சிறுகதை 4 : ஃபிரண்ட்ஷிப்னா என்ன - what's friendship? - short story

ஃபிரண்ட்ஷிப்னா என்ன? 
- கணபதிராமன்

கதவைத் திறந்து உள்ளே வந்த யாழினி, தன் பின்னே வந்த ஜீவா தன் புத்தகப்பையை சோபாவின் எறிந்ததைக் கண்டாள். ஸ்கூட்டியில் வரும்போதே, அமைதியாக வந்த ஜீவா கோபமாக இருக்கிறான் என்றறிந்திருந்தாள், யாழினி. 

"ஏண்டா, ஜீவா? என்ன ஆச்சு? ஒரு மாதிரியா இருக்க? வண்டியில் வரும்போது வாயடிச்சுக்கிட்டே வருவ? இன்னிக்கு ஒரு வார்த்தை கூட பேசல?" யாழினி வினவ
"ஒண்ணுமில்லம்மா...!" என்றான் ஜீவா, சற்று கோபத்துடன். 

கோபம் தணியட்டும் என நினைத்துக் கொண்டு யாழினி காபி போட அடுப்பறைக்குச் சென்றாள். சிறிது நேரம் தனியே அமர்ந்திருந்த ஜீவா, எழுந்து அடுப்பறைக்கு சென்று யாழினியிடம் "ஃபிரண்ட்ஷிப்னா என்னம்மா?" என்றான், அதட்டலாக.

சிறு சிரிப்பும் ஆச்சரியமும் கலவையாக யாழினியின் முகத்தில் தோன்றி மறைந்தன. 
"சிரிக்காதம்மா... சொல்லு, ஃபிரண்ட்ஷிப்னா என்ன?"

"நட்புடா..." என்றாள் யாழினி.

"நான் உன்கிட்ட தமிழ்ல என்னன்னு கேட்டனா? அர்த்தம் என்னன்னு சொல்லும்மா?"

" தெரியலடா... நீயே சொல்லு. நான் என்ன சொன்னாலும் ஒத்துக்க மாட்ட... சொல்லு நான் கேட்டுக்கிறேன்" என்றாள் யாழினி, முகத்தைப் பாவமாக வைப்பது போல் பாவனை செய்து கொண்டு.

"ஃபிரண்ட்ஷிப்னா நான் உனக்கு ஃபிரண்டா இருக்கணும். நீயும் எனக்கு ஃபிரண்டா இருக்கணும். நான் ஒரு விஷயம் செய்யுறன்னா அதுல ஏதாவது அர்த்தம் இருக்கும்னு நம்பணும். நம்பிக்கை இல்லாத இடத்துல எப்படிம்மா நட்பு இருக்கும்?"

மூணாவது படிக்கும் பையன்கிட்ட நட்பின் தத்துவம் கேட்டறிந்து கொண்டிருந்த யாழினி, அடுப்பை அணைத்துவிட்டு ஜீவாவைத் தூக்கிக் கொண்டு ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்தாள். 

"இப்ப சொல்லு. என்ன ஆச்சு?" 

"இன்னிக்கு ஸ்கூல்ல எல்லாருக்கும் போஸ்ட் கார்ட் கொடுத்தாங்க... நான் ஒருத்தனுக்கு லெட்டர் எழுதணும். அவன் எனக்கு  லெட்டர் எழுதணும்.எழுதி டீச்சர்கிட்ட கொடுத்தா அவங்க அதைப் போஸ்ட் பண்ணிடுவாங்க. நம்ம வீட்டுக்கு லெட்டர் வரும். என்கிட்ட எப்பவும் சண்ட போடுற ரமேஷ் இன்னிக்கு எனக்கு லெட்டர் எழுதுறதா சொன்னான். அவன எனக்குப் பிடிக்காது தான். ஆனா, அவனே வந்து என்கிட்ட ஃபிரண்ட்ஷிப் வைக்குறேன்னு சொல்லும்போது எப்படிம்மா முடியாதுன்னு சொல்றது? நானும் சரின்னு சொல்லி, அவனுக்கு நான் லெட்டரும் எழுதினேன். ஆனா, எப்பவும் என்கூட இருக்குற அருணுக்கு இது புடிக்கல. என் கூட பேசமாட்டேன்னு சொல்றான். ஃபிரண்ட்ஷிப்ப புரிஞ்சுக்கலன்னா அவன்லாம் என்னம்மா ஃபிரண்டு...?"

சத்தமாக சிரித்து விட்டாள், யாழினி. "இவ்ளோ தானா பிரச்சனை..?"

"சிரிக்காதம்மா... நான் எவ்ளோ சீரியஸா பேசுறேன். முதல்ல சின்ன குழந்தைங்க சொல்றத சீரியஸாக் கேளுங்க...!" ஜீவா சொன்னான் கோபமாக.

"சரி... நான் நாளைக்கு அருண்கிட்ட பேசுறேன். நீ ஏன் இன்னிக்கு ஆர்த்திய பயமுறுத்தின? அவ என்கிட்ட வந்து சொல்றா ஜீவா என்ன பயமுறுத்திக்கிட்டே இருக்கான்னு..." யாழினி கேட்டாள்.

மழுப்பலாக சிரித்த ஜீவா முகத்தில் கோபம் போன இடம் தெரியவில்லை. "அம்மா, நான் ஒண்ணும் பயமுறுத்தலயே... நான் கிளாஸ்க்கு உள்ளே போகும் போது அவ அந்தப்பக்கம் திரும்பி நின்னுக்கிட்டு இருந்தா. நான் பின்னாடி இருந்து ஹாய் சொன்னேன். அவ்ளோ தான். நான் பயமுறுத்தவே  இல்ல..."


ஜீவா மேலும் தொடர்ந்தான், "நான் ஹாய் சொன்னதுக்கே பயப்படுறான்னா அந்த பயத்தை போக்கணும் இல்லயா...?" 

யாழினி சிரித்துக் கொண்டே "வாய்... வாய்..." என செல்லமாகச் சொல்லி ஜீவாவின் கன்னத்தில் முத்தமிட்டாள். 

அடுத்த நாள், வகுப்பறைக்குள் நுழைந்த ஜீவா, இன்றும் தன் இருக்கையில் திரும்பிய படி அமர்ந்திருந்த ஆர்த்தியின் பின் சென்று, 'ஹாய்' என்றான். லேசாக திடுக்கிட்டுத் திரும்பிய ஆர்த்தி, ஜீவாவைப் பார்த்து சிரித்து 'ஹாய், குட் மார்னிங்' என்றாள். அவர்களின் புன்னகை பூத்த முகத்தில் நட்பு இருப்புக் கொள்ளாமல் வழிந்தோடியது.

Comments

Popular posts from this blog

அகர முதல - சிறுகதை (திருக்குறள் கதை) குறள் 0001

புறநானூறு பேசும் நீர் மேலாண்மை

வான்கா - Vanka