சிறுகதை 3 : கோடுகள் - Short Story 3 Lines
14-12-2003 என்று காட்டிக்கொண்டு மின்விசிறி காற்றில் ஆடிக்கொண்டிருந்த காலண்டர் தாளுக்கு மேலே முருகனும் பிள்ளையாரும் தோள் மேல் கைப் போட்டுக் கொண்டு சிரித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் சிரிப்பைக் கண்டு மேலும் சோகமாய் அமர்ந்திருந்தான் சுந்தர். உற்சாகமாய் கூப்பிட்டுக் கொண்டே உள்ளே வந்தார் அப்பா. "சுந்தர், இண்டர்வியூக்கு லெட்டர் வந்திருக்குடா..." உள்ளே மகிழ்ந்தாலும், வெளியே காட்டிக் கொள்ளாமல் "எந்த இண்டர்வியூப்பா...?" என்றான் சுந்தர். "கத்தார் எலெக்ட்ரிசிடிக்குடா... இன்னும் மூணு நாளுல இண்டர்வியூ... மும்பையில..." சுந்தருக்கு நான்கு மாதம் முன்பு செய்தித்தாள் பார்த்து, கத்தார் எலக்ட்ரிசிடிக்கு அப்ளை பண்ணியதை மறந்தே போயிருந்தான். "மூணு நாள்லயா... எப்படி போறதுப்பா...?" "கிளம்புடா... உடனே ஸ்டேஷன் போயி டிக்கெட் புக் பண்ணிட்டு வாடா... சீக்கிரம்...." அப்பாவிடம் பணம் வாங்கிக் கொண்டு, சென்ட்ரலுக்குக் கிளம்பினான் சுந்தர். உற்சாகமாய் சென்ற சுந்தர், துவண்டு போய்த் திரும்பி வந்தான். அப்பா "என்ன ஆச்சுடா? டிக்கெட் கிடைச்சுதா?"