உழுத நெலம் - குறள் கதை
"மகேந்திரா, வேலை ஒன்னு இருக்கு, ஊரு வரைக்கும் போயிட்டு வருவோம்." அலைபேசியின் வழி வந்த பரதனின் குரல் மகேந்திரனை வியப்பில் ஆழ்த்தியது.
"என்னடா, இருக்கியா? பதிலே காணோம்" என்று மீண்டும் கேட்ட பரதனுக்கு, "இருக்கேன் அண்ணா, என்ன திடீர்னு ஊருக்கு?" என்றான் மகேந்திரன்.
"ஏன் துரை காரணம் சொன்னா தான் வருவீகளோ? ரெடியா இரு, நான் வந்து உன்னைக் கூட்டிட்டுப் போறேன்" என்று அழைப்பைத் துண்டித்தான் பரதன்.
பரதன், மகேந்திரன் இருவரும் அவர்களது ஊரான சிறுவயல்பட்டியை விட்டு வந்து பத்து ஆண்டுகள் இருக்கும். பணி நிமித்தமாக சென்னை வந்து சேர்ந்த பிறகு, மாதமொரு முறை என்று ஊருக்குச் சென்று கொண்டிருந்தவர்கள், இப்போது தேவையிருந்தால் மட்டும் சிறுவயல்பட்டிக்குச் செல்வதென்றாகி விட்டது. ஊரில் இவர்கள் வரவை என்றும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அம்மா தமயந்திக்கும், அப்பா ஆனந்தத்திற்கும் இவர்கள் இப்போது வருவது தெரியாது. மகேந்திரன் தனது அலைபேசியை வைத்த இடத்தில் அருகில் இருந்த புகைப்படத்தில் மணக்கோலத்தில் மகேந்திரனும், கவுசியும் நிற்க, பரதனும் செல்வியும் ஒருபுறமும், மறுபுறத்தில் தமயந்தியும், ஆனந்தமும் நின்றிருந்தனர். உழவு தந்த காசிலே, இரண்டு பேரையும் படிக்க வைத்து, இன்று தான் நல்ல நிலைமையில் இருக்கக் காரணமான தாய், தந்தையை நினைத்த அவன் மனது பத்து ஆண்டுகளுக்குப் பின் போனது.
"அம்மா, நீங்களும் சென்னைக்கே வந்திடுங்கம்மா, ஏன் நீங்க இங்க இருந்து துன்பப்படணும்?" என்றான் மகேந்திரன்.
"நான் அங்க வந்துட்டா, இந்த மாடு கன்னுங்க, கோழிக்கெல்லாம் யாரு இருக்கா, உங்களுக்கு சோலி கெடக்கு அங்க, நான் அங்கன வந்து என்ன செய்யப் போறேன்? என்ன வுடு, உங்க அப்பா அங்க வந்து என்ன செய்வாரு?" என்று சொல்லி, சற்று வெட்கத்துடன் சிரித்தாள் தமயந்தி.
"ஏய், என்ன இழுக்கலன்னா உனக்குத் தூக்கம் வராதே" என்ற ஆனந்தம், சற்றென்று முகம் சிறுத்து, "யய்யா, அப்பப்ப வந்து போங்கய்யா" என்றார்.
சிரித்துக் கொண்டிருந்த தமயந்தியின் கண்களில் கண்ணீர் அடைத்தது. "ஏற்கனவே, உன் அண்ணனும் போயிட்டான், இப்ப நீயும் போற, புரியுது, படிச்சிருக்கீக, நல்ல வேலை கெடச்சுப் போறீக, இருந்தாலும், மனசு கெடந்து தவிக்கே, என்ன செய்ய?" என்று சேலைத் தலைப்பால் கண்ணீரைத் துடைத்தபடி சொன்னாள் தமயந்தி.
"யம்மா, இங்கன இருக்கு சென்னை. நைட் பஸ்ல உக்காந்தா விடியக்குள்ள வந்துடுவேன். ரெண்டு பேரும் அழுதா நான் எப்படி போறது?" என்றான் மகேந்திரன்.
கண்ணைத் துடைத்தபடி, "நீ போயிட்டு வாடா, ராசா போல, இவரு ஒருத்தரு கெளம்பும்போது தான் அழுவாச்சி காட்டுவாரு" என்று மீண்டும் கணவனைப் பார்த்துக் கண்ணால் அதட்ட, "சரிய்யா, நல்லபடியா போயிட்டு வாய்யா" என்றார் ஆனந்தம்.
"டேய், ரெடியாகிட்டியா?" பரதனின் குரல் மீண்டும் நிகழ்காலத்திற்குக் கொண்டு வந்தது மகேந்திரனை.
"அண்ணா, வா, ஒரு பத்து நிமிசம் உட்காரு, இப்ப வந்திடுறேன்." என்று கிளம்ப உள்ளே சென்றான் மகேந்திரன்.
சில மணி நேரங்களில், பரதன், மகேந்திரன் இருவரும் சிறுவயல்பட்டி நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தனர்.
"எதுக்குண்ணே இப்ப ஊருக்குப் போயிட்டிருக்கோம்?"
"எல்லாம் நல்லதுக்குத் தான். எவ்ளோ நாளு தான் வாடகை வீட்ல இருக்குறது? வீடு வாங்கலாம்னு இருக்கேன். ஹவுசிங் லோன் கெடைக்கும். அதுப்பத்தி தான் அப்பாகிட்ட பேசலாம்னு தான் போறோம்"
"ஓ... என்னடா எந்நாளும் இல்லாத திருநாளா இன்னிக்கு ஊருக்குப் போறோமேன்னு நெனச்சேன்."
"டேய், நான் என்ன அப்பா அம்மா மேல பாசமே இல்லாதவனா? இங்க வேலை எவ்ளோ இருக்குன்னு உனக்கே தெரியும்." என்று சொன்ன பரதன், மகேந்திரனிடம் பதில் எதிர்பார்க்காமல் வேறுபுறம் திருப்பிக் கொண்டான்.
சிறுவயல்பட்டிக்குள் நுழையும் போதே, சில பெருசுகள், "என்ன தமயந்தி பசங்களா? இப்பத்தான் ஊருக்கு வழி தெரிஞ்சுதா?" என்றனர். மகேந்திரன் சிரித்துக் கொண்டே, "வேலை அப்படி, நீங்க நல்லா இருக்கீகளாய்யா?" எனக் கேட்க, பரதன் மகேந்திரனை முறைத்தான்.
"தம்பி, வாடா, வந்த வேலையப் பாப்போம்" என்று கூற, மகேந்திரன் அந்தப் பெருசுகளிடம், "வர்றேன்யா" என்று சொல்ல, வீட்டை நோக்கி நடந்தனர்.
மதியம் 3 மணியைத் தாண்டி இருந்தது. 'இன்னமும் இந்த மனுசனைக் காணோமே' என்று மனதில் நினைத்துக் கொண்டு, வீட்டின் வாசற்படியில் வந்து பார்த்த தமயந்திக்குத் தன் கண்களையே நம்ப முடியவில்லை. பரதனும், மகேந்திரனும் தெருவில் வந்து கொண்டிருக்க, அவளது கண்களில் மகிழ்ச்சி கண்ணீராய் வடிந்தது.
"என் ராசாக்களா, வாங்கய்யா, வாங்க" ஒன்னேகால் ஆண்டுக்குப் பிறகு தன் மகன்களை ஒன்றாகப் பார்த்த தமயந்திக்குக் கையும் காலும் ஓடவில்லை. 'இந்த மனுசனை வேறக் காணோமே' என்று மனதில் நினைத்துக் கொண்டு, தனது மகன்களை நோக்கி ஓடிய தமயந்தியை மகேந்திரன் முன் சென்று பிடித்தான்.
"யம்மோய், அதான் வர்றோம்ல, இப்டி ஓடியார? வுழுந்துடப் போறம்மா" என்றவன், அம்மாவின் இரு கைகளையும் பிடித்துக் கொண்டு, "எப்டிம்மா இருக்க?" என்றான் மகேந்திரன்.
"என்ன வுடுய்யா, நீ எப்டி இருக்க? பசங்களைக் கூட்டியாறலயா?" என்றவள், பரதனைப் பார்த்து, "நீயும் வாய்யா, நல்லா இருக்கியா?" என்றாள்.
"அம்மா, ஸ்கூல் இருக்கு, அதான். மே மாசம் கூட்டியாறேன்." என்று மகேந்திரன் கூறியபடி, அம்மாவின் கைப்பிடித்து, வீட்டிற்குள் நுழைந்தான். பரதனும் பின் தொடர்ந்தான்.
சிறிது நேரத்தில், "தமயந்தி, யாரு வந்திருக்கா, வெளியில செருப்பு கெடக்கே?" என்று சொல்லிக் கொண்டே வீட்டுக்குள் வந்த ஆனந்தம், தனது மகன்களைக் கண்டு, "எப்பய்யா வந்தீங்க? கடைத்தெருவுல தான் இருந்தேன். நீங்க வந்ததைப் பாக்கலயே" என்றார்.
அப்பா, "நாங்க தெற்குத் தெரு வழியா வந்தோம்." என்று கூறிய மகேந்திரன், "அண்ணனுக்குத் தான் உங்ககிட்ட ஏதோ பேசணுமாம்" என்றான்.
"என்னய்யா, சொல்லு" என்று பரதனைப் பார்த்துக் கூறிய ஆனந்தம், "யம்மா, கொஞ்சம் தண்ணி எடுத்துட்டு வாம்மா, அப்படியே நீயும் வந்து இங்கன உக்காரு" என்றார் தமயந்தியிடம்.
"அப்பா, நான் சென்னையில ஒரு வீடு வாங்கலாம்னு இருக்கேன்" என்றான் பரதன்.
"நல்லதுய்யா, நல்லபடியா வாங்கு" என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, ஒரு கையில் சொம்பில் தேநீரும், இன்னொரு கையில் மூன்று குவளையும் எடுத்து வந்தாள் தமயந்தி.
"ஏய், தண்ணி கேட்டேன்ல?" என்றார் ஆனந்தம்.
"எனக்கென்ன பத்து கையா இருக்கு? பசங்க வந்திருக்காய்ங்க, ஒரு டீத்தண்ணி கொடுக்கலாம்னு எடுத்துட்டு வந்தா..." என்று இழுத்தாள் தமயந்தி.
சொம்பில் இருந்த சூடான தேநீரை ஆற்றி, மூன்று குவளையில் ஊற்றி, மூவருக்கும் கொடுக்க, மீண்டும் பரதன் பேச்சைத் துவங்கினான். "ஒரு இடம் இருக்கு, நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாங்குனா நல்லா இருக்கும். எனக்கு ஹவுசிங் லோன் கெடைக்கும். தம்பிக்கும் கிடைக்கும்னு நெனக்கிறேன், நாங்களும் எவ்ளோ நாள் தான் வாடகை வீட்லயே இருக்கிறது?" என்றான். பரதன் சொன்னது மகேந்திரனுக்கே வியப்பாய் இருந்தது. ஆனாலும், முழுமையும் கேட்டு விடலாம் என்று இருந்தான்.
"அதுவும் சரிதான்யா. ஆனா, இந்த லோன்லாம் நமக்குப் புடிபடாது. அகலக்கால் வைக்காதப்பா, எதுவா இருந்தாலும் பாத்து பண்ணுங்கப்பா" என்றார் ஆனந்தம்.
"அதெல்லாம் ஒன்னுமில்லப்பா, வீட்டோட மதிப்புல முக்கால் பங்கு கடன்லயே கெடச்சிடும். கால் பங்கு நாம தான்... போடணும்" என்று இழுத்தான் பரதன்.
"என்னய்யா, கேட்க வந்ததைக் கேளுய்யா" என்றாள் தமயந்தி.
"ஆயிரம் சதுர அடியில ரெண்டு வீடு, ஒரு சதுர அடி நாலாயிரத்தி ஐநூறு சொச்சம், கடன்ல அறுபத்தேழு லட்சம் கெடச்சுடும், மீதி இருபத்தஞ்சு லட்ச ரூவா தேவைப்படும்." என்று பரதன் சொல்ல,
"அடி ஆத்தி" என்றாள் தமயந்தி.
"அம்மா, சும்மா இரும்மா" என்றான் சற்று கடுப்பாக. அப்பாவைப் பார்த்துக் குரலைக் குறுக்கி "அப்பா, நீங்க தான்பா கொடுக்கணும்" என்றான் பரதன்.
"அண்ணே, இதெல்லாம் நீ என்கிட்ட..." என்று தொடங்கிய மகேந்திரனைக் கண்ணால் அதட்டினான் பரதன்.
ஆனந்தம், "இருவத்தஞ்சு லட்சத்தை ஒன்னா சேத்து நான் பாத்ததே இல்ல, என்கிட்ட எங்கய்யா இருக்கு" என்றார்.
"இருக்குப்பா, உங்களால நெனச்சா தர முடியும்" என்றான் பரதன்.
"என்கிட்ட எங்கய்யா இருக்கு, அவ்ளோ காசு?"
"நிலம் இருக்குல்லப்பா, எப்படி இருந்தாலும் எங்களுக்குத் தானே வரும்?"
"ஏன்யா, உழுவுற நெலத்த விக்கச் சொல்ற? என்னத்த படிச்சீகளோ?" என்றாள் தமயந்தி.
"யம்மா, என் ஆபீஸ்லயே எனக்குத் தான் சொந்த வீடு இல்ல, சும்மா உழுவுற நெலம்னு சொல்லிட்டு இருந்தன்னா நான் மனுசனா இருக்க மாட்டேன்" எனக் கொதித்தான் பரதன்.
ஒரே நேரத்தில் "அண்ணே..." என மகேந்திரன் சொல்ல, "எலேய், யாரப் பாத்து பேசுற?" என்றார் ஆனந்தம்.
"அப்பா, எப்படி இருந்தாலும் எங்களுக்கு வரப் போறது தானே? நான் உங்ககிட்ட கேக்காம வேற யாருட்ட கேக்குறது?"
"அதெல்லாம் சரி. என் காலத்துக்குப் பின்னாடி உனக்கும் சின்னவனுக்கும் தான் வரும். ஆனா, அதை நீங்க ஆளணுமா, விக்கணுமாங்குறத நான் தான் முடிவு செய்யணும், இது என்ன தாத்தா சொத்துன்னு நெனச்சியா? கொஞ்சம் கொஞ்சமா நானும், இதோ உன் திட்டெல்லாம் வாங்கிட்டு உக்காந்திருக்காளே இவளும் சேத்து வாங்குனது."
"அப்ப முடிவா என்ன தான் சொல்ல வர்றீங்க?" என்றான் பரதன்.
"எனக்கு நெலத்துல வேலக் கெடக்குன்னு சொல்ல வர்றேன்" என்று எழுந்தார் ஆனந்தம்.
"அப்பா, எனக்கு வர்ற கோவத்துக்கு..." என்று இழுத்தவன், அம்மாவைப் பார்த்து, "வாயை வச்சுக்கிட்டு சும்மா இல்லாம உழுற நெலம் அது இதுன்னு சொல்லி எல்லாத்தையும் கெடுத்துட்டல்ல" என்று அம்மாவை நோக்கி கையை ஓங்க, பின்னால் இருந்து பரதனைப் பிடித்தான் மகேந்திரன்.
"ஏய், யார்மேல கைய ஓங்குற? என்ன வயசாயிடுச்சுன்னு நெனச்சியா? மம்பட்டி புடிக்குற கையிடா இது. மத்தவன் கண்ணுக்கு முன்ன எனக்கும் வூடு இருக்குன்னு நீ சொல்ல இருக்குற நெலத்த நான் விக்கணுமா? என்ன படிச்சு என்ன செய்ய? பணத்து மேல வைக்குற பாசத்த மனுசங்க மேல வைக்கத் தெரிலல்ல" என்ற ஆனந்தம், சட்டென உடைந்து கீழே விழுந்தார்.
"ஆத்தி, உங்கப்பாவப் புடிடா" என்று பதறினாள் தமயந்தி. மகேந்திரன், பரதனை விட்டு, அப்பாவைப் பிடிக்க, நெஞ்சைப் பிடித்துக் கொண்டு, கீழே அமர்ந்த ஆனந்தம், "இப்ப என்னங்கடா, என் நெலம் வேணும் அவ்ளோ தான்டா, இப்ப என் தல வுழுந்தாலும், அடுத்த நாளே இந்த வூடு, நெலமெல்லாம் போயிடும்னு தெரிஞ்சுகிட்டேன். என் மனசுல ஆயிரம் ஓடிட்டிருக்கு, ஆனா, பெத்த பசங்கள ஏதும் வஞ்சிடக்கூடாதுன்னு நெனக்கிறேன்" என்றார் ஆனந்தம்.
"வெசனப்படாதீங்க" உள்ளே சென்று ஒரு செம்பில் தண்ணீர் எடுத்து வந்த தமயந்தி கூற, மகேந்திரன் செம்பினை வாங்கி அப்பாவுக்குக் கொடுக்க, தமயந்தி தலை குனிந்து நின்றிருந்த பரதனைப் பார்த்து, "உன்னப் பெத்து வளத்தவரை காவு வாங்கத்தான் ஊருலேந்து வந்தியாடா? இப்ப அவருக்கு மட்டும் ஏதாச்சும் ஆகட்டும், நீயெல்லாம் உரு..." என்று சொல்லப் போன தமயந்தியின் கையைப் பிடித்தார் ஆனந்தம்.
"யம்மா, அவனுக்குக் கேக்கத் தெரியல, முதல்ல நம்ம மேல நம்பிக்கை இல்ல" என்ற ஆனந்தம், மகேந்திரனைப் பார்த்து, "நீயாச்சும் எங்கள நம்புறியாய்யா?" என்றார்.
"நம்புறேன் பா, கொஞ்ச நேரம் அப்படியே இந்த தூண்ல சாஞ்சு உக்காருங்க, பேசாதீங்க" என்றான் மகேந்திரன்.
"யய்யா, பரதா, இங்க வாய்யா" நெஞ்சு வலி கொஞ்சம் குறைந்திருந்தது அவருக்கு. அருகே வந்தவனிடம், "இன்னும் நெறைய தேவைங்க இருக்குய்யா, பேரப்பசங்க படிப்பு, கல்யாணம். உங்கள எல்லாம் ஆளாக்குன நெலம்யா அது, இருக்குற வரைக்கும் அள்ளிக் கொடுக்கும்யா, அத ஒரேடியா வித்துடாதீகய்யா, ஒனக்கு பணம் வேணும்னா" என்ற அப்பாவை இடைமறித்த மகேந்திரன், "அண்ணே, எனக்கு வீடு வேணும்னு உன்கிட்ட கேட்டனா? ஊருலயே காசு வேணும்னு கேட்டிருந்தா நான் ஒரு பெர்சனல் லோன் போட்டு வாங்கிக் கொடுத்திருப்பேன். இதுக்கு மேல நெலத்தை விக்குறது பத்தி பேச்சே எடுக்காத" என்று மகேந்திரன் ஆனந்தத்தை மெல்லக் கைத்தாங்கலாய்ப் பிடித்துத் தூக்க, இன்னொரு புறம் தமயந்தியும் பிடித்துக் கொண்டாள்.
கண்களில் நீர் வழிய மகேந்திரனைப் பார்த்துக் கொண்டிருந்த ஆனந்தத்தை இருவரும் கூட்டிச் செல்லத் தனியாளாய் நின்று கொண்டிருந்தான் பரதன்.
- முடிவிலி
ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்.
ஒழுக்கம் உடையவர்கள் தவறிக் கூட தீய சொற்களை சொல்லிட மாட்டர்.
Arumai Anna
ReplyDeleteநன்றி சதீஷ்... 😇
Delete