ஒத்தச் சொல்லால - குறள் கதை

ஒத்தச் சொல்லால

காலம் எல்லாவற்றையும் மறக்கச் செய்திடும் என்பது எவ்வளவு உண்மை என்று நான் பாஸ்கர் அண்ணனை மீண்டும் பார்த்தபோது தான் தெரிந்து கொண்டேன். இத்தனைக்கும் ஏற்கனவே சொல்லி வைத்துப் பார்த்தது எல்லாம் இல்லை. தற்செயலாக என் அலுவலகம் இருக்கும் இடத்தின் அருகே இருக்கும் பேருந்து நிறுத்தத்தில்தான் அவரைப் பார்த்தேன். எங்கோ பார்த்த நினைவுகள் மூளையைக் கிளறி எடுத்துச் சொன்னது பாஸ்கர் அண்ணன் என. ஒரு நொடி பார்த்தும் பார்க்காமல் போய் விடுவோமா என நினைத்ததும் உண்மை. ஆனால், ஏன் அவரை நானாகப் போய்ப் பார்த்துப் பேசினேன் என்பது இன்றுவரை புரியாததாகவே உள்ளது.

"பாஸ்கர் அண்ணே?" என்ற கேள்வி கேட்டதும், திரும்பி என்னைப் பார்த்தவர் முகத்தில் வியப்புக்குறி எழுந்து, பின் மகிழ்ச்சியாக மலர்ந்தது. "எழில் தானே? எப்படிப்பா நல்லா இருக்கியா?" என்றார் பாஸ்கர்.

"நல்லா இருக்கேன். இங்க தான் என்னோட அலுவலகம் இருக்கு. நீங்க என்ன சென்னையில? இன்னும் நம்ம கல்லூரியில தான் வேலை பாக்குறீங்களா?"

இதை நான் கேட்டதும் அவர் முகம் கொஞ்சம் மாறியது. ஆனாலும், அதைக் காட்டிக் கொள்ளாமல், "சென்னையில ஒரு வேலையா வந்தேன். சரி நான் கிளம்புறேன்" என்றார்.

"என்ன அதுக்குள்ள கிளம்புறீங்க? வாங்கண்ணே. நம்ம அலுவலகத்துக்கு வந்து ஒரு டீயாவது சாப்பிட்டுப் போங்க."

"எழிலு, நீங்க எல்லாம் இன்னும் நான் சொன்னதை மனசுல வச்சுகிட்டு இருப்பீங்கன்னு நினைச்சேன்யா. நீ எப்ப அண்ணன்னு கூப்பிட்டியோ, அப்பவே நான் கேட்டிருக்கணும், இதுவே ரொம்ப தாமதம் தான். என்னை மன்னிச்..." என்று சொல்லப் போனவரைத் தடுத்து நிறுத்தினேன். 

"என்னண்ணே, என்னிக்கோ நடந்ததை இன்னும் நெனச்சுக்கிட்டு, வாங்க" என்று கையைப் பிடித்து என் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றேன். நானும் அவரும் என் அலுவலகத்துக்கு முன்னே சென்று கொண்டிருக்க, என் நினைவு காலப்பறவையின் இறக்கையை இரவல் வாங்கி பதினைந்து ஆண்டுகள் பின்னே பறந்து சென்றது. 

1999

கோவைக்கு 25 கி.மீ வெளியே, கட்டப்பட்டு இரண்டே ஆண்டுகளான பொறியியல் கல்லூரி. அன்று எப்போதும் போல் நாங்களெல்லாம் வகுப்புக்குப் போகாமல், வழக்கத்திற்கு மாறாக கல்லூரி முதன்மை கட்டடத்தின் முன்பு குழுமி இருந்தோம். சரியான சோதனைக் கூடங்கள், விடுதி வசதிகள் என்று பல காரணங்களை முன்னிறுத்தி, கல்லூரி மேலாண்மை உடனடியாக நடவடிக்கை எடுக்கச் சொல்லிப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தோம். போராட்டத்தின் இரண்டாவது நாள் இன்று. கல்லூரி மேலாண்மை அலுவலர் இன்று எங்களைச் சந்தித்து பேசுவார் என்று நினைத்துக் கொண்டிருந்தோம். மாணவிகளையாவது எப்படியும் கல்லூரிப் பேருந்தில் இருந்து வகுப்புக்கு அழைத்து வந்திட வேண்டும் என்று முதல் நாளே நினைத்திருந்த கல்லூரியின் முயற்சியும் தோல்வியுற்று அனைத்து மாணவ மாணவிகளும் ஒன்றாய் ஒரே குரலாய் ஒலித்தனர். "we want Lab facilities" என்று ஒவ்வொரு கோரிக்கையாய்...

உள்ளே கல்லூரி மேலாண்மைக் குழுவின் கூட்டத்தில், பேராசிரியர்கள், கல்லூரி முதல்வர் மற்றும் கல்லூரி மேலாண்மை அலுவலர் ஆனந்தனும் இருந்தனர். 

கல்லூரி முதல்வர், "பசங்க IDCக்குத் தான் இந்த போராட்டமே செய்யுறாங்க. இந்த lab facilities கோரிக்கை எல்லாம் சும்மா" என்றார்.

"அதெப்படிங்க சொல்ல முடியும்? எனக்கே நல்லா தெரியும். இன்னும் லேப் கட்டிடம் எல்லாம் முழுசா முடிவடையலன்னு. வர்ற julyல மூன்றாவது ஆண்டு தொடங்குனா, mechanical machines labக்கு வேலை இன்னும் முழுமை ஆகல. இதையெல்லாம் தான் பசங்க கேட்டுட்டு இருக்காங்க. அவங்க கிட்ட ஒரு இத்தனை நாளுக்குள்ள முடிச்சுத் தர்றோம்னு சொல்லுவோம்." என்றார் ஆனந்தன். 

அந்த நேரம், அவர்கள் இருந்த அறையின் கதவு தட்டிய படியே உள்ளே வந்த பாஸ்கர், நேரே ஆனந்தன் அருகில் சென்று நின்றார். பாஸ்கர் இயந்திரவியல் ஆய்வுக்கூட உதவியாளர். 

"என்ன பாஸ்கர், வெளியே நிலைமை எப்படி இருக்கு?"

"சார், எல்லாம் main building முன்னாடி நின்னுக்கிட்டு இருக்காங்க" என்றவர் ஆனந்தனிடம் அருகே வந்து "பசங்க சொல்றதும் உண்மை தான் சார், நான் இருக்குற லேப்லயே அடுத்த ஆண்டுக்குத் தேவையான எக்யூப்மெண்ட் எல்லாம் இல்ல" என்றார்.

"பாஸ்கர், ஒன்னும் கவலப்படாதீங்க, இன்னும் கொஞ்ச நேரத்துல நானே அவங்கள வந்து பாக்கிறேன். இன்னிக்குள்ள இந்த ஸ்ட்ரைக்கை முடிக்கணும். கொஞ்சம் கூட்டத்தை மட்டும் கட்டுப்படுத்தி வையுங்க" என்று பாஸ்கரைப் பார்த்துச் சொன்ன ஆனந்தன், அறையில் இருந்த அனைவரையும் பார்த்து, "College Chairman கிட்ட பேசிட்டு, இன்னும் கொஞ்ச நேரத்துல நான் போயி மாணவர்கள்கிட்ட பேசுறேன். இன்னும் மூனு மாசத்துக்குள்ள அவங்க கேட்ட எல்லா வசதியும் செஞ்சு தர உறுதி தரலாம்னு இருக்கேன். கண்டிப்பா, பசங்களும் இதுக்கு ஒத்துப்பாங்கன்னு நினைக்கிறேன்." என்றார். 

அனைவரும் சரியெனக் கூற, ஆனந்தன் எழுந்து தன்னுடைய அறைக்குச் சென்றார். பின்னால் செல்ல முயன்ற பாஸ்கரை அழைத்த கல்லூரி முதல்வர், "பாஸ்கர், என்ன பசங்க பக்கம் போறீங்க போல, இன்னும் கொஞ்ச நேரம் போனா, எல்லா பசங்களும் கேண்டீன்ல தான் இருப்பாங்க. எனக்குத் தெரியாதா இவனுங்களைப் பத்தி." என்றார். பாஸ்கர், அமைதியாகவே இருந்தார். 

"சரி, நான் சொல்றது படி செய்யுங்க. நான் ஏற்கனவே கேண்டீனை மூடச் சொல்லிட்டேன். நீங்க போயி மூடியாச்சான்னு பாருங்க. பசங்க யாரையும் உள்ளே விட வேண்டாம்." என்றார்.

"ஆனா" எனத் துவங்கிய பாஸ்கரை இடைமறித்து நிறுத்திய கல்லூரி முதல்வர், "ஆனாவெல்லாம் இல்லை, சொல்றதைச் செய்யுங்க பாஸ்கர், நான் ஏற்கனவே செம்ம கோவத்துல இருக்கேன், போங்க" எனக் கூற, பாஸ்கர் உணவகத்துக்குச் சென்றார். 

ஆனந்தன் கல்லூரி தாளாளருக்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருக்க, அவர் இன்னும் ஒரு மணி நேரத்தில் பதில் சொல்வதாகச் சொன்னார். 

மணி 11:30ஐத் தாண்டி ஓடிக் கொண்டிருந்தது. அதுவரை வெயிலில் நின்று கொண்டிருந்த மாணவர் கூட்டத்தில் சிலர் வெயில் தாளாமல் அவதியுற, போராட்டத்தை முன்னின்று நடத்திக் கொண்டிருந்த இரண்டாம் ஆண்டு மாணவர்கள் என்னையும், என்னருகே நின்றிருந்த குமரேசனையும் அழைத்தனர்.  

"டேய் தம்பி, செம்ம வெயிலுடா, இன்னும் ஒரு மணி நேரமாவது கூட்டம் கலையாம இருக்கணும்னா, தண்ணியாவது எல்லாருக்கும் கொடுக்க வேண்டி இருக்கும். கேண்டீன்ல போயி ஒரு கேஸ் வாட்டர் பாட்டில் வாங்கிட்டு வாங்க."

"சரிங்க சீனியர்." என்றபடி அங்கேயே கொஞ்சம் தயங்கி நின்றேன். 

"என்னடா, போயிட்டு வாடா" என்றவரிடம், "சீனியர், 200 ரூபாயாவது ஆகும். கொஞ்சம் காசு குறையுது, அதான்" என்றான் குமரேசன்.

"எவ்ளோடா குறையுது?" 

"200 ரூபாயும் தான் குறையுது." என்றோம் ஒரே குரலில். 

சிரித்துக் கொண்டே, "எங்கிருந்துடா வர்றீங்க ரெண்டு பேரும், வாங்கிக்க, 150 ரூபாய் இருக்கு, மீதி உங்க பசங்ககிட்ட இருக்கும் வாங்கிட்டு போ, டக்குன்னு வாங்கிட்டு வாங்கடா" என்றார் சீனியர்.

பணம் எடுத்துக் கொண்டு உணவகத்தை அடையும் போது, "எங்க தம்பி வர்றீங்க?" என்ற குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்தோம். 

பாஸ்கர் பூட்டிய உணவகத்தின் முன் நின்று கொண்டிருந்தார். 

"எல்லாருக்கும் கொஞ்சம் தண்ணி பாட்டில் வாங்கிட்டுப் போலாம்னு வந்தோம்." என்றான் குமரேசன். 

"கேண்டீன் எல்லாம் மூடியாச்சு. எதுவும் வாங்க முடியாது." என்று பாஸ்கர் சொல்ல, "சரிங்க" என்று குமரேசனை அழைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினேன். 

குமரேசன், "தண்ணி பாட்டில் வாங்கிட்டுப் போகலன்னா, சீனியர் திட்டுவாருடா, என்ன செய்யலாம்?" என்று கேட்க, "இருடா, நம்ம திரும்பிப் போனதாக அவரு நினைக்கட்டும். கேண்டீன் பின்னால போயி மாஸ்டர் கிட்ட கேட்டு, கண்டிப்பா வாங்கிடலாம்." என்றேன். 

சில நிமிடங்களில், உணவகத்தின் பின்னால் நின்றிருந்தோம். "மாஸ்டர், மாஸ்டர்" சற்று குறைந்த குரலில் கூப்பிட, உள்ளே இருந்து எட்டிப் பார்த்தார் மாஸ்டர். 

"தம்பி, ஒன்னும் கொடுக்கக்கூடாதுன்னு சொல்லிருக்காங்கப்பா."

"அண்ணே, எல்லாம் வெயில்ல நின்னுகிட்டு இருக்கோம்ணே. நம்ம ஆனந்தன் சார் வந்து பேசிட்டாருன்னா இன்னிக்கு மதியமே எல்லாம் முடிஞ்சிடும், வகுப்புக்குப் போயிடுவோம். அதுவரைக்கும் தாகத்துக்காவது தண்ணி வேணும் அதான்" என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே, எங்கள் பின்னால் இருந்து, "அதான் தரமுடியாதுன்னு சொல்றாருல்ல, போங்கப்பா." என்றார் பாஸ்கர். 

அங்கிருந்து கிளம்பி வந்து எங்கள் சீனியர்களிடம் சொல்ல, முதலில் ஒன்றிரண்டு பேர் எங்களுடன் வர, சிறிது நேரத்தில் கூட்டத்தின் பெரும்பகுதி உணவகத்தின் முன் நின்றிருக்க, பாஸ்கர் கதவின் முன் நின்று அனைவரையும் உள்ளே விடாமல் தடுத்துக் கொண்டிருந்தார். "தம்பி, சொல்றதைக் கேளுங்க. பிரின்சிபால் சொல்றபடி தான் நீங்களும் செய்யுறீங்க. கேண்டீன் கிட்ட கூட்டம் போடாதீங்க. போங்கப்பா" எனக் கூற, மாணவர்களும் பதிலுக்குப் பதில் பேசிக் கொண்டிருந்தனர்

இதற்கிடையே, கல்லூரி தாளாளரிடம் ஒப்புதல் பெற்று, ஆனந்தன், கல்லூரி முதல்வரோடு மாணவத் தலைவரிடம் பேசுவதற்கு வெளியே வந்தார். அங்கே கூட்டம் கலைந்திருந்ததைப் பார்த்த ஆனந்தன், உணவகத்தின் முன்பு கூட்டத்தைப் பார்த்து அங்கு நோக்கி நடந்து சென்றனர். 

"அதெல்லாம் முடியாது தம்பிங்களா, ஸ்ட்ரைக் முடியுற வரைக்கும் ஒன்னும் கிடையாதுன்னு பிரின்சிபால்  சொல்லிட்டாருப்பா சொல்றதக் கேளுங்க" என்று பாஸ்கர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, கூட்டத்தைச் சுற்றி, பாஸ்கர் நின்றிருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தனர், ஆனந்தனும், கல்லூரி முதல்வரும்.

அதுவரை தனியாக மாணவர்களைச் சமாளித்துக் கொண்டிருந்த பாஸ்கர், ஆனந்தனைப் பார்த்தவுடன் தனக்காகப் பரிந்து பேசுவதற்கு வந்திருக்கிறார் என்று தவறாக நினைத்துக் கொண்டார். பின்னால் கல்லூரி முதல்வர் கண்ணாலே எரிப்பது போல பாஸ்கரைப் பார்க்க, அதுவரை பொறுமையாகப் பேசிக்கொண்டிருந்த பாஸ்கர் தன்னிலை மறந்து, "மொத்தமா வந்து சுத்து போடுறீங்களா? முடிஞ்சா இப்ப வாங்கடா ஒரு அப்பனுக்கு பொ..." என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே முன்னே நின்றிருந்த மாணவர்கள் சரமாரியாக பாஸ்கரை அடிக்கத் துவங்கிவிட்டனர். ஆனந்தனுக்கு அந்த நொடி என்ன நடந்தது என்று தெளிவடைவதற்குள் பல மாணவர்கள் "எப்படி சார் இவரு இப்படி பேசலாம்?" என்று கேட்டபடி முன்னே வர, ஆனந்தனுக்குக் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது என்பது முடியாத நிலைக்குச் சென்றது. 

சிறிது நேரத்தில் உணவக ஊழியர்கள் உதவியோடு, பாஸ்கரைக் காப்பாற்றி அங்கிருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார் ஆனந்தன். முதல்வர் கல்லூரியைக் காலவரையின்றி மூடுவதாகவும், வீட்டிற்குக் கடிதம் வந்ததும் மாணவர்கள் மீண்டும் வரலாம் என்றும் சொல்லி மாணவர்கள் கலைக்கப்பட்டனர். 

பத்து நாட்களுக்குப் பிறகு, கல்லூரி மீண்டும் துவங்கிய போது, "அன்றே நீங்க கேட்டதெல்லாம் செஞ்சு தர நாங்க முடிவெடுத்துட்டோம். ஆனா, நிலைமை கைய மீறிப் போயிடுச்சு. அதனால IDC தரவேண்டியதாப் போச்சு, பாஸ்கர் பேசுனது தப்பு தான். அதுக்கு நான் வருத்தம் தெரிவிச்சுக்குறேன். ஆனா, நீங்களும் அடிச்சிருக்கக் கூடாது. இதுவே இந்த கல்லூரியில் நடக்குற முதலும் கடைசியுமான வன்முறையாக இருக்கட்டும்." என்றார்.

முன்னே நின்றிருந்த மாணவத் தலைவர் மற்றும் அனைத்து வகுப்புகளின் representatives அனைவரும், "நாங்களும் apology letter எழுதிக் கொண்டு வந்திருக்கோம்." என்று தங்களிடம் இருந்த அனைவரும் கையொப்பமிட்ட கடிதத்தை நீட்டினார்கள். 

*****
"வாங்கண்ணே, உள்ள வாங்க" என்று அவரை அழைத்து எனது அறையில் அமர்த்தி தண்ணீர் கொடுத்தேன். "இன்னும் நம்ம காலேஜ்ல தான் இருக்கீங்களா?" என்றேன். சிரித்துக் கொண்டு, "நான் உங்ககிட்ட அப்படி பேசுனதைக் கடைசி வரைக்கும் ஒரு ப்ளாக் மார்க்னு சொல்லி, ரொம்ப நாளைக்கு எனக்கு increment எதுவுமே தராம வச்சிருந்தாங்க. இது எனக்குத் தெரியுறதுக்கு நாலு ஆண்டு ஆச்சு. அப்புறமா வேற கல்லூரிக்குப் போனாலும், எப்படியும் இந்த கதை என் பின்னாடியே தொரத்திட்டு வந்துட்டே இருந்துச்சு. அப்புறம் தான் சென்னைக்கு வந்து அம்பத்தூர் எஸ்டேட்ல வேலைக்குச் சேர்ந்தேன். இப்ப அந்த யூனிட்டும் மூடப் போறாங்க. அன்னிக்கு அந்த College managementக்கு ஆதரவாப் பேசுறேன்னு நெனச்சுக்கிட்டு பேசுன ஒத்த சொல்லு என் வாழ்க்கையே மாத்திப் போட்டுடுச்சு. அந்த கல்லூரி management என்னைக் கைவிட்டுடுச்சு." என்ற பாஸ்கர் சட்டெனக் குலுங்கி அழத் துவங்கினார்.  
 "அண்ணே, என்னண்ணே இது? இருங்க. இது நான் துவங்கியிருக்கிற நிறுவனம் தான். நம்ம குமரேசனும் இங்க தான் இருக்கான். இருங்க கூப்பிடுறேன். நீங்களும் இங்கயே வேலை பாக்கலாம்." என்று தொலைபேசியில் குமரேசனை அழைத்தேன். பாஸ்கர் அண்ணன் கண்ணில் நீர் வழிந்திருக்க, உதடுகளில் சிறு புன்னகை துளிர் விட்டிருந்தது.

- முடிவிலி



ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும்.

ஒருவன் பயன்படுத்திய வன்சொல் ஒன்றே ஆயினும், அது பாலில் கலந்த நஞ்சு போல அவன் பேசிய அனைத்தையும் கெட்டதாகவே மாற்றி விடும்.




Comments

Popular posts from this blog

அகர முதல - சிறுகதை (திருக்குறள் கதை) குறள் 0001

புறநானூறு பேசும் நீர் மேலாண்மை

வான்கா - Vanka