கச்சேரி - குறள் கதை
கச்சேரி
"வருசம் ஏழாச்சு, ஆனா, இன்னமும் அதையே நினைப்புல வச்சுக்கிட்டு என்ன அடிச்சுக் கொல்லப் பாக்குறான்டா அந்த செல்லையன்" மருத்துவமனையில் அந்த அறையில் தலையில் கட்டுடன் கட்டுப்பாடில்லாமல் கத்திக் கொண்டிருந்தார் வேல்முருகன்.
"அப்பா, நீங்க கோவப்படாதீங்க, டாக்டர் டென்ஷனாகக் கூடாதுன்னு சொல்லிருக்காரு" என்றான் வேல்முருகனின் மகன் கண்ணன்.
"டேய், தனியா நான் வர்ற நேரமாப் பாத்து, முகத்துல துணியக் கட்டிக்கிட்டு சுத்துப் போட்டு அடிச்சுருக்காங்க, நான் போட்ட சத்தம் மட்டும் கேட்டு அய்யாக்கண்ணு ஆளக் கூட்டியாரலன்னா, என்ன உசுரோடவே பாத்திருக்க முடியாது, ஆனா, நீ என்னைக் கோவப்படாதன்னு சொல்ற?" என்று மேலும் சீறினார்.
"அப்பா, சரி, செல்லையா மாமா தான்னு" என்று கண்ணன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே இடைமறித்து, "எவன்டா மாமன் உனக்கு? பிச்சுப்புடுவேன்" என்று வேல்முருகன் சொல்ல, கண்ணன் அமைதியானான். சற்று நேரம் எந்தச் சத்தமுமின்றி, யார் கையில் இருந்த கடிகாரத்தின் நொடி முள் நகரும் டிக் டிக் கேட்கத் துவங்க, மீண்டும் சற்று அமைதியாகப் பேசத் துவங்கினார் வேல்முருகன்.
"அப்படி என்னடா எவனும் செய்யாதத நான் செஞ்சுபுட்டேன், அதுக்கு இப்படி வஞ்சம் வச்சுக்கிட்டுத் திரியுறான்? சீட்டாட்டத்துல ரெண்டு ஜோக்கரை எடுத்து வச்சிருந்தேன். அத அவன் பாத்தா என்கிட்டல்ல சொல்லிருக்கணும்? கூட்டத்துல எல்லாரு முன்னாடியும் சொல்லி, என்னைத் தலைகுனிய வச்சுட்டான். ஏதோ அவன் நல்லவன் மாதிரி. அதான் வந்த கோவத்துக்கு விட்டேன் ஒன்னு கன்னத்துல, அன்னிக்கு நடந்த சண்டையில அடுத்த நாள் நடக்க இருந்த கல்யாணமே நின்னு போயிருக்கும். உறவுக்காரன், அக்கா புருசன்னு அன்னிக்கு விட்டேன். இன்னிக்கு என் உசுர எடுக்குறேன்னு வந்து நிக்குறான் சல்லிப்பய" என்று சொல்லி முடித்தார்.
"ஏம்ப்பா, நீ சொல்றத உன்னாலயே நம்பமுடியுதா? அன்னிக்குத் தப்பெல்லாம் உன் பேருல இருக்கு, இருந்தாலும், நம்ம வம்பே வேணாம்னு தானே ஒதுங்கியிருக்காரு, அவரு ஏன் உன்னக் கொல்லணும்? சொல்லு பாப்போம்" என்றான் கண்ணன்.
"எலேய், பகையப் பத்தில்லாம் ஒனக்குத் தெரியாதுடா, படிச்சப்பய தானே நீயி, அவனைத் தவிர என்னைத் தொட எவனுக்குத் துணிச்சலிருக்கு, சொல்லு பாப்போம், அதெல்லாம் வுடு, போலீஸ் கம்ப்ளெயிண்ட் குடுத்தாச்சுல்ல, ஏதாச்சும் சொன்னாய்ங்களா? போன் போட்டுக்குடு சப் இன்ஸ்பெக்டர்க்கு"
"அப்பா..."
"போடுறா" என்று கத்த, அலைபேசி எடுத்து, துணை ஆய்வாளர் ரங்கராஜனுக்கு அழைத்தான் கண்ணன்.
இரண்டு மூன்று ட்ரிங்குகளுக்குப் பிறகு, அழைப்பை எடுத்த ரங்கராஜன், "சொல்லு கண்ணா, அப்பாக்கு இப்ப எப்படி இருக்கு?"
"அப்பா, உங்ககிட்ட பேசணுமாம்" என்று அலைபேசியை வேல்முருகனிடம் தர, வேல்முருகன், "தம்பி, செல்லையனை விசாரிச்சீங்களா? ஒத்துக்கிட்டான்ல? அவன் தானே ஆள் வச்சு அடிச்சது"
"செல்லையன் ஊர்லயே இல்ல, குலதெய்வம் கோயில் திருவிழான்னு தேனி பக்கம் போயிருக்காராம், இன்னும் ஒரு வாரம் ஆவுமாம்."
"யாருய்யா, புரியாத ஆளா இருக்க? நம்மூருல திருவிழா நடக்குற நேரத்துல வேணும்னே கெளம்பி தேனிக்கு ஓடிருக்கான்னா, எவ்ளோ திட்டம் போட்டிருக்கான்னு புரியுதா?"
"இது கூட நாங்க கேட்க மாட்டோமா? ஏதோ உங்ககூட சண்டை வந்ததிலேந்து இந்த ஆறு வருசமும் அவரு திருவிழாக்கு இங்க இருந்ததில்லையாமே. அவங்க பக்கத்து வீட்டுல சொன்னாங்க. நாங்க நேரா அவருக்கே போன் செஞ்சு கேட்டா, போனை எடுத்த உங்க அக்கா, தம்பிக்கு என்ன ஆச்சுன்னு பதறிப்போனாங்க"
"அக்கா, மச்சான்லாம் என்னிக்கோ முடிஞ்சுது, அதெல்லாம் சொல்லாதீங்க"
"எனக்கு என்னமோ அவரு இல்லன்னு தோனுது. நீங்க நல்லா நினைவுபடுத்திச் சொல்லுங்க, உங்களை அடிச்சவன் ஒருத்தன் முகத்தக் கூடவா பாக்கல?"
****
"யாரும் பாக்கல, பாத்திருக்க வாய்ப்பே இல்ல" ஊரின் மேற்கு மூலையில் இருந்த மேல்நிலை தண்ணீர்த்தொட்டியின் மேல் அந்த ஏழு பேர் அமர்ந்திருந்தனர். ஊரே திருவிழாவின் கொண்டாட்டத்தில் திளைத்திருக்க, இருபதடிக்கு ஒன்று என நடப்பட்டிருந்த கழிகளில் கட்டப்பட்டிருந்த ஒலிப்பெருக்கியில் 'செல்லாத்தா, செல்ல மாரியாத்தா' என எல்.ஆர்.ஈஸ்வரி முழங்கிக் கொண்டிருந்தார்.
"ஊரப் பொருத்தவரை நாம திருவிழாக்கு வந்திருக்கோம், அந்தாளு ஆஸ்பிடல்ல சேந்ததுக்கு அப்புறம் நம்ம ஊருக்குள்ளயே வந்தோம். அவ்ளோ தான். அதுவுமில்லாம, அந்தாளு நம்மக்கிட்ட மட்டுமில்ல, ஊர்ல பல பேத்த கடன்காரனாக்கி, நெலத்தப் புடுங்கி ஊர்லேந்தே துரத்திருக்கான், அதனால நம்ம மேல பழி வர வாய்ப்பே இல்ல" என்றான் கதிரேசன். ரவி, குமார், வாசு, கணேசன், செல்வம் சுற்றி நின்றிருந்தனர். பொன்னன் மட்டும் மிகவும் பதறிப் போனவனாய் முகம் வெளுத்திருந்தான்.
"இருந்தாலும் கதிரேசா, உள்ளுக்குள்ள உதறுதுடா, என்னடா மாட்டிக்குவோமாடா?" என்றான் பொன்னன்.
"டேய், ஏன்டா பயந்து சாவுற? நம்ம நெலத்தையெல்லாம் நம்மட்டேந்து புடுங்கி எதுத்துக் கேள்வி கேட்டவனையெல்லாம் காணாப்பொணமாக்கிட்டு இருக்குறவனே துணிச்சலாத் தானே இருக்கான்? நீ என்னடான்னா?" என்றான் கதிரேசன்.
"இருந்தாலும், நம்ம கைய வச்சிருக்கிறது பெரிய கை மேல, போலீஸ் எப்படியும் அவரு சொல்றதத் தான் கேட்கும், அதனால..." என்று பொன்னன் இழுக்க, மற்றவர்கள் கதிரேசனைப் பார்த்தனர்.
"என்னடா, அதனால, கையில் இருந்த கொஞ்சம் நஞ்சம் நெலத்தையும் புடுங்கிட்டு ஓட்டாண்டியா ஒக்கார வச்சாலும் துணிச்சல் மட்டும் வராதுல்ல உங்களுக்கு, இனிமேலும் நாம இழக்க ஒன்னுமே இல்ல, இருக்குறத எல்லாத்தையும் இழந்துட்டு, எங்கோ மூஞ்சி தெரியாத ஊருல ஒக்காந்து பனியன் தச்சுட்டுக் கெடக்கோம். ஏழைப்பட்டவன் கையில ரெண்டு குழி நெலம் இருந்தாலும் அந்தாளுக்கு மூக்குல வேத்துடும். விதை நெல்லுக்கு வாங்குன கடனுக்கு, நெலத்தயே புடுங்கிடுவான். அன்னிக்கில்லாம் வெவரம் பத்தல, ஏதோ எனக்கு மட்டும்னு நெனச்சா சுத்துப்பட்டு உள்ள எல்லா ஊருலயும் இதே வேலை அந்தாளுக்கு. ஒன்னு மட்டும் உறுதி, எவன் அடிச்சான், எப்படி அடிச்சான்னே தெரியக் கூடாது, அந்த வேல்முருகன் மட்டும் இன்னொரு முறை கையில கெடைக்கணும், அன்னிக்கு இருக்கு கச்சேரி அவனுக்கு" என்று சொல்லிக் கொண்டிருக்க, ஊரில் நடந்து கொண்டிருந்த திருவிழாவின் பறையிசை செவிப்பறையில் ஒலிக்கத் தொடங்கியது.
'டுன் டாக் டக் டகடுனட்டுன்
டுன் டாக் டக் டகடுனட்டுன்...'
- முடிவிலி
எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென்று அடும். (207)
ஒருவர் எந்தப் பகையில் தப்பித்துக் கொண்டாலும், அவர் செய்யும் தீய செயல்கள் பெரும்பகையாகி, பின்தொடர்ந்து அழிக்கும்.
Comments
Post a Comment