ம்... - குறள் கதை


ம்...
- முடிவிலி


நான் மெல்லக் கண்களைத் திறந்து கொண்டிருந்தேன். உடலெங்கும் வலியா சோர்வா களைப்பா என்று தெரியாத உணர்வு இருந்தது. நான் எங்கு இருக்கிறேன் என்று கூட எனக்குத் தெரியவில்லை.  அறையின் குளிரில் உடல் முழுதும் சில்லிட்டிருந்தது.

'டக்... டக்... டக்...' என்ற ஒலியுடன் ஏதோ சுழல்வது தெரிந்தது. நான் படுக்க வைக்கப்பட்டிருக்கிறேன். படுத்திருந்தபடி, என் உடல் பகுதியைப் பார்த்தேன், வெள்ளை நிறத்தில் சிறு இளஞ்சிவப்பு நிறப் புள்ளிகள் இடப்பட்ட அங்கி எனக்கு அணிந்திருந்தேன். எழ முயற்சித்த போது, ஒரு குரல் மட்டும் கேட்டது.

"டாக்டர், அவரு முழிச்சுட்டாரு போல... சாமி, அசையாம இருங்க, இன்னும் கொஞ்ச நேரம்... அப்படி அசையாமப் படுத்திருங்க."

'டாக்டர்...' என்று காதில் விழுந்ததும், மருத்துவமனையில் தான் இருக்கிறேன் என்று நினைத்துக் கொண்டேன்.

படித்திருந்தபடியே, "என்ன ஆச்சு? எப்படி இங்க வந்தேன்?" என்றேன்.

"நீங்க ஒரு programல speech கொடுக்க கோயம்புத்தூர் வந்தீங்க, நான் டாக்டர். கதிரேசன், உங்களோட எல்லா பேச்சுக்களும் கேட்டிருக்கேன். நானும் அந்தக் கூட்டத்துக்கு வந்திருந்தேன். ஆனா, பேச்சு தொடங்குறதுக்கு முன்னவே திடீர்னு மயக்கம் போட்டு விழுந்துட்டீங்க, நான் தான் என்னோட hospitalக்குக் கூட்டிட்டு வந்தேன். இன்னும் கொஞ்ச நேரம் அசையாம அப்படியே இருங்க. Head Scan முடிஞ்சதும், உங்களை roomக்கு shift செஞ்சுடுவாங்க. நானே வந்து உங்களைப் பாக்குறேன்" என்று பதில் வந்தது.

'டக்... டக்...' என்ற ஒலி சுழன்று கொண்டே இருந்தது அடுத்த கால் மணி நேரத்துக்கு. அந்த ஒலி நின்று சில நொடிகளில் நான் இருந்த படுக்கை தானாக முன்னே நகர்ந்து, அந்த பெரிய CT scannerல் இருந்து வெளியே வந்து நின்றது. வெளிர்நீல நிற உடையணிந்த ஒரு பெண் சக்கர நாற்காலியைத் தள்ளிக் கொண்டு வந்து, "sir, மெல்ல எந்திரிச்சு உட்காருங்க" என்றாள்.

எழுந்து அமர்ந்தேன்.

"உடம்பில வலியுண்டோ? Dizziness உண்டோ?" என்றாள்.

தலையில மட்டும் வலி இருந்தது. இருந்தாலும், "இல்லம்மா" என்றேன்.

"சரி sir, அப்படியே என் கையப் பிடிச்சு இதுல உட்காருங்க" என்றாள்.

நானே எழுந்திருக்க முயன்றேன். இருந்தும், அவள் என் கைப்பிடித்து, சக்கர நாற்காலியில் அமர வைக்க, "நன்றிம்மா" என்றேன்.

சிரித்துக் கொண்டாள். எனது கால்களை எடுத்து, footrestல் வைத்து விட்டு, நாற்காலியின் பின் சென்று இழுத்து அறையின் கதவினைத் தன் முதுகினால் தள்ளிக்கொண்டு செல்ல, அந்த அறையின் குளிரில் இருந்து வெளியில் இருந்த வெப்பத்தை உணரத் தொடங்கினேன். 

அறையின் வெளியே வந்து சக்கர நாற்காலியைத் திருப்பி, தள்ளிக் கொண்டு செல்ல அடுத்த சில நிமிடங்களில் அறை எண் 232ல் படுக்க வைக்கப்பட்டிருந்தேன்.
"Sir, உங்களைப் பாக்க நிறைய பேர் வந்நுட்டுண்டு. ஆனா, Doctor உங்களை யாரும் disturb செய்யாம் பாடில்லன்னு சொல்லிட்டுண்டு. So, rest எடுங்க, இன்னும் கொஞ்ச நேரத்துல Doctor வந்து உங்களைப் பாப்பாரு" என்று சிரித்தபடி சொல்லிச் சென்றாள்.

பத்து ஆண்டுகள் ஆன்மீகம், ஆசிரமம் எனத் தொடங்கி. ஆனால், எந்த ஒரு சிக்கலிலும் சிக்காதவன் என்ற பெயர் மட்டும் எனக்கு இருந்தது. தேவநாதன் என்ற பெயர் தேவநாதர் ஆகி, தேவநாத அடிகள் ஆகியிருந்தது இந்தப் பத்து ஆண்டுகளில்.
பலர் தந்த கொடையினில் எனக்குத் தெரிந்தவற்றை எடுத்துச் சொல்லி, வழி தேடுபவர்க்கு வழியாகவும், பற்றுக்கோல் போன்று நம்பிக்கை ஊட்டுபவனாகவும் இருக்க வேண்டும் என்றே இத்தனை காலம் இருந்து வந்தேன். அதன் படியே வாழ்ந்தும் வந்திருக்கிறேன். எங்கு பேசச் சென்றாலும், பேசுவதற்கெனப் பணம் இதுவரை பெற்றதில்லை. பணத்திற்காக என் துறவைப் பயன்படுத்தியதில்லை. ஆனால் இந்த இரு வாரம் முன்பு...

"சாமி..." என்ற குரல் கேட்டதில், மனதின் ஓட்டம் அறுபட்டது. மருத்துவர் வந்து அருகில் நின்றார். எழ முயன்ற என்னைப் பார்த்து, "No, No" என்றவர் அருகே இருந்த சிறுநாற்காலியை இழுத்து அதில் அமர்ந்தார். அவர் முகத்தில் கவலைக்கோடுகளை என்னால் பார்க்க முடிந்தது.

"சொல்லுங்க, டாக்டர், எதுவா இருந்தாலும் சொல்லிடுங்க" என்றேன்.

எனது கைகளைப் பிடித்தவர், சற்று பெருமூச்சு விட்டவராய், "scan எடுக்குறப்ப நானும் கூட இருந்தேன். அங்க உங்க கூட பேசுனதும் நான் தான்." என்றார்.

"டாக்டர் கதிரேசன்" என்றேன்.

"ஆமா. Scan பாக்கும்போதே தெரிஞ்சுடுச்சு. இருந்தாலும், இன்னும் நிறைய angle எடுத்துப் பார்த்தேன். Neurosurgeon கிட்டயும் opinion கேட்டுட்டேன். Anaplastic Astrocytoma Grade 3, மூளையோட temporal lobeல. நீங்க மயங்கி விழுந்தப்ப, பின்புறமா விழுந்தீங்க, தலை பின்னாடி அடி பட்டதை நான் பாத்தேன். Just formalityக்குத் தான் Head CT எடுக்கச் சொன்னேன். ஆனா, technician scan பாத்துட்டு உடனே என்னைக் கூப்பிட்டாரு. யாருகிட்ட சொல்லணும்னு சொல்லுங்க. நிறைய பேரு wait செய்யுறாங்க. உங்களோட treatment options என்னன்னுல்லாம் சொல்றேன். நீங்க எதுவும் கவலைப்படாதீங்க, best doctors நான் கூட்டி வர்றேன்" என்று கதிரேசன் பேசியது மெல்ல என் காதில் விழாமல் போய்க் கொண்டிருந்தது. 

***
இரு வாரங்கள் முன்பு,


என்னுடைய ஆசிரமத்தில் அமைதியில் கண் மூடி அமர்ந்திருந்த என்னிடம், எனது சீடரில் ஒருவனான அமுதன் வந்து என்னைக் காண தேசியக் கட்சியில் இருந்து ஒருவர் வந்துள்ளதாகக் காதில் கூற, வரச் சொன்னேன்.

வெள்ளைச் சட்டையும், வெள்ளை pantம் அணிந்திருந்த அவரின் வலது கையில் துளசி மாலை சுற்றப்பட்டிருந்தது. வணங்கியபடி வந்த அவரின் முகத்தில் சிரிப்பும், நெற்றியின் கீழிந்து மேலாய்ச் செந்தூரமும் மின்னின. அருகே வந்தவர், நேரே என் காலில் விழ, "நல்லாருங்க, எழுந்திருங்க" என்றேன். எழுந்தவர் நிற்க, அமரச் சொன்னேன்.

"சொல்லுங்க" என்றேன்.

"சாமி, உங்களைப் பத்தி நெறையக் கேள்விப்பட்டிருக்கேன். ரெண்டு வாரத்துல கோய்ம்பத்தூர்ல ஒரு கூட்டம் இருக்கு. நீங்க வந்து பேசோணும். கட்சிக்கும், கூட்டத்துக்கும் சம்பந்தம் இல்ல, அதனால, மறுக்காம ஒத்துக்கணும்" என்று சொல்ல, நானும் சரி என்று சொன்னேன்.

"அப்படியே, சாமீ..." என்று இழுத்தார்.

"என்ன தயக்கம், சொல்லுங்க" என்றேன்.

"ஒரு உதவி..." என்று என்னையும், அமுதனையும் மாறி மாறிப் பார்த்தார். நான் அமுதனைப் பார்க்க, அமுதன் அறையை விட்டு வெளியேறினான்.

"என்ன உதவி வேணும்?"

"நீங்க டொனேஷன்லாம் வாங்குறீங்கல்லயா?" என்றார்.

"தர்றதை வாங்கிக்கிறேன். யாருகிட்டயும் கேட்கிறது இல்ல. தேவைக்கும், என்னுடன் இருக்குறங்கவங்களுக்கும்  போதுமான அளவுக்குக் கிடைக்குது. சில நேரங்களில் பணமில்லாமப் போறதும் உண்டு, எல்லாமே அவன் செயல் தானே" என்று நான் சொல்ல, அவரும் சிரித்துக் கொண்டார்.

சற்று அருகே வந்து குறைந்த ஒலியில், "என்கிட்ட கொஞ்சம் பணம் இருக்கு, அதை உங்களுக்கு donation வந்த பணமா கணக்கு காட்டணும். 20% commission கொடுத்திடுறேன். amount கொஞ்சம் பெருசு" என்றார்.

எதுவும் பேசாமல் சில நொடிகள் இருந்தேன். அவரே தொடர்ந்தார். "தெரிஞ்ச ஆடிட்டர் ஒருத்தர்கிட்ட பேசிட்டேன். உங்களைப் போல clean record இருக்குறவங்களுக்கு problem எதுவும் வராதுன்னு சொல்லிட்டாரு. இனிமே அவரே உங்க accountsம் பாக்குறதுக்கு ஒத்துக்கிட்டாரு. நீங்க ம்ன்னு சொன்னா மட்டும் போதும்" என்று கூற, இரண்டொருமுறை தட்டிக் கழிக்க நினைத்தும், மூன்றாவது முறையில் "ம்..." என்றிருந்தேன்.

***
"நீங்க ம்ன்னு சொன்னாமட்டும் போதும், சாமி" என்று கதிரேசன் சொன்னதில் மீண்டும் நிகழ்நொடிக்கு வந்திருந்தேன்.

"என்ன?"  என்றேன்.

"நீங்க ம்ன்னு சொல்லுங்க, சர்ஜரிலேந்து, கீமோ எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன். பலபேரு வாழ்க்கைக்கு நம்பிக்கை கொடுக்குறவரு நீங்க, உங்களுக்குச் செய்யுறதுல எனக்கு problem எதுவும் இல்ல, சொல்லுங்க சாமி" என்று கதிரேசன் எத்தனை முறை கெஞ்சிய போதும், இம்முறை 'ம்' என்று சொல்ல என் மனது இடம் கொடுக்கவில்லை. 


உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல்.
இயல்: துறவறவியல்
அதிகாரம்: கள்ளாமை
குறள் எண்: 282

பிறருக்குச் சொந்தமான பொருளைக் களவு செய்வோம் என்று உள்ளத்தால் நினைப்பது கூட தீதானதே.


Comments

Popular posts from this blog

அகர முதல - சிறுகதை (திருக்குறள் கதை) குறள் 0001

புறநானூறு பேசும் நீர் மேலாண்மை

வான்கா - Vanka