ஆ...! - குறள் கதை

ஆ...!

- முடிவிலி

(ஏறைநாடு கதை 2)

ஏறை நாட்டுத் தலைநகரானச் செவ்வூரைச் சுற்றி இருந்த அடர்ந்த காடுகளில்,  புல்லினங்கள் ஆங்காங்கே இனிய குரலில் கூவிக் கொண்டிருக்ககுரங்குகளோ இங்கும் அங்கும் தாவிக் கொண்டிருந்தன. முகில் கூட்டம் எதுவுமில்லாது இருந்த வானில் நேரே வந்த கதிரவன் ஒளிஅடர்ந்த மரங்களின் இடையே ஊடுருவ முடியாமல்பசுமையான இலைகளில் பட்டுத் தெறித்து தெறித்துகாட்டின் பரப்பை அடையும் போது தன் வெப்பம் அனைத்தையும் இழந்து குளிர்ந்து போயிருந்தது. அந்தக் காட்டின் வழியே யாரோ முகத்தை மூடிக்கொண்டு ஓட்டமும் நடையாய் நகர்ந்து செல்லஎழுந்த காலடியின் ஓசை காட்டிலெங்கும் எதிரொலிக்கதாவிய குரங்குகள் அதிர்ந்து நின்றுகிளைகளில் மறையத் தொடங்கின. விரைவாக நடந்த அந்தக் கால்கள்செவ்வூர்க்காட்டின் அடுத்து இருக்கும் சிற்றூர்களில் ஒன்றான சிறுகுன்றூருக்குச் செல்லும் வழி நோக்கி நடந்து கொண்டிருந்தன. 

சற்று நேரத்தில்செவ்வூரிலிருந்து சிறுகுன்றூர் செல்லும் வண்டிப்பாதை தடம் தெரியதன் முகத்தை மூடி இருந்த துணியினை விலக்கிதோளுக்குத் துண்டாக மாற்றிநடையின் விரைவைக் குறைத்த அவனுக்கு முப்பந்தைந்து வயது இருக்கலாம். பார்த்ததும் நம்பும் படியான வட்டமுகம்.  முன்னும்பின்னும் பார்த்தபடி நடந்து கொண்டிருந்த அவனிடம்சற்று நேரம் இருந்த பதட்டம் இப்போது குறைந்திருப்பதாகத் தெரிந்தது. 

சற்று தொலைவிலிருந்து கேட்ட வண்டிமாட்டின் குளம்பொலியும்கழுத்து மணியின் சில்சில்லென்ற இசையும் மெல்ல மெல்ல அருகே வந்து கொண்டிருந்தன. வண்டி அவனருகே வந்து தன் மெதுவாகத் தேங்கி நிற்கவண்டிக்காரர் வண்டிப்பாதையில் நடந்து போகும் அவனைப் பார்க்கஅவன், "இந்தப் பாதை சிறுகுன்றூருக்குத் தானே போகுது?" என்றான்

"ஆமாநானும் சிறுகுன்னூருக்குத் தான் போறேன்ஏன் தம்பிஇன்னும் எவ்வளோ தொலவு கெடக்குநடந்தேவா போவப்போறயாரு தம்பி நீயி?" என்றார்.

"உங்களுக்கு செவ்வூருல அரிசிக்கடை வச்சிருக்க புகழேந்தி தெரியுமா?"

"ஆமாகடைத்தெருவுல அவரத் தெரியாதவங்க யாராச்சும் இருப்பாங்களா?"

"அவரு எனக்குப் பெரியப்பா முறைங்க. என் பேரு எயிலன்"

"எயிலன்பேரும் புதுசா இருக்கு. ஆளும் புதுசா இருக்கியே. இதுக்கு முன்னாடி செவ்வூருல கூட உன்ன பாத்ததில்லயேசரிபின்னால ஏறிக்கோ தம்பி" என்று சொல்லஎயிலனும் பின்னால் ஏறிக் கொண்டான். 

"தம்பிஎப்பவும் யாராச்சும் செவ்வூர்லேந்து வழித்துணைக்கு வருவாங்க. இன்னிக்கு யாரும் காணோமேபேச்சுக்குக் கூட ஆள் இல்லயேன்னு நெனச்சுட்டே இருந்தேன். உங்களைப் பாத்துட்டேன்." என்று சொல்லிவெள்ளந்தியாய்ச் சிரித்தார் வண்டிக்காரர். எயிலனும் சிரித்து வைத்தான். 

"உங்களுக்குப் பெரியப்பாவைத் தெரியுமா?" என்று எயிலன் கேட்க,

"தெரியுமாவாகடைத்தெருவுல சிறுகுன்னூர்ல வெளயுற காய்கறிபழங்களை விக்குறதுக்கு உங்க பெரியப்பா கடைக்குப் பக்கத்துல இருக்க செல்வத்தோட கடைக்குத் தானே போவேன். அப்பப்ப பாத்திருக்கேன். நல்லவரு. சிரிச்ச முகமா இருப்பாரே." என்று சொன்னவர்எயிலனைப் பார்த்து“ஆமா, இதுவரைக்கும் உன்னைக் கடைப்பக்கம் பாத்ததில்லையே” என்றார்.

“ஆங், அதுவந்து நான் சின்ன வயசுலேயே வடக்கு நாட்டுக்குப் போயிட்டோம். எப்பவாவது தான் ஏறைநாட்டுக்கே வருவோம். இந்த முறை இங்கே வந்துடலாம்னு இருக்கேன். செவ்வூருக்குச் சுத்தி இருக்குற எல்லா ஊருக்கும் சுத்திட்டு, எங்க கடை போடலாம்னு பாக்கலாம்னு தான் வந்திருக்கேன்.”

“என்ன தம்பி, செவ்வூரை விடவா சிறுகுன்னூருல வித்துடப் போவுது? சரி, நம்ம ஊருக்கு வர்றேன்னு சொல்ற? வேணாம்னா சொல்ல முடியும்?” என்று சொல்லியபடி மீண்டும் சிரித்தார் வண்டிக்காரர். இந்த முறையும் பெருமுயற்சி எடுத்துச் சிரித்து வைத்தான் எயிலன்.
  
வண்டிக்காரர் சட்டெனக் கையில் இருந்த கயிற்றைப் பிடித்து இழுத்தபடி, “ஓவ், ஓவ்” என்று கூற, வண்டி பாதையில் ஒருபுறமாகத் தேங்கி மெதுவாகி நின்றது. எதிரில் நின்ற வண்டியும் மறுபுறத்தில் ஓரமாய் நிற்க, வண்டிக்காரர் எயிலனைப் பார்த்து, “தம்பி, கொஞ்சம் இந்தக் கயிறைப் பிடிங்களேன்: என்று கயிற்றை அவன் கையில் கொடுத்து விட்டு, வண்டியில் இருந்து இறங்கி அடுத்த வண்டியில் உட்கார்ந்திருந்தவனிடம் ஓடிச் சென்றார்.

எயிலன் கைகள் கயிற்றைப் பிடித்திருந்தாலும், அவன் கண்கள் வண்டிக்காரரையே பார்த்தன. அவர் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று கேட்க முயன்று தோற்றுக் கொண்டிருந்தன எயிலனின் செவிகள். வண்டிக்காரர் சற்று நேரத்தில் அந்தக் கூண்டுவண்டியின் பின்னால் உட்கார்ந்திருந்தவரிடம் சென்று பேசிக் கொண்டிருந்தார். இறுதியில் சரி சரியெனத் தலையசைத்தது மட்டும் எயிலனுக்குப் புரிந்தது. சற்று நேரத்தில் அந்த வண்டி, செவ்வூர் நோக்கிச் செல்ல, வண்டிக்காரர் மெல்ல பாதையைக் கடந்து வண்டியில் ஏறி, கயிற்றைப் பிடித்து உதறி, “ஏய், டுர்ர்ர்” என்று சொல்ல, வண்டி மீண்டும் தனது மிதவேகத்தை அடைந்தது.

“என்ன ஆச்சுங்க” என்றான் எயிலன்.

“நம்ம ஊரு காவக்காரரு, செவ்வூருக்கு வரச் சொல்லி சேதி வந்திருக்கு. அதான் செவ்வூருக்குப் போயிட்டு இருக்காங்க. ஆனா. காலம் ரொம்ப கெட்டுப் போச்சு தம்பி. எவன் எப்படி ஏமாத்துவான்னு சொல்லவே முடியறதில்ல” என்றார் வண்டிக்காரர்.

“ஏன் என்ன ஆச்சு?” என்றான் எயிலன், சற்று பதட்டமாக.

“நீ ஏன் தம்பி பதறுற? எல்லாரையும் மதிக்குற நம்ம அரசரையே ஒருத்தன் ஏமாத்திருக்கான், அதுவும், தன்னைத் துறவின்னு சொல்லிக்கிட்டு” என்று கடுப்பாகவே சொன்னவர், “அதான் நான் செவ்வூருல கேள்விப்பட்டதைக் காவக்காரருகிட்ட சொல்லிட்டு வந்தேன். உன்னப் பத்தியும் யாருன்னு கேட்டாங்க, தம்பி?” என்றார்.

உடனே, எயிலன், “என்னப் பத்தி என்ன கேட்டாங்க?” என்றான் இன்னும் பதறி.

“இருப்பா, யாரு புதுசான்னு கேட்டாங்க. புகழேந்தி தம்பி மகன்னு சொல்லிட்டேன். ஆமா, செவ்வூருலேந்து தானே வர்றீங்க? துறவி பத்தி ஊரே பரபரன்னு இருந்துச்சு. உங்களுக்குத் தெரியாதா?”

“நான் காலையிலேயே கெளம்பிட்டேன். நடுவுல காட்டுல சில இடங்களில் இயற்கையோட அப்படியே மெதுவாக நடந்து வர்றேன். நீங்க சொல்லுங்களேன், என்ன ஆச்சு?”

“நேத்து மாலை நம்ம செவ்வூரு ஊர்மேடையில வந்து அமர்ந்திருந்த துறவியைப் பற்றிச் செய்தி கிடைச்சதும், நம்ம அரசர் ஏறைக்கோன் அவரை அரண்மனைக்கு அழைத்திருக்காரு. இவரும் போயிருக்காரு. அரண்மனையில் மன்றத்துல உட்கார வச்சு, எங்கிருந்து வர்றீங்கன்னு கேட்டிருக்காரு. அவரும் வடக்கு நாடான மேரு மலையிலிருந்து ஒவ்வொரு ஊராகத் திரிந்து வந்துட்டு இருக்கேன்னு சொல்லிருக்காரு.”

“அவரு பேரு என்ன?”

“பேரு என்னம்மோ சொன்னாங்க. நமக்குத் தமிழுல இருக்குற பேரு தான் வாயுல நுழையுது. இது ஏதோ வேத்தூரு பேரு போல இருந்துச்சு. அதான் எனக்குச் சொல்லத் தெரியல. அந்த ஏமாத்து நாயிக்குப் பேரு ஒன்னுதான் குறைச்சல்.” என்று சலித்துக் கொண்டவர், “மேலக் கேளு தம்பி.” என்றார்.

எயிலன் தலையசைக்க, “அரசர் அவரோட கண்ணு பாத்துப் பேசிட்டு இருக்க, அந்தாளு பக்கத்துல அவருக்குக் கவரி வீசிக்கிட்டு இருந்த பொண்ணோட இடுப்பைப் பாத்துட்டு இருந்திருக்கான். அரசர் கூட அதைக் கவனிக்கல. ஆனா, நம்ம ஊரு பொண்ணுங்களுக்குத் தான் தன் மேல தப்பா பார்வை விழுந்தா கூட தெரிஞ்சுடுமே. சற்று நேரம் பேசிக்கிட்டு இருந்த அரசர், சரி துறவியே, நீங்க தொலைவுலேந்து வந்திருப்பீங்க, உங்களுக்குத் தங்குவதற்கு அறை ஏற்பாடு எல்லாம் முடிஞ்சது. நீங்க ஒய்வு எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி, பணிப்பெண்களை அவருக்கு வேண்டியதைச் செய்து தரச் சொல்லி அனுப்பியிருக்கிறாரு அரசர். அறைக்குள் அவருக்கு ஒய்வு எடுக்க எல்லா வசதிகளும் செய்து கொடுத்துட்டுப் பணிப்பெண்கள் போக, கடைசியாக போக இருந்த பெண்ணிடத்தில் தண்ணி கேட்டிருக்காரு துறவி. அந்தப் பெண்ணும் கொஞ்ச நேரத்துல கொண்டு வந்து கொடுத்தா, செம்பை வாங்குறதுக்குப் பதிலா, கையைப் பிடிச்சிருக்கான். வெடுக்கென்று அந்தப் பொண்ணு கையை இழுத்துக் கொள்ள, கண்ணு சரியாத் தெரியலம்மான்னு சொல்லிருக்கான். அப்புறம் தண்ணி வாங்கிக் குடிச்சப்ப, அவன் ஒட்டி வச்சிருந்த தாடி கொஞ்சம் விலகியிருப்பதைப் பாத்தப்ப தான் அந்தப் பெண்ணுக்கு ஐயம் வந்திருக்கு. செம்பை வாங்கிட்டு அவரத் திரும்பித் திரும்பிப் பாத்துக்கிட்டே அந்தப் பொண்ணு அறையை விட்டு வெளிவந்து மத்த பெண்ணுங்ககிட்ட சொல்ல, எல்லாரும் சேந்து அரசர்கிட்ட சொல்லி, காவலர் வந்து அறையில எட்டிப் பாக்குறதுக்குள்ள சாளரத்து வழியா தப்பிச்சு ஓடிருக்கான். செவ்வூர் முழுசும் இரவோடிரவாகத் தேடி முடிச்சிருக்காங்க. காட்டுக்குள்ள தான் போயிருக்கணும். அதான் எல்லா ஊருக் காவக்காரங்களையும் செவ்வூருக்கு வரச் சொல்லிருக்காங்க. வழியில எப்படியும் மாட்டுவான்ல” என்று சொன்ன வண்டிக்காரர் கையிலிருந்த சாட்டையைச் சுழற்றி, “ஏய், உர்ர்ர்...” என்றார்.

கேட்டுக் கொண்டிருந்த எயிலன், முகம் வியர்வையில் குளித்திருந்ததை வண்டிக்காரர் கவனிக்கவில்லை. எயிலன், “இன்னும் எவ்வளவு தொலைவுங்க போகணும் சிறுகுன்றூருக்கு?” என்றான்.

“வந்துட்டோம், தம்பி, அரைக்கல்லு தொலைவு இருக்கும்” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே, முன்பு செவ்வூர் நோக்கிப் போன கவல்காரரின் வண்டி இவர்களை நோக்கி விரைவாக வந்து கொண்டிருந்தது. அந்த வண்டிக்காரன், “அண்ணே, அண்ணே” என்று கத்தியபடி, காளைகளை முடுக்கிக் கொண்டிருந்தார்.

பின்னால் இருந்து வந்த ஒலியைக் கேட்டு, வண்டியை நிறுத்திய வண்டிக்காரர், ‘ஏன் இப்படி தொரத்திட்டு வர்றாங்க’ என்று எண்ணிக் கொண்டிருக்கும்போதே, அவருக்கு விளங்கியது, பின்னால் திரும்பிப் பார்த்தபோது, எயிலன் வண்டியில் இருந்து இறங்கி ஓடிக் கொண்டிருந்தான்.         

‘தப்பிச்சிட்டோம்னு நெனச்சா, தலைய எடுக்காம விடமாட்டாங்க போலயே, ஏன்டா இந்தத் துறவி வேடம் போட்டோம்’ என்று எண்ணியபடி ஓடிக்கொண்டிருந்த எயிலன், எங்கு ஓடுகிறோம் என்று தெரியாமல் தனக்கு முன்னிருந்த ஒரு புதரைத் தாண்டினான். புதருக்கு அந்தப் பக்கம் இருந்த மூன்று ஆளுயர ஆழமுள்ள குழியில் விழுந்த போது, கதறிய ஒலியின் எதிரொலி அடங்க சில நொடிகள் பிடித்தது.

“ஆ...!” 



பற்றற்றே மென்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்
றேதம் பலவுந் தரும்.

இயல்: துறவறவியல் 
அதிகாரம்: கூடாவொழுக்கம்
குறள் எண்:: 275

பற்றுக்களைத் துறந்து விட்டோம் என்று சொல்லிக் கொண்டு ஏமாற்றுபவர்கள், ஏன் இதைச் செய்தோம் ஏன் இதைச் செய்தோம் என்று வருந்தும் அளவுக்குத் துன்பத்தில் விழுவர்.      

Comments

Popular posts from this blog

அகர முதல - சிறுகதை (திருக்குறள் கதை) குறள் 0001

புறநானூறு பேசும் நீர் மேலாண்மை

வான்கா - Vanka