யாருக்கு நீதி? - குறள் கதை
யாருக்கு நீதி?
- முடிவிலி
(ஏறைநாடு கதை 3)
"அப்பா, தெருவுல எல்லாரும் உங்களைப் பத்தி தான் பேசிட்டு இருக்காங்க." என்று ஓடிவந்து தழுவிக் கொண்டான் பத்து வயது சிறுவனான குமரன். வண்டிக்காரர் தன்னைத் தழுவிக் கொண்ட மகனைப் பார்த்து, "என்னைப் பத்தியா பேசுறாங்க? என்னய்யா பேசுனாங்க?" என்றார்.
"நீங்க தான் அவனைப் பிடிக்க உதவுனீங்களாமே"
சிரித்துக் கொண்ட வண்டிக்காரர், "இல்ல, நான் பிடிக்குறதுக்குள்ள அவனே ஓடிப்போயி அந்தப் பள்ளத்துல விழுந்து காலை உடைச்சுக்கிட்டான், நான் விழுந்த இடத்தைக் காட்டுனேன், அவ்வளவு தான்." என்றவர் சற்று சிந்தித்தவராய், "இதுவே வேற நாடா இருந்தா, இவனையெல்லாம் பிடிக்குறது என்ன, பிடிக்குறது பத்திச் சிந்திக்கக் கூட மாட்டாங்க, நம்ம நாடு அப்படி, அதுவும் நம்ம அரசர் அப்படி" என்றார்.
"ஏம்ப்பா அப்படி சொல்றீங்க? மத்த நாட்டுல துறவி வேடம் போட்டு ஏமாத்துபவர்களை ஒன்னும் செய்யமாட்டாங்களா?"
"ஏமாத்துறாங்கன்னு தெரிஞ்சுக்குறதுக்குள்ள அரசர்களோட ஆட்சிக்காலமே முடிஞ்சிடும். நம்ம நாடும் முன்பு அப்படித் தான் இருந்துச்சு. நம்ம அரசர் ஏறைக்கோனின் தந்தை ஆதன் வளவரின் ஆட்சியில் தான் மாறுச்சு. மாறுனதுக்கும், நம்ம அரசர் தான் காரணம்"
"அப்படியா? என்ன ஆச்சு? சொல்லுங்கப்பா" என்று குமரன் கேட்க, தனது வீட்டின் திண்ணையில் அவனை உட்கார வைத்து, தானும் அருகே அமர்ந்தார் வண்டிக்காரர். வீட்டின் உள்ளே இருந்து தண்ணீர் கொண்டு வந்த குமரனின் தாயார், "அப்பாவும், பையனும் கதை பேசத் தொடங்கியாச்சா? இனி உலகமே இடிஞ்சாலும் உங்களுக்கு ஒன்னும் தெரியாதே" என்றார் கிண்டலாக.
"அம்மா, நீயும் வந்து உட்காரும்மா, கதை கேட்கலாம்" என்றான் குமரன்.
"குமரா, உங்கப்பா கதை தானே, என்கிட்ட வா, கதை கதையா சொல்றேன், ஆனா, இப்ப எனக்கு வேலை இருக்கு" என்று சிரித்துக் கொண்டே சொல்லியவள் வீட்டுக்குள் சென்றாள்.
புரியாதது போல பார்த்துக் கொண்டிருந்த குமரனிடம், "அரசர் கதை வேணுமா? வேணாமா?" என்றார் வண்டிக்காரர்.
ஆம் என்று தலையசைத்த குமரனைப் பார்த்து, வண்டிக்காரர் கதையைச் சொல்லத் தொடங்கினார்.
“இருவது ஆண்டுக்கு முன்ன, நம்ம அரசருக்கு உன் வயசு இருக்கும். அப்ப, அவரோட அப்பா ஆதன் வளவன் தான் அரசராக இருந்தார். அவரோட அரசவையில நீதியறிஞராகத் தங்கரர்னு ஒரு துறவி இருந்தார். மன்னர் எடுக்கும் எல்லா முடிவுகளும் இவரோட ஒப்புதலோட தான் இருக்கும். மன்னரும் அமைச்சரவைலயும், அவரோட மனசுலயும் உசந்த இடத்தக் கொடுத்து வச்சிருந்தாரு. தங்கரரும் கல்வியில எல்லாரையும் விட மெத்த படிச்சவரு. நம்ம மொழி மட்டுமில்லாம புரியாத பல மொழி பேசுறவரு. அதனாலயே அவருகிட்ட தருக்கம் செய்ய பலருக்கும் தயக்கம் இருக்கும். அவரு சொன்னா சரியாத் தான் இருக்கும்னு போயிடுவாங்க." என்று சொல்லிய வண்டிக்காரர் தனது மகனைப் பார்த்து, சற்று நிறுத்த, குமரன், "யப்பா, ம், மேலச் சொல்லுங்க" என்றான்.
சிரித்துக் கொண்டே, மேலே சொல்லத் தொடங்கினார் வண்டிக்காரர்.
"இப்படியே போயிட்டிருந்த நேரத்துல, ஒரு நாள் தங்கரரிடம் காவலாளி வந்து, அரச மன்றத்திற்கு வழக்கு ஒன்னு வந்திருக்கு, அரசர் உங்களை அழைக்கிறார்னு சொல்ல, அவரும் மன்றத்துக்குப் போனாரு. அமைச்சர்கள் எல்லாரும் மன்றத்துல இருந்தாங்க. இருந்தவங்க எல்லாம் பாக்குறபடி, உசந்த இடத்துல அரியணையில உட்காந்திருந்தாரு அரசர். மன்றத்துல நுழைஞ்ச தங்கரர், சுத்திப் பாத்துக்கிட்டே தன்னோட இருக்கையில போயி அரசரைப் பாத்தபடி உட்கார, அரசர் தங்கரரைப் பாத்து, இன்று நம் மன்றத்துக்கு வந்திருக்கும் வழக்கு களவு, அதுவும் நமது அமைச்சரின் வீட்டில் நடந்திருக்கும் களவுன்னு சொன்னார். மன்றத்தோட நடுவுல முகத்துல துணிவச்சு மறைக்கப்பட்டிருந்தபடி ஒரு சிறுவனும், அவனுக்கு எதிர முதன்மை அமைச்சரின் மகனும் நின்னுட்டு இருந்தாங்க. முகம் மூடியிருந்த பையனோட கை பின்னால் கட்டப்பட்டிருந்துச்சு. தங்கரர் அமைச்சரோட பையனைப் பாத்து, இந்தப் பையன் திருடுனதைப் பாத்தியான்னு கேட்க, அவன் அமைச்சரையும், அரசரையும் பார்த்தான். யாருக்கும் அச்சப் படாத, உண்மையச் சொல்லு, திருடுனதைப் பாத்தியான்னு மறுபடியும் கேட்டாரு. அதுக்கு, அவன் நான் திருடுனதைப் பாக்கல, ஆனா, என்னோட அம்மாவோட நகை இவன் வீட்டுல இருக்குற பேழையில இருக்குறதைப் பாத்தேன். உடனே என்னோட அப்பாக்கிட்ட சொன்னேன். அவரு தான் இவனை இங்க அழைச்சுட்டு வந்தாரு. தங்கரர், அவனைப் பாத்து, தம்பி, இவன் தான் எடுத்தான்னு உனக்கு எப்படி தெரியும், இவனுடைய பெற்றோர் எடுத்திருக்கலாம் இல்லையா, அல்லது அவனோட உறவினர்கள் யாரும் எடுத்திருக்கலாம் இல்லையான்னு கேட்க, அமைச்சர் அவனுக்கு யாரும் கிடையாது, நாங்கள் தான் அவனுக்கு உறைவிடம் கொடுத்து எங்கள் அருகிலே ஒரு வீடு கொடுத்துப் பார்த்து வருகிறோம். ஆனால், என்ன தான் நல்லது செய்தாலும் உண்ட வீட்டுக்கும் ரெண்டகம் செய்வான் என்று நினைக்கவில்லைன்னு சொன்னாரு.
இதக் கேட்ட தங்கரர், முகத்தில் சினம் கொப்பளிக்க, களவே குற்றம் அதிலும் உண்ட வீட்டில் களவாடுவது பெரும் குற்றம். அதனால், இவனுக்குக் கடுங்காவல் சிறையும், அங்கு உடல் வாட்டும் உழைப்பும் தண்டனையாய் அளிக்கலாம்னு உரக்கச் சொன்னார்.
மன்னர் அவரைப் பார்த்து, இந்தச் சிறுவனுக்கா இவ்வளவு தண்டனை? எச்சரித்து ஊரை விட்டு அனுப்பி விடலாமேன்னு கேட்டார்.
அதற்கு, தங்கரர் இவனைப் போன்ற கள்வர்களைச் சிறுவன், முதியவன்னு பாக்கக் கூடாது, இவனுக்குக் கொடுக்கும் தண்டனை மற்றவர்க்கும் பெரும் பாடமாய் அமைய வேண்டும்னு அரசரிடம் சொல்ல, அரசர் தங்கரரிடம், அப்படியென்றால் முடிவாகச் சொல்லிவிடலாம் தானேன்னு கேட்டார்.
தங்கரரும் ஆம்னு சொல்ல, அரசர், காவலாளியிடம் அந்தச் சிறுவனின் முகத்திரைய எடுக்கச் சொன்னாரு. ஒருவர் வந்து முகத்திரையை எடுக்க, மன்றத்தில் இருந்தவர்கள் எல்லாரும் வியந்து போயி ஆன்னு சொன்னது எதிரொலிச்சுக்கிட்டே இருந்துச்சு"
"யாருப்பா?" என்றான் குமரன்.
"யாரா, அந்தப் பையன் வேற யாரும் இல்ல, இப்ப நம்ம அரசரா இருக்காரே, ஏறைக்கோன் தான்"
"ஆ..." என்றான் குமரனும்.
"மன்றத்துல இருந்த மத்தவங்களுக்கு வியப்புன்னா, தங்கரருக்கு மட்டும் அதிர்ச்சி. தங்கரர், அரசரைப் பாத்து, மன்னா, என்ன இது விளையாட்டுன்னு கேட்க, இதுவரை வாய்மூடி இருந்த ஏறைக்கோன், நான் தான் உமது வீட்டில் இருந்த பேழையில் எமது அன்னையின் நகைகளைப் பாத்தேன், அது மட்டுமல்ல, அங்கிருந்த மற்ற நகைகளையும், பணத்தையும் அரசரிடம் சொல்லிப் பறிமுதல் செய்தாச்சுன்னு சொல்ல, அரசர், தங்கரரே உங்களுக்கான தண்டனையை நீங்களே சொல்லி விட்டீர்கள், எனக்கும் வேலை குறைந்ததுன்னு சொன்னார்.
தங்கரர் அரசரைப் பாத்து, மத்தவர் போல நானுமா, ஒரு அந்தணன் குற்றமே செய்திருந்தாலும் அவனது பொருள் எல்லாம் அவனிடமே கொடுத்து, நாட்டை விட்டு அனுப்ப வேண்டும் என்று தான் நீதிநூற்கள் சொல்கின்றன, இது புரியாமல், பெருந்தீங்குக்கு ஆளாகாதேன்னு கத்தினார்.
அதுக்கு அரசர், இதுக்குப் பேரு தான் நீதின்னா, அந்த நீதிநூலையும் எரிக்க நான் தவறமாட்டேன். நீர் முன்பு கூறியது போல, யாருமிலாத் துறவி என்று எல்லா உரிமைகளும் கொடுத்துப் பார்த்த எங்களிடமே திருடும் நீ எங்களுக்கு நீதி சொல்வதான்னு சொல்லி, காவலரைப் பார்த்து, ம்ம்ம், இழுத்துச் செல்லுங்கள் இவனைன்னு சொல்ல, மன்றத்தில் இருந்த எல்லாரும் கைதட்டி அரசரைப் புகழ்ந்தாங்க, தலை குனிந்து, கைகள் பின்னால் கட்டப்பட்டு தங்கரர் சிறையில அடைக்கப்பட்டாரு." என்று சொன்ன வண்டிக்காரர், குமரனைப் பார்த்து, "இதுலேந்து நீ என்ன தெரிஞ்சுக்குற?" என்று கேட்டார்.
"அடுத்தவங்க பொருள எடுக்கக் கூடாது, நம்ம எந்த நிலையில இருந்தாலும்" என்று சொல்ல, "அதான்டா" என்று அவனை அள்ளி அணைத்துக் கொண்டார் வண்டிக்காரர்.
கன்றிய காத லவர்.
இயல்: துறவறவியல்
அதிகாரம்: கள்ளாமை
குறள் எண்: 286
களவினை மனத்தில் நினைக்கும் அதைக் கடைபிடிப்பவர், தன் அளவு எது என்றறிந்து தன்னிலையில் இருப்பதைக் கடைபிடிக்க மாட்டார்.
Comments
Post a Comment