ஒத்த ரூவா - குறள் கதை


ஒத்த ரூவா
- முடிவிலி





மணல் மட்டும் பாதி ஆற்றிலே இருக்க, எங்கோ ஒரு ஓரத்தில் கொஞ்சம் மட்டும் தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கும் திருச்சி நகரத்தின் விடியாத காலைப் பொழுதில், நேற்று பகலில் இந்த ஊரிலா அவ்வளவு வெயில் சுட்டெரித்தது என ஐயமுண்டாக்கும் வகையில் குளிர்ந்த தென்றல் வீசிக் கொண்டிருந்தது. ஆவின் பால் வண்டிகளும், செய்தித் தாள்களின் கட்டுக்களை மொத்த விற்பனையாளர்களிடத்தில் கொண்டு சேர்த்துக் கொண்டிருந்த பின்புறம் மூடிய டெம்போக்களும், சென்னையிலிருந்து மக்களைச் சுமந்து வந்து சூரியன் முளைப்பதற்குள் திருச்சியில் சேர்க்கும் ஆம்னி பேருந்துகள் தவிர பெரிதும் நடமாட்டமில்லாத நேரம், என்றும் இல்லாத அளவுக்கு, திருச்சி மத்திய சிறைச்சாலையில் அலங்கார வேலைகள் நடந்து கொண்டிருந்தன. 

வார்டன்கள் கைதிகளைக் கொண்டு, ஆங்காங்கே இடங்களைத் தூய்மை படுத்துவதும், முதன்மை அலுவலறையில் வண்ணநாடாக்கள் கொண்டு ஓட்டுவது என சிறைச்சாலையே தூங்காமல் விழிப்புடன் உழைத்துக் கொண்டிருந்தது. துணை சிறை அலுவலர் செல்வதுரை, நடக்கும் வேலைகளை மேற்பார்வையிட்டவாறு, "வர்ற புது ஜெயிலர், இந்த வரவேற்பு பாத்து அப்படியே அசந்து போயிடணும்டே" என்று சொல்லிச் சிரித்துக் கொண்டவர், B பிளாக் சென்று திரும்பியபோது, திடீரென மூக்கைப் பொத்தியவராய், "நல்லசாமீ..." என்றார். பின்னாலே நடந்து வந்த வார்டன் நல்லசாமி, "சார், என்ன சார்?" எனக் கேட்க, "இன்னிக்காச்சும் அந்தக் கக்கூஸ கழுவுங்கய்யா, வர்ற முதல் நாளுல அவருக்கிட்ட திட்டு வாங்க எனக்கு விருப்பம் இல்ல" என்று சொல்ல, வார்டன், யாரோ இருவரைக் கூட்டிக் கொண்டு அந்த வேளையில் இறங்கினார். செல்வதுரை "இன்னும் ரெண்டு வருசம் சர்வீஸ் எப்படியாவது யாரு வாயுலயும் விழாம போயிடணும்டே, தொர, வர்றவரு எப்படி இருக்கப் போறாரோ?" என்று தனக்குள்ளேயே முனுமுனுத்துக் கொண்டார்.


சிறையின் எல்லா பகுதிக்கும் சுற்றி விட்டு, வேலைகளைப் பார்த்து ஆங்காங்கே குறைகளையும் சொல்லி, செல்வதுரை அலுவலகத்துக்கு வந்தபோது, உதவி சிறை அலுவலர் வின்சென்ட் அவர் முன் வந்து salute அடித்தார்.

"வாப்பா வின்சென்டு, இவ்ளோ வெரசா வந்துட்ட?" என்றார் சிரித்துக் கொண்டே.

"சார், மூனு மணி வரைக்கும் இங்க தான் சார் இருந்தேன். இப்ப தான் வீட்டுக்குப் போயிக் குளிச்சுட்டு வந்தேன்." என்று சொன்னவர், இன்னும் அருகே வந்து, "சார், ராக்போர்ட் அஞ்சே காலுக்கு வந்துடும். நெட்ல running status பாத்துட்டேன். on time. நீங்க போயி ஜெயிலரைக் கூட்டிட்டு வந்துடுங்க. நான் இங்க மத்த ஏற்பாட்டெல்லாம் பாத்துக்குறேன்." என்றார்.
கையில் கட்டியிருந்த timexஐப் பார்த்த செல்வதுரை, "இன்னும் 25 நிமிசம் தான் இருக்கு, நல்ல வேளை சொன்ன, வின்சென்டு" என்று சொல்லிவிட்டு, வாசலில் நின்ற இன்னோவா நோக்கி நடந்தார்.

***

திருவரங்கம் வரை சரியான நேரத்தில் வந்த மலைக்கோட்டை விரைவு வண்டி, பின்பு signalக்காகக் காத்திருந்ததில் இருபது நிமிடம் தாமதமாக வந்து சேர்ந்திருந்தது.  HA1 கோச்சில் இருந்து இறங்கிய சிறை அலுவலர் செந்தில்குமாருக்கு வயது நாற்பத்து ஐந்தைத் தொட்டிருந்தாலும், பார்க்க ஐந்து வயது குறைக்க முயன்றிருப்பது நன்கு தெரிந்தது. தனக்காகச் சீருடையில் காத்திருந்த செல்வதுரை மற்றும் ஓட்டுனர் இருவரையும் பார்த்து, அவர்களை நோக்கி வந்தவரைப் பார்த்த இருவரும் salute அடிக்க, செந்தில்குமார், "ஏன் publicல இதெல்லாம்? Good Morning, I am Senthilkumar,  நீங்க?" எனக் கேட்டார்.

அவரின் பார்வை தானாக, செல்வதுரையின் name badge நோக்கிச் செல்ல, அதைப் படித்துக் கொண்டிருக்கும்போதே, "செல்வதுரை, deputy jailer, இவரு நம்ம டிரைவர் பெரியசாமி" என்று சொல்லி, பெரியசாமியை நோக்கி, "சாரோட luggage எடுத்துக்கோங்க" என்றார்.

"No, No, பெருசா லக்கேஜ் இல்ல, அடுத்த வாரம் தான் family வர்றாங்க, இந்த ஒரு பேக் தான்" என்று சொல்லியவாறு, சற்று சுற்றிப் பார்த்தவராய், "இங்க திருச்சி ஸ்டேஷன்ல ஆவின் பூத்ல tea செம்மயா இருக்கும்னு கேள்விப்பட்டிருக்கேன். டீ குடிப்போமா?" என்றார். செல்வதுரையும், பெரியசாமியும் வியப்பாய்ச் சில நொடிகள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

இஞ்சி போட்ட தேநீரில் ஆவியை ஊதியபடி உறிந்து கொண்டிருந்த செல்வதுரையின் மொபைல் அதிர்ந்தது. எடுத்துக் காதுக்குக் கொடுத்தவர், "சொல்லு வின்செண்டு, எல்லாம் ரெடியா?" என்று கேட்க, அப்புறத்தில் வந்த பதிலுக்கு, ம், ம் என்றவர், "வந்துகிட்டே இருக்கோம், இன்னும் கால் மணி நேரத்துல அங்க இருப்போம்" என்று கூறி மொபைலை வைத்தார்.

தன்னையே பார்த்துக் கொண்டிருக்கும் செந்தில் குமாரிடம், "நம்ம அசிஸ்டெண்ட் ஜெயிலர் வின்சென்ட் சார், ஏற்பாடெல்லாம் முடிஞ்சுதான்னு கேட்டுட்டு இருந்தேன்" என்றார்.

"எதுக்கு ஏற்பாடு?" என்றார் செந்தில்குமார்.
"உங்களுக்காகத் தான், உங்களை வரவேற்க" என்று செல்வதுரை சொல்ல, செந்தில்குமார் சிரிக்கத்தொடங்கினார்.
"நீங்க எப்படி வேலை செய்றீங்களோ, அப்படித்தான் நானும் வந்திருக்கேன். எதுக்கு இந்த வரவேற்பு எல்லாம்" என்று சொல்லி மீண்டும் சிரித்தார். தேநீர் குடித்து நிலையத்திலிருந்து வண்டிக்கு வருவதற்குள், தொடர்ந்து பேசி, அவரை வரவேற்பதற்காக என்னென்னவெல்லாம் செய்திருக்கிறோம் என்று செல்வதுரை சொல்லிக் கொண்டிருக்க, இன்னோவா மூவரையும் ஏந்திக் கொண்டு புறப்பட்டு, TVS Tollgate வந்து airport சாலையின் பக்கமாகத் திரும்பிச் சென்றது.

Tollgate தாண்டியதும், வின்செண்ட்டுக்கு அழைத்த செல்வதுரை, "டோல்கேட் தாண்டியாச்சு, வந்துக்கிட்டே இருக்கோம்." என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தார். சில நிமிடங்களில், திருச்சி மத்தியச்சிறைக்குள் இன்னோவா நுழைந்து, பெரிய கதவுக்கு முன் சென்று நிற்க, சிறையில் பணிபுரியும் அனைவரும் வந்து புதிய சிறை அலுவலரைக் காண ஆவலாய் நின்று கொண்டிருந்தனர்.

செந்தில்குமார் வண்டியிலிருந்து இறங்க, வின்சென்ட் மாலையைக் கொண்டு வர, அதை வாங்கி செல்வதுரை புதிய சிறை அலுவலருக்கு இட, அனைத்து சிறை ஊழியர்களும் கைதட்டி வரவேற்றனர். 
செல்வதுரை ஒவ்வொருவராய் அறிமுகப்படுத்த, சிரித்த முகமாய் ஒவ்வொருவருக்கும் கை கொடுத்தார் செந்தில் குமார்.


அருகில் இருந்த செல்வதுரை, "உள்ள வாங்க, நம்ம கைதிகள் எல்லாரையும் பாக்கலாம்" என்றார்.

jailor வருவதைக் கண்ட தலைமை வார்டன் சிறு ஓசை எழுப்ப, அனைத்து கைதிகளும் எழுந்து நின்றனர்.  செல்வதுரை முன்னே நடந்து செல்ல, அவரின் பின் செந்தில்குமார் நடந்து வந்து கைதிகளின் முன் நின்று, "உட்காருங்க" என்று சொல்ல, எல்லோரும் அவரவர் இடத்தில் அமர்ந்தனர்.

"இந்த அளவுக்கு வரவேற்பையும், ஏற்பாட்டையும் நான் எதிர்பாக்கல. எனக்காக நிறைய உழைச்சிருக்கீங்க. பெருமையா இருக்கு. என்னோட அதிகாரத்திற்குட்பட்டு, என்ன செய்ய முடியுமோ கண்டிப்பா செய்வேன். இனிமே இங்க தானே இருக்கப் போறேன். அடிக்கடி பார்ப்போம்" என்று சொல்லி, செல்வதுரையைப் பார்த்து, "காலை சாப்பாட்டு நேரமாச்சுல்ல?" என மெதுவான குரலில் கேட்க, அவரும் ஆமாம் என்பது போல் தலையசைத்தார்.

"சரி, நீங்க எல்லாம் எவ்ளோ நேரமா இப்படி இருக்கீங்கன்னு தெரியல. போயி சாப்பிடுங்க" எனச் சொல்ல, வார்டனின் பின்னால் எல்லா கைதிகளும் செல்லத் துவங்கினர்.  செல்வதுரையைப் பார்த்து, "prisoner details file பாக்கணும்" என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே, ஒருவர் இடுப்பில் காதித் துண்டு ஒன்றைக் கட்டிக் கொண்டு, ஒரு தட்டில் திருநீறை வைத்து, "ப்ரஸாதம் எடுத்துக்கோங்கோ" என்றார்.

சில நொடிகள் தட்டைப் பார்த்த செந்தில்குமார், தட்டை வைத்திருந்தவரின் முகத்தையும், பின் முழு உருவத்தையும் மேலும், கீழுமாகப் பார்த்தார். படிய வாரி, பின்னால் தள்ளப்படிருந்த முடி, தாராளமாக ஏறியிருந்த நெற்றி முழுதும் திருநீற்றுப்பட்டை, மேலுடம்பில் சட்டையில்லாத குறைக்கு நான் மட்டும் போதுமே என்று சொல்லிக் கொள்வதாய் இடது தோளில் வலது இடுப்புக்குச் சென்ற நூல், அதன் கீழே கதர் துண்டு ஒன்றை இடுப்பில் சுற்றப்பட்டிருந்தது. அவர் நின்ற இடத்திற்குப் பின்னால் இருந்த மரத்தடியில் இருந்த சிறு பிள்ளையார் சிலை கோயிலாக்கப்பட்டிருந்தது.

மீண்டும் ஒருமுறை, "முதல் முறையா வந்திருக்கீங்கோ, ப்ரஸாதம் எடுத்துக்கோங்கோ" என்றார். செந்தில்குமார் திருநீறை எடுத்துப் புருவங்களின் நடுவே சின்னதாய்த் தீட்டிக் கொள்ள, நீட்டப்பட்ட தட்டு இன்னும் நீட்டப்பட்டதாகவே இருந்தது. பின்னால் இருந்த செல்வதுரை, "சார்" என்று சொல்லியபடி, தன் சட்டைப்பையில் கையை வைக்க, அவரைத் தடுத்த செந்தில்குமார், தனது சட்டைப்பையில் இருந்து இரண்டு 100 ரூபாய் நோட்டுக்களை எடுத்து தட்டில் போட்டார்.

"க்ஷேமமா இருங்கோ" என்று சொல்லிவிட்டு, தட்டில் இருந்த ரூபாயை எடுத்துக் கொண்டு, அந்தக் கோயில் நோக்கிச் சென்றார் அவர்.

"துரை சார்..."

"என்ன சார், நீங்க என்னைப் போயி சார் போட்டுக்கிட்டு..." என்றார் செல்வதுரை.

"வயசுன்னு ஒன்னு இருக்குல்லங்க" என்ற செந்தில்குமாரும், செல்வதுரையும் அலுவலகம் நோக்கி நடக்கத் துவங்கினர். அலுவலகத்துக்குள் நுழைவதற்கு முன், "பரவால்ல சார், இந்தச் சின்னக் கோயிலுக்குக் கூட வெளியிலேந்து பூசாரில்லாம் கூட்டிட்டு வந்திருக்கீங்க? இன்னிக்கு ஒரு நாள் permission ஆ?"  என்றார் செந்தில்.

"என்னது permission ஆ? அவரு B ப்ளாக்ல இருக்குற கைதி சார், வேலை பாத்த இடத்துல ஆபீஸ் பணத்தைத் திருடி, பொய்க்கணக்கு எழுதி, பங்கு போட்டதுல மோசடி செஞ்சு, இவரு அப்ரூவர் ஆகி, மத்தவனை மாட்டி விட நெனச்சப்ப, அவன் அப்ரூவர் ஆகி இவனை மாட்டி விட்டான், தப்பிக்க முடியாத அளவுக்கு, இப்ப கம்பி எண்ணிட்டு இருக்காரு" என்று செல்வதுரை சொல்ல, செந்தில் மீண்டும் அந்தக் கோயில் நோக்கிப் பார்க்க, துண்டைக் கழற்றியவர், மரத்தில் இருந்த தனது கைதிச் சீருடையை எடுத்துப் போட்டுக் கொண்டிருந்தார்.

செல்வதுரையிடம், "அவரை என்னை வந்து பார்க்கச் சொல்லுங்க" என்று உள்ளே செல்ல, செல்வதுரை நல்லசாமியிடம் அந்தக் கைதியை அழைத்து வரச் சொன்னார்.

சற்று நேரத்தில், "கூப்டேளா சார்?" என்று சொல்லியபடி உள்ளே நுழைந்தார் அவர்.

"ஆமா, வாங்க" என்ற செந்தில் இப்போது அவரைப் பார்த்தார். 411 என்று எண்ணிட்ட சட்டை, முட்டி வரைக்கும் இருந்த கால் சட்டையில் நின்றிருந்தார்.

"சார், என் பேரு..." என்று துவங்க இருந்தவரை கையைக் காட்டி இடைமறித்த செந்தில், "நான் தட்டுல போட்டேன்ல, அந்த இருநூறு ரூபா, அத எடுங்க" என்றார்.

"ஏன் சார்?"

"எடுங்களேன், சொல்றேன்"

கால்சட்டையின் சிறிய பையில் செருகியிருந்த இருநூறு ரூபாயை எடுத்த அவர், "இதோ இருக்கு, சார்" என்றார்.

அதைக் கையில் வாங்கி விட்டு, அதே கையில்  ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து, "இது போதும், போங்க" என்றார் செந்தில்.

முகம் கடுத்து, முனமுனத்துக் கொண்டே சென்றவரைப் பார்த்துக் கொண்டிருந்த செந்தில், "வெளியில திருடிட்டு மாட்டுனவன் உள்ள வந்தும்  திருந்துறானா பாரு, இதுல கைதிங்க வரிசையில நிக்காம தனியா வந்து ப்ரஸாதம் வேற" எனச் சொல்லி, செல்வதுரையைப் பார்த்து, "இனிமேல் கோயில் பக்கம் இவரு வரமாட்டாரு, வேற கைதிங்க யாரும் அபிஷேகம் செய்ய யாராச்சும் ரெடியான்னு கேளுங்க" என்று சொல்ல, "Yes, sir" என்று விரைப்பாக வந்தது பதில்.

அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும்
களவறிந்தார் நெஞ்சில் கரவு.

இயல்: துறவறவியல் 
அதிகாரம்: கள்ளாமை 
குறள் எண்: 288

நேர்மையான வழியில் செல்பவரின் நெஞ்சில் அறம் எப்போதும் இருப்பதைப் போல, களவாடுவதையே குணமாய்க் கொண்டவரின் நெஞ்சில் வஞ்சககுணமே குடியிருக்கும்.







   


Comments

Popular posts from this blog

அகர முதல - சிறுகதை (திருக்குறள் கதை) குறள் 0001

புறநானூறு பேசும் நீர் மேலாண்மை

வான்கா - Vanka