக் கற்கவில்லையே" எனக் கூற, அமுதன், அவனது நினைவுகளின் மூலம் எத்தனை பேரைச் சீரழித்தான் என்பதைக் கண்டறிய நினைவணுகிக்குக் கொண்டுச் செல்லப்பட்டான். தன் சிறு வயதில் பள்ளியில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த மாணவன் பட்டம் வாங்கிய அமுதனும், அவனுக்கு எழுந்த கைத்தட்டலொலியும் இனியனின் கண்முன் வந்து போயின.
- முடிவிலி
மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும். (134)
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும். (134)
அதிகாரம் : ஒழுக்கமுடைமை
இயல்: இல்லறவியல்
எதை மறந்தாலும் மீண்டும் ஓதுவதால் மீண்டும் கற்றுக் கொள்ள முடியும். ஆனால் ஒழுக்கம் என்பது குன்றினால் ஒருவனின் குடியே கெடும்.
Comments
Post a Comment