அமைதிப் புன்னகை - குறள் கதை
அமைதிப்புன்னகை
- முடிவிலி
வெகு தொலைவில் இருந்து பறந்து வந்த பறவைக் கூட்டம் ஒன்று மரங்களுக்கு நடுவே இருந்த அமைதியான ஏரியைக் கண்டு, இறங்கி, ஏரிக்கரையில் நின்று உடல் நனைத்த படியும், நீர் குடித்தபடியும் இருந்ததால் அதுவரை அமைதியாக இருந்த ஏரியின் பரப்பில் வட்டங்களாய் சிறு அலைகள் தோன்றிக் கொண்டிருந்தன. ஏரியின் மறுகரையில் ஒரு குடிலை ஒட்டிய புல்தரையில் அமர்ந்தவாறு, சிறு அலைகளையும், சிறு அலைகளை உண்டாக்கிக் கொண்டிருந்த பறவைகளையும் பார்த்துக் கொண்டிருந்தார் அருட்கனகர். வெகு நேரம் ஏரியையே புன்னகையோடு பார்த்துக் கொண்டிருக்கும் அருட்கனகரையே பார்த்துக் கொண்டிருந்தான் அவரின் சீடன் சேந்தன்.
அந்தக் குடில், அதைச் சுற்றி இருந்த மயில்கள் விளையாடும் பழத்தோட்டம், எதிரே அமைதியாய் விரிந்திருக்கும் ஏரி, இவை அனைத்தையும் சுற்றி இருக்கும் அடர்ந்த காடு என இவையே இருவரின் உலகமாக இருக்கிறது. சேந்தன் கனகரிடம் அவனது சேர்ந்து நான்கு ஆண்டுகள் ஆகின்றன. சில காலமாய் அவன் மனதில் சில கேள்விகள் அரித்துக் கொண்டே இருக்கின்றன. அதை எப்படியாவது அவரிடம் கேட்டு விடவேண்டும் என்று தான் அவரையே பார்த்துக் கொண்டிருக்கிறான். ஆனால், என்னவென்று அருட்கனகர் கேட்பாரா? இல்லை, இன்று பொழுது ஏரியைப் பார்த்தபடி ஓடிவிடுமா என்று மேலும் பல கேள்விகள் சேந்தனின் மனதில் உதிக்கத் துவங்கின.
சேந்தனுக்கும் இது பழகியே இருந்தது. இந்த நான்கு ஆண்டுகளில் பல நாட்கள் இருவரும் ஒரே குடிலில் இருந்து ஒருவருக்கொருவர் ஒன்றும் பேசாமல் இருந்திருக்கின்றனர். நீர் கொணர்தல், பழம் பறித்தல், உண்ணுதல், மனம் ஒருநிலை எண்ணியிருத்தல் என அந்நாளைய நடவுகள் நிகழ்ந்தபடியே இருக்கும், ஒரு சொல் கூட சொல்லிக் கொள்ளாமல். ஆனால் இன்று, எப்படியாவது பேசி விட வேண்டும் என்று சேந்தன் எண்ணிக்கொண்டிருந்த நேரம், ஏரியின் அக்கரையில் அமர்ந்திருந்த பறவைகள் ஒன்றாக எழுந்து பறக்கத் துவங்க, அருட்கனகரும் எழுந்து குடிலினுள் செல்ல எழுந்தார்.
"ஆசானே, உங்களோடு கேட்கச் சில கேள்விகள் உள, எனது ஐயத்தைத் தாங்கள் போக்க வேண்டும்" என்றான் சேந்தன்.
எழுந்தவர் நின்று "என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த போதே நான் அறிந்து கொண்டேன். ஆயினும், கண்முன் நிகழும் தொடர்நிகழ்வுகள் தரும் அழகியலைக் காணாமல், மனத்தின் ஐயத்திலும், அலைபாயலிலும் மூழ்கித் தவிக்கிறாயே, சேந்தா. என்ன கேள்வி கேட்க வேண்டும்?" என்றபடி குடிலினுள் செல்ல, சேந்தனும் பின் தொடர்ந்தான்.
"நான் இங்கு வந்து உங்கள் சீடனாக இணைந்து நான்கு ஆண்டுகள் ஆகின்றன. நான் எப்போது உங்களைப் போல் ஆவது? உலகம் போற்றும் துறவியாக. தாங்கள் கற்றுத் தந்த அனைத்தும் கற்றுவிட்டேனா? உங்களின் கணிப்பில் நான் தேறுவேனா?" என்று அடுக்கடுக்காய்க் கேட்டவனை, தன் அருகே அமர வைத்து, அவன் முன் கோப்பையை வைத்து, "தேநீர் குடி" என்றார் அருட்கனகர்.
"ஆசானே, இந்தப் பதில் எனக்கும் தெரியும். ஏற்கனவே ஒரு முறை கூறி உள்ளீர். நிறைந்த கோப்பையில் மேலும் தேநீர் ஊற்றமுடியாது. அதனால், தேநீரைக் குடிக்கச் சொல்கிறீர்." என்று தேநீரை எடுத்துக் குடித்தான் சேந்தன்.
கனகர் சிரித்துக் கொண்டார். தனது கோப்பையில் தேநீரை ஊற்றிக் கொண்டவர், "சேந்தா, துறவு என்பது தேர்வு அல்ல. அது ஒரு வழி. ஒருவர் தன் வாழ்வு எந்த வழி செல்ல வேண்டும் என்று தெரிவு செய்து அதற்கான அறவழிகள் தெரிந்து அதன்படி நடக்கும் வழி. இந்த நான்கு ஆண்டுகள் அதனையே தான் தினமும் செய்து வந்துள்ளோம். இதையே எங்கு சென்றாலும் பின்பற்றுவாயாக" என்றார்.
"அப்போது நான் முழுதும் உணர்ந்து விட்டேனா? ஆனால் என் மனம் சிறு சிறு குழப்பங்களுக்கும் ஐயத்தில் ஆழுதே?" என்றான் சேந்தன் குழம்பியவனாய்.
"அப்படி என்ன ஐயம், சேந்தா?" என்றார் கனகர்.
"அனைத்திலும் மனம் ஐயத்திலேயே திளைக்கிறது. தாங்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும், ஏன் செய்கிறீர்கள் என்று கவனித்து வருகிறேன். தற்போது ஏரியின் முன்பு அமர்ந்து அமைதியாக இருந்ததற்கு என்ன காரணம் இருந்து விடப் போகிறது? ஏன் இவ்வாறு அமர்ந்துள்ளார் என்று கூட மனம் கேள்வி கேட்கிறது. உங்களைப் போலவே இருக்கலாம் என்று உங்களைப் போலவே நீண்ட முடியும், தாடியும் வளர்க்கிறேன். ஆனால், அது தேவையா எனவும் மனம் கேட்கிறது? இந்தக் குழப்பங்களுக்கு விடை தான் என்ன?"
"தவம் என்றால் என்ன?" என்றார் கனகர்.
"மனம் ஒருநிலைப் படுத்தல், அலைபாயும் மனத்தை..." என்று சொல்லிய சேந்தன், ஏதோ உணர்ந்தவனாய்ச் சொற்களற்று நின்றான்.
"அதே தான், சேந்தன். மனம் அலைபாய்வதை நிறுத்துவது. சற்று நேரம் முன்பு, பறவைகளால் அலைபாய்ந்த ஏரியைப் பார்த்துக் கொண்டிருந்தது கூட ஒரு தவம் தான். மனம் அந்த ஏரியின் அலைகளுள் தோன்றிய அழகியலில் ஒன்றியைந்து நின்றிருந்தது. அதனால், மகிழ்வு மனத்துள் தோன்றி, முகத்தில் அமைதிப்புன்னகையாகப் பூத்திருந்தது. நாம் செய்யும் மனத்தோடு செய்யும் அனைத்து செயலும் தவமே. எதிலும் அகமகிழ்வடையலாம். நீ முன்பு கூறியவற்றுள் எனைப்போல் நீண்ட முடி என்று கூறிய போது தான், என் புறத் தோற்றம் குறித்து எனக்கே தெரிந்தது. எதை நாம் காண விரும்புகிறோமோ, அதையே நாம் பார்க்கிறோம். மற்றவை, காட்சிப்பிழைகளாகத் தோன்ற மறுத்து விடும். சில நேரம், கண்முன் காண்பது கூட இல்லாத ஒன்று இருப்பதாகக் காட்டும். எனவே, புறத்தோற்றம் என்பது தேவையிலாத ஒன்று. ஆயினும், நமது செயல்கள், உலகினர் பழிக்கும் ஒழுக்கமற்ற செயல்களாக இல்லாது பார்த்துக் கொள்ள வேண்டியது நம் கடமையாகும். இதில் மட்டும் எப்போதும் தெளிவார்ந்தவனாய் இரு. சேந்தா, உன் மனதின் அலைகளை ஒருமுகமாக்கு. உலகோர் பழிப்பவற்றை ஒதுக்கி விடு. வாழ்வின் அழகியலை, ஒழுங்கியலைக் காண முயற்சி செய்." என்று அருட்கனகர் கூறி முடிக்க, சற்று தெளிவு பெற்றவனாய்த் தெரிந்த சேந்தன் முகத்தில் சில நொடிகளில் அடுத்த ஐயக்கோடு தோன்றியது.
அதைக் கண்ட கனகர், "அடுத்து என்ன கேட்கப் போகிறாய் என்று எனக்குத் தெரியும், சேந்தா, அந்த முயற்சி எப்போது நிறைவுறும் என்பது தானே?" என்று கேட்க, ஆமென்பது போல தலையசைத்தான் சேந்தன்.
"சேந்தா, இது ஒரு தொடர் முயற்சி, நானும் முயன்று கொண்டிருக்கிறேன். வாழ்வென்ற பயணத்தில் நாம் காணும், நமக்கு நிகழும் அனைத்திற்கும் ஒரு காரணத்தை அறிய முயலும் தொடர் முயற்சி இது. இதில் வெற்றி தோல்வி என்பது இல்லை. அடைவோமா, முழுதும் தெரிவோமா என்பதும் இல்லை. ஆயினும், இந்த முயற்சி தரும் மகிழ்வே போதுமே." என்று கனகர் சொன்னபோது சேந்தனின் முகத்திலும் அமைதிப் புன்னகை பூத்திருந்தது.
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்த தொழித்து விடின்.
இயல்: துறவறவியல்
அதிகாரம் : கூடாவொழுக்கம்
குறள்: 280
முடி மழித்து மொட்டையிடலும், மிக நீண்டு வளர்த்துக் கொள்ளலுமாகிய புறத்தோற்றம் என்பது தேவையில்லை, ஒரு துறவிக்கு உலகம் பழித்துக் கூறும் தீயொழுக்கம் இல்லாது ஒழித்திருத்தலே சிறப்பாகும்.
Comments
Post a Comment