நோபல் அறிஞர் ருடால்ஃப் மோஸ்பயர் - Rudolph Mössbauer

ஜனவரி 31 - இன்று 1961 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்ற ருடால்ஃப் லுட்விக் மோஸ்பயரின் (Rudolph Ludwig Mössbauer) பிறந்த தினம். 

பின்னீடு (recoil) இல்லாத காம்மா கதிர் உமிழ்வு மற்றும் கதிர் உள்வாங்குதல் (Gamma emission and absorption) குறித்து இவர் எழுதிய ஆய்வுக்கட்டுரைகள் மூலமும் இரிடியம் கொண்டு மேற்கூறிய விளைவை செய்துகாட்டியதன் மூலமும் அறிவியல் உலகத்தைத் தன்பால் திரும்ப வைத்து நோபல் பரிசையும் தட்டிச் சென்றவர். 
ருடால்ஃப் லுட்விக் மோஸ்ப்யர் (31-01-1929 - 14-09-2011)

மோஸ்பயர் 31 ஜனவரி 1929 அன்று ஜெர்மனி மியூனிக் நகரில் பிறந்தார். மியூனிக் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பயன்பாட்டு இயற்பியலில் (Applied Physics) 1952 ஆம் ஆண்டு பட்டம் பெற்றார். பின்னர், ஹீடல்பெர்க் நகரில் உள்ள மேக்ஸ் பிளாங்க் மருத்துவ ஆய்வுக் கழகத்தில் பணியில் சேர்ந்தார். அந்த ஆய்வுக்கூடத்தில் காம்மா கதிர் உமிழ்வு பற்றி ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுக்கூடம் எந்தப் பல்கலைக்கழகத்துடன் தொடர்பில் இல்லாததால், ஆய்வுக் கட்டுரை சமர்ப்பதிலும், முனைவர் பட்டம் பெறுவதிலும் இவருக்கு சிரமங்கள் இருந்தது. 

இருப்பினும், மியூனிக் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்த இவரது ஆசிரியர் ஹெயின்ஸ் மேயர் லீபினிட்ஸ் உதவியுடன் தனது ஆய்வுக்கட்டுரையை வெளியிட்டு 1958 ஆம் ஆண்டு அணுக்கருவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றார். 

மோஸ்பயர் விளைவு:

இவர் ஆய்வுக்கட்டுரையில் தெரிவித்த ஆய்வு உலக அறிவியல் அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, இவரின் பெயரிலேயே மோஸ்பயர் விளைவு என அழைக்கப்படுகிறது. சரி, மோஸ்பயர் விளைவு என்றால் என்ன என்பதைப் பார்ப்போம். வாயுப்பொருட்களில் எக்ஸ் கதிர்கள் போல் காம்மா கதிர்கள் செயல்படுவதில்லை. காம்மா கதிர்கள் வாயுப் பொருட்களின் அணுக்கருவில் மோதும் போது பின்னீடு மூலம் ஆற்றல் இழப்பு (Energy loss due to recoil) ஏற்பட்டது. பின்னீடு என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக துப்பாக்கியைக் கூறலாம். துப்பாக்கியால் சுடும் போது குண்டு செல்லும் திசைக்கு எதிர் திசையில் தோன்றும் விசையே பின்னீடு (Recoil). வாயுப் பொருட்களில் காம்மா கதிர்கள் உள்வாங்குதல் (absorption) மற்றும் கதிருமிழ்வு (Emission) நிகழும் போது பின்னீடு மூலம் ஆற்றல் இழப்பு ஏற்பட்டது. ஆனால், மோஸ்பயர் இரிடியம் என்ற திடப்பொருளில் காம்மா கதிர் ஆய்வு செய்த போது, பின்னீடு இல்லாத ஒத்திசைவு கதிர் உள்வாங்குதல் மற்றும் உமிழ்தல் (Recoilless Resonant absorption and emission) நிகழ்வதைக் கண்டறிந்தார். இந்த விளைவே மோஸ்பயர் விளைவு ஆகும். 

1960 ஆம் ஆண்டு கலிபோர்னியா தொழில்நுட்ப பல்கலைக்கழகமான கேல்டெக் (Caltech) இவரைப் பணிபுரிய அழைத்தது. சேர்ந்த இரு வருடத்திலேயே அறிவியல் ஆய்வாளரிலிருந்து பேராசிரியராக உயர்ந்தார் மோஸ்பயர். 1964 ஆம் ஆண்டு மியூனிக் பல்கலைக்கழகம் பேராசிரியராக பணியாற்ற அவரை ஜெர்மனிக்கு அழைத்தது. இயற்பியல் துறையில் (Department of Physics) கேல்டெக்கில் உள்ளது போல் சில மாற்றங்கள் வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் மியூனிக் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இணைந்தார் மோஸ்பயர். 1964 முதல் 1997ல் பணி ஓய்வு பெறும்வரை பேராசிரியராக தொடர்ந்து பணியாற்றி வந்ததுடன் அணுக்கருவியல் மற்றும் நியூட்ரினோ குறித்த ஆய்வுகளிலும் ஈடுபட்டு வந்தார். 

தனது மாணவர்களுக்கு இயற்பியல் மட்டுமல்லாமல் தன்னம்பிக்கையும் தந்து சிறந்த ஆசிரியராக விளங்கிய ருடால்ஃப் மோஸ்பயர், தனது மாணவர்களுக்கு மட்டுமல்ல நம் அனைவருக்கும் கூறிய முக்கியமான அறிவுரையைப் பகிர விரும்புகிறேன்.

"விளக்குங்கள்...! அனைத்திலும் இன்றியமையாதது என்னவென்றால் உங்களுடைய விளக்கும் திறன். வருட முடிவில் தேர்வு இருக்கும். அதில் நீங்கள் விளக்க வேண்டியிருக்கும். அதை வென்றால் பட்டம். அவ்வளவு தான் என நீங்கள் நினைக்கலாம். ஆனால், இல்லை. இந்த வாழ்க்கையே ஒரு தேர்வு தான். ஒவ்வொரு அசைவிலும் நீங்கள் பரீட்சை எழுத வேண்டி இருக்கும். பிரச்சனைகளை விவாதிக்க வேண்டியிருக்கும். எனவே, விளக்கும் திறனை வளர்த்துக் கொள்ளுங்கள். கூடவே இருக்கும் நண்பர்களுக்கு விளக்குங்கள். அவர்கள் இல்லையெனில், வீட்டில் உங்கள் அன்னைக்கு விளக்குங்கள் அல்லது உங்கள் பூனைக்கு விளக்குங்கள்...!!"



- கணபதிராமன்

Comments

Post a Comment

Popular posts from this blog

அகர முதல - சிறுகதை (திருக்குறள் கதை) குறள் 0001

புறநானூறு பேசும் நீர் மேலாண்மை

வான்கா - Vanka