போவட்டும் வுடு - குறள் கதை
போவட்டும் வுடு
"டேய் சம்பத்து" என்றார் பெருமாள்.
"நம்ம தொழிலுக்குப் புதுசா ஒருத்தன் வேணும்டா. பாக்குறதுக்கு அப்பாவியா, காசு தேவை இருக்குறவனா ஒருத்தன், நம்ம சொல்றத கேக்குறவனா ஒருத்தன்."
"ஏன் ணா, இப்ப இருக்குற பசங்களே நல்லா தானே இருக்குறானுவ? என்ன வந்துச்சுன்னு இப்பப் புது ஆளு எல்லாம்." என்றான் சம்பத்.
காற்றில் தற்போதே அறுக்கப்பட்டிருந்த மரத்தின் மணம் விரவியிருந்தது. சம்பத் அந்த மரக்கடையின் உள் மூலையில் இருந்த பெரிய மேசையின் அருகே நின்றிருக்க, இருந்த ஒரே நாற்காலியில் அமர்ந்திருந்த அண்ணாத்த, "நம்ம ஆளுங்க எல்லாம் பழைய ஆளுங்கடா, பாத்ததும் அண்ணாத்த ஆளுன்னு சொல்லிடுறாங்க. செம்ம ரிஸ்க்டா. சில பேரு மேல எனக்கு நம்பிக்கை போயிட்டு இருக்கு. என் பேரை வச்சிக்கிட்டு அவனுங்களா சொல்லாததை எல்லாம் செஞ்சுட்டு இருக்கானுவ."
"யாருண்ணா? சொல்லுங்க"
"அதெல்லாம் நான் பாத்துக்குறேன். நான் சொன்னத மட்டும் செய். இந்த ஏரியா பையன் வேணாம். நம்ம கதை எல்லாம் இங்க எல்லாத்துக்கும் தெரிஞ்சுருக்கும். வேற ஏரியால இருந்து பாரு. காசு இல்லாதவனா பாரு. அவனுங்க எந்த கேள்வியும் கேக்க மாட்டானுவ"
"செஞ்சுடலாம்ணா. ஒரு அஞ்சு நாள் டைம் கொடுண்ணா" என்ற சம்பத் அந்த இடத்தை விட்டு நகர்ந்த நேரம், அரசு மருத்துவமனையில் பொதுப்பிரிவு படுக்கையில் கிடத்தப்பட்டிருந்த அப்பாவின் அருகில் அவரைப் பார்த்தபடி அமர்ந்திருந்தான் கண்ணன். அரை மயக்கத்தில் இருந்த அப்பாவை அவனது கண்கள் பார்த்துக் கொண்டிருந்தாலும், அவனது மனமோ அடுத்து என்ன செய்யப் போகிறோம், அப்பா இதுவரை சுமந்து கொண்டிருந்த இந்த குடும்பத்தை - அம்மா இல்லாத தன் தம்பி தங்கைகளை எப்படி காப்பாற்ற போகிறோம் என்று அலைபாய்ந்து கொண்டிருந்தது. பாதியில் நின்ற தனது பத்தாவது படிப்பு எந்த வகையில் தனக்கு உதவிடும் என்று நினைக்கையில் இன்னும் எதிர்காலம் தரும் அச்சம் அவன் கண்ணைக் கட்டியது.
"டேய் கண்ணா" என்ற சிறு சத்தம் அவன் காதில் விழுந்தாலும், அவனது விழிகள் அவனது அப்பாவின் முகத்திலேயே நிலைகுத்தி நின்றிருந்தன. அவனது தோள்களை உலுக்கியபடி, மீண்டும் "டேய் கண்ணா, எவ்ளோ நேரமாடா உன்ன கூப்பிடுறது? எங்கடா இருக்க?" என்றான் கண்ணனின் வீட்டில் இருந்து நான்கு வீடு தள்ளி வசிக்கும் குரு.
ஓரத்தில் கலங்கியிருந்த கண்களைத் துடைத்துக் கொண்டே, "குருண்ணா, வாங்க." என்றான் கண்ணன்.
"அப்பாக்கு எப்டிறா இருக்கு?" எனக் கேட்ட குருவின் கேள்விக்கு அப்பாவை நோக்கிய பார்வையே கண்ணனின் விடையாய் இருந்தது.
சில மணித்துளிகள் அமைதியாய்க் கடந்தன. கண்ணனின் தோளில் கை வைத்து, 'வெளியே போயி பேசுவோம்' என்று குரு கைகளைக் காட்ட, குருவும், கண்ணனும் மருத்துவமனையின் வாசலுக்கு வந்தனர்.
"என்னடா செய்யப் போற? உன் தம்பி, தங்கச்சி எத்தனாவது படிக்குறாங்க?"
"தம்பி, இப்ப எட்டாவது, தங்கச்சி நாலு. படிப்புக்குக் கூட இங்க அங்கன்னு வாங்கிக்கலாம். ஆனா, தினம் சாப்பாட்டுக்கே என்ன செய்யுறதுன்னு தெர்லண்ணா, அப்பாக்கு இன்னும் செலவு ஆகுமோ அதுவும் தெர்ல. நான் பத்தாவது இந்த முறையாவது முடிச்சிரலாம்னு பாத்தேன். அதுவும் இழுத்துக்கிட்டே போவுது. அண்ணா, எனக்கு ஏதாவது வேலை இருந்தா வாங்கித் தர்றியாண்ணா?"
தன்னுடைய சட்டைப்பையில் இருந்து 500 ரூபாய் எடுத்து, கண்ணனின் கையில் கொடுத்து, "முதல்ல தம்பி தங்கச்சிக்கு சாப்பாட்டுக்கு எதாவது வாங்கிக் குடுடா, நீ சாப்டியாடா?" என்றார் குரு.
"நான் சாப்டுறது இருக்கட்டும்ணா. எனக்கு எதாவது வேலை வாங்கிக் குடுண்ணா" என்றான் கண்ணன்.
"பாக்குறேன்டா. யார்கிட்டயாவது கேட்டுட்டு சொல்றேன்." என்ற குரு, அவனை அருகில் இருந்த தேநீர்க்கடைக்கு அழைத்துச் சென்றார்.
****
"எந்த கெட்ட பழக்கமும் கெடையாது, நல்ல பையன். தம் இல்ல, தண்ணி இல்ல, தங்கமான பையன், அப்பாக்கு ஆக்சிடென்ட் ஆனதுல தம்பி தங்கச்சி எல்லாத்துக்கும் இப்ப இவன் தான். வேலை வேணும்னு கேட்டான், கரெக்டா நீயும் யாராச்சும் ஆளு இருக்கானான்னு கேக்குற?" அலைபேசியில் அழைத்திருந்த சம்பத்திடம் சொல்லிக் கொண்டிருந்தார் குரு.
"பேரு என்ன சொன்ன?"
"கண்ணன்."
"வந்துட்டுக் காலை வாரிட மாட்டான்ல?"
"சம்பத்து, நம்ம பய, இப்ப காசுக்கும் நெறைய தேவை இருக்கு அவனுக்கு. நீ எந்த வேலை கொடுத்தாலும் செய்வான்."
"சரி, நாளைக்கு மரக்கடைக்கு வரச் சொல்லு."
"சரி." என்று அழைப்பைத் துண்டித்துவிட்டு, கண்ணனைப் பார்க்க அவனது வீடு நோக்கிச் சென்றார் குரு.
****
அடுத்த நாள் காலை பத்து மணிக்கு அந்த மரக்கடை முன் சில நொடி நின்று பார்த்து விட்டு, சற்று தயக்கத்துடன் உள்ளே சென்றான் கண்ணன். 12 அடி நீளம் கொண்ட பெரிய தேக்கு மரப்பாளங்கள் முக்கோண வடிவில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அதைக் கடந்து உள்ளே சென்ற கண்ணனுக்கு அந்த மரம் அறுத்த வாசனை புதிதாக இருந்தது. ஆங்காங்கே அடுக்கி வைக்கப்பட்டிருந்த மரச்சட்டங்களை வியந்து பார்த்துக் கொண்டிருந்தவனை, "என்னப்பா வேணும்?" என்ற கேள்வி திடுக்கிட்டுத் திரும்ப வைத்தது.
"கேக்குறன்ல சொல்லுப்பா, என்ன வேணும்?"
"குரு அனுப்பி வச்சாரு, சம்பத் அண்ணனைப் பாக்கணும்." என்றான் கண்ணன்.
"நான் தான் சம்பத், உன் பேரு?"
"கண்ணன், குரு அண்ணன் உங்ககிட்ட பேசுனேன்னு சொன்னாரு"
"ஆங், ஆமாமா. புதுசா வேலைக்கு நான் தான் குருகிட்ட கேட்டிருந்தேன். வா, அண்ணன்கிட்ட கூட்டிட்டுப் போறேன்," என்ற சம்பத் முன்னே செல்ல, பின் தொடர்ந்தான் கண்ணன்.
மரச்சட்டங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அடுக்குகள் எல்லாம் கடந்து பின்னால் இருந்த பெரிய அறையில் அமர்ந்திருந்தார் பெருமாள். கையில் இருந்த அலைபேசியில் கேண்டி கிரஷ் விளையாடிக் கொண்டிருந்தவர், தன்னை நோக்கி சம்பத்தும், உடன் புதிதாக ஒரு இளைஞனும் வருவதைப் பார்த்து, அலைபேசியை அணைத்து மேசையில் வைத்தார்.
"சம்பத்து, யாருப்பா இது?"
"நீங்க கேட்டிருந்தீங்க இல்லையா? வேலைக்குப் புது பையன்."
கண்ணன் பெருமாளைப் பார்த்து வணக்கம் கூற, "ஆங், பேரு என்னப்பா?"
"கண்ணன்யா, பத்தாவது வரைக்கும் படிச்சுருக்கேன். ஆனா, இன்னும் முடிக்கல."
"என்ன வேலை கொடுத்தாலும் செய்வியா?"
முதலில் தலை ஆட்டினான் கண்ணன். "வாழ்க்கையிலேயே முதல் தடவையா மரக்கடையையே இன்னிக்குத் தான் பாக்குறேன். மர வேலை எதுவுமே எனக்குத் தெரியாதுய்யா. இருந்தாலும், கத்துப்பேன்யா."
பெருமாள் சிரிக்கத் துவங்க, சம்பத்தும் அந்த சிரிப்பில் இணைந்து கொண்டான். கண்ணனுக்கு எதற்கு சிரிக்கிறார்கள் என்று விளங்கவில்லை எனினும், முகத்தில் மெலிதாகச் சிரித்து வைத்தான். "உனக்கு மரக்கடைல வேலைன்னு யாரு சொன்னது?" என்ற பெருமாள், சம்பத்தை நோக்கி, "சொல்லிக் கூட்டியாரலையா?" என்று கேட்டார்.
கண்ணன் முகம் என்ன பேசுகிறார்கள் என்று புரியாததால் எந்த உணர்வும் இல்லாமல் வெற்றாக இருந்தது. பெருமாள் தொடர்ந்தார்,
"அப்பா அம்மா என்ன பண்றாங்கப்பா?"
"அம்மா இறந்துட்டாங்க, அப்பா டிரைவரா இருந்தாரு, ஒரு ஆக்சிடெண்ட்ல அடிபட்டு இப்ப ஆசுபத்திரியில இருக்காரு. அதனால தான் நான் வேலைக்கு வந்தேன்."
"இந்த பாரு, தம்பி, இங்க மரக்கடைக்கு எல்லாம் ஆளு இருக்கு. ஆனா, சில பொருள் கை மாத்துறதுக்கு நம்பிக்கையான ஆளு வேணும். என் ஆளுன்னு வெளியில தெரியக் கூடாது." என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே கண்ணனுக்குப் புரிந்து விட்டது.
"ஐயா, நீங்க தப்பா நினைக்கலைன்னா நான் ஒன்னு சொல்லட்டுங்களா?" என்றான் கண்ணன் இடைமறித்து.
"என்ன தம்பி, சொல்லு."
"எனக்கு இந்த வேலை வேணாங்க. இனிமே கூடுதலா நீங்க எதுவும் சொல்ல வேணாம். அதைப் பத்தி நான் தெரிஞ்சுக்கவும் விரும்பல. நான் படிப்புல தான் கோட்டை விட்டுட்டேனே தவிர, வெளியில எங்க வேணும்னா கேட்டுப் பாருங்க, கண்ணன் நல்லவன்னு சொல்லுவாங்க. நான் அப்படியே இருக்கணும்னு நெனக்கிறேன். அப்பா, எங்க குடும்பத்து நெலமை இதெல்லாம் சமாளிக்க எனக்கு வேலை வேணும் தான். ஆனா, இந்த வேலை வேணாம்யா."
சம்பத், "தம்பி, நீ எங்க இருக்க? எல்லாம் எங்களுக்குத் தெரியும், தெரியும்ல."
கண்ணன் சம்பத்தைப் பார்த்து, "தெரியும். இருந்தாலும், என்னோட முடிவு இது தான். அதனால ஐயா மேற்கொண்டு ஏதும் சொல்றதுக்குள்ள எதுவும் சொல்ல வேணாம்னு தடுத்தேன். இப்பவும், நீங்க என்ன ஒன்னும் செய்ய மாட்டீங்கன்னு என்னால சொல்ல முடியாது. ஆனா, நான் மனசுக்குக் கட்டுப்பட்டவன். என் மனசுக்கு நல்லவனா இருக்கணும்னு நெனக்கிறேன். என்னை விட்டுடுங்க. என் குடும்ப நெலமை தெரிஞ்சு வேலை தர்றேன்னு சொன்னதுக்கு நன்றி, நான் வர்றேன்யா" என்று சொல்லிவிட்டு நடக்கத் துவங்கினான் கண்ணன்.
"டேய் நில்லுடா, பேசிக்கிட்டு இருக்கும் போதே பாதியில..." என்று சொல்ல வந்த சம்பத்தைத் தடுத்த பெருமாள் சொன்னார்.
- முடிவிலி
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும். (131)
ஒருவர்க்கு உயர்வு தருவது ஒழுக்கம் தான். அதனாலேயே அது அவருடைய உயிரை விட மேலான ஒன்றாகக் கருதப்படுகிறது.
Comments
Post a Comment