பொங்கலோ பொங்கல்

ஒரு சிறு இடைவெளிக்குப் பின் மீண்டும் நான் எழுதுகிறேன். சில கோபங்கள்... சில வருத்தங்கள்... சில ஏக்கங்கள்... இந்த வலைமலரை தற்காலிகமாய் நிறுத்தி வைக்க காரணமாயிருப்பினும், தொடர்ந்து எழுத வற்புறுத்தியும், விருப்பம் தெரிவித்தும் இருந்த என் நண்பர்களுக்கும் அனைவருக்கும் நன்றிகளுடன் இனிய பொங்கல் மற்றும் தமிழர் திருநாள் வாழ்த்துக்களும்...

கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக நான் கொண்டாடி வந்த பொங்கல் பண்டிகைகள் எவ்வாறு இருந்தது என யோசித்து பார்க்கையில், பெரும்பாலும் 'சின்னத்திரையில் முதன்முதலாக' என தொ(ல்)லைக்காட்சியிலேயே கடந்தது எனலாம். நான் மட்டுமல்ல இன்று பலரின் விடுமுறை நாட்கள் இவ்விதமே கழிகிறது. இதுதான் பொங்கலா...? இது தீபாவளி அளவுக்கு பட்டாசு, இனிப்பு, தீபம் என வண்ணமயமானது இல்லை எனினும், வாசல் மாக்கோலம், மாவிலைத் தோரணங்கள், இனிக்கும் கரும்பு, கழுத்தில் மஞ்சள் மாலை சூடி திலகம் அணிந்து அழகாய் அடுப்பில் அமர்ந்திருக்கும் பொங்கல் பானை என இந்தப் பொங்கலில் பல சிறப்புக்கள்... வேறு எந்தப் பண்டிகைக்கும் இல்லாத தனிச் சிறப்பு நம் பொங்கலுக்கு உண்டு. வேளாண்மைக்கு உறுதுணையாய் இருந்து நமக்கு உணவு கொடுத்த இயற்கைக்கு நேரடியாய் உணவைப் படைத்து நன்றி பகர்வதே அச்சிறப்பு... இங்கே இயற்கைக்கும் நமக்கும் இடைவெளி இல்லை. இடைத்தரகர்கள் இல்லை. அர்ச்சனைச் சீட்டு இல்லை. நீண்ட வரிசை தரிசனம் இல்லை. மனமகிழ்ந்து ஒரே குரலாய் குதூகலமாய் நாம் எழுப்பும் 'பொங்கலோ பொங்கல்' எனும் ஒலியே மந்திரம்... 

பொங்கல் நாளுக்கு இத்தனைச் சிறப்பு எனில் அடுத்த நாளும் அவ்வாறே. உழவுக்கு உறுதுணையாய் இருந்த காளைகளுக்கு நன்றி கூறும் நம்மை மிருகவதை செய்யும் காட்டுமிராண்டி எனக் கூறும் சிலரின் கருத்துக்கள் நகைமுரண். சல்லிக்கட்டுக்கு ஆதரவாக இன்று எழுந்திருக்கும் ஒற்றுமைக் குரல் இதே போன்று அனைத்துப் பிரச்சினைகளிலும் ஓங்கி ஒலிக்க வேண்டும் என்பதே எனது சிறிய ஆசை.


கால மாற்றத்திற்கேற்ப தன்னை மாற்றித் தகவமைத்துக் கொள்ளும் இனமே பிழைத்து வாழும் என்பது விதி. ஆனால், தகவமைவு என்பது எல்லா நேரமும் அனுசரித்து பிழைப்பது மட்டுமல்ல. சில நேரங்களில் துணிந்து போராடுவதுமே.

பொங்கலோ பொங்கல்.

உழவுக்கும் தொழிலுக்கும்
வந்தனை செய்வோம்.

- கணபதிராமன்

Comments

  1. Replies
    1. பொங்கலோ பொங்கல்....

      பொங்கும் இன்பம்
      எங்கும் தங்க
      என்றும் உள்ளம்
      கரும்பாய் இனிக்க...
      உணவிட்ட உழவன்
      உள்ளம் மகிழ்ந்து
      உலகம் சிரிக்கட்டும்...

      உணவில்லைன்னு ஒருத்தன் சொன்னாலே உலகத்த அழிக்கலாம்னு சொன்னான் பாரதி... உணவு தந்தவன் சாகுறான்... இது மாறனும்... மாத்த முயற்சிப்போம்...

      Delete
  2. Nice sir ��������

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அகர முதல - சிறுகதை (திருக்குறள் கதை) குறள் 0001

புறநானூறு பேசும் நீர் மேலாண்மை

வான்கா - Vanka