வர்றட்டா சார்? - குறள் கதை
வர்றட்டா சார்?
- முடிவிலி
இன்முகங் காணும் அளவு.
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: ஈகை
குறள்: 224
"ச்ச, நல்ல நேரம் பாத்து இப்படி ஆவுதே?" என இன்னும் நான்கு மிதி மிதித்தேன். எந்தவொரு அசைவும் இல்லை. அலுவலகத்திற்கு வேறு நேரம் ஆகிக் கொண்டிருந்தது. நான் பணிபுரியும் நிறுவனத்தின் உயரலுவலரிடம் வேளச்சேரி அடுக்ககத் திட்ட அறிக்கை கொடுக்க நேற்று இறுதி நாள். நேற்றிரவு வரை அலுவலகத்தில் இருந்து மொத்த வேலையையும் முடித்து திட்ட அறிக்கை பணியும் முடித்தாகிவிட்டது. மின்னஞ்சலில் அனுப்பிய சில நொடிகளில் என்னை அழைத்தவர், "காலையில வந்ததும் என் டேபிள்ல ஹார்ட் காப்பி வச்சிடுங்க, க்ரேட் வொர்க், செந்தில்" என்று அழைப்பைத் துண்டித்திருந்தார், நான் சொன்ன 'ஓகே சாரை'க் காதில் வாங்காமலே. நேற்று இரவு பத்தே முக்காலுக்கு வீடு வந்து சேரும் போது நாங்கள் இருவரும் மொத்தமாய் நனைந்திருந்தோம். வந்து உறங்கி நேரம் கழித்து எழுந்து, இவனை மிதித்து கொண்டிருந்தேன். கிளம்புவேனா என்றான் இந்த ஹோண்டா யுனிகார்ன்.
கைக்கடிகாரத்தைப் பார்த்தேன், இன்னும் இவனையே மிதித்துக் கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது என அலைபேசி எடுத்து ஓலா செயலியில் வண்டி ஏதும் கிடைக்குமா எனப் பார்த்தேன். கார்கள் அனைத்தும் இருபது முதல் முப்பது நிமிடம் என அச்சமூட்டின. ஆட்டோ இரண்டு நிமிடம் என்றது. தொட்டேன். ஓட்டுனர் தொலைபேசி எண்ணுடன் பதிவுச் செய்தி வந்தது. சில நொடிகளில் என் அலைபேசி அலற, எடுத்துக் காதுக்கு வைத்தேன்.
"சார், ஆட்டோ டிரைவர் பேசுறேன் சார்"
"சொல்லுங்க, என் வீட்டு அட்ரஸ் சரியாத் தான் இருக்கு. வீட்டுக்கு வெளிய தான் இருக்கேன். கொஞ்சம் உடனே வாங்க" என்றேன்.
"சார், வீட்டுக்கிட்ட தண்ணி ரொம்ப இல்லியே. நேத்து முச்சூடும் மழையா இருந்துச்சு. ஆட்டோ உள்ள வரலாம்ல?"
"வரலாங்க."
"தோ, டூ மினிட்ல வந்துடுறேன்" என்று அழைப்பைத் துண்டித்தார் ஆட்டோ ஓட்டுனர். எனக்கு வந்த பதிவுச் செய்தியைப் பார்த்தேன். ஆட்டோ ஓட்டுனர் பெயர் அரசு எனப் போட்டிருந்தது. சொன்னபடியே இரண்டு நிமிடங்களில் வந்து சேர்ந்திருந்தார். ஆட்டோவில் ஏறியதும், OTP எண்ணைச் சொன்னேன்.
"மவுண்ட் ரோட்ல எங்க சார்?" என்றார் அரசு.
"பத்தாரி ரோட், அது தான் மேப்லயே போட்டிருக்கே?" என்றேன்.
"இதுல சில நேரம் சரியா வர்றதில்ல, எதுக்கும் ஒரு முறை கேட்டுறது நல்லது தான? இதுல காட்டாத வழி கூட எங்களுக்குத் தெரியும்." என்று சொன்னபடி வண்டியைக் கிளப்பினார். ஆட்டோ ஒரு சிக்னலில் நின்ற போது, ஒரு சிறுவன் வந்து, "அண்ணா, ண்ணா, ஒரு டிராயிங் புக் வாங்கிக்கோண்ணா, 20 ரூவா தான்ணா" என்றான்.
'இத வாங்கி நான் என்னடா செய்யப் போறேன்' என்று மனதில் நினைத்துக் கொண்டு, "வேண்டாம்பா" என்று சொல்ல, அந்தச் சிறுவன், இன்னும் இரு முறை முயன்று பார்த்துவிட்டு, அரசுவிடம் சென்றான். அவர் கையில் புத்தகத்தை வாங்கிப் பார்த்து விட்டு, "இதுல நீ வரைஞ்சிருக்கியாடா?" என்றார்.
"இல்லண்ணா, ஒரு புக் வாங்கிக்க, எனக்கு டீ காசாவது கிடைக்கும்ணா" என்றான்.
"எனக்கு இந்த புக்லாம் வேண்டாம், இந்தா பத்து ரூவா, போயி அந்தக் கடையில டீ சாப்பிட்டுக்கோ" என்று அவன் கையில் பத்து ரூபாய்த்தாளைக் கொடுத்தார்.
"தாங்க்ஸ்ணா" என்று நகர இருந்த பையனை மீண்டும் அழைத்து, "பாத்துட்டே இருப்பேன், நேரா கடைக்குப் போற, டீ வாங்குற" என்றார். இன்னும் பதினைந்து நொடியே இருந்தது பச்சை விழ. சிறுவன் சென்று தேநீர்க் கடையில் நுழைய, சிரித்தபடி, வண்டியைச் செலுத்தினார் அரசு. அவருடைய இந்தச் செயல், என்னை ஏதோ செய்தது.
"ஏங்க, அந்தப் பையன் பிச்சை எடுத்துட்டு இருக்கான், அவனுக்குப் போயி உதவி செய்யுறீங்க, அந்தக் காசு யார்கிட்ட போவப் போகுதுன்னு உங்களுக்குத் தெரியுமா?"
"தெரியாது தான் சார், சில பேரு முகத்தப் பாத்தாலே நம்பத் தோனும், நான் நம்புறேன், அந்தப் பையன் டீக்கடைக்கு ஓடுறப்ப அவன் முகத்துல இருந்த சிரிப்பு உண்மைன்னு நெனக்கிறேன். இதெல்லாம் கடந்து தான் நானும் வந்திருக்கேன். வுடு சார். ஒரு நாளைக்கு டியு போவ, முன்னூறு வரவு வருது. அதுல பத்து செலவுன்னு போயிட்டே இருக்க வேண்டியது தான்."
எனக்கு வியப்பாய் இருந்தது. நாம் எந்தவொரு நிலையிலாவது இப்படி சிந்தித்திருக்கிறோமா என்று எனக்குள் நான் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தேன்.
"என்ன சார், நான் சொல்றது சரியா?" என்றார் அரசு.
"தெர்லீங்க, ஆனா, இன்னும் பிச்சை எடுக்குறவங்களுக்கு உதவுறது சரின்னு மனசு ஒத்துக்க மாட்டுது" என்றேன்.
ஆட்டோ நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் இருந்து அண்ணா சாலைக்குள் நுழைந்தது.
"சரி சார், உன்னப் பாக்க நல்ல வேலைல இருக்குறவரு போலத் தான் தெரியுது. நான் கேக்குறேன்னு தப்பா நெனச்சுக்காத, இதுவரைக்கும் நீ ஒனக்கு வந்த சம்பளத்துலேந்து எவ்ளோ பேருக்கு உதவிருக்கீங்க, உங்க உறவுக்காரங்க, ரிலேசன்லாம் சொல்லாதீங்க. முகம் தெரியாத மனுசனுக்கு எவ்ளோ குடுத்திருப்பீங்க?" என்றார் அரசு.
எனக்கு சுரீர் என்று உறைத்தது. என்னிடம் அந்தக் கேள்விக்குப் பதில் இல்லை.
"இந்த ரைட் தான, சார்?" என்று அவர் கேட்க, "ஆமா" என்றேன். அண்ணா சாலையில் இருந்து பத்தாரி சாலையில் நுழைந்த ஆட்டோ, பள்ளம் மேடாக இருந்த சாலையில் மெல்ல ஊர்ந்து சென்றது.
"என்ன சார், கேட்டேன், பதிலையே காணோம். சரி, எங்க சார் நீ எறங்கணும்?"
"அந்தக் கடைசி பில்டிங் கிட்ட நிறுத்துங்க" என்றேன். எனது அலைபேசியில் செயலி வந்த பயணத்திற்கு, 240 ரூபாய் என்றது. ஆட்டோவுக்கு வலது புறமே பார்த்துக் கொண்டிருந்த அரசுவிடம், ஒரு இருநூறு ரூபாய்த் தாளும், ஐம்பது ரூபாய்த் தாளும் கொடுத்தேன். அவர் என்னைக் கவனிக்கவே இல்லை. வலது புறமே பார்த்துக் கொண்டிருந்தார்.
"ஹலோ, இந்தாங்க வாங்கிக்குங்க" என நான் கூற, என் பக்கம் திரும்பிய அரசு, "சாரி சார், ஒரு காலத்துல இந்த இடத்துல எத்தன வூடு இருக்கும் தெரியுமா, சார். இப்பப் பாருங்க, எல்லாத்தையும் ஊர விட்டு எங்கயோ தூக்கி எறிஞ்சு வச்சிருக்காங்க."
"தெரியும், slum clearance boardலேந்து வந்து அவங்கள வேற எடம் மாத்தி விட்ருக்காங்க"
"ரைட்டா சொன்ன சார், தமிழ்ல தான் மாத்திச் சொல்றாங்க, குடிசை மாற்று வாரியம்னு. குடிசைய மாத்தி அதே இடத்துல கட்டிக் குடுத்தா சரி, ஊர வுட்டுத் தொரத்திட்டு, இந்த எடத்துல எதாவது கம்பெனிக்கும், ஆஸ்பத்திரிக்கும் பார்க்கிங் கட்டுனா. சரி, அத வுடு சார், நீ என்ன செய்ய முடியும்?" என்று என்னிடம் இருந்து பணத்தை வாங்கியவர், மீதி பத்து ரூபாயைக் கொடுக்க, "வச்சுக்கங்க" என்றேன். எனக்கு அலுவலகத்தில் வேலை தலைக்கு மேல் இருப்பது எல்லாம் தெரிந்திருந்தாலும் இவருடன் பேசுவது எனக்கே புது உணர்வாய் இருந்தது.
கையில் வைத்திருந்த பத்து ரூபாயைப் பார்த்து சிரித்துக் கொண்டே, "சார், நான் பேசிட்டு வந்ததை என்கிட்டயே குடுக்கப் பாக்குறியா? ஆட்டோக்காரனுக்கு, சர்வருக்கு டிப்ஸ் குடுக்குறதுல்லாம் உதவில சேராது சார். காலையில முத ஆளு நீ தான், நீ வச்சுக்கன்னு குடுத்தத வேணாம்னு சொல்ல மாட்டேன், ஆனா, சுத்தி முத்தியும் பாரு சார். இந்த ஒலகத்துல உதவி செய்யணும்னு நூறு பேரு நெனச்சா, உதவி வேணும்னு ஆயிரம் பேரு இருப்பான். நூறு நூத்தி ஒன்னாச்சுன்னா நூறு இல்ல ஆயிரம் பேருக்கும் நல்லது தான" என்று சொல்லிச் சிரித்தார்.
அவரைச் சில நொடி வியந்து பார்த்தேன், என் முகத்தில் சின்ன புன்னகை பூத்தது. "வர்றட்டா சார்" என்று ஆட்டோவை எடுத்துக் கிளம்பிச் சென்றார் அரசு. அவர் தான் இன்று நான் செய்யும் கல்வி உதவிகள், மருத்துவ உதவிகளுக்கெல்லாம் காரணமானவர். அவ்வப்போது ராயப்பேட்டை மருத்துவமனை சென்று ஸ்கேன் எடுக்கக் கூட காசு இல்லாதவர்களுக்கெல்லாம் தேடிச் சென்று உதவுகிறேன். முதலில் மறுத்து, பின் தேவையின் காரணம் வாங்கி, கண்ணீர் மெல்ல எட்டிப் பார்க்க, உதவி கிடைத்ததை எண்ணி அவர்கள் சிரிக்கும் நொடி வரை எனக்கும் மனம் ஏங்கிக் கொண்டே இருக்கும். அந்தச் சிரிப்பு, அவர்களின் தற்போதைய மகிழ்வைத் தர என்னால் முடிகிறது என நான் நினைக்கும் நொடி, என் முகத்தில் சிரிப்பைப் பார்த்து "வர்றட்டா சார்" என்று சென்ற அரசுவின் முகம் வந்து போகும்.
- முடிவிலி
குறள்விளக்கம்: பொருள் தேவையிருப்பவரின் தேவை அறிந்து கொடுப்பவரின் நிலை, வாங்கியவரின் முகத்தில் சிரிப்பைக் காணும் வரை துன்பமானதே (இன்னும் அவர்கள் தேவை முழுமை அடைந்ததா எனத் தெரியாமல் வருத்தப்படுவதால்).
பற்றாமையிலும் பசித்தவர்களோடு பகிர்ந்து உண்ண தோன்றும் பண்போடு பகிர வேண்டிய '' வர்றட்டா சார் "
ReplyDelete