ஜனவரி 30 - ஒரு நாள் ஐந்து நிகழ்வுகள்
ஜனவரி 30, வரலாற்றின் பக்கங்களை புரட்டும் போது சில நாட்கள் மிகச் சிறந்ததாகவும், சில நாட்கள் சோகத்தின் உச்சமாகவும் இருக்கும். ஆனால், ஜனவரி 30 இரண்டின் கலவையாக இருந்ததைக் காண முடிந்தது. இந்தப் பதிவு அறவழி நின்ற காந்தியாருக்கும், அது இன்றும் சாதிக்கவல்லது என நிரூபித்த எம் தமிழ் இளைஞர்களுக்கும் சமர்ப்பணம்.
நிகழ்வு 1:
பிர்லா இல்லம், டெல்லி, ஜனவரி 30, 1948 மாலை 5:17
உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த காந்தியார் தான் பேசவிருந்த கூட்டத்தின் மேடை நோக்கி சென்று கொண்டிருந்தார். கூட்டத்தில் இருந்து வெளிப்பட்ட ஓர் இளைஞன் காந்தியின் முன் நின்று குனிந்து வணக்கம் தெரிவித்தான். காந்தியைத் தாங்கிப் பிடித்தபடி இருந்த பெண்மணி, அபா சட்டோபாத்தியாயா, அந்த இளைஞனிடம் 'காந்தியாருக்கு ஏற்கனவே நேரம் ஆகிவிட்டது' என்றாள்.
அவளைத் தள்ளிவிட்ட அந்த இளைஞனின் கையில் இருந்த பெரெட்டா எம் 1934 (Beretta M 1934) துப்பாக்கியில் இருந்து புறப்பட்ட மூன்று தோட்டாக்கள் காந்தியார் மார்பில் இறங்கியது. கூடியிருந்தக் கூட்டம் உறைந்தது. எங்கும் கூக்குரல் ஒலித்தது. தப்பி ஓட முயன்ற இளைஞனை அங்கு தோட்ட வேலை புரிந்த ரகு நாயக் துரத்திப் பிடித்தார். அந்த இளைஞனை கூட்டம் அடிக்க முயன்ற போது சிலர், "இது உண்மையின் நேரம், இவனை சட்டத்தின் கரங்களில் ஒப்படைப்போம்" எனக்கூறி காவலர்களிடம் ஒப்படைத்தனர்.
பிர்லா இல்லத்தின் உள்ளே எடுத்து செல்லப்பட்ட காந்தியார், 15 நிமிடங்களில் தன்னுயிர் நீத்தார்.
காந்தியடிகள் மலர் படுக்கையில் |
இறப்பதற்கு இரண்டு நாட்கள் முன்பு (ஜனவரி 28, 1948) காந்தியார் கூறியிருந்த வார்த்தைகள்:
"நான் ஒரு பைத்தியக்காரனின் தோட்டாவினால் சாக வேண்டும் எனில், முகத்தில் சிரிப்போடு இறக்க வேண்டும். என்னுள் சிறிதளவும் கோபம் இல்லாமல் இறக்க வேண்டும். என் வாக்கிலும், மனதிலும் கடவுள் இருந்து உதவ வேண்டும்."
நிகழ்வு 2:
இது முதல் நிகழ்வுடன் தொடர்பு படுத்திக் காணும் போது விசித்திரமாகத் தோன்றலாம். 1908 ஆம் ஆண்டு ஜனவரி 30 அன்று தென் ஆப்பிரிக்காவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த காந்தியார் ஜேன் சி. ஸ்மட்ஸ் (Jan C. Smuts) என்பவரால் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
1908 ஆம் ஆண்டு ஆங்கிலேயனால் விடுவிக்கப்பட்ட காந்தியார் நாற்பது ஆண்டுகள் கழித்து அதே நாளில் 1948 ஆம் ஆண்டு இந்தியனால் கொல்லப்பட்டார்...!
ஜேன் சி.ஸ்மட்ஸ் |
கூடுதல் தகவல்: ஜேன் சி. ஸ்மட்ஸ் தென் ஆப்பிரிக்காவின் இரண்டாவது பிரதமர் (1939 - 1948)
நிகழ்வு 3:
உலகையே உலுக்கிய சர்வாதிகாரி அடோல்ஃப் ஹிட்லர் ஜெர்மனியின் அதிபராக பதவியேற்ற நாள் இன்று. (ஜனவரி 30, 1933)
அடோல்ஃப் ஹிட்லர் |
நிகழ்வு 4:
நானூறு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்றும் உலகின் பலரால் போற்றப்படும் வில்லியம் ஷேக்ஸ்பியர் தனது சோகக் காதல் காவியமான ரோமியோ ஜூலியட் நாடகத்தை லண்டன் கர்ட்டன் அரங்கில் முதன் முறையாக அரங்கேற்றினார் (ஜனவரி 30, 1595)
வில்லியம் ஷேக்ஸ்பியர் - ரோமியோ ஜூலியட்டிலிருந்து ஒரு காட்சி |
நிகழ்வு 5:
காலியம் நைட்ரைடு (Gallium Nitride) எனும் குறை கடத்தி (semiconductor) கொண்டு, குறைந்த மின்னழுத்ததில் அதிக நீலநிற ஒளி தரும் ஒளியீரி (LED) கண்டுபிடித்த - அதற்காக 2014 ஆம் ஆண்டு நோபல் பரிசு வாங்கிய - முனைவர் இசாமு அகசாகியின் (Dr. Isamu akasaki) பிறந்த நாள் இன்று. (ஜனவரி 30, 1929)
முனைவர் இசாமு அகசாகி (Dr. Isamu Akasaki) |
இன்று நாம் உபயோகிக்கும் ஒளியீரி விளக்குகள் (LED Bulbs), நீலக்கற்றை தகடுகள் (Bluray disc) முதலான பொருட்களின் இவரது ஆய்வுகளின் விளைவுகளே.
- கணபதிராமன்
Very Informative. Super Sir.
ReplyDeleteMu ka azagiri birth day also today only
ReplyDeleteஅடேய்...
Delete