தூக்கம் வரம் - Sleep is boon

அனைவருக்கும் காணும் பொங்கல் வாழ்த்துக்கள். ஆண்டு முழுதும் வேளாண்மைக்காக உழைத்து உறவுகளை மறந்திருந்த விவசாயி தன் சொந்த பந்தங்களைக் காணுவதற்காக எடுத்துக் கொண்ட விடுமுறை நாளே இந்தக் காணும் பொங்கல். வேலை நிமித்தமாகத் தன்னைக் காணாமல் இருக்கும் சிலரையும் என் உறவு என் நட்பு என மறவாமல் இருக்கும் அனைத்து அன்புள்ளங்களுக்கும் இந்த நாளை அர்ப்பணிக்கின்றேன். 

ஒரு நாளில் எவ்வளவு நேரம் நீங்கள் தூங்குகின்றீர்கள்? தூக்கத்தின் போது உங்கள் உடலில் என்னென்ன நிகழ்கிறது? கனவு எப்போது வரும்? தூக்கம் குறைந்தால் என்ன ஆகும்? வாருங்கள்... இவை தான் இன்றைய பேசுபொருள்.

நம் வாழ்வின் மூன்றில் ஒரு பங்கு ஒரு விஷயம் இருக்கிறது என்றால் அது நம் வாழ்வின் எவ்வளவு முக்கியமானதாக இருக்க வேண்டும். உறக்கமும் அவ்வாறே. ஒரு மனிதன் தன் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு (அதாவது 75 வயது வரை வாழும் ஒருவன் சராசரியாக 25 வருடங்கள்) உறங்குகிறான். தூக்கம் என்பது கண்மூடிப் படுத்திருப்பது மட்டுமல்ல. ஆழ்ந்த உறக்கத்தின் போது நம் உடலைக் கட்டுப்படுத்தும் மூளை, நரம்பு மண்டலம், அதிலுள்ள நியூரான்கள் சிறு மின்னலைகள் (மூளை அலைகள் - Brain waves) மூலம் புத்துணர்வு அடைகின்றன. நல்ல தூக்கத்தின் முடிவில் விழிக்கும் போது உடல் வலி, களைப்பு இருப்பதில்லை. புத்துணர்வு மட்டுமே இருக்கும். 


இந்த தூக்கம் மொத்தம் ஐந்து நிலைகளைக் கொண்டது. 

நிலை 1: இந்த நிலையில் விழித்திருந்தாலும் கண் தானாக மூடும். சில நேரம் திடுக்கிடுவது, தூங்கி விழுந்து விழித்தல் ஆகியவை நிகழும். சரியாக சொல்லப் போனால் உடல் தனக்கு ஓய்வு தேவை என்பதை கூறும் நிலை இது. இந்த நிலையிலேயே தூங்கி விடுவது நல்லது. சரியான உதாரணம் வகுப்பறையில் உறங்குவது...!

நிலை 2: இந்த நிலையில் கண் மூடியிருக்கும். நம்மைச் சுற்றி நிகழ்பவை நம்மை எளிதில் பாதிக்கும். சத்தங்களைக் கேட்க முடியும். சிறு சத்தமும் நம்மை எழுப்பி விடும். மூளை அலைகள் மெதுவானதாகவும் வலிமையற்றதாகவும் இருக்கும். 

நிலை 3: மெதுவான மூளை அலைகள் (டெல்டா அலைகள் - Delta waves) உடன் சிறு கால இடைவெளியில் வலிமையான மூளை அலைகளும் இந்த நிலையில் இருக்கும். உடலின் தசை செயல்பாடுகள், விழியசைவு நிறுத்தப்படுகிறது. 

நிலை 4: மூளை அலைகள் மிகவும் வலிமையானதாக இருக்கும். நிலை 3 மற்றும் நிலை 4 இரண்டும் ஆழ்ந்த உறக்கம் (Deep Sleep) ஆகும். நம்மைச் சுற்றி நிகழும் எதுவும் நம்மை பாதிப்பதில்லை. பெரும்பாலும், விழியசைவுகள், தசை செயல்பாடு எதுவும் இருப்பதில்லை. 

நிலை 5: துரித விழியசைவு நிலை - Rapid Eye Movement Stage - REM stage
இந்த நிலையில் மூளை அலைகள் மிக வலிமை வாய்ந்ததாக இருக்கும். இதய துடிப்பு அதிகமாகும். இரத்த அழுத்தம் உயரும். உடல் வெப்பநிலை மாற்றம் நிகழும். வியர்க்கும். முக்கியமாக, கண் மூடிய நிலையில் விழி வேகமாக அசையும். இந்த நிலையிலேயே நமக்கு கனவு வரும். மூளை அலைகளின் உருவகமாகவோ, நமது பழைய நினைவுகளின் கோர்வையாகவோ, பல நேரங்களில் ஒழுங்கற்ற நிகழ்வுகளின் கோர்வுகளாகவோ கனவு வரக்கூடும். இந்த நிலையிலேயே விழித்துக் கொண்டால் கனவு நினைவில் இருக்கும். குழந்தைகள் தூக்கத்தில் சிரிப்பது, முகத்தை சுளிப்பது எல்லாம் இந்நிலையிலேயே. 


இந்த 5 நிலைகளும் 90-100 நிமிடங்களுக்கு ஒரு முறை மாறி மாறி வரும். எவ்வளவு நேரம் நிலை 3 மற்றும் 4, REM நிலையில் இருக்கிறோமோ அவ்வளவு ஆரோக்கியத்திற்கு நல்லது. 

பிறந்த குழந்தைகள் 20 - 22 மணிநேரம் வரை தூங்கும். 6 மாதம் முதல் 3 வயது வரை குழந்தைகள் 12 - 16 மணிநேரம் தூங்குவது நல்லது. குழந்தைகளின் தூக்கத்தில் 50% REM நிலை இருக்கும். எவ்வளவு நேரம் குழந்தைகள் REM நிலையில் இருக்கிறார்களோ அவ்வளவு ஆரோக்கியமாக இருப்பார்கள். அவர்களின் வளர்ச்சிக்கு தூக்கமும் ஒரு காரணி.

5 வயது முதல் 20 வயது 8-9 மணிநேரம் உறக்கம், 20 வயதுக்கு மேல் 6 - 8 மணிநேரம் உறக்கம் என தூக்க நேரம் குறைந்து கொண்டே வரும். வயதானோர் தூக்கத்தில் 50% நிலை 2லும், 20% REM நிலையிலும், 30% மற்ற மூன்று நிலையிலும் இருக்கும். வயதாக ஆக REM நிலை நேரம் குறைந்து கொண்டே வரும். குறட்டை விடுவதாலும் ஆழ்ந்த உறக்கம் மற்றும் REM நிலை தடை படுகிறது. (குறட்டையைப் பற்றி தனிப்பதிவே எழுதலாம். எழுதுவேன்!)

தூக்கம் ஒரு வரம். அடுத்த நாள் நல்லதாய் சுறுசுறுப்பாக அமைய நாம் இன்று நமக்கு செய்ய வேண்டிய கடமை. 'தூங்காதே தம்பி தூங்காதே' என்பதெல்லாம் கவியின் உருவகங்களாக இருக்கலாம். நாம் ஆரோக்கியமாக இருக்க நன்கு தூங்குவோம்.

- கணபதிராமன்

Comments

Popular posts from this blog

அகர முதல - சிறுகதை (திருக்குறள் கதை) குறள் 0001

புறநானூறு பேசும் நீர் மேலாண்மை

வான்கா - Vanka