வேட்டை நாய் - குறள் கதை
வேட்டை நாய்
- முடிவிலி
'கார்த்தி, ஒரு தகவல் ஒன்னு கிடைச்சிருக்கு. திருச்செங்கோடு வரைக்கும் போயிட்டு வர்றேன், வந்ததும் detailedஆ சொல்றேன்' என்று whatsappல் குரல் செய்தி அனுப்பிவிட்டு, திருச்செங்கோடு செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்தேன்.
மீண்டும் எனக்கு வந்திருந்த மின்னஞ்சலை எடுத்துப் படிக்கத் துவங்கினேன்.
அதன் பின் அந்த மின்னஞ்சலில் செங்குட்டுவனைத் தொடர்பு கொண்டு, அவரின் தொடர்பு எண், முகவரி வாங்கிக் கொண்டு, இப்போது திருச்செங்கோடு நோக்கிச் சென்று கொண்டிருக்கிறேன். பேருந்தின் சாளரத்தின் வழி இரவு நேரத்திலும் இளஞ்சூடான காற்று முகத்தில் அறைந்து கொண்டிருந்தது. சற்று முன்பு பெருங்களத்தூரின் போக்குவரத்து நெரிசலில் நின்று கொண்டிருந்த போது, வியர்த்து நனைந்திருந்த தலைமுடியை உலர்த்துவதற்காகவே இந்தக் காற்று வந்ததோ என்று எண்ணிக் கொண்டே கண்ணை மூட மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்த பேருந்து தாலாட்ட, மெல்ல உறங்கிப் போனேன்.
***
திருச்செங்கோட்டில் இறங்கிய என்னை அழைத்துச் செல்ல செங்குட்டுவனே வந்திருந்தார். அவருடைய வண்டியின் பின்னால் நான் ஏறிக்கொள்ள, சங்ககிரி சாலையில் சிறிது தொலைவு சென்று அரசு மருத்துவமனை எதிரே இடதுபுறமாய்த் திரும்பி நான்கு தெருக்களுள் வளைந்து ஒரு வீட்டின் முன் நின்றது வண்டி.
"வாங்க செந்தில்" என்றபடி வண்டியிலிருந்து இறங்கிய என்னை அழைத்தபடி, முன்னே சென்றார் செங்குட்டுவன்.
வீடே களையிழந்து இருப்பது போல் ஒரு உணர்வு தோன்றி மறைந்தது. அக்கம் பக்கம் இருந்த வீடுகளில் இருந்து, பல கண்கள் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தன. அதைக் காண விருப்பமில்லாதவராய், விடுவிடுவெனச் சென்று கதவைத் திறந்து வீட்டுக்குள் சென்றார் செங்குட்டுவன்.
சில நேரம் வெளியில் நின்ற நான், சுற்றும் முற்றும் பார்த்தவாறு உள்ளே நுழைந்தேன். வீட்டில் ஆங்காங்கே ஒட்டடையடைந்து கிடந்தது. வரவேற்பறையில் ப வடிவில் அமர்ந்திருந்தன இருக்கைகள்.
"தம்பி, bathroom, toilet பின்னாடி இருக்கு. நீங்க fresh ஆகிட்டு வாங்க" என்றார். சில நிமிடங்களில் தலையைத் துவட்டியபடி வந்த என்னிடம், "உட்காருங்க தம்பி, நான் போயி டீ போட்டுக் கொண்டு வர்றேன்" என்று அடுப்படிக்குள் செல்ல நகர்ந்தார் செங்குட்டுவன்.
"அதெல்லாம் எதுக்கு சார்? வேணாம்" என்றேன்.
"என்ன தம்பி, நான் கூப்பிட்ட குரலுக்கு வந்திருக்கீங்க, இதோ ரெண்டு நிமிசம்" என்றார். சொற்களில் இருக்கும் வரவேற்புணர்வு அவர் முகத்தில் இருக்கவில்லை, காலையில் சந்தித்ததில் இருந்தே முகத்தில் சிரிப்பென்ற ஒன்று இல்லாதிருந்ததை இப்போது தான் கவனித்தேன்.
இருக்கையில் அமர்ந்த நான் என் பார்வையை அறை முழுதும் சுழலவிட்டேன். இரண்டு ஆண்டுக்கு முன்னான காலண்டரில் வேலைப் பிடித்தபடி சிரித்துக் கொண்டிருந்தார் முருகன். அதன் அருகே, சிரித்த முகத்துடன் செங்குட்டுவன், அவருடன் இரு சிறுமிகள், பார்ப்பதற்கு இரட்டையர் போலிருந்தனர், உடன் மனைவி நின்றபடியான புகைப்படம் இருந்தது. புகைப்படம் மகிழ்ச்சியில் நிறைந்திருந்தது.
சற்று நேரத்தில் கையில் தேநீரோடு வந்தவரைக் கண்ட நான் எழுந்து, கோப்பையை வாங்கிக் கொண்டேன்.
"Thanks sir, உங்க பொண்ணுங்களா சார், twins ஆ?" என்றேன், புகைப்படத்தைக் காட்டியபடி. செங்குட்டுவன் முகம் இன்னும் இறுகியது. அமைதியாக, ஆம் என்பது போல் தலையசைத்தார்.
சில நொடிகள் அமைதியில் நகர்வதும் வீணோ என்பது போல் மெதுவாக நகர்ந்தன. கையில் இருந்த தேநீரின் ஆவி கூட மெதுவாக மேலெழுவது போல உணர்ந்தேன். அவரே பேசத் துவங்கட்டும் என்று நினைத்தவனாய், தேநீர்க்கோப்பையை மட்டும் பார்த்தபடி அமர்ந்திருந்தேன்.
பாதி கோப்பை தீர்ந்திருந்த நிலையில், அமைதியை உடைத்தார் செங்குட்டுவன்.
"தம்பி" என்றவர், சற்றுத் தயங்கி, "உங்களைத் தம்பின்னு கூப்பிடலாம்ல?" என்றார்.
"தாராளமா சார், வீட்டுல யாருமே இல்லயா? தனியாவா இருக்கீங்க?" என்றான் செந்தில்.
"இல்ல தம்பி, என் wife இருக்கா, அவளுக்கு உடம்பு சரியில்ல. தூங்கிட்டு இருக்கா." என்றவர் கண்கள் சற்று கலங்கின.
"Sir" என்றபடி கையில் இருந்த கோப்பையைக் கீழே வைத்து, அவரின் கையைத் தொட்டேன். சட்டெனத் தன் கண்களைத் துடைத்துக் கொண்டு, "ஒன்னுமில்லப்பா, அழக்கூடாதுன்னு எவ்வளவோ அடக்கி வச்சேன். ஆனா, கண்ணு காட்டிக் குடுத்துடுது. சரி, நான் சொல்ல வந்ததைச் சொல்லிடுறேன்." என்றார்.
"உங்களுக்கு மறுப்பு இல்லன்னா, பேசுறதை நான் record செய்யலாமா?" என்று voice recorderஐ எடுத்து எதிரே வைத்தேன். 'சரி' என்று ஒப்புதலாய்த் தலையசைத்தவர், "உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை இருக்கா, தம்பி?" என்றார்.
"இல்லன்னு சொல்லமுடியாது sir, ஒரு காலத்துல ரொம்ப இருந்துச்சு, examக்கு முன்னாடி, பிள்ளையார் கோயில் வாசல்ல நம்பர் எழுதில்லாம் வச்சிருக்கேன். இப்ப நம்பிக்கை இருக்கோ, இல்லயோ, எதையும் உடனே நம்பக் கூடாதுங்குறதுல தெளிவாருக்கேன். ஏன் sir கேட்டீங்க?" என்று கேட்டபடி, record பொத்தானை அழுத்தினேன்.
"நம்புனதாலக் கெட்டுப் போயிருக்கேனா? நம்பக் கூடாதத நம்பிக் கெட்டுப் போயிருக்கேனான்னு தெரியாம இருக்கேன். என் கதை அப்படி"
"சொல்லுங்க sir, உங்க பெயர்? என்ன செய்யுறீங்க?"
"தம்பி, என் பேரு செங்குட்டுவன், இங்க பக்கத்துல ஒரு லாரி பாடி கட்டுற பட்டறையில வேலை பாத்துட்டு இருந்தேன். போன ஆண்டு வரைக்கும், எல்லாம் நல்லாத் தான் போயிட்டு இருந்துச்சு. எனக்குக் கடவுள் நம்பிக்கை இருக்கு தம்பி. தினமும், எழுந்து குளிச்சு வந்து, நெத்தியில திருநீறு வச்சாதான் அந்த நாளே நகரும் எனக்கு. என்னோட மனைவிக்கும் அப்படித்தான். அந்தக் கடவுளே வந்து வாய்ச்சது போல, எங்களுக்கு இரட்டைப் பொண்ணுங்க. சங்கீதா, சவீதான்னு." சொல்லிக்கொண்டே இருந்தவர், சற்று நிறுத்தி மெல்ல சிரித்துக் கொண்டார்.
"ரெண்டு பெரும் அறுந்த வாலுங்க." அந்தச் சிரிப்பின் பொருளை என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை.
"அவங்க இருக்கும் இடம் எப்பவும் கலகலவென இருக்கும். ஒருத்திய மட்டும் எங்கயும் தனியா பாக்க முடியாது. ஒட்டிப் பொறந்தது போல எப்பவும் ஒன்னாவே தான் இருப்பாங்க. நீங்க இந்த வீட்டை ஒரு ரெண்டு வருசம் முன்ன பாத்திருக்கணும். சில்லறையச் சிதறவிட்டது போல சிரிப்புச் சத்தம் கேட்டுக்கிட்டே இருக்கும். ஆனா, இப்ப..." முகம் மீண்டும் இறுகி, கண்கள் கலங்கின.
"ரெண்டு வருசத்துக்கு முன்னால தான், ரெண்டு பெரும் +2 முடிச்சாங்க. ரெண்டு பேரும் ஓரளவு நல்லாவே படிப்பாங்க. ஆனா, எனக்கு ரொம்ப தொலைவு அனுப்பிப் படிக்க வைக்க பயமா இருந்துச்சு. கோயம்புத்தூர்ல ஒரு கல்லூரியில ரெண்டு பேருக்கும் இடம் கிடைச்சுது. engineering - computer science. என்னைப் பாத்தே வளர்ந்ததுனாலயோ, என்னைப் போலவே என் செல்லங்களும் சாமி, பக்தின்னு இருப்பாங்க. முதல் முறையா எங்களை விட்டுப் போறாங்களேன்னு எங்களுக்கு மனசு கிடந்தது அடிச்சுக்கிச்சு. இருந்தாலும், படிப்புக்காக அப்படின்னு மனச ஆத்திக்கிட்டோம். தினமும் போன்ல பேசிடுவோம். முதல் வருசம் படிப்பு முடிஞ்சு லீவுக்கு வீட்டுக்கு வந்தப்ப, ரெண்டு பேரும் படிப்பைப் பத்தி பேசுனத விட, யோகா, கடவுள், தியானம் பத்திப் பேசுனது தான் நிறைய இருந்துச்சு.
நாங்களும் பொண்ணுங்க நல்ல வழியில தானே போறாங்கன்னு பெருசா எடுத்துக்கல. ரெண்டாவது வருசம் தொடங்கி சில வாரத்துல, collegeலேந்து letter வந்துச்சு. உங்க பொண்ணுங்க ரெண்டு அடிக்கடி hostelல் தங்குறதில்லை. நிறைய நாட்கள் collegeக்கும் வர்றதில்லைன்னு. பதறி அடிச்சுட்டு, நானும், என் மனைவியும் collegeக்குப் போயி, ரெண்டு பேருக்கிட்டையும் விசாரிச்சா, நாங்க volunteering செய்யப் போனோம். ரெண்டு நாலு தான் அப்பா, இதுக்குப் போயி உங்களுக்கு letter எல்லாம் போட்டு, உங்களைத் தொல்லை செஞ்சிருக்காங்கன்னு சொன்னாங்க. நீங்க போன்லயே கேட்டிருக்கலாமேப்பா, எங்க மேல நம்பிக்கை இல்லயா? அப்படின்னுலாம் கேட்டாங்க. எதுக்கும்மா volunteering செய்யப் போனீங்கன்னு கேட்டேன்.
பசுமை உலகம்னு தவத்திரு சித்தானந்த சுவாமிகள் செய்யுற மரம் நடுற விழாவுக்குத் தான். அவரோட பேச்சை நீங்க கேட்கணுமேன்னு தொடங்கிய ரெண்டு பேரையும் நிறுத்தி, கண்ணுங்களா, நீங்க இப்ப படிக்க வந்திருக்கீங்க, அதை மட்டும் செய்யுங்கடா, இந்த உலகம்லாம் அப்புறம் பாத்துக்கலாம்னு சொல்லிட்டு நாங்க திரும்பி வந்தோம். அதுக்கு அப்புறம் தினமும் இரவு அவர்கள் குரல் கேட்காமல் நான் இருந்ததில்லை. ஒவ்வொரு முறையும் hostelல தானம்மா இருக்கீங்கன்னு நான் கேட்குறப்ப எல்லாம் முதலில் ஆமாப்பான்னு வந்த பதில், கொஞ்ச நாளுல எங்க மேல கோவமாவே மாறுச்சு. ஆனா, பொண்ணுங்களோட safety தானே பெத்தவங்களுக்குப் பெருசு இல்லையா?"
"மூனாவது semester exam முடியப் போகுதுன்னு இன்னும் ரெண்டு நாளுல ஊருக்கு வர்றோம்னு phoneல சொன்னாங்க, ஆனா இங்க வரல. phone செஞ்சாலும் switched offனு வந்துச்சு. collegeக்குப் போயி விசாரிச்சுப் பாத்தப்ப, லீவுக்குப் போயிருப்பாங்க. எங்களுக்கு எதுவும் தெரியாதுன்னு பதில் வந்துச்சு. சங்கீதா, சவீதாவோட friends, classmates நம்பர் வாங்கி யாருக்காவது தெரியுமான்னு விசாரிக்கும் போது தான், நிறைய பேரு சொன்னாங்க. ரெண்டு பேருக்கும் யாருடனும் சரியாகப் பேசுறதில்லன்னு. பேசும் போது கூட, சித்தானந்தனைப் பத்தி தான் நிறைய பேசுவாங்கன்னும் தெரிஞ்சுது. சரி, சித்தானந்தனோட ஆசிரமத்துக்குப் போயி விசாரிக்கலாம்னு போனோம். உள்ளப் போகும் போது நாங்களும் சாமி கும்பிட வந்தவங்கன்னு நினைச்சு உள்ள விட்டுட்டாங்க. இது போல, எங்க பொண்ணுங்களைக் காணும்னு விசாரிக்க வந்திருக்கோம்னு தெரிஞ்சதும், securityயக் கூட்டி வந்து நாயப் போலத் தூக்கி வாரிப் போட்டாங்க. சரி, போலீஸ்க்குப் போகலாம்னு போயி, complaint செஞ்சேன். கடைசியா, அந்த ஏரியாவுல தான் signal இருந்திருக்குன்னு சொன்னாங்க. எப்படியும் எங்க பொண்ணுங்க எங்ககிட்ட கிடைச்சுடுவாங்கன்னு நம்பிட்டு இருந்தோம். ஆனா, போலீஸ் நாங்க விசாரிச்சோம், உங்க பொண்ணுங்க ரெண்டு பேரும் அவங்களோட விருப்பத்தோட தான் அங்க இருக்குறாங்க, அவங்களே நினைச்சா வருவாங்கன்னும் சொன்னதா சொன்னாங்க. இதுனால என் wife மனசொடஞ்சு போனவ தான், இப்ப படுத்த படுக்கையா இருக்கா." என்றவர், சற்று தழுதழுத்த குரலில், "என்னோட பொண்ணுங்களுக்கு, தீர்த்தம்னு சொல்லி ஏதோ கலந்து கொடுத்து, அவங்க எங்க இருக்கோம்னு தெரியாத நிலையில வச்சிருக்கானுங்க தம்பி, கடவுள் பேரைச் சொல்லி, ஊருல இருக்குற இடம், காசு, ஆளுங்க இப்படி எல்லாத்தையும் ஆட்டையப் போடுறவனுங்க எல்லாம் நல்லா டிவியில பேசிக்கிட்டு, வெளியில சுத்திக்கிட்டு இருக்கானுங்க, வேட்டை நாயிங்க போல. ஆனா, இந்தக் குடும்பமே சிதைஞ்சு போயி அழுதுட்டு இருக்கோம்." என்று சொல்லிக் கொண்டே அழுதவருக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியாமல் அவரின் கையைப் பிடித்துக் கொண்டேன்.
"தம்பி, உங்களுக்கு எப்படி contact செய்யுறதுன்னு கூட எனக்குத் தெரியல. நீங்க புதுசா சேந்திருக்க இடத்தோட websiteல உங்க மெயில் ஐடி பாத்து தான் உங்களுக்கு mail எழுதுனேன். நீங்க என்கிட்ட பேசுவீங்கன்னு எனக்கு நம்பிக்கையே இல்ல. ஆனா, இங்க வந்து கேட்டதுக்கு ரொம்ப நன்றி தம்பி, நான் பேசுனதெல்லாம் இந்த உலகத்துக்குச் சொல்லுங்க" என்றார்.
"நன்றில்லாம் எதுக்கு sir, இவ்ளோ துயரப்பட்டிருக்கீங்க, கண்டிப்பா சொல்றேன்" என்றேன்.
"சொன்னா, என் பொண்ணுங்க கிடைச்சுடுவாளா?" என்று அவர் கேட்டதற்கு என்னிடம் எந்தப் பதிலும் இருக்கவில்லை.
தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று.
தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று.
துறவு என்று சொல்லிக் கொண்டு, தீயச்செயல்கள் செய்தல் என்பது புதர்களுள் மறைந்து பறவைகளைக் கண்ணி வைத்துப் பிடிக்கும் வேடனின் செயலைப் போன்றதாம்.
Comments
Post a Comment