கோவிசின் - குறள் கதை
(கதையின் பெரும்பான்மை வட இந்தியாவில் நிகழ்வது போல அமைக்கப்பட்டிருந்தாலும், புரிதலுக்காக, கதைமாந்தர்கள் தமிழில் பேசுவதாக எழுதப்பட்டுள்ளது. கதைமாந்தர்கள் கற்பனையே)
கோவிசின்
- முடிவிலி
"நீங்க கேட்டுக்கிட்டு இருக்கிறது உங்க Ghost FM. Bonfire with RJ Fire. இப்ப இருக்குற கொரோனா காலத்துல, எப்படா இயல்பு நிலைக்குத் திரும்புவோம்னு நெனச்சுட்டிருந்த நாம, இப்ப இருக்குற நிலையையே new normalனு நகர்ந்திட்டிருக்கோம். இனிமே எல்லாம் இப்படித்தான் போல, சரி, அடுத்தப் பாட்டு ராஜா இசையில, விடிய விடிய நடனம் பாடல் உங்களுக்காக, stay tuned" என்று காதிற்குள் RJ Fire தனது இடைநில்லாப் பேச்சால் பேசிக் கொண்டிருந்ததைத் தொடர்ந்து, காதில் இன்னிசை பரவத் தொடங்கியிருந்தது.
தூக்கம் வராமல், இணைய வானொலியில் பாடல் கேட்டபடி, ட்விட்டரை மேய்ந்து கொண்டிருந்தான் சுந்தர். கீழிருந்து மேலாகத் தள்ளிக் கொண்டிருந்த சுந்தரின் இடது கை கட்டைவிரல், ஒரு செய்திக்கீச்சினைக் கண்டதும் நின்று, இணைப்பினைத் திறந்தது.
***
15 நாட்களுக்கு முன்பு
(வட இந்தியா)
குளிரூட்டப்பட்ட அறையில், வெற்றுடம்பில் காவியங்கி அரைக்கு மட்டும் சுற்றியபடி உட்கார்ந்திருந்தார், ரகுதேவ். தன் முன்னிருந்த மேசையில் கையை ஊன்றி சிந்தனையில் இருந்தவரைப் பார்த்தபடி நின்று கொண்டிருந்தார் ராமகிருஷ்ணா. சற்று நேரத்தில், நிமிர்ந்து பார்த்த ரகுதேவ், ராமகிருஷ்ணனைப் பார்த்து, இந்தியில், "உட்காருப்பா, நான் கேட்டது என்ன ஆச்சு?" என்றார்.
எதிரில் இருந்த நாற்காலியில் அமர்ந்த ராமகிருஷ்ணா, "குருஜி, நீங்க சொன்னது போல, ஏற்கனவே நம்ம கம்பெனியில செய்யுற ஆயுர்வேத மருந்து மேலயே வேற லேபிள் ஒட்டி, கோவிசின் என மாத்தி, approvalக்கு அனுப்ப readyயா இருக்கு. இருந்தாலும், இப்ப இருக்க நிலைமையில இதை marketக்குக் கொண்டு வர்றதுல நிறைய சிக்கல் வரும்னு நெனக்கிறேன்." என்றார்.
"என்ன சிக்கல் வரும்?"
"இப்ப இருக்குற சூழ்நிலையில கொரோனாவுக்கு மருந்துன்னு இதுக்கு விளம்பரம் செஞ்சா, நம்ம ஊருலன்னா நம்பிடுவானுங்க. ஆனா, எல்லாமே WHO வரைக்கும் போகுது. Lab testingலாம் இல்லாம் வெறும் விளம்பரம் மட்டும் வச்சு ஒன்னும் செய்ய முடியாது."
"அதெல்லாம் பாத்துக்கலாம். அலோபதிக்குத் தான் WHO, ICMR எல்லாம். ஆயுஷ்னு நம்ம ஊரு மருந்துக்கு நம்ம ஆளுங்க தானே அமைச்சகமே வச்சிருக்காங்க. என்ன மீறி யாரு எதுத்துடப் போறாய்ங்க?" என்று சொன்ன ரகுதேவ், தனது குரலைக் குறைத்து, தொடர்ந்தார்.
"Southல சித்தானந்தரு கூட இதே planல இருக்காப்ல. என்கிட்ட partnership போட்டுக்கலாம்னு வேற சொன்னாப்ல." என்றவர் குரலை மீண்டும் சரியாக்கி, "இருக்குற ஒரு chanceம் விட்டு வைக்க மாட்டான் போல. நான் இங்க corporate company போலத் தொடங்கி, எல்லாம் செய்வேன். அவரு வந்து partnership போட்டுக்குவாராம். நான் பட்டும் படாம பேசி cut பண்ணிட்டேன். அவரு அங்க promo வேலை தொடங்குறதுக்கு முன்னமே நாம இந்த மருந்தை இறக்கியாகணும். ஆமா, மருந்துக்குப் பேரு என்ன சொன்ன?" என்றார்.
"கோவிசின், கோவிட் வாக்சின்க்கு short form போல இருக்கும்."
"மருந்து எப்படியும் வேலை செய்யாது. ஆனா, side effect எதுவும் வந்துடக் கூடாது."
"அட, அதுல capsule base, துளசி flavour, மீண்டும் மீண்டும் வாங்க கொஞ்சம் nicotin மட்டும் தான் இருக்கும். யாருக்கும் ஒன்னும் ஆகாது. உங்களுக்குத் தெரியாததா?"
"சரி, இந்த approval எல்லாம் நான் பாத்துக்கிறேன். Promo, விளம்பரம்லாம் ready ஆ?"
"நம்ம கம்பெனிக்கே நீங்க தானே முகம். உங்க photo வச்சு poster, bannerலாம் ready. Mediaக்குக் கூட அனுப்பிடலாம்." என்ற ராமகிருஷ்ணாவைப் பார்த்து, "அப்ப இன்னும் ரெண்டு நாளுல press meet வச்சுடலாம்." என்றபடி சிரித்துக் கொண்டே தனது கருப்புச்சாயம் தடவப்பட்ட தாடி மீசையைத் தடவியபடிச் சிரித்தார் ரகுதேவ் குருஜி.
***
இரு நாட்கள் கழித்து, ராமகிருஷ்ணா பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தார். ரகுதேவின் தன்வந்திரி நிறுவனப் பணியாளர்கள் பலரும் மேடை அமைப்பதிலிருந்து, விருந்தினர், இதழாளர்களை வரவேற்பது வரை பம்பரமாய்ச் சுழன்று கொண்டிருந்த நேரத்தில், இந்தி திரைப்பட நடிகர் அனில்குமார் மற்றும் ஆஷாவுடன் மேடைக்கு வந்தார் ரகுதேவ் குருஜி.
நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து, யார் என்ன கேள்வி கேட்க வேண்டும், எப்போது ரகுதேவின் காலைத் தொட்டு வணங்க வேண்டும் என்பது வரை ஏற்கனவே ராமகிருஷ்ணா சொல்லி வைத்திருந்தார். நிகழ்ச்சியில் இதழாளர்களிடமிருந்து, மருந்தின் நம்பகத்தன்மை குறித்து, பெரிதும் கேள்வி எதுவும் எழாத வண்ணம், 5000 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட ஆயுர்வேத முறைகொண்டு என எழுதிவைக்கப்பட்ட scriptகள் படிக்கப்பட்டன. இறுதியில் ரகுதேவ் மருந்தினை வெளியிட, அனில் குமாரும், ஆஷாவும் வாங்கிக் கொண்டனர். அனில் குமார் காலைத் தொட்டு வணங்க, ஆஷாவை அணைத்தவாறு புகைப்படத்துக்குச் சிரித்துக் கொண்டிருந்தார் ரகுதேவ்.
***
இன்று...
சுந்தர் சிரித்தபடி, திறந்த செய்தி இணைப்பில்.
'சில நாட்களுக்கு முன்பு, யோகி ரகுதேவ் குருஜி கொரோனாவிற்கு ஆயுர்வேத மருந்து கோவிசின் வெளியீட்டு விழாவில் பங்குபெற்ற திரைப்பட நடிகை ஆஷாவுக்கு அடுத்தநாளே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அந்நிகழ்ச்சியில் பங்குபெற்ற அனைவருக்கும் கொரோனாவுக்கான சோதனை மேற்கொள்ளப்பட்டது. நிகழ்ச்சியில் பங்குபெற்ற யோகி ரகுதேவ், தன்வந்திரி நிறுவன CEO ராமகிருஷ்ணா ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியது.
டெல்லியின் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள யோகி ரகுதேவ் குருஜி இன்று மூச்சுத்திணறல் காரணமாக வெண்டிலேட்டருக்கு மாற்றப்பட்டார்.
இதையறிந்த நெட்டிசன்கள் பலர், ரகுதேவின் தன்வந்திரி நிறுவனத்தின் கோவிசின் மருந்தினை வாங்கி, ரகுதேவிற்கு அனுப்பி வருவதால் #CovicineForRaghudev என்ற hashtag ட்ரெண்டிங்கில் இந்திய அளவில் முதல் இடம் பெற்றுள்ளது'
வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்.
ஏமாற்றும் மனமுடையவன் ஒழுக்கத்தைப் பார்த்து அவன் உடலில் இருக்கும் ஐந்து இயற்கைக்கூறுகளும் சிரித்துக் கொள்ளும்.
Comments
Post a Comment